நட்பு மலை

கலங்கரையாய் நெடுத்ததேகம்…எதற்கும் என்றும்
கலங்காத வலிமை உளம்…வாஞ்சை யோடு
பழகு முகம்…பண்பு பகிர் நெஞ்சம்…அன்பு
பாராட்டி எவரோடும் நட்புக் கொண்டு
கலகலப்பாய்ப் பழகுகுணம்…மறுநாள் பற்றிக்
கவலையற்று வாழ்வை அனுபவித்துச்…சொந்த
நிலையுயர சேவை பல செய்து….யார்க்கும்
நிழல் விரிக்கும் விருட்சம்…சாய்ந்த தின்று ஏனாம்?

யாவருக்கும் இனியன்…ஆம் யார்க்கும் நண்பன்
‘யாழ் இந்து’ வளர்த்த வல்லோன்…ஆசான் ‘பீ. கே
பாலசிங்கம்’ என்ற ‘படிக்காதோன்’ தந்த
பரிசு இவன்! பிரதேச செயல கங்கள்
நாலைந்தில் ஊழியனாய்… அங்கே தோன்றும்
நன்மை தீமை, கொண்டாட்டம், இன்ப துன்பம்
யாவிலும் முன் நிற்கும் செயல் வீரன்…எங்கள்
‘பாலசங்கர்’ மறைவை எந்த மனந்தான் ஏற்கும்?

வாட்டசாட்ட உருவம் கண் முன் இன்றில்லை!
யாம் படித்த போது… ‘சங்கர்’ நிற்கா தெந்த
போட்டிகள் அயவஉh நடந்ததில்லை! அன்னார் ஆடும்
புதுமை ஆட்டம் இரசிக்காத மனங்கள் இல்லை!
வேட்டி, புலிப்பல் பதக்கம் கொழுவி…நீண்டு
மினுங்குகிற சங்கிலியில்….திருவி ழாவில்
காட்டகிற பக்தி கண்டு வியவார் இல்லை!
கமழ்கையிலே உதிர்ந்ததேன் இவ் இளைய முல்லை?

கடைசியாக நல்லூரின் தேரின் அன்று
கண்டதுவும் கதைத்ததுவும் நினைவைக் கீற..,
இடிவிழுந்தாற் போல் வந்த சேதி கேட்டு
எம் நண்பர் குழாம் துடித்துத் தவித்துச் சோர..,
“உடம்புக்குள் குடி புகுந்த நோயைக் கூட
ஒரு நட்பாய் மாற்றினனோ…” என்ற கேள்வி
குடையும் பீறி… ‘.ஐம்பத்து இரண்டு’ ஆண்டில்
குலைந்ததுவோ ‘நட்பு மலை’….சாந்தி சாந்தி!