இருளைப்படைத்தல்

இருளைப்படைக்க இயலுமா தோழர்களே?
இருளைப் படைத்தல்
இலகுவா நண்பர்களே?
இருளைப் படைக்க இயலாது
நிறைந்திருக்கும்
இருளோ சுயம்பு இருள்.தானாய் தோற்றுவது!
ஒளியின் துளி நுழையா
உலகின் அனைத்திடத்தும்
அழிவில்லா இருள்என்றோ அவதரித்து ஆழ்கிறது!
ஒளியை உருவாக்க முடியும்.
வெளிச்சமூட்டும்
ஒளியைப்படைத்தல் உன்னாலும் தான் இயலும்.
ஒளியை உருவாக்க எது தேவை
உலகறியும்.
வெளிகடந்த இருளின் பிறப்பு‘மூலம்’ இரகசியம்.
ஒளியின் மரணமா இருளைப்படைத்துவரும்?
இருக்கும் ஒளி தணிந்து
இல்லாமற் போகின்ற
வெறுமை வெற்றிடத்தை இருள்நிறைத்துச் சூழ்ந்துகொள்ளும்.
ஒளியை நிரூபிக்க இருள் வேண்டும்.
இருளிலாட்டி
ஒளியா துலங்கிவரும்?
ஒளி மகிமை என்னாரும்?
இருளில் நிறம்கருமை; இருளின் உருவமெது?
உருவம் அருவம் அருவுருவம்
கொள்வதனால்
இருள் எதையோ சொல்ல இயற்கையின் குறியீட்டாய்
எங்கும் உறையுதுகாண்!
இருள்தான் பிரபஞ்ச
நிறமாச்சு உள்ள நிறத்தையெல்லாம் தான் கலந்து
புரியாத புதிராய்தான்
தப்பித்துக்கொள்ளுதடா!
புரியா மனிதன் அறியாமற் படைக்கின்றான்
இருளையென்றால்….
ஒளியை அவனொழித்தான் என்றுபொருள்!
இருளிடத்தில் அவன்தோற்றான் என்பதிலே
என்ன புகழ்?
இருளைப் படைத்தல் சாத்தியமா தோழர்களே?
இருளை அழித்தல் இயலாது இயற்கையிலே!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply