விதியே விதைபோடு

விடிவென்று ஒன்று வருமென்று கொண்டு
விழிகள் திறந்தும்… இருள்கொண்டோம்!
விசமங்கள் எம்மை விழுங்கட்டும் என்று
மிகமோசமான நிலை தாழ்ந்தோம்!
படிதாண்டி எங்கள் பலன்யாவும் போக
பசியோடு இன்றும் அலைகின்றோம்!
பலியாகும் முன்பு பதில்தேடு வோமா?
பகவானே நின்முன் வருகின்றோம்!

கனவோடு வாழ்ந்து கனவாகி யாவும்
கலைந்தோட… நாறும் வரலாறு!
கலை கல்வி கேள்வி என எங்கள் ஆற்றல்
களும்கேள்வியாகும் தகராறு!
பனையான எங்கள் பலமின்று பாறி
பணிந்தாடும் நாணல் என ஆச்சு!
பலியாகும் முன்பு பதில்தேடுவோமோ
பகவானே எங்கள் மிடிதீரு!

தலைமைகள் இல்லை தகைமைகள் இல்லை
சமர்மட்டும் எங்களிடை நித்தம்.
தமிழில்லை வாழ்வின் தரமில்லை ஞானத்
தவமில்லை நீளும் புதுயுத்தம்.
விலைபோன எங்கள் விதிதன்னை மீட்டு
விடச்செய்வதென்று இனச்சுத்தம்?
விளைக்கோணும் எங்கள் வரலாற்றை…மண்ணில்
விதைபோடு வீழ்ந்து தொழல்… குற்றம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply