இசைத்தாய்

நீ சுயமாய்த் தானே
நீ நிஜமாய்த் தானே
நீ இயல்பாய்த் தானே நீ நினைத்த நின் இசையைப்
பாடி இசைத்தாய்!
யார் பாணியும் இன்றி
நீ உந்தன் பாணியிலே நின்இசையை
நிதம் தந்தாய்!
“யார் கேட்பார்” என்று
நீ கவலைப் படவில்லை.
“யார் இரசிப்பார்” என்று
நீ சற்றும் குழம்பவில்லை.
“யார் எதை நினைப்பார்”
“அப்படி இசைத்திருக்க-
லாம்” என்று யார் ஏதும் சொல்வாரோ
என அஞ்சாய்!
உனக்கு எது ஊறிற்றோ?
உனக்கு எது வந்ததுவோ?
உனது விருப்பெதுவோ?
உயிர்ப்பும் ஈரமும் வற்றா
தனியிசையை;
எவரினதும் சாயலற்ற…
பாதிப்பை
உனக்குள்ளே தந்தாலும்
உன் ‘பிடியை’ ஊர்க்குணர்த்தும்
இளமிசையை;
புதுமை மினுங்கும் இன்னிசையை;
திடீரென்று
வழங்கத் தொடங்கி,
மறைந்த முற் கணம் வரைக்கும்
முழங்கி,
இசைமாரி மூவேளை நாள்தோறும்
புழங்க இசைத்தாய்!
புரட்சி நடத்திவிட்டாய்!
எங்கள் கிராம இசைத்துடிப்பை;
மரபாக
எங்கள் மனங்களிலே இருந்த உயிரிசையை;
எங்கள் சாஸ்திரீய இன்னிசையை;
இடைக்கிடை நம்
உள்ளே கிளர்ச்சி தூண்டும்
உலகத்தின் குத்திசையை;
நாடி நரம்பெல்லாம் பாய்ச்சி
நமை வளர்த்தாய்!
ஆயிரம் குறைபிழைகள்
உனில் கண்டு பிடித்தலைந்தோர்
யாரும் உனதிசையில் பிழைகாண முடியவில்லை!
உன் இசையை எதற்காயோ
வெறுத்தவர் போல் நடித்தவரும்
பின்னர் பிறரறியா வண்ணம்
நின் இசை இரசித்தார்!
யார்எவர்தான் விரும்பினரோ?
யார் எவர்தான் தவிர்த்தனரோ?
கேட்டாரோ? கேட்கலையோ?
நீ உந்தன் சுரம் தந்தாய்!
யார் எதைத்தான் சொன்னாலும்,
யார் எதைத்தான் எழுதினாலும்,
யார் போற்றிப் புகழ்ந்தாலும்,
யார் தூற்றித் திரிந்தாலும்,
வாய்ப்பிருக்கோ இல்லையோ,
வாடாத மல்லிகைபோல்…
யாரையும் கணக்கெடுக்கா மாமழைபோல்…
இசைபொழிந்தாய்!
நீ எதனை இசைத்தாயோ
அது காதில் தேனாச்சு!
நீ எதனைச் செய்தாயோ அது எல்லாம்
புதுமையாச்சு!
நீ எதனைத் தொட்டாலும் அதிலோர்
புனிதமுடன்
சீரும் சிறப்பும் செம்மையும் பொலிந்ததனால்,
ஞானப் பரவசத்தை நாமுணர
வைப்பதனால்,
ஊனுயிர்கள் உனக்கு
உயிலெழுதி விசிறியாச்சு!
யார்யாரோ தலைகீழாய்
நின்றுதான் பார்த்தார்கள்…
யார்யாரோ உனைவிழுத்த
வியூகம் வகுத்தார்கள்…
“நீ தொலைந்தாய்” “சரிந்தாய்” எனச் சிலரும்
நின்றார்கள்…
சூரியனே…எந்த முகில் மறைத்தும்
உன்சுயம்பு
வீரிய இசைஒளி இன்றும் பரவிடுது!
கோடி கோடி உயிர்களுக்கு குளிர்நிழலாய்
நிற்குதது!
வேறு வேறு விளைவுகள்…மருந்துபோல் நல்கிடுது!
யாவருக்கும் மூச்சும் உணவும்போல்
உதவிடுது!
சா…ஓட்டும் அமுதாய்
சீவன்களுக் கருள்கிறது!
யார் எதைத்தான் சொன்னாலும்
எதும்பற்றி அலட்டாது
நீ நின் நிமிர்வோடும்
நீ நின் திமிரோடும்
நீ நின் இசையைமட்டும்
நிகழ்த்திக்கொண் டிருக்கின்றாய்!
இன்றும் உனதிசையே எழில்மாறா திருக்கிறது!
இன்றும் உனதிசையே
இனிமைகுன்றா தொலிக்கிறது!
இன்றும் உனதிசையே
எங்கும் கோலோச்சிடுது!
என்றும் உன் இசையலைகள்
ஓயாதுலகு ஏற்றதின்று!
நீ இசைத்தாற் போல யான்
எனக்கு வருவதனை
யார் எதனைச் சொன்னாலும் கவலையற்றுத்
தொடர்ச்சியாக
பாவாய் எழுதுகிறேன்
உன்பயணம், வாழ்க்கைமுறை
நான் செல்ல வழிகாட்டும் நன்றாய்…
நடந்திடுவேன்!