நீர்ப்பாம்பு

நெளிந்தோடும் பாம்பாய்
நிலத்திலாறு அசைகிறது!
சலசலத்து….ஏதேதோ திரவியங்கள் தினம் கலந்த
கலவையென ஆறு
கரைபுரண்டு ஓடிடுது!
இதே ஆறு… சென்ற எரிகோடைக் காலத்தில்
காய்ந்துபோய்ப்…. பாம்பொன்றின்
கழன்றுதிர்ந்த செட்டையைப்போல்
இருந்துவிட்டு… இன்று
இரைஉண்ட மலைப்பாம்பாய்ப்
பெருத்து நிறைவோடு பொங்கிடுது!
ஆற்றுக்குப்
பாம்பை உவமித்த காரணமோ என்னவோ… நேற்
றாறேழுபேரை‘இரைபிடித்தல் போல்’ இதுவும்
இழுத்துக்கொண்டோடிற்றாம்!
எங்கே அவர்களென்று
தேடி அலைந்து… ஏதோ ஒரு கரையில்
மீந்த எலும்புகளைக் கண்டெடுத்து
இவ்…ஆறு
நிஜமாயே ‘நீர்ப்பாம்போ’? எனநெஞ்சு கேட்கிறது.
பாம்பாலே ஏதும் பயனுண்டோ
இந்த நீர்ப்
பாம்பென்ற ஆறு
கரைகளினைப் பசுமையாக்கி
ஓடினாலும்,
எமக்குத் தேவையது எனும்போதும்,
தீமைகளை அழிவுகளைச் எங்களுக்குச் செய்கின்ற
ஏதும் உயிர்களை இடைக்கிடை
விழுங்கி ஏப்பம்
விட்டசையும் ஆறு
எவர்துரத்துகின்றாரோ…
வேகமாய் ஒளிப்பதற்குக்கடலோரம் போகிறது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply