சமூகப் பிரச்சினைகள் தொடர்பான மனித உணர்வுகளின் வார்த்தைகளே கவிதை – கவிஞர் குணேஸ்வரன் –

மனிதனின் உணர்வுகள் கொப்பளிக்கப்பட்டு வார்த்தைகளாக வெளிவருவதே கவிதை. கலைகளின் அரசி கவிதை என்பதை அழகாகக் கூறலாம். சமூகப் பிரச்சினைகள் பற்றி எழுதப்புறப்படும் ஒருவன் கவிதை என்ற இலக்கியப் படைப்பையே தனது முதல் கருவாக எடுத்துக்கொள்கிறான். அவ்வாறு அறியப்பட்ட ஒருவர் தான் கவிஞர் ஜெயசீலன்.

எழுதுவதைப் போல மக்கள் மத்தியில் பணி செய்வதற்கும், நல்ல வாய்ப்பு கவிஞர் ஜெயசீலனுக்குக் கிடைத்திருக்கிறது. உண்மைக்கவிஞன் மக்களின் ஈனநிலைகண்டு வெதும்புவான். ~எழுதாத ஒரு கவிதை| தொகுப்பில் தன்னைப்பற்றியும், தன் மக்களைப்பற்றியும் மக்களின் வாழ்க்கையைக் கோணலாக்கிய காலங்கள் பற்றியும் எல்லாவற்றையும் தாண்டி மனித நேயம் உள்ளவர்களாக மற்றவர் துன்பம் தீர்ப்பவர்களாக நாங்கள் வாழவேண்டும் என்பதையும் அவர்மிக அழகாக எடுத்துரைத்துள்ளார்.

உண்மையில் மக்கள் மத்தியில் இறங்கிப் பணி செய்வதற்குரிய நல்ல வாய்ப்பை தான் எழுதுவதைப் போல தன் எண்ணத்தைப் போல கவிஞர் ஜெயசீலன் பெற்றுள்ளார். 90களின் இறுதியில் இருந்து எழுத்துலகுக்குள் பிரவேசித்த ஜெயசீலன் கவிஞர் சோ. பத்மநாதன், காரை.சுந்தரம்பிள்ளை, கல்வயல் வே.குமாரசாமி போன்ற மரபுக்கவிஞர் வழியில் வந்த இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்.

அக்காலத்தில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலையில் அதிகம் பத்திரிகைகளே மக்களின் வாசிப்புக்கு ஏற்ற ஊடகங்களாக முதன்மை பெற்றிருந்தன. அப்போது எழுத வந்தவர்களில் கவனிப்புக்குள்ளானவர் ஜெயசீலன். அவர் வளர்வதற்கு ஏற்ற நல்ல களங்கள் அவருக்குக் கிடைத்திருக்கின்றன.

ஈழத்துக் கவிதைப்பரப்பில் தவிர்க்கமுடியாத ஒரு கவிஞனாக இதுவரை வெளிவந்த அவரது நூல்கள் அவரைக் கோடிட்டுக் காட்டுகின்றன.
(தினக்குரல் பத்திரிகையில் செய்தியாகப் பிரசுரமானது)