யாழ்ப்பாண அரங்கக் கவியூற்று – த.ஜெயசீலன்.

ஈழத்தில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணச் சூழலில் அரங்கேறிக் கவிதைகளைப் பொழிகின்ற கவியரங்கத்தின் தோற்றம், 1960களின் ஆரம்ப காலம் எனலாம். பல்வேறு இலக்கிய, பொது, சமூக, சமய விழாக்களில் கவியரங்குகள் ஒழுங்குசெய்யப்பட்டன. இவை மக்களை நேரடியாக கவிதையானது சென்று சேரத் தக்கவகையில் இயங்கி, மக்களுடன் நேருக்குநேர் உரையாடி, அவர்களின் மனதில் தொற்றி, அவர்களைக் கதையின்பால் ஈர்த்துக் கொண்டன. இவை அக்காலத்தில் உரையரங்கு, பேச்சரங்குக்கு அடுத்தபடியாக முக்கிய இடத்தையும் பிடித்துக்கொண்டன. எனினும் ஆரம்ப காலக் கவியரங்குகளில் சில இயல்புகள் காணப்பட்டன.

1.கவிதைகள் செய்யுட்களாக எழுதப்பட்டு அனேகமாக அவை கவிஞர்களால் இசைகூட்டிப் பாடப்பட்டன. அதாவது செய்யுட் பொழிவுகளாக இடம்பெற்றன.
2.அரங்கில அமர்ந்து இருந்தவாறு சுடச்சுட அக்கணத்தில் ஒப்பேற்றி எழுதியவை (சபையோரை வியப்பில் ஆழ்த்தி தம்மை ‘வரகவிகள்’ என நிரூபிக்கவோ? ) வெறும் சொற்கூட்டங்களாக அளிக்கை செய்யப்பட்டன. 3.கவியரங்கத் தலைப்புக்கள் பொத்தம் பொதுவாக மக்களின் அன்றாட வாழ்க்கை பற்றிக் கணக்கில் எடுக்காதவையாகவும், கடல், காற்று, நிலா, இயற்கை, தமிழ், என்று புளித்துப்போன அதர பழசான விடயங்களையே எந்தவிதமான கற்பனையோ புதுமையோவின்றி பாடுவனவாகவும், நம் மண்ணில் கால்பதித்து நிற்காதவையாகவும், யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டவை யாகவும் காணப்பட்டன.
4.சமூகப் பிரச்சனைகள் பற்றி கவனமெடுக்காமல் நகைச்சுவைத் துணுக்குகளையும் வேடிக்கை வினோதச் சொற்சிலம்பங்களையும் அனேகம் கொண்டவையாகவும் விளங்கின.

இவ் இயல்புகள் அக்கால கட்டத்தின் நிர்ப்பந்தமாகவும் அல்லது வளமையாகவும், கவியரங்கின் ஆழமான சமூக பயன்பற்றிய சிந்தனையற்றவையாகவும் தோற்றம் பெற்றிருந்ததையும் காணலாம். இந்த நிலையிலும் இவ் இயல்புகளில் ஒன்றையோ பலவற்றையோ கொண்டிருந்த போதும் அக்காலத்திலேயே யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாகக் கவியரங்கங்களில் புகழ் பெற்றவர்களாக கவிஞர் முருகையன், மாஹாகவி, நீலாவாணன் ,அரியாலையூர் ஐயாத்துரை, சில்லையூர் செல்வராசன், சொக்கன், கவிஞர.வி.கந்தவனம், காரை செ.சுந்தரம்பிள்ளை, பாவலர் சத்தியசீலன், ச.வே.பஞ்சாட்சரம், ஈ.நாகராஜன், குப்பிழான் ஐ.சண்முகன் என்போர் காணப்பட்டனர். இவர்கள் கவியரங்குகள் பலவற்றில் தொடர்ச்சியாகப் பங்குபற்றியும் வந்தனர். இவர்களுள் மஹாகவி, முருகையன், நீலாவாணன் சில்லையூர் செல்வராசன், சொக்கன், காரை.செ.சுந்தரம்பிள்ளை, பாவலர்.சத்தியசீலன், என்போர் யாப்பமைதி மிகுந்த கவிதைகளை கவியரங்குகளில் பாடிய அதே வேளை நாசுக்காக அன்றாடப் பிரச்சனைகளையும் சமூக அவலங்களையும் அன்றைய விஞ்ஞானப் புதினங்களையும் புதுமையான கருத்துக்களையும் தங்கள் கவிதைகளில் புகுத்தத் தவறவில்லை. இதில் சொக்கன் அவர்கள் பல கவியரங்குகளைத் தலைமை தாங்கியும் இருக்கிறார். அரியலையூர் வே.ஐயாத்துரை அவர்கள் ‘வரகவியாகத்’ (எதுவித முன்னேற்பாடுகளுமின்றி எடுத்தஎடுப்பில் இயல்பாக கவிதைகளை அனாயாசமாக பாடும் திறன்.) திகழ்ந்து கவியரங்க மேடைகளில் கவிதைகளைப்பொழிந்து பாடி அளிக்கை செய்ய சில்லையூர் செல்வராசன், பாவலர்.சத்தியசீலன் ஆகியோர் கவிதைகளைச் சிறந்த வெளிப்பாட்டு முறையுடனும்( presentation) ஏற்ற இறக்கத்துடனும் நாடக பாணியில் அங்கதச் சுவையுடனும் எள்ளற் தொனியுடனும் சமூக அவலங்களை முன்வைத்தனர். 65-75 காலப்பகுதியில் சுன்னாகத்தில் ‘இளைஞர் மன்றம்’ பல கவியரங்குகளை ஒழுங்குசெய்தது. யாழ் இலக்கிய நண்பர் கழகமும் பல கவியரங்குகளை ஏற்பாடு செய்தது. 70களின் கடைக்கூற்றில் இருந்த கவிஞர்களில் பலர் கவியரங்குகளில் தொடர்ந்தும் மிளிர 80 களின் ஆரம்பத்தில் சோ.பதமநாதன்(சோ.ப.) ச.வே. பஞ்சாட்சரம், ஏ.எம்.நுகுமான், புதுவைஇரத்தினதுரை என்போரும் தனித்தன்மையாக கவிஅரங்கங்களைக் கையாண்டனர். இதில் சோ.பா, அவர்கள் காவடிச் சிந்துகளையும், திருப்புகழ்ச் சந்த விருத்தங்களையும், ஆற்றோட்டமான கலிப்பா வகைகளையும் அனாயாசமாகக் கையாண்டார்.

ச.பே.பஞ்சாட்சரம் சிந்துகளையும், கண்ணிகளையும் கையாண்டு அன்றாட அவலங்களையும், சமூகச் சீர்கேடுகளையும் பிரச்சனைகளையும் எள்ளி நகையாடினார். புதுவைஇரத்தினதுரை வீச்சான புரட்சிகர, பொதுவுடமைக் கருத்துக்களை தன் கவிதைகளில் முன்வைத்தார். இவரின் ‘வானம் சிவக்கிறது’ என்ற முதலாவது கவிதைத் தொகுதியில் இதற்குச் சான்றான சில அரங்கக் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. அக்கால கட்டத்தில் பல்கலைக் கழக மட்டத்தில் ஏ.எம்.நுகுமான், சிவசேகரம், சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன் போன்றோரும், சில கவியரங்குகளில் பங்குகொண்டனர்.பொதுவாக யாழ்ப்பாணக் கவியரங்கங்களில் கவிதைபாடிய கவிஞர்களுக்கென்று ஒரு இரசிகர் கூட்டம் பெரிய அளவில் இருந்தது. அக்காலத்தில் பல்வேறு பொது விழாக்கள், கம்பன், வள்ளுவர், பாரதி விழாக்கள், ஆண்டு விழாக்கள், ஆலயத் திருவிழாக்கள, பேச்சரங்குகள், கர்நாடக மெல்லிசை அரங்குகள், அரசியல் சார்ந்த கூட்டங்கள் என்பவற்றுக்கு இடையில் கவியரங்குகளும் பெரு வரவேற்புடன் அரங்கேற்றப்பட்டன. அக் கவியரங்ககளில் பங்குபற்றுவதற்காக இரவிரவாய் வாடகைக் கார் வண்டிகளில் கவிஞர்கள் பல்வேறு விடயங்களை நகைச்சுவையாக அளவளாவிச் சென்று வந்த அருமையான அநுபவத் தருணங்களை இன்றிருக்கும் அன்றைய கவிஞர்கள் நினைவு கூருவதைக் கேட்கலாம். எனினும் மீண்டும் மீண்டும் ஒரே பாணியில் இவ் அரங்குகள் நிகழ்த்தப்பட்டமையால் 70களின் பிற்பகுதிகளிலும் 80களின் ஆரம்பப் பகுதியிலும் கவியரங்குகளின் செல்வாக்கு ஓரளவு தளரத் தொடங்கியது.

இக்கால கட்டத்தில் கவியரங்குகளின் பலவீனங்களை இனங்கண்டு கொண்ட பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர்களால் ‘கவிதா நிகழ்வு’ அறிமுகப்படத்தப் பட்டது. 81, 82 ஆம் ஆண்டுகளில் ஏ.எம்.நுகுமான், மஹாகவியின் மகனான சேரன் போன்றோர் யாழ் பல்கலைக்கழகத்தில் இக் கவிதா நிகழ்வுகளைச் செய்து காட்டினர். இந்த இந்தத் தலைப்புகளிற் தான், இப்படி இப்படித்தான் கவிபாடுவது என்ற வரையறையின்றி தம்மால் ஏற்கனவே எழுதப்பட்ட கவிதைகளை இசைகூட்டி நாடகப்பாணியில் அரங்கங்களில் கவிஞர்கள் வெளிப்படுத்தினர். இது ஒரு கூட்டுமுயற்சியாகவும் விளங்கியது. கவிதா நிகழ்வுகள் பல்கலைக் கழக மட்டங்களில் ஓரளவு புகழடைந்தாலும்பொதுமக்களிடமும், சமூக மட்டங்களிலும் பெரிதாக செல்லவாக்குப் பெறமுடியவில்லை.

80களின் ஆரம்பத்திலிருந்து தொண்ணூறுகள் வரை கவியரங்குகள் மீண்டும் உத்வேகம் பெறத் தொடங்கின. பொதுவான வெவ்வேறு இலக்கிய குழுவினராலும், அரசியற் தரப்பினராலும், பொதுவுடமை வாதிகளாலும், சமூக மாற்றத்தை விரும்பியோர்களாலும் கவியரங்கத்திற்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் பாவலர்.சத்தியசீலன், சோ.பா. ,புதுவை இரத்தினதுரை, கல்வயல் குமாரசாமி, போன்ற பலரும் கவியரங்குகளை ஆற்றுவதில் பங்கு எடுத்தனர். சில்லையூர் செல்வராசன் இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் மூலம் பல கவியரங்குகளையும், கவிதை தொடர்பான நிகழ்ச்சிகளையும் மிகவும் அழகான தனித்துவமான நடையில் முன் வைத்தார்.

80களில் யாழ்ப்பாணத்தில் சமூக சமய அரசியல் அமைப்புக்களையும் தாண்டி யாழில் இயங்கத் தொடங்கிய அகில இலங்கைக் கம்பன் கழகம் கவியரங்கிற்கு மிகவும் முக்கியத்துவத்தை கொடுக்கத் தொடங்கியது. அது தனதும் தன் கிளைக் கழகங்களின் விழாக்களிலும் நன்கு திட்டமிட்ட சமூக சமகால நிகழ்வுகளைப் பிரதிபலிக்கின்ற, மக்களை அணுகக்கூடிய, கவர்ச்சிகரமான தலைப்புக்களிலான கவியரங்குகளை அமைத்துக் காட்டிப் பெரும் பாராட்டுக்களையும் வரவேற்பினையும் பெற்றுக் கொண்டது. 80 களின் நடு, பின்னைய காலத்தில் இக்கவியரங்குகளில் முருகையன், காரை சுந்தரம்பிள்ளை, புதுவை இரத்தினதுரை, கல்வயல் குமாரசாமி, ஜெ.கி.ஜெயசீலன், நாக சிவசிதம்பரம் போன்ற பல பிரபலம் மிக்க கவிஞர்கள் கலந்து கொண்டனர். கம்பன் விழாக் கவியரங்குகளுக்கு என்று பெரும் இரசிகர் கூட்டம் காணப்பட்டது. கவியரங்குளில் பாடப்பட்ட கவிதைகள் சாதாரண பொதுமக்களாலும் ரசிக்கப்பட்டு, இயல்பாகவே மனனமாகி, அவர்களின் வாயில் அனாயாசமாகப் புழங்கும் நிலை தோன்றியது.

இதில் புதுவை இரத்தினதுரையின் அரங்கக் கவிதைகள் இளைஞர் பலருக்கு மனப்பாடம் ஆகின. அக்கால நல்லூர் திருவிழாவைப் பின்னணியாகக் கொண்டு

“பொன்னணிந்தனர் பட்டுகள் சூடினர்
போய்க் கடைகளில் ஐஸ்ப்பழம் சூப்பினர்
விண்ணிடிந்து விழுந்திடும் போதிலும்
வீடியோவில் படங்களைப் பார்த்தனர்…”

“மான்சுட்டால் அன்றி மரைசுட்டால் மயில்சுட்டால்
ஏன்சுட்டாய் எனக்கேட்க
இந்நாட்டில் சட்டமுண்டு”

போன்ற கவிதைகள் வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்ந்த அரங்க நிகழ்வொன்றில் பாடப்பட்டு, பின் இவை ஒலிப்பதிவு செய்யப்பட்டு அனேகமாக பரவலான இரசிப்புக்குட்பட்டது.

1985ம் ஆண்டு நல்லை ஆதீனத்தில் நடந்த அகில இலங்கைக் கம்பன் விழாக் கவியரங்கில் ஏகோபித்த வரவேற்புடன் கவிதை பாடியதைத் தொடர்ந்து புதுவை இரத்தினதுரை அந்தச் செல்வாக்குடன் போர்க்களத்தில் குதித்தது தனிவரலாறு.

சிறிது காலத்தின் பின்னான இந்திய இராணுவ பிரசன்ன வேளையில் புதுவை பாடி ஒலிநாடாக்களாகவும் வெளிவந்த

“குரலெடுத்ததோர் குயில்படுத்தது
குமுறிநின்ற எரி மலை படுத்தது
தரமறுத்திடும் உரிமை பெற்றிடத்
தன் வயிற்றிலே போர்தொடுத்தது!”போன்ற கவிதைகள் பெரும் செல்வாக்கைப் பெற்றன.
தொண்ணூறுகளில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் அடைக்கப் பட்ட யுத்தசூழலில், மின்சாரம் செத்த இரவுகளில், பல்வேறு விழாக்கள், பொது நிகழ்வுகளில் கவியரங்குகள் அக்கால நிலைமைகளை உள்வாங்கி உருவானதால் முக்கிய இடத்தை பெற்றன. முத்தமிழ் விழாக் கவியரங்குகள், ஆலய உற்சவகாலங்களில் நடாத்தப்பட்ட கவியரங்குகளை இதற்கு உதாரணங்களாகக் கொள்ளலாம். இக்காலத்தில் உள்ளூர் வானொலியும் ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு கவிஞர்களைக் கொண்டு ஒலிப்பதிவு செய்யப்பட கவியரங்குகளை ஒலிபரப்பி கவியரங்கக் கவிதைகளைப் பரவலாகப் பிரபலப் படுத்தியது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களிலும், விசேட நினைவு தினங்களிலும் கூட கவியரங்கங்கள் வானொலியிலும், அரங்குகளிலும் வலம்வந்தன.

இக்காலத்தில் கவிஞர் நாவண்ணன் பிரபலமானார். முத்தமிழ் விழா கவியரங்குகள், கம்பன் விழா கவியரங்குகள், வானொலிக் கவியரங்குகளில் கவிஞர் நாவண்ணனின் கவிதைகளூம் அக்கவிதைகள் அவரால் சொல்லும் முறையால் சிலாகிக்கப் பட்டன.
.
இக்காலத்தில் கவிஞர் கல்வயல் குமாரசாமி கிராமிய மண்மணம் கமழும் சொற்பிரயோகங்களாலான குறியீட்டுக் கவிதைகளை பாடினார். உடன் புரிதலுக்கு சிரமமான போதும் அரங்குகளில் குறியீட்டுக் கவிதைகளின் சில சிக்கல் முடிச்சுகளை அவர் அவிழ்த்;துக் காட்டிய போது ரசிகர்கள் அவர்கூற முனைந்த பொருளைப் புரிந்து நூல்பிடித்துத் தொடர்ந்து கவிதையை ரசித்தும் பாராட்டினர்.

இக்காலத்தில், கம்பன் விழா கவியரங்குளிலும், யாழ் இந்து கல்லூரியில் நடந்த கவியரங்கங்களிலும் அக்காலத்தில் யாழ் இந்துக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராக கடமை புரிந்த ச.வே.பஞ்சாட்சரம் பாடிய சிந்துகள் பலத்த வரவேற்புப் பெற்றன.

“வடமராட்சித் தாலிக்கொடியை நம்பி—அங்கே
பொடிமெனிக்கே காத்திருந்தாள் வெம்பி”

என்ற சிந்து இதற்கு நல்ல உதாரணம். அக்கால அரசியல் சூழலை அதிக பட்ச நையாண்டியுடன் ச.வே.ப ஒவ்வொரு சிந்துகளிலும் பாட ஒவ்வொரு முறையும் அரங்குகள் அதிர்ந்தமை இன்றும் கண்முன் நிற்கிறது. ஒரு முறை தன்னை அறிமுகப் படுத்தும் போது சிலேடையாக “சா.வே…பா” எனப்பாடிப் பாராட்டுப் பெற்றமை குறிப்பிடத் தக்கது. இதைத் தவிர ஜெ.கி.ஜெயசீலன், நாக.சிதம்பரம் போன்ற புதிய தலைமுறை கவிஞர்கள் காத்திரமான கவிதைகளை பாடினர். இக்காலக்கட்டத்தில் நடந்த பெரும் புகழ் பெற்ற பல கவியரங்குகள் கவிஞர் முருகையனின் தலைமையில் நடந்தன. முருகையன் அவர்கள் தலைமைக் கவிதையில் கூட நுட்பமான பல புதிய உத்திகளைக் கையாண்டார். இசையோடு கவிதை வாசித்தல் அல்லது பாடுதல், நாடகப் பாங்கில் உணர்ச்சி மேலிடக் கவிதையைச் சமர்ப்பித்தல், வௌ;வேறு யாப்பு சந்தவகைகளைக் கையாள்வதன் மூலம் சபையோரைக் கவர்தல், கவிஞர்களை அறிமுகம் செய்யும் போது புது உத்திகளை கடைப்பிடித்தல், கவிஞர் கவிதை பாடி முடிய பாடிய கவிதையின் சிறப்பான பகுதிகளை மீளப் பாடி தனது இரசனையை வெளிப்படுத்தி அதனைச் சபையோரும் ருசிக்கவைத்தல் என்பன இவற்றில் சிலவாகும். பண்டிதர் பரந்தாமன் போன்ற ஆழ்ந்த தமிழ் அறிஞர்களும் ஒரு சில அரங்கில் பங்கெடுத்தமை இங்கு நோக்கத் தக்கது.

கவிஞர்.காரை சுந்தரம்பிள்ளை கிண்டலும் கேலியும் நகைச்சுவையுடனும் கூடிய தனது நடையில் சமூக அவலங்களையும் நாட்டுசூழலையும் சிறப்புறப் பாடினார்.

90களின் நடுப்பகுதியில் அகில இலங்கை கம்பன் விழா கவியரங்குகளில் புதிய இளந் தலைமுறையொன்று பங்குபற்றத் தொடங்கியது. த.சிவசங்கர், த.ஜெயசீலன், ச.முகுந்தன்,ஆகியோரின் கவிதைகள் 93, 94, 95ஆண்டுகளில் நடந்த அகில இலங்கை கம்பன் கழக கவியரங்குகளிலும் வடமராட்சி, ஊரெழு, காரைநகர் கம்பன் விழாக்களிலும் ஏனைய மூத்த கவிஞர்களின் கவிதைகளுடன் சரிசமானமாய் அரங்கேறி நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டன. இவர்கள் தவிர காரை எம்.பி. அருளானந்தன், மகாலிங்கசிவம் போன்றோரும் வேறு இடங்களில் நடந்த சில கவியரங்குகளில் பங்கு பற்றினர்.

கம்பன் விழா கவியரங்குகள் அன்று மக்களிடம் பெரும் செல்வாக்கு பெற்றன. அதற்கு பல காரணங்களை கூறலாம்.

1. பழைய செய்யுள் பாடும் முறையிலிருந்து வேறுபட்டு கவிதைக்குரிய நடையில், பேச்சோசையில் அநேகர் கவிதையை முன்வைத்தமை.

2.கவியரங்குகள் நன்கு திட்டமிடப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, ரசிகர்கள் சலிப்படையா வண்ணம் உரிய நேரக்கட்டுப் பாடுகளுடன் நடத்தப்பட்டமை.

3.கவியரங்கு ஒரு தனி நிகழ்வாக விழாவில் முக்கியத்துவப்படுத்தப் பட்டமை
4. சமகால பிரச்சனைகளை, யதார்த்தத்தை, நாட்டு நடப்புகளை, அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளை ஏனையோருடன் பகிரும் நிகழ்வுகளாக அவை மாற்றப்பட்டமை. அதாவது வெறும் மனோரதிய கற்பனாவாத பாடிச் சலித்த விடயங்களைக் கொண்டவையாக அமைக்கப் படாதிருந்தமை.

4.எவரும் சிந்திக்காத, வளமை போன்றில்லாத கற்பசைன் செறிவுள்ள புதுப்புதுத் தலைப்புகளில் வௌ;வேறு கோணங்களில் கவிதைப் பாடுபொருள் அணுகப்பட்டமை.
உ-ம்,

93 ல் நல்லூர் கம்பன்விழாவில்
“வெம்பி விரக்தியுறல் விட்டோடி மிகவிரைவாய்
கம்பனுக்குச் சொல் கவிதைத் தூது”
என்ற தலைப்பில் அரங்கத் தலைவர் வீரமணிஜயர் அவர்களைக் கம்பனாகப் பாவித்து அக்காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த மண்ணெண்ணெய் குப்பி,பதுங்கு குழி, வெற்று மின்கம்பம், சைக்கிள், போன்ற சடப் பொருட்கள் கம்பனிடம் தூது சென்று நாட்டு நிலையை கூறுவது போல கவியரங்கு அமைக்கப் பட்டது.

