வாழ்ந்த அந்தி

சிவந்து முற்றிய தோடம் பழமென
சிலிர்த்துக்குங்குமம் பூசிய மேற்குவான்
சுவரில் காய்த்துக் கிடக்குது சூரியன்…!
துளித்துளியாய் நிமிடம் வடிகையில்
கவிந்து பொங்கும் இரவுக்கு கைகாட்டி
கடலுள் மெதுமெதுவாக குதித்தது!
புவியின் ஓவியர் யாரும் வரையாத
புது நிறப்படம் வானை வரைந்தது!

கடலின் காற்று வருடி நகர்ந்திட,
கலகலத்துச் சனங்கள் குவிந்திட,
கடற்கரையில் என் செல்வங்களோடு தான்
கவின் இயற்கையின் மேற்கில் இலைத்துயிர்
சுடர நின்றனம்…. சொரிந்த நிறந்தந்த
சுகத்தில் நெஞ்சம் பறிகொடுத் தாடினோம்!
தொடர்ந்து வந்த திரவு!கிழக்கிலே
துளிர்க்கும் தங்க மாய் நிலா பூத்தது!

“நிலவின் தந்தையா சூரியன்” கேட்டனள்
நெருங்கி மூத்தவள்“சூரியன் பிள்ளையா
நிலவின்”என்று இரண்டாமவள் கேட்டனனள்!
நெருப்பும் குளுமையும் ஒன்றையொன்று வெல்லக்
கலக்கு தியற்கையென்றும் மகள் செப்பினாள்!
கவிதைகளோடு… இயற்கைக் கவிதையில்
இலயித்தென் வண்டியும் காற்றைக் கிழித்தது!
இதயம் இன்று தான் அந்தியில்…‘வாழ்ந்தது’

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply