இயல்பாற்றல் நின் சொத்தா?

தன்னாலே வந்ததை நீ தலையில் போட்டு
தலைமுழுக்க அகங்காரக்‘கனங்கள்’ கொண்டு
உன்னாலே வந்ததென நினைத்துக் கொள்வாய்!
உன்திறமை தனைநீயும் வியந்து நிற்பாய்!
தன்பாட்டில் உனில் இயல்பாய் ஆற்றல் பொங்க
தயங்கி வியந்தெப்படியென்றிருப்பாய்… பின்பு
உன்திறமை என்றுரிமை கோரி … எல்லாம்
உன்னாலே ஆனதென்றும் விருது கொள்வாய்!

ஒவ்வொருவர்க் கொன்றெளிதாய்க் கொடுக்கும் காலம்…
ஒவ்வொருவர்க் கொருதிறமை இயற்கை நல்கும்.
ஒவ்வொருவர்க்கொவ்வொன்று இயல்பாய்த் தோன்றி
உயிர்ப்போடு மிளிரவைத்து இறையும் வாழ்த்தும்.
அவ்வவற்றை அனுபவத்தால் பழகி அந்த
அதிசயம் நின் அற்புதமென் றரற்றும் தோழா….
எவ்வளவுன் ‘சுயச்சரக்கு’?அதை விளங்கு!
இயல்புதந்த சக்தியை நீ உணர்… வணங்கு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply