எவரிருப்பார்?

விடிவொன்று வருமென்று மனமிருக்கும் – அது
விளைவென்ன தருமென்று இனமிருக்கும்.
முடியாதோ இடரென்று சனமிருக்கும் -யாரும்
முயலார்கள்; இழிவோடே நனவிருக்கும்.

அதிகாரம் எனும்போதை உருவெடுத்தே – இன்று
அநியாயம் புரிந்தாட தெரு… சிதைந்தே
சதியுற்று மிதிபட்டுத் தலைகுனிந்தே – எங்கள்
தலை, வாலும் தவிக்குது நிலை குலைந்தே!

‘குரலற்ற குரல்’ யாவும் குயில் நிகர்த்துக் – கூவி
குவலயச் செவிகளில் உரத்தொலித்து
மருமங்கள், புதிர், யாவும் அறுத்தெறிந்து – ஏதும்
வழி சொல்ல உதவாதோ… வரம் சொரிந்து?

எவர் வந்து எமதூரின் இடரழிப்பார்? -இன்றும்
எமர் வந்தார்; வரலாற்றைப் புதைத்தழிப்பார்.
கவிதைகள் தினம் பாடப் பலரிருப்பார் -நீளும்
கவலைகள் தமைத்தீர்க்க, எவரிருப்பார்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.