எங்கே செல்லும் இந்தப் பாதை?

என்ன நடக்கிறது?–எங்கள்
எண்திசை எங்கணும் இரத்தமே பீறிட
கன்னங்கள் வைப்பவரார்? – கண்டும்
காணாதெம் பேருமெம் வாழ்வும் கழியுது
சன்னங்கள் செத்ததுண்மை.– திக்கில்
சாந்தி சமாதானம் வந்ததுடனென்று
சொன்னவர் ஊமையானார் – சுற்றம்
சுக்குநூறாச்சுதூர்ச் சீரளிவால்.

கிணற்றினில் பெண்ணுடல்கள் – கண்டோம்
கிளிகளைக் கொன்றோர் மறைந்துபோனார்.
கணக்கு வளக்கு மின்றி – கைது
கடத்தலும் கப்பமும் ஓங்கிடுதாம்.
உணர்ச்சியைத் தூண்டிவிட்டும் – போதை
ஊட்டி இளமையைத்தான் வதைத்தும்
பணத்தினைக் கொண்டெதையும் – செய்யும்
பழக்கம் மலிந்தது எங்கு நியாயம்!

வாழ்வைப் பிடிப்புமின்றி – வாழ்வின்
வலிகளைத் தாங்கிடும் ஆற்றலின்றி
வாழ்வில் இலயிப்புமின்றி – வாழ்வை
வாழ்ந்து இரசிக்கும் துணிவுமின்றி
பாழை நிதம் விரும்பி – போலிப்
பகட்டு மினுக்கத்தை நம்பி…ஏங்கி
வீழுமெம் மண் மானம் – யாரும்
விழிக்கலை போகுதெம் தன்மானம்!

முளையிலே கிள்ளாமல் – நேற்று
முளைத்தவை… முற்றாது வெம்பிவிட
களவையும் பொய்யையும் தான் – நம்பி
கடவுளைக் கூட மறந்து விட்டோம்!
விழுமியம் நாம் தொலைத்தோம் – எங்கள்
மிகத்தனித்துவமாம் குணங்குறிகள்
பழக்கங்கள் விற்றுவிட்டோம் – கால்கள்
பயணிக்கும் வழிபோறோம்… எங்கு சேர்வோம்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply