எப்படித்தான் எமைப்பாது காத்த போதும்
எமனிடத்தில் இருந்தெவரும் இலகு வாகத்
தப்பிவிட முடியாது; தருணம் வந்தால்
சரியாக நமைக்காத்தே நடந்த போதும்…
எப்படியோ ஏதோ ஓர் ரூபத் தோடே
எமன்வருவான்; பிடர்பிடித்துத் தள்ளிச் சாவு
சப்பவைப்பான்; உனக்குரிய காலம் மட்டும்
தான் வாழ அனுமதித்துச்…சாய்த்துப் போவான்!
‘உன் காலக் கணக்கென்ன’ என்று தேறா
உளத்தோடு நீ ஆடிப் பாடி நிற்பாய்!
உன் ஆயுள் அடுத்த நொடி உதிரும் என்றும்
உள்ளுணர்வாலும் அறியாய்; ‘காலம் காக்கும்
உன்னையெனில்’ தப்பிடுவாய்; ‘தவிர்க்கு மென்றால்’
உருண்டாலும் புரண்டாலும் ஒழிந்தே போவாய்!
‘உன் நேரம் சிறப்பென்றால்’ இடிவீழ்ந் தாலும்
உயிர்ப்பாய்; ‘தீதெனில்’ கால் தடக்கி மாழ்வாய்!
தீ, காற்று, மழை, வெள்ளம், குளிரின் சீற்றம்,
திடீர் மின்னல், இடி, விபத்து, பரவும் நோய்கள்,
பூகம்பம், நிலச்சரிவு, இன்னும் இன்னும்
புதுப்புதிதாய் அட்டதிக்கும் இருந்து தோன்றும்
பேரழிவில் இருந்து தப்பல், பிறவி தன்னில்
பிழைத்து வாழல், எதுவும் நின் கையில் இல்லை!
‘சாவு வரமா சாபம் தானா’ என்றுன்
தலையெழுத்து அறியும்; நீ அறிந்த தில்லை!