94ல் “கம்பன் அரங்கில் கவிபாடும் ஓர்உரிமை

எங்களுக்குந் தாரும் இனி” என்ற தலைப்பில் நேர்காணல் கவியரங்கு அமைக்கப்பட்டது. இதில் இளந் தலைமுறைக் கவிஞர்கள் மூத்த கவிஞர்களிடம் கவிபாடும் உரிமையைக் கேட்க முருகையன் ,காரை சுந்தரம்பிள்ளை, ச.வே. பஞ்சாட்சரம் ஆகிய மூத்த நேர்காணற் சபைக் கவிஞர்கள் இளையவர்களை நேர்காண்பது போல கவியரங்கு வெற்றிகரமாக அமைந்தது.

வடமராட்சியில் ஒவ்வொரு கவிஞர்களும் தமிழின் மூத்த கவிஞர்களான அப்பர், அரணகிரியார், பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், புதுவை இரத்தினதுரை போன்றோர் ஆகத் தம்மை வரித்து அக்கால அவலங்களைப் பேசினர்.

95 ல் “எண்ணங்கள் விரிந்தெம் இதயங்கள் பேச வண்ணங்கள் தலைப்பா கட்டும்” என்ற தலைப்பில் ஒவ்வொரு கவிஞருக்கும் ஒவ்வொரு நிறங்கள் ஒதுக்கப்பட அந்நிறங்களின் ஊடாக அன்றைய பிரச்சனைகள் பேசப்பட்டன. இக்கவியரங்கில் பாவலர். சத்தியசீலன், பொன் கணேசமூர்த்தி போன்ற மூத்தோரும் பங்கெடுத்தனர். இதில் கவிஞர் கல்வயல் குமாரசாமி “வண்ணங்கள் தலைப்பா கட்டும்” என்று சிலேடையாகப் பாடியது இரசிக்ப்பட்டது.
95 வலிகாம இடம்பெயர்வின் பின்னரும் வலிகாம மீள் குடியேற்றத்தின் பின்னரும் அனேகமாகக் கலைவிழாக்கள் மறைந்து போயின. எனினும் அந்த இருண்ட காலத்தில் முதல் சிறு ஒளிக்கீற்றாக 98ல் மீண்டும் அகில இலங்கை கம்பன் கழகத்தின் ‘நிலாக்கால நிகழ்வு’ களில் கவியரங்குகள் ஏற்பாடு செய்யப் பட்டன. இக்கவியரங்குகளில் சோ.பா, கல்வயல் குமாரசாமி, த.ஜெயசீலன், இ.சு.முரளீதரன், தி.திருக்குமரன், எஸ்.ஜெயரூபன், ச.முகுந்தன், வாயுபுத்ரன் (கி.குருபரன்), போன்றோர் பலர் பங்குகொண்டனர்.

90 களில் யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கவியரங்குகள் நடத்தப்பட்டன. பல்வேறு கழக, அமைப்புகள் மட்டங்களின் நடந்த விழாக்களில் இவை அரங்கேறின. திருமறைக் கலாமன்ற ஆண்டு விழா, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி நடாத்திய பாரதி விழா, பாடசாலைகளில் நடாத்தப்பட்ட மாணவர்கள் பங்கேற்ற கவியரங்குகள், தனியார் கல்வி நிலைய பரிசளிப்பு, வாணிவிழா என்பவற்றில் அரங்கேறிய கவியரங்குகள், பல்கலைக்கழக மட்டத்தமிழ் விழாக்கள் என்பவை முக்கியமானவை.

97இல் இருந்து அகில இலங்கை கம்பன் கழகத்தினர் கொழும்பில் கொழும்பு கம்பன் கழகத்தினை நிறுவி ஒவ்வொரு ஆண்டும் கொழும்பில் எடுத்த கம்பன் விழாக்கள் தனிசிறப்புமிக்க நிகழ்வுகளாக அரங்கேறின. இக்கவியரங்குகளுக்கு ஆரம்பத்தில் தமிழ் நாட்டில் இருந்து வந்த பிரபலமான நட்சத்திர கவிஞர்களான அப்துல்ரகுமான், வாலி, மு.மேத்தா, அப்துல்காதர், நெல்லை ஜெயந்தா போன்றோர் தலைமை வகித்திருந்தனர். அண்மைக் கால கொழும்பு கம்பன் கழக, யாழ்கம்பன் கழக கவியரங்குகளுக்கு இலங்கை வானொலியில் தனித்துவமாக கவிதையை வாசித்து வரவேற்புப் பெற்ற சிதம்பரப்பிள்ளை சிவகுமார் தலைமை தாங்குகின்றார். இவ் அரங்குகளிலும் மிகவும் புதுமையான தலைப்புகளில், புதுமையான அரங்க வடிவமைப்பில், ஆழ்ந்த விடயங்களூடாக சமகாலத்தைப் பிரதிபலிக்கக் கூடிய கவிதைகள் பாடப்படுகின்றன.

சு.வில்வரத்தினம்,இளையதம்பி தயானந்தா, சிதம்பரப்பிள்ளை சிவகுமார், வ.ஐ.ச.ஜெயபாலன், சோ.பா, கல்வயல் குமாரசாமி, ஜின்னா ஷெரிபுதீன், மேமன்கவி, த.சிவசங்கர், த.ஜெயசீலன், ச.முகுந்தன், ஸ்ரீ பிரஷாந்தன், ச.மணிமாறன் போன்றோர் இக்கவியரங்குகளில் பங்குபற்றிள்ளனர். இக்கவியரங்குகளிலும் புதுமையான பல தலைப்புகளில் அருமையான கவிதைகள் அரங்கேறின. ‘அடிகள் தந்த அடிகள்’, ‘பூதங்கள் தொறும் உறைந்து’ , ‘கம்பன் காட்டும் எண்ணினால் கவிதை பாட எண்ணினால்’ போன்ற வேறுபட்ட தலைப்புகளில் கவிஞர்கள் சமகால அரசியலை குறியீடுகளாக அனேகமான இக்கம்பன விழாக் கவியரங்குகளில் பாடயதால் அவை சுலபமாக சபையோரை ஈர்த்துக் கொண்டன.

கம்பன் கழகத்தைத் தவிர வடமராட்சியை மையமாகக் கொண்டு இயங்கும் இளங்கோ கழகத்தினரும் இடைக்கிடை தரமான கவியரங்குகளை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றனர்.

கடந்த ஆண்டு தனிநாயகம் அடிகளாரின் நினைவுக் கொண்டாட்டத்தின் போது திருமறைக் கலாமன்றத்தில் ‘புதுப்புனல் பாயந்திடுக’ என்ற கவியரங்கும், இவ்வாண்டு பொங்கல் விழாவின் போது வட மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் தமிழகக் கவிஞர் யுகபாரதி தலைமையில் ‘உழவே எமக்கு உயிர்’ என்ற கவியரங்கும் நிகழ்ந்தது குறிப்பிடத் தக்கது.

இக்கட்டுரை யாழ்ப்பாணத்தை அடிப்படையாகக் கொண்டே வரையப்பட்டுள்ளது. இது முழுமையான ஒரு கட்டுரை என கூறிக் கொள்ள முடியாது. கிழக்கிலங்கையிலும், மலையகத்திலும், யுத்தம் தன்னைப் பரவச் செய்த பின்தங்கிய வன்னியிலும் தொடர்ச்சியாக பாடப் பட்ட தமிழ்க் கவியரங்கக் கவிதைகளைப் பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டும். அதற்கான முன்னோட்டமாக அல்லது முதற்படியாக இக்கட்டுரை அமையுமெனில் அது சிறப்பானது.

Leave a Reply