தமிழ்க்கனி

தமிழெனுங் கடல் ஆழம் அறிந்திடும்
தாகம் கொண்டு…தலைமுறையாகவே
தமிழுணர்ந்தோரின் சீடராய் நின்று…அத்
தமிழின் ஆழத்தைக் கணிசமாய்த் தேர்ந்து…நற்
தமிழ்ப்பரம்பரைஒன்றைச் சமைத்து…இத்
தலைமுறைக்கும் தமிழுணர்வூட்டிய
‘தமிழ்க்கனி’,சான்றோன்,‘புலவர்மணி’,புகழ்…
நீலகண்டனார் பாதம் சரணமே!

உடுப்பிட்டிசிவசம்புப் புலவர்க்கு
உறவில் பூட்டர் மருகனின் மாணாக்கர்.
உடுப்பிட்டிஅமெரிக்கமிஷன் கல்லூரிக்கு
உகந்தமைந்தர் பண்டிதமணியிடம்
தொடர்ந்துகந்தமுருகேசனாரிடம்
தொல்தமிழைச் சுவைத்துப்பயின்றவர்.
இடையில் பலாலிஆசிரியகலாசாலை
என்றகோவிலில் கற்றும் நிமிர்ந்தவர்.

செம்மொழியினில் ஆழம்,பழந்தமிழ்ச்
சீர் இலக்கண இலக்கியப் பரீச்சயம்,
எம்…நிகண்டுதத்துவம் சோதிடம் கற்ற
ஏற்றம்,ஆங்கிலம் சமஸ்கிருதத் திலே
செம்மைஞானம், ஆம்…‘ஆங்கில இலக்கிய
லண்டன் பீ.ஏ’பட்டம்,என…வென்ற
நம் தலைமகன் நீலகண்டன் திறம்…
நம்பெருமையைஉயர்த்திடும்நல்வரம்!

கந்தவனத்துக் கடவைப் ‘பழையவர்’
கந்தவேளேகதியென் றனுதினம்
சிந்தை,சொல்,செயல் அர்ப்பணஞ் செய்தவர்.
திருப்புகழுக்குப் பிறகு…கடைசியாய்க்
‘கந்தவனமணிமாலையால்’போற்றினார்.
“கந்தவனத்தானேகாப்பு…இம் மானுடப்
பந்தவனத்துள் அலைவோர்க்கு…” என்று…தான்
பயின்றஞானத்தால் இறையைஅணுகினார்!

உடுப்பிட்டிஅமெரிக்கமிஷனிலே
உபாத்தியாயனாய் ஆங்கிலம் கற்பித்தும்,
தடையிலாத் தமிழ் கொண்டுபிரபந்தம்
சரமாரியாகநூறுஅருளியும்,
நடையில் நின்றுயர் நாயகியோடு…இல்-
-லறத்தில் சேய்களைக் காத்துஉயர்த்தியும்,
கடமைதீர்த்துவான் போனார்; அகம்,புறம்
கசிந்துபோற்றிஅன்னார் புகழ் பாடுவோம்!

– த.ஜெயசீலன்

Leave a Reply