கலிகாலம்

அன்பு, பாசம், எல்லா அயல் உயிர்களிலுமே
மென்மை மிகு நேசம்,
கருணை, ஜீவ காருண்யம்,
தீயவை சிந்திக்காச் சிந்தை,
பிறர்க்கேதும்
தீங்கு விளைவிக்காச் செயல்கள்,
அடுத்தவரில்
காழ்ப்பு பொறாமை கொள்ளாக் காதல்,
ஒருவரது
வளர்ச்சியில் வயிறெரியா மனது,
ஆடம்பரங்களற்ற
எளிமை,
உழைப்புக்கு ஏற்ற கூலி தேடலன்றி
ஊரைச் சுரண்டி உடல்வளர்க்கும் அவா இன்மை,
“போதும்” எனும்உள்ளம்,
பொருள் தேடி உலையாமை,
“காலம் விதி கடவுள் கண்கொண்டு பார்த்திருக்கு
நீதி தவறின் நிம்மதியாய் வாழ ஏலாது”
என்று உணர்ந்து இளஞ் சந்ததியை வழிநடத்தும்
பண்பு, பதவிபுகழ் பார்ப்பதற்கு
-விற்றுவிடாத்-
தன்மானம்,
யாருக்கும் தாழா… அடிமை செய்யா…
சுயகெளரவம்,
என்றும் தொலைக்கா மரியாதை,
உயர்வுதாழ்வு பாரா உளம்,
ஊர் மதிக்கும் சொல்,
பயம் ஐயம் இல்லாப்
பலனை எதிர்பாரா
உயர் வாழ்க்கை, என்று…உலவுபவர்…
ஏழைகளாய்,
சாமா னியர்களாய்,
சமூகத்தில் அற்பர்களாய்த்,
தான்…நினைக்கப் படுகின்றார்!
பிழைக்கத் தெரியாத
பேதைகளாய் மாய்கின்றார்!
‘பெருமைமிகு வாழ்வு’ நிதம்
போராட்ட மாக;
பொருள், பெருஞ் சுகம், பலங்கள்,
ஏதுமிலா தலைகிறார்! தம்
சுயத்தைக் கெளரவத்தை
பாதுகாக்கப் பாடுபட்டார்!
இவர்க்கு மறுபுறத்தில்…
‘இவர்க்கு’ நேரெதிராய் எல்லாக்
குணமுமுள்ளோர்,
தவறு பிழைக்கஞ்சாத் தற்குறிகள்,
தம்நலத்தைக்
காக்க எதுஞ்செய்வோர்,
கண்ணியம் தொலைத்த ‘அரை
வேக்காடுகள்’,
செல்வர், வீரர் ,உயர்ந்தவராய்…
சமூகப் பிரமுகராய்…
சாதித்த செம்மல்களாய்…
சமூகத்தின் காவலராய்…
சகல செளபாக்கியம் பெற்று
சமூகத்தை வழிநடத்தும் தலைமையையும்
கொள்கின்றார்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.