‘கனவுகளின் எல்லை’ ஒரு இரசனைக் குறிப்பு- ச.பத்மநாபன்

கவிதை ஒரு கலை. கவிதையின் அழகு வர்ணிக்கப்படும் ஒரு பொருளின் இயற்கையழகிலேயே தங்கியுள்ளது. கவிதையூடான நன்மைகள் கவிஞனுக்குரியன. சில வாசகனுக்குரியன. இதனடிப்படையில் கவிஞன் எண்ணிய மனஎண்ணம் வாசகர் உணர்வின் அடிவரையாகச் சென்று மெய்ப் பொருளை உணர்ந்து கொள்வதனூடாகவே கவிஞனின் எதிர்பார்ப்புகளை அறிந்து கொள்ளலாம். அந்நிலையில் கவிஞர் தாமியற்றிய சுமார் ஆயிரத்தறுநூறு தனித்தனிக் கவிதைகளில் ‘கனவுகளின் எல்லை’ என எழுபது கவிதைகளை வாசகர்களுக்கு அளித்துள்ளார். கன்னிமுயற்சியான இத்தொகுதியை கவிஞரின் ‘கவிதைத் தொகுதி -1’ எனலாம்.

கவிஞன் என்பானுக்கு ப்ரதிபா, வியுத்பத்தி, அப்யாஸம் எனும் மூன்றும் அடிப்படைகள். அவை கற்பனை, உலகியல் அறிவு, புலமை, பண்பாடு என்றும் இடைவிடாத பயிற்சி என்றும் முறையே பொருட்படும். இத்தகைய கவிஞனுக்குரிய அடித்தளம் உடையவனே த.ஜெயசீலன்

ஈழத்தமிழ்ப் புதுக்கவிதை மரபில் மரபு சார் அடிப்படையோடு தனக்கென ஒரு தனிமுத்திரை பதித்து வரும் த.ஜெயசீலன் யாழ்ப்பாணத்து நல்லூரைச் சேர்ந்தவன். அகில இலங்கைக் கம்பன் கழகத்துள் இணைந்தவன். யாழ் இந்துவின் மைந்தன். கவிஞர் கலாநிதி இ.முருகையனின் நம்பிக்கை நட்சத்திரம். தசாப்த காலமாக பல கவிதைகளை எழுதி வருபவன், பண்பாடு மிக்கவன், அடக்கமானவன், விஞ்ஞானப் பட்டதாரி, சிறந்த தமிழ் நடை மூலம் வாசகர் மனதைக் கவர்பவன், அருணன், சயனொளிபவன், தேரடிச் சித்தன் எனும் புனைபெயர்கள் கொண்டவன்,யாழ்ப்பாணத்தின் பெரும் இக்கட்டான சூழ்நிலைகளில் பல துன்பங்களை அனுபவித்தவன். இத்தகைய அடித்தளங்கள் அனைத்துமே ‘கனவுகளின் எல்லை’ யில் ஏக்கத்துடன் வெளிப்படுகின்றன.

எதிர்காலச் சமூகத்தை, நாட்டை, தமிழை, தலைமுறையை, தமிழினத்தைப் பற்றிச் சிந்தித்து இறந்த காலத்தோடு ஒப்புநோக்கி வருங்காலத்துக்காக ஏங்கும் மனக்குமுறல்கள் பல இக் கவிதைகள் ஊடாகத் தொனிக்கிறன. கவிஞனின் குழூஉக்குறியும். தொனிப்பொருளும், வக்ரோக்தியும், கவிஞனுக்கேயுரிய தனிநடை, என்பவற்றினை உணர்வூறிக் கற்போர் நன்குணர்வர். அவர்கள் உணர்வதற்கும் கவிஞன் உணர்ந்து அனுபவித்த பின்புலங்களே அடித்தளமாகும்.

கவிஞனால் எது செய்யப்பட்டதோ அது காவியம். காவியம் என்றால் என்ன? உண்மையான இரசிகனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவது, விரும்பிய சிறந்த கருத்தினையுடைய சொற்தொகுதிகளை உடையது, சொல்லும் பொருளும் கூடியது, சிறந்த சொல்லமைப்பு இலக்கிய ரீதியில் குறைகளன்றி அணிகளுடன் சொல்லும் பொருளும் கவிநயத்துடன் விளங்குவது, ரஸத்தினை ஆத்மாவாகக் கொண்ட சப்தத்தைக் கொண்டது,’மனதைக் கவரும் கருத்துக்களைப் புலப்படுத்தும் சொற்களையுடையது’, அவையே காவியம் எனப்படும். இவை ஒவ்வொன்றுடனும் ஏதோவொரு வகையில் தொடர்புடையதே த.ஜெயசீலனின் கவிதைகள்.

மேலை நாட்டவர் பார்வையில் ‘இலக்கியம் வாழ்க்கை விமர்சனம்’,’அமைதியில் உணர்வுகள் மீண்டும் நிறைந்திருத்தல்’,’ஆற்றல் மிக்க உணர்வுகள் இயல்பாக ஊற்றெடுத்துப் பாய்தல்’,’எல்லா அறிவினதும் சீரான மூச்சு’, எனக் காவியத்திற்கும்ளூ ‘சிறந்த சொற்களைச் சிறந்த முறையில் அமைப்பது’,’ஒவ்வொருவரினதும் இதயத்தினை மேம்படுத்துவது,”கருத்தின் இசையை மொழியால் தெரியப் படுத்துவது’, எனக் கவிதையையும் கூறி நிற்க ‘காலத்தின் உயர் இலட்சியங்களின் பதிவேடு’,’காலத்தின் உயர் சிந்தனைகளின் பதிவேடு’,’காலத்தின் கண்ணாடி’, என இது விரியும். இந்நிலையில் த.ஜெயசீலனின் கவிதைகள் கவிதை, காவியம், பற்றிய வரையறைகளனைத்தையும் ஊடறுத்து உயர் நிலையில் விளங்குகின்றன.

இதே வரையறையோடு இக்கவிஞனின் காவியம், கவிதை என்னும் தன்மைகள் வறுமை, துன்பம், அழிவு, இளமையில் உயிரழிப்பு. முதுமையில் வேதனை, போரிரைச்சல், பாரம்பரியத்தோடு வாழ முடியாமை, போரின் கோரம், அமைதியின்மை, சமாதானத்தின் தூரம், அமைதியின் வடிவம், அரசியலின் அசிங்கம், சாவின் துரிதம், இளமையின் ஏக்கம், என ஒவ்வோரம்சமாய் யாழ்ப்பாணத்து சமூகம் இன ஒடுக்குமுறையால், அண்மைக்காலத்தில் உண்மையாக நடைபெற்றதை அனுபவித்து வரும் கோலங்களைக் காட்டுகின்றது. இவற்றினை, இக்கவிதைத் தொகுதியினை கவிஞர் ஒரே இரவிற் படைக்கவில்லை. காலத்திற்குக் காலம் ஒரு பொருள் – கரு –கொண்டு தொகுக்கப் பெற்றவை இவை. இவ்வாறு ஒருபொருள் கொண்டு தொகுக்கப்பட்ட தொடர்காவியமோ ஒரே பொழுதில் எழுந்த தனித் தனிக் கவிதைகளோ இவைகளல்ல. இவை அண்மைக்கால யாழ்ப்பாண சமூகத்தின் ஒருவகை இதிகாஸம். இவ் இதிகாஸத்தின் பழமையையும் புதுமையின் அடித்தளத்தில் சமூக உணர்வும் கனவாகக் கவிதையில் கனக்கிறது. அவையே கவிஞர் உலாவரும் ‘எல்லை காணாக் கனவு’. சமூகம் விழிப்படையும் நிலை எப்போது உண்டாகும் என்பதே கவிஞனின் எல்லை.

இயற்கையில் ஈடுபாடுமிகுந்த கவிஞன் சிறந்த முருகபக்தன். மாணிக்க வாசகத்தில் ஈர்ப்புக் கொண்டவன். சமர்த்தனைத் தன்னை ஆழும்படி வேண்டி நிற்பவன். அவன் வேட்டை(பக் 74,75), பாதை(பக்77,78), பெருவாழ்வு(பக் 75-77) நீயும் நானும்(பக் 72,73) காலத்திற்கு உரைத்தல்(பக்71,72) கவிமூலம் ஆகியன மூலம் தாம் எதிர்கொள்ளும் முகங்களுக்கு தெய்விகத்தை வேண்டி நிற்கிறான்.

‘உயிர்க் கூட்டுள் உறவாடி உணர்வுக்குள் கொடியேற்றி
உறைகின்ற எந்தன் தலைவா
‘உடைக்கின்ற’ நேரத்தில் உதிராமல் உனைஎண்ண
உதவிசெய் நல்லை முருகா’
என்றும் ‘வேட்டை’யில்
‘அற்புத அமைதியெந்தன் அகந்தன்னிற் சேர்க்காமல்
ஏன்உள்ளாய்…கைகளிலே
ஈட்டி, வேல், வில் கத்தியுடன்?
இதுபுரிய மறுக்குதுளூ என்
மனவனத்தைப் பூந்தோட்டம்
எனமாற்ற வேட்டையிடு எனைளூ
நேர்த்தி தொடர்கிறது’ என்றும் ‘பெருவாழ்வு’ எனும் கவிதையில்
‘குடி களவு பொய் பொறாமை
அழிளூ ஜெயித்தால் ஆடவைக்கும்
ஆணவத்தைத் தறிளூ அடங்கிச்
சிறுபொழுதில் மீண்டுமெனைச் சிறையெடுக்குஞ் சாகா
வரம்பெற்ற காம அரக்கன் மேல் ஈட்டியெறி!
பிறன்நெஞ்சை ரணமாக்கிப் பேசின்
என்நா பூட்டு!
திரியாக்கி நரம்பாலே நட்புக்கு ஒளியூட்டு!’ எனத் தன்னையாழும்படி வேண்டும் வேண்டுதல்கள் பல.
தனக்கு, தெய்வத்திடம் கவிபாடும் வரம்வேண்டும் என வேண்டும் கனிவும் மன உறுதியும் தனித்துவமானவை. ‘உயிர்ப்பா’,’கவிமாலை’,’கவிதைப் பூ மரத்தைக் கண்டுணர்க’,’அமுதூட்டு தமிழே’, என்பன மூலமாக இதனை உணர முடிகிறது.

தான் உணர்ந்த இயற்கையில் நிலவு, அதிகாலை, பூக்கள், காற்று, மழை என்பனவும் இசையும் கவிஞனின் மனங்கவர்ந்தவை. இவை அனைத்தும் காலத்தின் கோலத்திற்கேற்ப புதுப் பொலிவு பெறுகின்றன.
கவிஞன் தான் கண்ட வாழ்வியலில் பாரதிபோல் வேதாந்தம் பேசுகிறான். அவனது ‘வாழ்க்கை’,’ஜென்ம ஈடேற்றம்’,’நிலைபேறு’, என்பன இது பற்றிப் பேசும் அதேவேளை முக்தியை உணர்ந்து இரசிக்கிறான். இயற்கையின் படைப்பைக் கண்டு வியக்கிறான். விஞ்ஞானமும் மெய்ஞானமும் அவனை அலைக்களிக்கிறது. விஞ்ஞானத்தில் விடைகாண முடியாத கவிஞன் படைப்பாளியான பிரமனிடம் தனக்குவமையிலாதானின் ‘உவமை’யைக் காட்டுகிறான்.

‘பிரமன் ஒரு பெருங்கவிஞன்
அவன்எழுதிப் பிரசுரித்த
கவிதைகளில் எனைக்கவர்ந்த மிகச்சிறந்த
கவிதை நீ’
விடைகாணாக் கனவுகளின் எல்லை தெய்விகத்திலும் எல்லை காணாது செல்கிறது. பழமை நினைவுகளை பரிதவிப்புடன் நோக்கும் கவிஞனின் மன வெளிப்பாடே அட்டைப் படம். சிதைந்துபோன எம்மரபை, எமது சொத்தை, நன்கு காக்காத இளஞ்சமூகம் எதிர்காலத்தை எப்படிச் சமைக்கும் எனத் தொனிக்கிறது.

இயற்கையில் ஊறி தெவிட்டாத உணர்வுகளுடன், அழகுடன், காலத்தின் கோலத்துடன், நற்தமிழில் காலத்தைப் பதிவு செய்கிறது த.ஜெயசீலனின் ‘கனவுகளின் எல்லை’. இவரது உணர்வூறிய வினாக் கவிகள் முடிவற்ற எல்லையுடையன. காலம் இவற்றுக்குப் பதில் சொல்லியே தீரும்.

(இக்கட்டுரை யாழ் பல்கலைக்கழக சமஸ்கிருத துறை விரிவுரையாளர் பிரம்மஸ்ரீ ச.பத்மநாபன் அவர்களால் ‘கனவுகளின் எல்லை’ நூலுக்காக 2002 இல் எழுதப்பட்டது. இது 17.12.2001 அன்று வட்டு மத்திய கல்லூரியில் நடந்த கனவுகளின் எல்லை அறிமுக விழாவில் இவர் ஆற்றிய ஆய்வுரையின் சுருக்கக் குறிப்பாகும்)

Leave a Reply