நிலமெனும் நல்லாளுக்கு…..

பட்டாடை கட்டிப் பழ இதழில் தேன்பூசி
நெற்றித் திலகமிட்டு நெய் தடவி
குழல் வனத்தில்
செவ்வந்தி சூடித் திருத்தாலி நகை மினுக்கி
என்றெழுவாய் எங்கள் ‘நிலத்தாதயே’?
சொல்?
இன்று….
ஓளியிழந்த கண்ணும்,
பயம் உடுத்த முகம் அதுவும்,
கசங்கியுள்ள கந்தல்…. முடிகலைந்த அமங்கலமும்,
பொட்டழித்து, தாலி போட்டழுது, கைவளையல்

மெட்டியற்ற வேசமொடும்
பிச்சை எடுப்பவள் போல்
ஒட்டி உலர்ந்துள்ளாய்!
ஊற்றடைத்த கிணறாய் நீ
வற்றி வெடிக்கின்றாய்!
வசந்தத்தைப் பலி கொடுத்துக்
கண்ணீர்க் கடல் மூழ்கிக்
கரையேறத் துடிப்பவளே….
இன்னும் நீ இப்படியாய்
எத்தனை நாள் சீரளிவாய்?
புன்னகையை விற்றுப்
புதிராய்க் கிடப்பவளே…
‘முன்னைப் பசுமையெல்லாம்
‘முளைக்க என்று வித்தெறிவாய்!
நீ சிரித்தால் தானெம் நிசவாழ்வில்…
‘நிம்மதியாம்’

தேரசையும்!
நீ அழுதால் திசைதிக்குந் தீக்குளிக்கும்!
மைந்தர்நாம்…
“எமக்கு மடிவிரிப்பாய்” நீ எனத்தான்
நம்பித் துயர்சுமந்தோம்:
நாதசுரம் பொங்க, தவில் முழங்க,
புனிதமெழ…, தாலியொடும்
நெற்றித் திலகமொடும்
நீ கண்முன் காட்சி தரும்
அற்புதத்தைக் காண
ஆவலுடன் காத்துள்ளோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply