ஈழத்துக் கவிதை உலகில் இருள் துடைக்கும் பவித்திரனின் ‘உரசல் ஓசை’ கவிதைத் தொகுதி – த.ஜெயசீலன்

நூலின் பெயர் :- உரசல் ஓசைகள்

ஆக்கியோன் :- பவித்திரன் (நாவலன்)

வெளியீடு :- தேசிய கலை இலக்கியப் பேரவை

பக்கங்கள் :- 63

விலை :- ரூபா 100

மீன் குஞ்சுக்கு நீச்சல் வருவதும், புலிக்குட்டிக்குப் பாய்ச்சல் வருவதும் வியப்புக்குரியன வில்லையே, அதுபோலத்தான் பவித்திரன் அவர்களுக்கு கவிதை வருவதும் ஏனென்றால் நாவலன் என்ற இயற்பெயரையுடைய பவித்திரன், கவிஞர் இ.முருகையன் அவர்களுடைய மைந்தர், நீண்ட நெடுங்காலமாகவே கவிதையுடனும் கவிஞர்களுடனும் ஊடாடியவர். முருகையன் அவர்களுடைய சாயல் ஓரளவு ஒத்து இருந்தாலும் தனக்கென்றொரு பாணியமைத்துப் பாப்புனைபவர் மிகுந்த யதார்த்தவாதி, இளகிய நெஞ்சமும் ஈரமனமும் ஈகைக்குணமும், இயற்கையுடன் இழைந்து தனைமறக்கும் சுபாவமும் உடையவர்.

கவித்துவம்

‘இயற்கை முழுவதும் ஒரு புதுப்பொலிவு கொண்டு பூத்து நின்ற காலப்பொழுதுகள் அவை. அந்த உலகின் வசீகரம் என்னுள்ளும் பூத்துச் சொரிய உலகமே ஒரு காவியமாய்ச் சோபை கொண்டு எழுதாக்கவியாய், பேசாப் பொருளாய் கூர்ந்து நின்று கிளர்வூட்ட நான் முற்றிலும் கவித்துவமெய்தி விட்டேன். ஆம்! அப்படித்தான் உணர்வுகள் கவித்துவமெய்திவிட்ட பிறகு வாழ்வின் வனப்பை வரையப் பேச்சுக்கள் ஏன்? பழகு தமிழின் இனிமையில் பரவசமாய் விட்ட எனக்கு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஆத்மார்த்தமான அனுபவம் கிட்டிற்று (என்னுரை பக்கம் iii) என்று கூறும் பவித்திரனின் 1ம் கவிதைத் தொகுதி ‘உரசல் ஓசைகளாய்’ தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடாக வெளிவந்துள்ளது.

படைப்புந்தல்

கவிதை என்றால் என்ன என்ற கேள்வி காலகாலமாக தொடர்ந்து கொண்டே இருக்கினறது. அவரவர்கள் தமது விருப்புவெறுப்புக்கேற்ப கவிதைக்கு வரைவிலக்கணம் கூற முற்பட்டாலும் அவை எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு, உண்மையான கவிதை – கவிதையாகவே இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது. தமிழ்க்கவிதை பற்றி சரியாக அறியாதவர்கள், அதன் ஆழ அகலங்கள் அறியும், விளங்கிக்கொள்ளும் ஆற்றல் அற்றவர்கள் தம்நிலைக்கு ஏற்ப ஏதோ ஒன்றைக் கவிதை என்கிறார்கள். ‘இருக்கும் இடத்தில்’ இருந்து கொண்ட அவர்களின் பேச்சுக்களும் எடுபடுகின்றன. வாழும் கவிதையை வடிததுக்காட்ட முடியாதவர்கள், முயலாதவர்கள் இன்றைய சூழலிலும் ‘படைப்புந்தல்’ தமக்கில்லை என்று தப்பிக்கொள்கிறார்கள். விமர்சகர்கள் என்போர் தம் வாய்ப்பாடான சில விடயங்களை மீண்டும் மீண்டும் ஒப்பிக்கிறார்கள். இவை ஈழத்தமிழ்க் கவிதையுலகின் சாபக்கேடுகளாக அன்றும் இருந்தன. இன்றும் இருக்கின்றன. இந்நிலையில் தான் பவித்திரனுடைய உரசல் ஓசைகள் வெளிவந்துள்ளது. இத்தொகுதி ஈழக்கவிதை உலகில் இருண்மை துடைக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.

சொல்லாட்சியும் மொழிநடையும்

பவித்திரனுடைய சொல்லாட்சி, மொழியாட்சி என்பன சிறப்பானவை. இவர் கையாளும் சாதாரண சொற்களும் அவை சேரும் ஒழுங்கில் ஏதோ ஒரு சீரான லயத்தில் மந்திரம் போல மாறிவிடுகின்றன. சில அணிகளில் புதுமையும் பொலிவும் மிளிர்ந்திருக்கின்றன. இவருடைய பல கவிதைகள் இயற்கையுடன் தன்னை இணைத்து அதிலிருந்து எத்தனையோ விடயங்களை உணரும் தன் உணர்ச்சிக் கவிதைகளாக விளங்குகின்றன. அவற்றினூடாக மானுடம் இழைந்து ஓடுகிறது. இவ் இயல்புகள் இவருடைய கவிதையின் தனித்துவங்களாகின்றன. ‘பால் நிலவும் இதழோரம் பாயக்கண்டேன். ஊன் இதழ் ஒளியில் நான் நடப்பேன்’ ‘உன் வீட்டின் ஓர் கோடியில் மனதகத்துக் கதவில் பதிவாயிற்று கவிதை’ ‘கவிமன்னன் யாரென இரவின் தாளில் மௌன வரியொன்று பதியல் ஆகும்’ தலை சீவி முகிலினங்கள் தடுமாறி ஏகும் ‘மானுடம் புதுக்கும் வீச்சு என்னுள் மிகுந்து எழுந்தேன்’ இவை பதச் சோறுகள் வாழ்வின் வசீகரங்களையும் வாழ்விடம் கேள்விகளையும், வாழவின் வனப்புக்களையும், வாழ்வின் துயரங்களையும் வாழ்வின் பல பரிமாணங்களை இவருடைய கவிதைகள் பேசுவது சிறப்பானது. ‘

காற்று மிக மெலிதாய் மேனி வருடி அடதம்பி! முக வாட்டமேன்?
வாழ்க்கை இனிது என்றுரைத்து அப்பால் நகரும்
மீண்டும் மீண்டும் புதிய உயிர்ப்புடன் எழுவேன்.
ஓற்றை மனிதனாய் தன்னந்தனியனாய்
வெட்டியே எனைப் புதைத்திடிலும்
மிதித்து உதைத்து வதைத்திடினும்
சுட்டெரித்துச் சாம்பல் ஆக்கிடினும் சுடர் ஏந்தி
மீண்டும் மீண்டும் புதிய உயிர்ப்புடன் எழுவேன்.
அதன் முடிவில்

புதிய சூரியோதயம்.

இதனூடாக தனது செல்வழியையும் தன் கவிதையின் ஆழஅகலத்தையும், தன்னையும் பவித்திரன்

உயிர்த்துடிப்புடன் உணர்த்திச் செல்கின்றார்.

சிந்தனை அரிது

அருமையான அணிந்துரையொன்றை கவிஞர் கல்வயல் வே.குமாரசாமி அளித்துள்ளார். அதுஅவருடைய உள்ளக்கிடக்கை மட்டுமல்ல. நல்ல கவிதைகளை நேசிக்கும் எல்லோருடைய உள்ளக்கிடக்கையும் அதுதான். நவீன கவிதையுலகின் மிகத்தெளிந்த அறிவுடையவர் ஒருவரின் அங்கீகாரம் பெற்றால்தான் அவன் கவிஞன், கலைஞன் என்ற வாய்ப்பாடுகளை தூக்கிப் பிடிக்கவும். அவற்றை வெளியிடவும் குழு நிலைப்பட்டு நின்று கூட்டவும் கொக்கரிக்கவும் தான் அவதிப்படுகிறோமே தவிர ஆத்மாத்த பூர்வமாக நாம் சிந்திப்பது என்பது மிகமிக அருமையாகி விட்டது. ஈழத்தின் கவிதையின் புதிய போக்கிற்கு பவித்திரனின் உரசல் ஓசைகளும் கட்டியங்கூறியவை எனலாம்.

(14.08.2002 வலம்பரி பத்திரிகையில திறனாய்வுக்களம் பகுதியில் வெளிவந்த எனது குறிப்புரை)

Leave a Reply