அக்கினியும் வர்ணனும்!

தேவதை ஒன்றுவரும் – எங்கள்
தெருக்களில் பொன்மழை தூவிவிடும்!
காவியம் நூல்வகைகள் – எங்கள்
கண்முன் அரங்கேறி ஆர்த்து எழும்!
சாவினுக் கஞ்சுநிலை – சாய்ந்து
தர்மத்தின் கோபுரம் விண்ணைமுட்டும்.
ஆவலில் காத்திருந்தோம் – எமை
அக்கினித் தேவன் அணைக்கவந்தான்!

நீண்ட நெடும் பாலை – சொட்டு
நீருக்குஞ் செத்துப் பிழைக்குந் தலை!
கோடை தொடர் கொடுமை – அனல்
கொட்டும் பகலும் தொலையாநிலை!
காற்றுத் துளியுமில்லை – நிழற்
கருணைமடி இளைப்பாற இல்லை!
சூழ்ந்தின்று அக்கினியும் – வந்தான்
சுட்டான் என்னாகும் எம் வாழ்வின் நிலை?

யாரிட்ட சாபமிதோ? –எம்மில்
யார் செய்பழியோ? தவறெதுவோ?
போர் தந்த தண்டனையோ – ஏதும்
புரியா வினைப்பயன் தானிதுவோ?
வேரும் கருகிடுது – எந்த
விதைதான் முளைவிட் டெழும்புவது?
தேவன் வருணதேவன் – எங்கே?
தேடியார்… ஊர்க்குயிர் ஊட்டுவது?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply