தலைகீழ் நியாயங்கள்

கோவிலிலே வைத்துக் கும்பிடப்படும் பொருளாய்
போற்றவே பட்ட
பல புனிதத் தியாயங்கள்
தீட்டுப் பொருட்களாக திசையில் சிதறினவாம்
விலைபேச முடியாத
வீரத்தின் முகங்கள்
விலை எதுதான் வந்தாலும் விற்கப்படும் படிக்கு
மலிந்து தெருக்களிலே…
வாங்குதற்கு யாருமற்று
நலிந்தும் தொலைந்தன காண்!
மாசுமறு ஏதுமற்று
மந்திரத்தால் உயிர்பெற்று
மலர்ந்த விடுதலையின்
சிற்பச்சிலைகள் உறுப்புகள்
சிதைந்து மூளி
என்றாகி
தேடுவார்கள் எவருமற்று நாறினவே!
தலைகீழாய் புரட்டிப் போட்டது காண் காலம்… ஏன்
தலைகீழாய் புரட்டித்
தகர்ந்தது சொல் நம் காலம?;
நேற்று ஏதேதோ பொருள் கொண்டு
நிமிர்ந்த யாவும்
தோற்று வெறும் குப்பைகளாய்
செல்லாத காசுகளாய்
மாறுமென யார் நினைத்தார்?
இன்று புதுப்புனிதங்கள்
மேடையேற்றி அர்ச்சிக்கப்படுகிறது.
அவற்றினது
தொன்மக்கதைகள் பற்றி
அவற்றின் தொடர்ச்சிபற்றி
இங்கு பல கதைகள் எழுகிறது!
இவை நாளை
என்னாரும் என்பதனை
எதிர்வு கூற வல்லவரார்?
இன்றருளும் விதி நாளை என்செய்யும் யாரறிவார்?
“உண்மை ஈகம் தியாகம் ஓர்நாள்
மகிமை பெறும்”
என்றிலவு காக்கின்ற கிளிகள் நாம்!
இதுபற்றி
என்ன பதில் சொல்லிடுமோ காலம்
எவரறிவார்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply