ஆச்சி: நீ கொடுத்து வைத்தவள்!

வண்டியில் நாங்கள் அன்று
வரிசையாய் நடந்த காட்சி
கன்னியா ஊற்றில் உள்ளக்
குளிர்கெட… உலர்ந்த மாட்சி
கண்டியின் தென்றலோடும்
கவிதைகள் பறைந்த சாட்சி
நெஞ்சிலே… சட்டம் போட்ட
நிழல்படம் ஆனது “ஆச்சி”!

திருவிழா இராவில் ஊரில்
திரிந்ததும், காதல் கூத்தும்,
பறந்துபோய் மச்சான் வீட்டில்
படுத்ததும்; ரெயிலில் ஊர்ந்து
ஒரு தினத்துள்ளே தெற்கில்
அலுவல் பார்த்துடனே மீண்டு
வருவதும், காற்றாய் ஏங்கும்
அலைந்ததும் மறந்தேனோ?

ஆயிரம் இதங்கள் அள்ளி
அருளிய வயல்கள் இன்பப்
பாயிரம் இசைக்கும் எல்லைப்
பாற்கடல் புழுதிச்சாலை
கோயில்கள், ஒழுங்கை, திண்ணை,
கோமாவில் ஊமை ஆச்சு!
வீமர்போல் பனை மரங்கள்
வீழ்ந்து உரமும் போச்சு!

இரவிலே தெருவில் நின்று
ஏத்தனை நாள்கள் பக்கத்
துறவினை காண நூறு
தொல்லைகள்; தடைகள் பட்டப்
பகலிலும் படலை தாண்டப்
பதறுது கால்கள்! இந்த
விறுத்தத்தில் அமைதி வேண்டி
அழுதென்ன செய்யும் பாக்கன்?

மனிதர்க்கு மட்டும் அல்ல
மாடுகள், மரங்கள் காற்று
அனைவர்க்கும் ஊரடங்கு!
ஆண்டவர்களுக்கும் ‘ஆறு
மணிக்குமுன் அந்த சாமம்’!
விடிந்தபின் ‘உதயபூசை’!
சுணங்கி அச் சிவனார் போனால்…
சுடப்படும் அவரின் விலை!

கைதியைப் போலே வாடிக்
கரையுதெம் தேசம்! சாவின
செய்தியைச் சீரணித்து
மரத்துச் சீரழியும் தேகம்!
பொய்களை நம்பி ஏங்கிப்
பொருமுதெம் ஆசை! எப்போ
பைத்தியம் பிடிக்குமோ? எப்
பழி செய்தோம்? எமக்கேன் வாழ்க்கை?

“ஆச்சி”! நீ அன்றே போனாய்!
நிம்மதி அழியா தோய்ந்தாய்!
சூழ்ச்சியில் சிக்கா தோய்ந்தாய்!
சுகமெல்லாம் துய்ததாய் யுத்தக்
காய்ச்சலால் சுருகா தாண்டாய்!
கால் கையை இழுக்கா தோய்ந்தாய்!
“கூச்சல் பா பறைகளோடு
போனாயே!” கொடுத்து வைத்தாய்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply