புல்லாய் கசங்கிய நான்!

தர்மமும் நியாயமும் தொலைந்து
தலைகுனிந்து
நிற்கின்ற மண்ணில்
நிமிர்ந்தோங்கும் பொய்களது
காலடிக்குள் புல்லாய்க் கசங்கிக் கிடக்கின்றேன்!
நீதியைக் கண்டு
அதன்பக்கத்தில் நின்று
நீதி நியாயம் கிடைக்கத் தவம் புரிந்து
நீதி கிடையார்க்கு நிழல் தந்து
அதனாலே
வேதனை சுமந்து
காயங்கள் பட்டு ஒரு
வீதியில் அநாதையாய்க் வீழ்ந்து…
உயிர்த்தெழுந்து
மோன முனியாகி
முகமிழந்து கிடக்கின்றேன்!
நானே எனைத்தாக்கிக் கொண்டேனாம்.
கூர்ச்சவர
அலகால் எனை நானே வெட்டி… என்
குறிநுனித்தோல்
நானே களைந்து நிர்வானம் கொண்டுடைகள்
கிழித்தும் எறிந்தேனாம்.
அப்படியே என்கையை
பின்புறமாய் நான் கட்டி
எவ்வாறோ நடந்து சென்று
தானாய்; விழுந்தேனாம்!
பின் எனை நான் மீட்டேனாம்!
நானே எனக்கு நரகவேதனை தந்து
வேறாட்கள் செய்தார்கள் என்று
விசமமாக
மாறாட்ட முறைப்பாடு செய்தேனாம்!
பொய் சொல்லித்
தவறுக்குத் தண்டனையை
அனுபவிக்கப்போறேனாம்.

கேட்பவர்கள் எல்லோரும் கேணயர்கள்
என்றிருந்தால்
சொல்பவர்கள் இன்னுமின்னும் சொல்வார்கள்
துடிக்கின்றேன்!
தர்மமும் நீதியும் தொலைந்து
தலைகுனிந்து
ஊமையான மண்ணில்
உயர்ந்தோங்கும் பொய்களது
காலடிக்குள் புல்லாய்க் கசங்கிநான் கிடக்கின்றேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply