தொட்டாற் சுருங்கி

தொட்டாற் சுருங்கி தொட,
இலைகள் தாம் சுருங்கிச்
சட்டென உடைந்து தனை ஒடுக்கி அடங்கிவிடும்!
மீண்டும் தொடுகை விலகியபின்
ஏதுமொன்றுஞ்
சீண்டாக் கணத்தில் சிலர்த்து இயல்பாகும்!
இயல்பில்… இதனில் இயல்பில்…
எக்கணமும்
செயற்கையான தூண்டலொன்று
சேதம் விளைவிக்கும்!
என்வாசஸ் தலத்தில் எழுந்துநின்ற
இதன் ஒரு
அங்கத் தவளின்முன் அமர்ந்து
தொடுவதுவும்
அதுசுருங்க இரசிப்பதுவும்… இலைவிரிய மீண்டும்மீண்டும்
தொடுவதுமாய்ப் பொழுதைக் கழித்தேன்!
சிறு கன்று
சுருங்கி விரிந்து சுருங்கி விரிந்தயர்ந்து
சலித்தபோது…. அதனின்
சமநிலை இயல்பு கூட
எவ்வளவு நெருக்கடிக்கு முகங்கொடுத்து
வாழ்ந்துள்ளது
எனக்கண்டு ‘பாவமெனச்’ சீண்டாது
விலகிவந்தேன்!
என்னைப்போல் எல்லோரும்
இளகிய மனம்படைத்தோர்
அல்லவே…
அவர்கள் இதனியல்பை அறிந்தவர்கள்
ஒவ்வொரு வராக இதைச்சீண்டி இரசிப்பார்கள்!
தொட்டாற் சுருங்குவதேதனித்துவ
இயல்பாக
வாழுமிது உண்மை ஆபத்தைப்….
பொய்யான
தூண்டலினை…. இனங்காண முடியாமல்
மிகநொந்து
எதற்கு எடுத்தாலும் சுருங்குவதை மாற்றுகிற…,
மெய்பொய் உணர்ந்து
சுருங்கி விரிகின்ற….,
வரமொன்று கேட்டுத் தவமொன்றியற்றுகிறேன்!

“மனதும் தொட்டாற் சுருங்கிதானே”
எனும்வரிகள்
அசரீரி போல்கேட்கும்..
தவத்தில் இலயிக்கின்றேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply