என்ன பிராயசித்தம் செய்ய முடியுமெம்மால்?

சித்திர வதைகள் சிலபலதைக் கேட்டுள்ளேன்..,
மொத்த உடலை
அரைநாளாய் பத்துப்பேர்
மொய்த்துக் கடித்துக் குதற…அதைத்தாங்கிச்
செத்த கணம்வரைஅச் சீவன்
துடிதுடித்து
உற்ற வலிநோவை…எண்ண
உடல்கொதித்து
நானுமொரு தணலாய் எரிந்து கிடக்கின்றேன்!
ஆடொன்றைப் பங்குபோட்ட மாதிரியாய்
இளங்கிளியின்
மேனியைப் பாகம் பாகமாய் உருசித்தழித்த
நாய்கள் கிடைத்தால்…நான்கவிஞன் ஆகநிற்கேன்!
இத்தனை வெறிப்பேய்கள் சூழ்ந்துபிய்க்க,
கைகால்கள்
கட்டப்பட் டிருக்க, ஓலம் வெளிவராமல்
வாய்க்குள் அடைத்த உடைவதைக்க,
எதிர்ப்பேதும்
காட்ட வழியற்று, கடவுளும் துணைவராது,
ஏழெட்டு மணிநேரம் என்னபாடு பட்டிருக்கும்
பாவம்அப் பள்ளிமொட்டு?
நினைக்கவே…நான் நீறுகிறேன்!
ஏதோ விதத்தில் அறிந்தவள்தான்
எனத்தெரிந்தும்
‘நானும்என் பங்கிற்கு வன்புணர்ந்தேன்’ எனச்சொன்னான்
காமுகன்…
அவன் கிடைத்தால்…என்செய்வேன் நானறியேன்!
என்னதான் காரணந்தான் என்றாலும்
இக்கொலைக்கு
எந்தவித மன்னிப்பும் கூடாது…முரசறைந்தேன்!
குற்றம் புரிந்தவைகள்
‘மனித வகைக்குள்’ வரா…
ஈவிரக்கம் பாராமல் தண்டிக்க வேண்டுகிறேன்!
வெளிநாட்டு காசு, விருந்து,
அனுபவிக்க
வெளியூர் இருந்துவந்த வேகம், திட்டமிட்டு
வழிமறித்த வன்மம்,
வதைத்துஇரசித்த வக்ரம்,
‘யார்தட்டிக் கேட்பார்’ எனும்கொட்டம்,
இத்தகைய
பாதகம் புரியப் பதைக்காத பேய்உள்ளம்,
பிடிபட்டால் என்னாகும்? தண்டனை அவமானம்
இவை…புரியாப் பிசாசுமனம்,
மென்பனித் தளிர்மலராள்
என்றுணரா வெறித்தாகம்,
இறைநீதி அறம் கொல்லும்
என்பதெண்ணாக் கொலைப்போதை,
மனச்சாட்சி என்றஒரு
பொருள்மறந்த கோரம், இத்தனையால்…
என்தங்காய்
பலியானாய் பாவியடி!
நின்ஆத்ம சாந்திக்காய்
என்ன பிராயசித்தம் செய்யவுள்ளதிச் சமூகம்?
தன்னுயிர்ப்பைத் தொடர்ந்தும்
காக்கவேண்டும் நீதியாயம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply