எம்மை இன்றேன் கதறவைத்தாய்?

“எப்படி இருந்தவன் இப்படி ஆகிவிட்டான்”
எப்படி நடந்ததிது?
இது போகும் வயதல்ல!
இருக்கும் இடமெல்லாம் எமைச்சிரிக்க
வைத்தவனே!
மருந்தாய்ச் சிரிப்பருளி
எம் மனக் கவலை காயம்
விரைவாய்க் குணப்படுத்தி விட்ட மருத்துவனே!
பிறன் மனதைப் புண்படுத்தி,
பிறர் குறையை இழிவு பேசி,
சிரிக்கவைப்ப தல்ல நகைச்சுவை
எனத் தெளிந்து
சமூகத்தின் மூடத் தனங்களை
நாசூக்காய்
எமக்குப் படங்கள் ஊடு குத்திக் காட்டியவா!
உண்மை கசக்குமென்பார்…
கசக்கும் பல உண்மைகளை
நின் நகைச்சுவை என்னும் இனிப்புள்
மறைத்தெல்லோரும்
இனிப்பை உருசிக்கையிலே கசப்பும்
உணரவைத்த
தனித்துவமே!
‘பசுமைப் புரட்சி’ செய்த
தனி அரசே!
தனி மனித ஒழுக்கவாழ்வு,
சமூக சேவை, இவற்றை
சினிமாவில் இருந்தும் செய்த
சிரிப்பொளியே!
உந்தன் நகைச்சுவையும்,
உந்தன் மிமிக்கிரியும்,
உந்தனது பாத்திரங்கள் ஒவ்வொன்றும்
இம்மண்ணில்
என்றும் அழியா, மூப்படையா,
இயல்புயில்கள்!
‘காமடியன்’ என்றநிலை கடந்து நீ
செய்த கலைச்
சேவை, சமூக சேவை, தமை நினைந்து
‘அப்துல் கலாம்’ அணைத்தார்!
அறிஞர் பலர் புகழ்ந்து
“எப்படி இருந்தவன் நீ இப்படியா”
என வியந்தார்!
‘சின்னக் கலைவாணா’..
செந்தமிழில், செவ்விசையில்,
உன் ஆற்றல் பெரிது;
உலகியற்கை தனைக் காக்க
எண்ணற்ற மரம் நட்டாய்…
நின் உயிரைக் காப்பதற்கு
ஏன் எதையும் நட மறந்தாய்?
எம்மை இன்றேன் கதற வைத்தாய்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply