கவிதை இதழ்

(இப்பேட்டி 1995 இல் திரு.அ. யேசுராசா அவர்களால் வெளியிடப்பட்ட ‘கவிதை’ எனும் சிற்றிதழில் வெளிவந்தது. இவ் இதழினால் நடாத்தப்பட்ட ‘மஹாகவி நினைவுக் கவிதைப் போட்டியில்’ நான் முதலிடம் பெற்றதையடுத்து எனது இப்பேட்டி மே 1995 இதழில் வெளிவந்தது. இதுவே எனது கன்னிப் பேட்டி.)

 

மஹாகவி நினைவுக் கவிதைப் போட்டியில்’ முதற் பரிசு பெற்றுள்ளீர்கள் வாழ்த்துக்கள். வேறு போட்டிகளில் பரிசு பெற்றுள்ளீர்களா?

யாழ். இந்துவில் படித்தபோதும்(1992 வரை) பிறகும் சில பரிசு இபதக்கங்களையும் அகில இலங்கைக் கம்பன் கழகத்தில் -கவிதைப் போட்டியின் மூலம் இணைந்து –கம்பன் விழாக் கவியரங்கில் கவிதைபாடும் பெரும் பரிசையும் பெற்றிருக்கிறேன். பரிசுகள் மிகச் சிறிய அளவுகோல்கள் தான். இவற்றால் ஆற்றலின் மொத்த விசுவரூபத்தை எடைபோட முடிவதே இல்லை. இன்று பரிசுகளால் கவிதைகள் பெருமையடைகின்றன. கவிதைகளால் பரிசுகள் பெருமையடையும் நாளையே இம்மண்ணில் எதிர்பார்க்கிறேன்.

உங்களைப் பற்றிச் சுருக்கமாயச் சொல்லுங்கள்.

பதவி பட்டங்கள் என்ற எல்லைகளைத் தாண்டி ‘செயலிற் செயலின்மையும் – செயலின்மையிற் செயலையும்’ காட்டி நெஞ்சுக்கு நீதியுடன் – தர்ம வழியில் – காலக் கட்டளையாய் – வையத்தைப் பாலிக்கத் தோன்றும் மெய்க் கவிஞனாகத் துடிக்கும் வெறும் மனிதன்.

எவ்வாறு கவிதை எழுதத் தொடங்கினீர்கள்?

1991 இன் பிற்பகுதியில் ஏற்பட்ட இயல்பான உந்துதல். கவிஞர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் அடியெடுத்துக் கொடுத்து ஆசீர்வதித்தார். கவிஞர் இ.முருகையன் அவர்கள் ‘அசைபிரிக்கக்’ கற்றுத் தந்து யாப்புக் கடலில் அமிர்தம் கடைய அருள் புரிந்தார.; ‘சாளரம்’ முதற் கவிதையை அச்சு முகவரியில் முன்மொழிந்தது. தமிழீழ வானொலி சிலவற்றை வானலையிலும் மலரவைத்தது. ‘சிரித்திரன்’ பலவற்றுக்குச் செங்கம்பள வரவேற்புக் கொடுத்தது. திரு.சிவஞானசுந்தரம் ஐயா அவர்கள் நெஞ்சாரச் சீர்தூக்கிச் சிறக்க வைத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக அகில இலங்கைக் கம்பன் கழக அமைப்பாளர் இ.ஜெயராஜ் அவர்கள் என்னை உலகுக்கு அறிமுகப் படுத்தி உரமேற்றி இன்று வரைப் பிழைதிருத்திப் பீடேற்றுகிறார். கவிதையைப் போற்றி வணங்கும் குடும்பம் எனக்குத் துணிவேற்றுகிறது. இன்று கவிதைதான் என் மூச்சென்று புரிகிறது.

மரபுக் கவிதையிலா புதுக்கவிதையிலா உங்களுக்கு அதிக ஈடுபாடு உள்ளது? விளக்குங்கள்.

மரபுக் கவிதைதான்!
நாடகம்இ சங்கீதம் கூத்து போன்ற கலைவடிவங்களுக்கு என்னென்ன தனித்துவங்கள் உண்டோ அதேபோல் கலைகளின் உச்சமான கவிதைக்கு -இசைப்பாட்டிலில்லாத -ஓசைச்சிறப்பு தனித்துவமானது. வெறும் சிந்தனைச் செய்தியைச் சொல்ல உரைநடை கட்டுரை போதுமானது.   இவ் உரைநடை கட்டுரை நினைவிலும் நில்லாதது. ஆனால் கவிதையின் சந்த ஒத்திசைவு மக்கள் மனங்களில் அகலாமல் என்றும் குடியமர்கிறது. இதுதான் கவிதையின் சமூகப் பயன்பாடும் ஆகும். கவிதையின் அடிப்படைப் பண்புமாகும்.
ஓசை ஒத்திசைவிலிருந்து உருவாகும் யாப்பு மெய்க் கவிஞனுக்கு எப்போதும் கட்டுப்பாடாக அமையாது. எவ் உணர்ச்சி வெளிப்பாடுகளுக்கும் ஏற்றவாறு கைகொடுத்து உதவும். மேலும் மோனை எதுகை இணைந்து தோன்றும் சொற்சேர்க்கைகள் மொழிக்கு மெருகேற்றும். இதனோடு கலைநயமும் கவித்துவமும்இ கருத்தாழமும் கூடக்கூட மெய்க் கவிதைகள் காலத்தில் நிலைக்கிறது. மற்றவை சில நாட்களுக்குச் சிரித்துவிட்டு ‘தேவையை நிறைவேற்றாமலே’ தேய்ந்தழிகின்றன.
யாப்பிலுள்ள வகைவிரிவுகளையும் எளிமையான பல்வேறு வரையறை நெகிழ்ச்சிகளையும் அறியாமல் கவிதையின் சுதந்திரத்திற்கு சுகஞ் சேர்ப்பதுதான் இலக்கணம் என்பதைப் புரியாமல்இ அந்தப் பரீச்சயமே இல்லாமல்இ இலக்கணத்தை மீறுவது கட்டறுப்பது மரபை நிராகரிப்பது என்பது ஆற்றாமையின் வெளிப்பாடேதான்! மரபுக் கவிதையில் வீச்சுக் குறைவு எல்லா உணர்ச்சிகளையும் பாட முடியாது என்கிறார்கள்-கம்பன் முதற்கொண்டு எங்களின் மஹாகவி முருகையன் புதுவை ஆகியோர் எதைத்தான் யாப்பில் பாடாமல் விட்டார்கள்? ஆக இயலாமை புதுமைக்காரர்களில் உள்ளதே தவிர மரபுகளில் இல்லை. மேலும் வடிவம் இல்லாத எதுவும் தனித்தன்மை இழந்தே தீரும்.
மரபுகளைப் பண்டித பவனி என்றுவிட்டு – தாங்களே புரிந்து கொள்ள முடியாத ‘கிரந்தச் சிந்தனைகளை’ ‘வரிமுறித்தெழுதி’ ‘ஆகாகா’ என்று ஆயிரம் வியாக்கியானம் செய்வோர்…ஓசை சொல் பொருள் கற்பனை உவமை உருவகம் அணி அழகுகளால் ஜொலிக்கும் ‘செஞ்சொற் கவியின்பத்தை’ அச்சுயுகம் உரைநடையுகம் என்று அறிவுப் பொருளாக்க முயல்வதையும் ஓசைச் சுவையை ஏதோ தீண்டத் தகாததாக ஒதுக்குவதையும் எங்கள் பாரம்பரியச் சொத்தையும் தமிழின் உயர் விழுமியங்களையும் புறந்தள்ளி விட்டு ‘எட்டாப் பழம் புளிக்கும்’ என்று விமர்சிப்பதையும் ஏற்றுச் சீரணித்துக்கொள்ளவே மாட்டேன். வெறும் பாலையைவிட எத்தனையோ அடுக்கு அழகுகளாற் கொழிக்கும் பூஞ்சோலை எனக்குமட்டுமல்ல எல்லார்க்கும் இனிப்பானதுதான்.

கவிதைகள் உங்களில் எவ்வாறு உருவாகிறது?

‘Poet is born not made’ என்பார்கள். எதுவும் என்னால் மட்டும் சாத்தியமாகிறது என எப்போதும் நான் கருதியதே இல்லை. இது எனக்குக் கிடைத்த தெய்வீக வரமென்று உணர்கிறேன். உணர்வு கடந்த பரவச தவநிலையில் ஊற்றாகி உதித்துப் பீறிடும் கவிதை ஆற்றலின் சுருதியெல்லாம் ‘அவன்’ கொடுப்பதென்றே நம்புகிறேன். இந்த அடி நாதத்திலிருந்து என்கவிதைகள் கண்திறக்கின்றன.

நீங்கள் விரும்பும் கவிஞர்கள் கவிதைகள் பற்றி…

கம்பன் மாணிக்கவாசகர் அருணகிரியார் பாரதி போன்றவர்களின் தெய்வீக நிலைபேற்றையும் தெளிந்த வீச்சையும் ஞானச் செருக்கையும் கண்டு வியந்து மருண்டிருக்கிறேன். கண்ணதாசனின் இனிய எளிய அழகில் குளிர்காய்ந்திருக்கின்றேன். ஈழத்தில் மஹாகவி புதுவை இரத்தினதுரை ஆகியோரின் உணர்ச்சித் துடிப்பை இரசித்து அவர்களின் பொழிவுகளை வாய்புலம்பியவாறே எனை மறந்திருக்கிறேன். இப் பொக்கிஷங்களில் எடுத்ததெல்லாம் ஒளிவீசுகின்றன.

உங்கள் கவியரங்க அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்

சங்கீத வித்துவான் பாடும் கீர்த்தனைகளை எழுதி வாசித்தால் எப்படி ‘சப்பென்று’இருக்குமோ…அதுபோலத்தான் அச்சேறிய கவிதைகளும் இருக்கின்றன. கவிதையை வாய்விட்டுப் படிக்கும் போது ஏற்படும் உணர்வே உச்சமானது. கவியரங்கங்கள் இதற்கு களமாகின்றன. பழைய பல்லவிகள் பகடிச் சிலேடைகள் சொல்லடுக்குகள் விரக்தி வெளிப்பாடுகள் இன்று வழக்கிழந்து ஓய்வெடுக்கத் தொடங்கிவிட்டன. இளஇரத்தங்களின் நெஞ்சைத் தொடும் நெருப்பையும் சுடும் கவிதைகள் அரங்கேற ஆரம்பித்துவிட்டன. இன்று கவியரங்கம் புதுமிடுக்குடன் புது மதிப்புடன் சமூகத்தின் கைகளைப் பற்றி கண்ணீர் துடைத்து வலியகற்றி ஒத்தடமிடுகின்றன. உரைத்துப்பார்த்து உண்மை சொல்கின்றன. போருணர்வேற்றிப் புதுப்பாதை சொல்கின்றன. குறிப்பாகஇ கம்பன் விழாக் கவியரங்குகள் ஈழத்து அரங்கக் கவிதைகளுக்கே புத்துயிர் கொடுத்திருப்பது மறுக்க முடியாத உண்மை.

இளங்கவிஞர்களின் வளர்ச்சிக்கு எத்தகைய செயற்பாடுகள் தேவையெனக் கருதுகிறீர்கள்?

உலகின் எம்மொழியிலும் இல்லாத அளவுக்கு எம்மொழியில் கவிதையின் பாரம்பரியம் விரிகிறது. உலகத்துக்கே வழிசொல்லி நிமிர்கிறது. எங்கள் ‘தாய்க்கவிஞர்கள்’ அன்றே தொட்ட எல்லைகளை இன்று ஒரு குருவியும் எட்ட முடியவில்லை. இது ஏன்? எங்களை நாங்களே எடைபோடாமல் ‘ஒன்றுமே இல்லாதவர்கள்’ போல மேற்கத்திய முகமூடி போட்டு இவ்வளவுதான் கவிதையென்று எல்லையிட்டு-எங்களை நாங்களே தட்டிக்கொடுத்து- குறுகிய வட்டத்துள் தேங்கிவிட்டோம். சிறு சாதனைகளால் எங்களுக்குள் மகிழலாமே தவிர சொந்த முகமிழந்த நிலையில் ‘எங்களைக் கொண்டு’ மானுடத்திற்கு வழிகாட்டவே முடியாது.

இளையவர்கள் என்றுமில்லாதவாறு எல்லோரைவிடவும் நிமிர்கின்ற நாளில் எங்கள் முதுசங்களின் வெற்றிகளை அளவுகோலாகக் கொண்டே தங்களை புதுவீச்சோடு வளர்க்க வேண்டும். திருப்திப்பட்டு சாதித்துவிட்டோம்  என்று தேங்கிவிடாமல் தவறுகளை அறியாமைகளை திருத்திக் கற்றுக் கரையேற வேண்டும். அன்றிலிருந்து சிறகைக் கொடுப்பவர்களைவிட சிறகை அறுப்பவர்களே வெகுத்திருந்தபோதும் ஆன்மீக நம்பிக்கை எனும் பலத்தைக் கொண்டவர்கள்தானே உச்சங்கண்டு காலத்தில் நிற்கிறார்கள்? உணர்ந்து அணிவகுத்தால் இயற்கை தானாகவே வழிவிட்டுத்தரும். எதிர்காலம் எங்களுடையதாகவே இருக்கும்.

கவிதை இதழ் பற்றி உங்கள் மதிப்பீடு?

நாட்டுக்குத் தேவையான முயற்சி. இன்றைய போர்க்காலத்தை பல     முனைகளில் படம்பிடிக்கிறது. தழிழனின் தொன்மையான சொத்துக்களை. உயர் விழுமிய மரபுகளை இளையவர்க்கும்இ அறியாத முதிர்ந்தவர்க்கும் கலைநயத்துடன் உணர்த்த ‘கவிதை’ மேலும் முயல வேண்டும். இவ்இதழின் வாசம் எட்டுத்திக்கும்  பரவ என் இனிய இதய வாழ்த்துகள் நன்றி.

Leave a Reply