சமரபாகு சீனா உதயகுமாரின் ‘என்பேனாவின் நிதர்சனம்’ கவிதைத் தொகுதி தொடர்பான ஒரு சுருக்க இரசனைக் குறிப்பு த.ஜெயசீலன்.

சமரபாகு சீனா உதயகுமாரின் ‘என்பேனாவின் நிதர்சனம்’ கவிதைத் தொகுதி தொடர்பான ஒரு சுருக்க இரசனைக் குறிப்பு
த.ஜெயசீலன்.

ஈழத் தமிழ்க் கவிதைப் பாரம்பரியம் ‘ஈழத்துப் பூதந்தேவனா’ருடன் தொடங்குகிறது. எனினும் ஈழத்தமிழ்க் கவிதையின் மிகப் பெரிய பாய்ச்சல் இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரே ஏற்பட்டு செழித்து வளர்ந்துயர்ந்தது.
ஈழத் தமிழ்க் கவிதையின் மூலவர்களான மும்மூர்த்திகளாக மகாகவி, முருகையன், நீலாவாணன் என்போர் கொண்டாடப் படுகிறார்கள். இவர்களின் வழித்தடத்தில் எழுபதுகளின் பின் ‘ஈழத்தமிழ்க் கவிதையின் பொற்காலம’; ஆரம்பமாகியது என்றால் மிகையில்லை. எண்பதுகளின் நடுப்பகுதியில் தோற்றம் பெற்ற ஈழவிடுதலை ஆயுதப் போராட்டம் இந்தக் கவிதை அனற்பிளம்பைத் தூண்டி முளாசி எரிய வைத்தது. அதுவேஈழக் கவிதையின் வீச்சை, உருவாக்கத்தை ஆர்முடுகவும் வைத்தது. இக்காலப் பகுதியில் இருந்து இன்று வரை பெரும் எண்ணிக்கையாக கவிஞர்கள் முகிழ்ந்து தங்கள் அளப்பெரும் பங்களிப்பை ஆற்றிவருகிறார்கள். அவர்களின் பங்களிப்பின் விளைவாகவே ஈழத்தமிழ்க் கவிதை – தனித்துவம் மிக்கது எனவும், அது தமிழ்நாட்டுடன் ஒப்பிடப்படும் போது ஒரு மேம்பட்ட நிலையில் காணப்படுகிறது எனவும் பல விமர்சகர்களாலும் விதந்துரைக்கப் பட்டுவருகிறது. இத் தொடரோட்டம் போரின் முடிவுக்குப் பின்னான இன்று வரை, பல மாறுதல்களுக்கு உட்பட்டு வந்திருக்கிறது. எண்பதுகளில் இருந்த வேகமும் ஆர்முடுகலும் இன்றில்லை எனினும், அது அமர்முடுகி ஓய்ந்து போகாமல் இன்றும் ஒரு சீரான வேகத்துடன் சென்று கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.
இத்தகைய சுமார் அறுபது வருட கால ஈழத்தமிழ் கவிதைகளின் வரலாற்றில் சமகாலத்தில் பல புதிய இளந்தலைமுறைக் கவிஞர்கள் தோற்றம் பெற்றறிருக்கிறார்கள். ஏனையோரில் பலரும் தொடர்ச்சியாக இயங்கி வருகின்ற போதும், குறிப்பாக 2000 இன் பின் தோன்றிய இளைய தலைமுறையொன்று நவீன தொழில்நுட்பத் துணையுடன் சலிப்பின்றி கவிதைத்துறையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக இலக்கியத்துறையில் ஈடுபட்டுள்ள சமரபாகு சீனா உதயகுமார் சிறுகதை, கட்டுரை, குறுநாவல், விமர்சனம், கவிதை ஆகிய துறைகளில் கால்பதித்துள்ளார். இவற்றில் கவிதையே இவரை கவனிப்புக் குள்ளாக்கிருக்கிறது. இவரின் கவிதைகள் சமுதாய நோக்கு, மானுடம் தழுவிய பார்வை, போரின் கொடூரம், போர் புரிந்த அவலம், போராட்டத்ததில் ஏற்பட்ட வெற்றிடம், இன்றும் குறையாத சமூக அநீதிகள் போன்ற பல விடயங்களைப் பாடுபொருட்களாகக் கொண்டு தம்மைக் கட்டமைத்திருக்கின்றன.
எமது இலக்கியப் பரப்பில் அண்மைக் காலத்தில்;, போரிலக்கியம் என்ற வகையும், போருக்குப் பின்னான இலக்கியம் என்ற வகையும் கவனம் பெறுவனவாகவுள்ளன. கடந்த மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் குறிப்பாகப் படைப்பாளிகள் ஏதோ ஒரு விதத்தில் போரின் குழந்தைகளாகவே இருந்திருக்கிறார்கள். எனவே இவ் வகைகளை தவிர்க்க முடியாது என்பது வெளிப்படை.
சீனா உதயகுமாரின் கவிதைகள் அனேகமாக இறுதிப் போருக்கு பிந்திய விடயங்களை ,போர்தந்த பரிசுகளை, போர் விட்டுச்சென்ற கேள்விகளை, இன்றும் பலரிடம் நிழலாடும் சந்தேகங்களை, மர்மங்கள் வெளிக்காதா என்ற வேணவாவை, ஏக்கங்களை, பாடுபொருட்களாகக் கொண்டவையாகவே அதிகம் விளங்குகின்றன. இவை அக் காலத்தின் விம்பங்களாக, நேரே கண்டனுபவித்திராத போதும் அக்காலச் சாட்சிகளாக காணக்கிடைக்கின்றன. இவை காலங்கடந்தும் வாழலாம் இ;லாதுபோனால் சிறிது காலத்தில் முக்கியத்துவம் இழந்தும் போகலாம். எவ்வாறாயினும் இக்காலப்பதிவுகளின் அவசியமும் அமைதி திரும்பிய இன்றைய யதார்த்தத்தில் முக்கியமானதாகவே தெரிகிறது.
இறுதிப் போரின் பின், போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னரான சுமார் நான்கு ஆண்டுகளின் பின்பே ‘என் பேனாவின் நிதர்சனம்’ கவிதைத் தொகுதி இவரால் வெளிக்கொணரப்பட்டுள்ளது. ஏற்கனவே இவரின் கவிதைத் தொகுதி ஒன்று வெளிவந்திருந்தது எனினும் அதிலிருந்து இத்தொகுதி பலபரிமாணங்களில் வேறுபட்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
சீனாவின் கவிதைகள் புதுக்கவிதைகளாக வெளிப்படுகின்றன. தற்போது அதிகம் புளக்கத்தில் உள்ள நவீன கவிதைகளின் கட்டிறுக்கமும், அதீத உத்தி முறைமைகளும், உருவகம் படிமம் போன்றவற்றில் இறுகிய சிக்கலான தன்மையும், இருண்மையும், எளிதில் விளங்காமையும் இதில் இல்லை. எளிமையான, எல்லோராலும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய மொழி நடையிலும், நேரடியாக பொருள்கொள்ளக் கூடியனவாகவும் இவரின் கவிதைகள் காணப்படுகின்றன. ஆனால், எல்லோரும் வெளிப்படையாக சொல்லத் தயங்கும் அல்லது அஞ்சும் பல விடயங்களை, எல்லோருமே புரிந்துகொள்ளக் கூடிய குறியீட்டு உத்தியில் உரத்துரைப்பவையாக பல கவிதைகள் நகர்த்தப்பட்டிருப்பதை தரிசிக்க முடிகிறது.

இக்கவிதைகள் புறத்தே பேசும் பொருள் ஒன்றாகவும், அதனுள்ளுறையும் குறிப்புப் பொருள் வேறாகவும் இருப்பதையும் அனேக கவிதைகளில் காணலாம். இவருடைய நெஞ்சத் துணிவு அசாத்தியமானது. புறச்சூழலைப் பற்றிய எந்தவிதப் பயம் கிலேசம் இல்லாது,’ஏன் தேவையில்லாத சோலி’ என நினையாது, தற்போது அடக்கி வாசித்தலே உசிதமானது என்று எண்ணாது, தன்மனதில் பட்டதை ஐயமின்றி கூறிச் செல்கிறார் இவர். இதுவே இவரின் பலமாகவும் சில நேரம் பலவீனமாவும் மாறலாம்.
‘சமர்ப்பணம்’,’என் பேனாவின் நிதர்சனம்’,’எங்கள் அன்புத் தம்பி’ போன்றன சுட்டும் பொருள் யாவரும் எளிதில் புரிநது கொள்ளக்கூடியதுதான். ‘நரபலி நாயகன்’ யார் என்பதும் விளங்கிக் கொள்ள இலகுவானதுதான். இதைவிட,
‘ஓர் இராணுவச் சிப்பாயின் ஏக்கம்’ என்ற கவிதையில்
‘தோள்களில் துப்பாக்கி கனக்க
மனதும் இறுகி வலிக்க
காட்டிலும் மேட்டிலும்
மழையிலும் வெயிலிலும்
நாடுகாக்கும் போர்வீரன்
எனும் ஒருபோர்வை உடுத்தவனாய் நானும்’ என ஒரு சிப்பாயின் உள்ளேக்கத்தைப் புட்டுவைக்கிறார். இங்கு போர்வை சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது.

‘பச்சை உடை கழற்றி’ யில்
‘இங்கு விளைநிலங்கள்
கொலைக் களங்களாக
அங்கு தலைநகர்
கலை நகராகுமோ’ என்று தன் நெஞ்சோடு புலம்புகிறார்.

‘நாயும் முட்கம்பிக் கூடும்’ கவிதையில்
‘மனிதனை மனிதன் கொன்று குவித்து
குருதி குடித்து
துவம்சம் செய்யும் தருணங்கள் பார்த்து
ஓடிக்கொண்டோம் நாம்
எம் பின்னே ஓடிவந்தாய் நீயும்’ என்றும்,

‘இந்த ஓட்டத்தின் அந்தம்
என்னமோ
முட்கம்பிக் கூடுதான்’ என்றும்,

‘உண்டியும் உறையுளும்
உனக்கும் உங்களுக்கும் தாராளமாய்
இவையாவும்
எனக்கும் எங்களுக்கும் மறுக்கப் பட்டதாய்’ என்றும், எமது கடந்தகால சமூக யதார்த்தத்தை எளிமையான குழப்பமற்ற சித்திரமாக்கியிருக்கிறார்.

‘என் பிஞ்சுப் பிரபஞ்சத் தம்பியும் நானும்’ இல் போரில் சிக்கிச் சின்னாபின்னமான ஒரு குடுப்பத்தின் எஞ்சிய உயிர்இருப்பின் இன்றைய அவலத்தைப் பதிவுசெய்கிறார்.
‘ஒரு முளங் கயிறு’ பெண்ணியம் பேசுகிறது. ‘ஒரு விதவைப் போராளியின் ஏக்கம்’
‘இப்பொழுதும்
எனக்குள் முளைத்த
திமிர் மௌனங்களை நினைத்து
மௌனமாகவே
இருந்துவிடுகிறேன் நானும்’
என்று இன்றைய இயலாமைக்குள், புறக்கணிப்புக்குள் புதையும் ‘இவர்களின்’ உணர்வுகளைக் காட்டுகிறது. இப்படி இவரின் கவிதைப் பல்வகைமைக்குப் பல உதாரணங்கள் காட்டலாம்
இவரின் எல்லாக் கவிதைகளும் ஏதோ விதத்தல் அரசியல் பேசுகின்ற கவிதைகள் தான். பின் நவீனத்துவமும், இன்று எந்த ஒரு விடயத்தின் பின்னாலும், எந்தச் செயற்பாட்டின் பின்னணியிலும் ஒரு அரசியல் இருக்கிறது என்றே கூறுகிறது. இக்கூற்றுக்கு உதாரணங்களாக இவரின் கவிதைகளும் விளங்குகின்றன. அரசியல் என்பது வெறுமனே நாட்டு அரசியல் என்றில்லை. மொழி, சமய , சமூக, இன, சர்வதேச அரசியல் என இது விரிந்துசெல்லலாம்.
‘ஒரு பலத்தின் இருப்புப் பற்றிப்பேசுதல்’,’என் கிராமத்தின் பச்சை அடையாளம்’,

‘குந்தியிருக்க ஒரு குடில் நிலம்,”நந்திக்கடல் வாவி மீன்குஞ்சுகள்’,’சத்தியங்கள் செத்த பூமி இது’ என்பன பேசும் அரசியல்களில் நாம் சுலபமாக மேலே சுட்டிய வௌ;வேறு வகை அரசியல்களின் செல்வாக்குகளைக் கண்டுகொள்ளலாம்.

இறுதியாக, இலக்கியத்துறையில் அடியெடுத்து வைத்து சில தூரங்களைக் கடந்து இருக்கும் கவிஞர், தொடர்ந்து நிமிர்ந்து நடந்து வேகங்கொண்டு ஓடி தனது இலக்கை அடைய முயல வேண்டும் என வேண்டுகிறேன். இதற்கு எம் கவிதைப் பாரம்பரியம் பற்றிய அறிவும், பல்வேறு கவிதைகள் பற்றிய வாசிப்பும் அறிமுகமும் பரீச்சயமும், நவீன கவிதைகள் பற்றிய தேடலும் தரிசிப்பும், உதவும் என்றால் மிகையில்லை.
கவிதை என்றால் என்ன? என்ற கேள்விக்குரிய – எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பதிலொன்று என்றுமே கிடைத்துவிடப் போவதில்லை. இன்று முடிவுகளுரைக்கும் எவருடைய முடிவும் இறுதி முடிவல்ல. இன்று நீதவான்களாக மாறி இலக்கியத்திலும் தீர்ப்புகள் வழங்கும் எவருடைய தீர்ப்பும் இறுதித் தீர்ப்பல்ல. எனினும், காலம் என்றென்றும் நல்ல கவிதையைக் காத்து வளர்த்திருந்தது, காத்து வளர்த்து வருகிறது. நிச்சயமாய் நாளையும் காத்து வளர்த்தே தீரும். ஆம் காலத்தின் தீர்ப்புக்கு மேல் இந்த இயற்கையில் தீர்ப்புக்கள் எதுவுமே இல்லை என்பதே வரலாற்று யதார்த்தம்.
மேலும், இன்று கவிதைகள் தனித்துவத்தை இழந்த நிலையில் பிரசவிக்கப்படுகின்றன. எழுதுவதெல்லாம் ஒன்றுபோல் இருக்குமாறு வேண்டுமென்றே எழுதப்படுகிறதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. இதற்குப் பின்னும் ‘ஏதேனும் அரசியலும்’ இருக்கலாம். யார் எழுதியவர் என்பதை மறைத்து வைத்தால் எவருடைய கவிதை எது எனக் கண்டுபிடிப்பது கடினமான காரியமாகிவிட்டது. இது ஆரோக்கியமான நிலையா என்பதையும் சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
எனவே, சீனா உதயகுமார் இன்னோரன்ன தமிழ்க் கவிதைகளுடன் தொடர்ந்து ஊடாடி தன்னை மேலும் வளர்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் ‘இந்தக் கவிதையை எழுதியது சீனா உதயகுமார்’ என இலகுவாக புரிந்துகொள்ளக் கூடிய தனித்துவம் மிக்க, எவரையும் பிரதிபண்ணாத, உண்மை நிறைந்த, வாழ்வின் பல்வேறு பரிமாணங்களைக் காட்டுகிற, காலத்தில் வாழ்கின்ற, கவிதைகளைப் படைத்து எமது ஈழத்தமிழ் கவிதையையும் வளர்த்தெடுக்க முயலவேண்டும் என்றும் வேண்டுகிறேன்.

(இக் குறிப்பு 15.12.2013 தினக்குரல் வாரப் பதிப்பிலே வெளியாகியது)

 

 

Leave a Reply