கிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும் த.ஜெயசீலன்

‘முகநூல் வழிநான் கண்ட இனிய சகோதரன் கண்ணன் கண்ணராசன் அவர்களின் கைவண்ணத்தில் ‘கிறுக்கிப் போட்ட காகிதங்கள்’ எனும் கவிதை நூலின் வார்த்தைகளில் சமூக நலன் பற்றிய சிந்தனைகளும், கோபங்களும், அதன் தாக்கங்களுமென்று பலவற்றைச் சுமந்து நிற்கின்றன.’ என்று நூலாசிரியர் பற்றி நூலின் பின்அட்டையில் ‘யாழ் தமிழ்மகள்’ மணிமேகலை கைலைவாசன் கூறியதற்கு ஏற்ப வெளிவருகிறது நண்பர் கண்ணன் அவர்களது கிறுக்கிப் போட்ட காகிதங்கள்.
நூலின் இறுதியில் ‘உளமார்ந்த நன்றி’ என்பதில்

‘அதையும் இதையும் எழுதிவிட்டு
கவிதை என்று நான் போட்டேன்.
கண்டபடி கருத்துக்கூறி என்னை
கவிஞன் என வாழ்த்துப் பாடி
ஊக்குவிக்கும் உள்ளங்களின்
கருணைதனை நான்கண்டு
மெய்சிலிர்த்துப் போகின்றேன்.
தாய்மொழியாம் தமிழெடுத்து
தாறுமாறாய்க் கொலை செய்தேன்.
மொழிகாக்கும் தனயனென
வழிமொழியும் போதினிலே…என்
விழிகலங்கி நிற்கின்றேன் பெரும்
பழிசுமந்த உணர்வோடு….’
என்று தன்னடக்கமாக ‘அவையடக்கம்’ பாடி அதையும் நூலின் இறுதியில் வைத்து புதுமை செய்திருக்கிறார் கண்ணன்.
சிறிதும் பெரிதுமான சுமார் நூறுக்கும் அதிகமான கவித்துளிளைக் கொண்டது இத்தொகுப்பு.
தமிழ்க் கவிதை தொடர்பான ஆரம்ப பரீட்சயத்துடன் தான் நினைத்ததை, தான் சொல்ல விரும்பியதை, தான் உணர்ந்ததை, தான் அனுபவித்ததை, தான் தரிசித்த சமூக அவலங்களை, தன்னைப் பிழிந்த காதல் கற்பனைகளை, எனப் பலதரப்பட்ட கருப்பொருட்களை அனேகமாக நேரடியாக கவிதையாக்க முனைந்துள்ளார் கண்ணன்.
‘பழமையிலும் புதுமையானது தமிழ்’ என்ற கவிதையில்

‘கவிதை எழுதுகிறேன் நான் உனை
என் கவித்தாயே நீ என்று
கவிதையாய் எழுதுகிறேன் கவிதையே….என்றும்,

‘பொட்டு வைத்த சிட்டு’ என்ற கவிதையில்

‘உன் அன்பை கிள்ளி எந்தன் நெஞ்சில்
தொட்டு வைக்கின்றாய்.
என் உயிரை அள்ளி உந்தன் வகிட்டில்
பொட்டு வைக்கின்றாய்.
என் உணர்வில் ஏன்தான் தள்ளி நின்று
கொள்ளி வைக்கின்றாய்
எதற்கு இனியும் கள்ளி என்னை மேலும்
விட்டு வைக்கின்றாய்….’என்றும்,

‘உணர்வும் உறவும் உபத்திரவமா’ வில்

‘அன்பான உணர்வுகள் அவமானச் சின்னமா?
உரிமைப் பேச்சுகள் ஒருவகை வன்மமா?
பலகேள்விகள் எனக்குள்ளே விடைகள்
ஏதும் கிடைக்கவில்லை’ என்றும்,

‘இப்படிக்கு இதயம்’ கவிதையில்

‘என்னைக் கண்டவர்களிடம் கண்டபடி
தூக்கிக் கொடுத்து விடாதீர்கள்.
எனக்குள்
அன்பு காதல் பாசம் எனும் அளவில்லாப்
பொக்கிஷங்கள் நிறைந்திருப்பதால்…நான்
மிகக் கவனத்துடன் தானிருப்பேன் ஆகையால்
கொண்டு சுமக்க முடியாதவர்கள் கீழே போட்டு
உடைத்து விடலாம்’என்றும்,

கூத்தாடும் விலங்குகள்’ கவிதையில்

‘நாட்டு நடப்பிலே பல கூத்து நடக்குதே –அதைக்
காத்துக் கறுப்புக்கள் சேர்ந்து நடத்துதே…’ என்றும் பேசுகிறார்.
மேலும்
‘நாதியற்ற நீதிமான்களில்

‘ஏமாற்றம் மட்டும் தான் ஏழைகளின்
சொத்தாச்சு
போராட்டம் தான் அவர்களின் பொழுது
போக்காச்சு’ என்று குமுறியும்,

‘உன்னால் தேயும் பிறைநிலா நானில்’

‘சிரிப்பில் மீண்டும் வளர்கிறேன் –நீ
முறைக்கும் போது இறக்கிறேன்’ என்று உணர்ச்சி வயப்பட்டும்,

‘சந்தம் இல்லா சொந்தங்களில்;’

‘சொந்தங்கள் வாழ்வில் சந்தங்கள் ஆனால்
சந்தனக் காற்றாய் சந்தோசம் வீசும்
பந்தங்கள் வாழ்வில் மந்தங்கள் ஆனால்
சந்தோசக் காட்டில் மந்திகள் மேயும்’ என்று தத்துவம் பேசியும்,

‘சாயம் பூசிய சாட்டுக்களில்’

‘உண்மை இங்கே முக்காடு போட்டு
முடங்கிக் கிடக்குது
போய்கள் மட்டும் பரிவட்டம் கட்டி
பல்லக்கில் சுற்றுது’ என்று நையாண்டி செய்தும்,

‘மனச்சாட்சி இல்லா பொருட்காட்சியில்’

‘மனச்சாட்சி உனக்கிருந்தால் மனம்
திறந்து நீகூறு
சம்மதம் இல்லாத சம்பிரதாயம்
தேவையா என்று’ என்று கேள்விக்கணை தொடுத்தும்,

‘இப்படிக்குத் தாலியில்’

‘உன் கட்டிலில் கிடக்கும் தலையணை
அறிந்த உன் கண்ணீரைக் கூட
உனக்கு கட்டியவன் அறியவில்லையே!
இப்படிக்கு தாலி’ என்று கற்பனை வீச்சுக் காட்டியும்,

‘உழைப்பவனுக்கு உணவில்லை’ யில்

‘விதைத்தவன் அறுப்பதில்லை
அறுப்பவன் விதைப்பதில்லை
முளைத்தவை விளைந்தபோது
வளர்த்தவன் உண்பதில்லை’ என மார்க்சிசம் பேசியும்,

‘புத்தியும் யுத்தியும் சக்தியாகும்’ கவிதையில்

‘வடித்தாலும் வளியாத சக்தி வேண்டும்
குடித்தாலும் குறையாத பக்தி வேண்டும்
முடித்தாலும் மடியாத புத்தி வேண்டம்
வெடித்தாலும் பிரியாத முக்தி வேண்டும்’ என்று வேண்டுதல் வைத்தும்,

வேடிக்கையும் வேசமும்….’ கவிதையில்

‘அபிஷேகம் செய்கிறாய் சாமிக்கு
அதிசயம் நடக்குதா பூமிக்கு?
புரிந்தும் நீ நடிக்கிறாய் ஊருக்கு
பூக்கட்டிப் பார்க்கிறாய் வாழ்வுக்கு’ என்று நகைத்தும்,

‘விடியாத பொழுதொன்று கிடையாது’ ல்

‘நனைத்து நனைத்துச் சுமக்கிறோம்
காய முன்னே மடிக்கிறோம்.
விடிவைத்தேடி ஓடுகின்றோம்
விடிய முன்னே வாடுகின்றோம்.’ என்று யதார்த்தமுரைத்தும்,

‘நான் காணும் கனவுலகம’; என்பதில்

‘பசிக்கும் வயிறு நிறைய வேண்டும்
பச்சைப் பிள்ளை சிரிக்க வேண்டும்
பாலில் விழுந்து குளிக்க வேண்டும்
தந்தை அசந்து உறங்க வேண்டும்
தாயின் கனவு மலர வேண்டும்’ என்று கனாக் கண்டும்,

‘அளவுக்கு மிஞ்சிய ஆசையில்’

‘பில்கேட்சிற்கே மருமகள் ஆக ஆசைப்படும்
கன்னி ஒருத்தியை
பீடி குடிக்கும் பயபுள்ள மகன் ஆசைப்பட்டால்’ என நக்கலடித்தும்,

‘மந்தைகள் மத்தியில் மந்த நிலை’ யில்

‘கத்தரி வெருளிகள் மத்தியில் இன்று
நித்திரை கொள்ளும் மந்தைகள்
நம் இனம்….’என்று இனத்திடர் பேசியும்,

‘குடைபிடிக்கும் திருக்குறளில்’

தடுமாறி நான்வீழ்கையில் மருந்தாகிறாள்
கண்விழித்துப் பார்க்கையில் விருந்தாகிறாள்
வரமாக எனக்குக் கிடைத்த கொடைஇவள்
வாழ்க்கையை நடத்திச் செல்லும் படைஇவள்
என்அன்பே நீதாண்டி எனக்குத் திருக்குறள்’ என்று காதலில் கரைந்தும்,
தன் கவிதைகளில் பல்வேறு கோணங்களில் பல்வேறு பாடுபொருட்களை பாடி பல்பரிமாணங் காட்ட முயல்கிறார்.
இவரின் ‘இடுகாட்டுப் பயணம்’, ‘பக்தன்நான்’, ‘மெய்ஞானமும் விஞ்ஞானமும்’ ஆகிய தொகுதியில் உள்ள கவிதைகள் ஏதோ ஒரு விதத்தில் அவரின் தனித்துவத்தை இயம்புபவையாக தனித்துத் தெரிகின்றன. இவரின் கவித்துவம் எனும் நாற்று தளிர்விரித்து வளர்வதனை இக்கவிதைகள் காட்டி நிற்கின்றன. இவ்வளர்ச்சி தொடரின் இவரின் கவிப்பயிர் நிச்சயம் கவிதை விருட்சமொன்றாக மாறும் என்பதில் ஐயமில்லை.
நிற்க, வெறும் சொற்களும், சொற்சேர்க்கைகளும், கருத்துக் கொட்டல்களும், வறண்ட அழகியலற்ற வசன அடுக்குகளும், எடுத்த விடயங்களையெல்லாம் நேரடியாக, பூடகத்தன்மையின்றி, ஒரு நேர்கோட்டில் சொல்லிவிடுவதும், கவிதைக்கே உரித்தான கற்பனை உவமை உருவகம் படிமம் போன்ற சோடனைகளை முற்றாக புறக்கணிப்பதும், முழுவதும் இருண்மை பூசுவதும், உணர்ச்சி மொழியாக இல்லாமல் வெறுமனே அறிவுபூர்வமான தத்துவார்தமான தர்க்க வெளிப்பாடாக வெளிப்படுத்துவதும், கவிதையின் உயிமூச்சான ஓசைப் பண்பற்றவையும், கவிதைகளாகிவிடுமா என்ற கேள்விகள் வாதப்பிரதிவாதங்களுக்குட்பட்டிருக்கும் காலமிது. கவிதை கவிதைக்கானதா? வாசகனுக்கானதா? என்ற பட்டிடண்டபம் இன்றும் முடிந்தபாடில்லை. கவிதையின் வாசகன் என்பவன் யார் என்பதை வரையறுக்கும் சர்ச்சையும் தொடர்ந்தபடி இருக்கிறது. கவிதையை இரசிக்காமல் ருசிக்காமல் இந்த விவாதங்களிலும் சர்ச்சைகளிலும் ஈடுபட்டே தம்மை கவிஞர்கள், மேதாவிகள் எனக்காட்டி தங்களைப் பிரபலமாக்கிக் கொள்வோரே இன்று இலக்கிய வெளியை ஆக்கிரமித்துக் கொண்டும் உள்ளனர்.
இவை கடந்து கவித்துவத்தின் நுட்பங்களில் அனேகமானவற்றை கொண்டு தோன்றும் கவிதைகள் மனதிலும் காலத்திலும் என்றும் வாழும் என்பது வெளிப்படை. சொற்செட்டும், பொருட்செறிவும், உத்தி முறைகளும், உணர்வுக்கேற்ற ஓசைப்பண்பும், கற்பனைப் புதுமையும், கவித்துவ ஆழமும், எமது வாழ்வியலை பேசுபொருளாக கொண்டவையுமான கவிதைகள் எண்ணிறைந்து கிடக்கிறன எம்மிடம்.
எனவே இளங்கவிஞரான கண்ணன் அவர்கள் தன் கவிதை பற்றிய பார்வையை அகல விரித்து, தொடர்ச்சியான பரீட்சயம் பயிற்சி தேடல் வாசிப்பு என்பவற்றினூடாக தமிழின் மிக நீண்ட வரலாற்று பாரம்பரியங்களுடன் இன்றைய நவீனங்களையும் உள்வாங்கி செழிக்கும் தமிழ்க் கவிதையின் பல்வேறு வகை மாதிரிகளை அறிந்து கொள்வதுடன் உலகளாவிய வெவ்வேறு மொழி கலாசாரங்கள் ஊடக வந்த கவிதைகளையும் தெளிந்து கொள்வது அவருக்கு நன்மை பயக்கும் எனக் கருதுகிறேன்.
பல்வேறு வகையான கவிதைகளுடனான தொடர்பு இவரை நிச்சயம் மேலும் மெருகேற்றி, இவரைச் செதுக்கி, சரியான செல்திசையில் இவரைச் சேர்ப்பிக்கும் என்பதுடன் தனக்கான கவிதைத் தடமொன்றை இவர் கண்டடைய உதவும் எனவும் நம்புகின்றேன். இயல்பாகவே இவரின் வரிகளில் ஓசை ஒத்திசைவை கேட்க முடிகிறது. அவர் அந்நுட்பத்தையும் அறிந்து அதையும் மேலும் செம்மைப் படுத்தலாம்.
ஒருகாலத்தில் வெறும் செவிவழியாகவும், பின் ஓலைச்சுவடுகளிவும், அச்சிலும் வாழ்ந்த கவிதை இன்று இணையவெளி என்ற பரந்த, உடனடியாக பாய்ந்து பரவித் தொற்றி பலரைச்சென்று சேர வாய்ப்பு அதிகம் கொண்ட, ஊடகத்திலும் வென்று கொடியேற்றத் தொடங்கியிருக்கிறது.
இவ் வெளியில் கொட்டிக் கிடைப்பவற்றில் குப்பைகளை விலக்கி வைரங்களை தேடிப் பொறுக்கி அவற்றை பார்த்து இரசித்து பயின்று மெருகேறி கரியிலிருந்து இறுகிச் செறிந்து செறிந்து வைரமாக மாறும் கவிதைகளைப் படைத்து இணையத்தைச் சமூக ஊடகங்களைத் தனது பிரதான வெளியீட்டுத் தளமாக கருதும் இளைய நண்பர் கண்ணன் வாகைசூட என் வாழ்த்துக்கள்.

(26.07.2016)