சில நவீன எழுத்தாளர்களும் கவிஞர்களும் விமர்சகர்களும் தாம் எழுதுபவை சொல்பவை மட்டுமே இன்றைய கவிதைகள் எனவும், இதுதான் இன்றைய கவிஞர்களின் வரிசை என ஒரு பட்டியலை திரும்பத் திரும்ப ஒப்பித்து வருவதும், ஏனைய படைப்புக்களையும் படைப்பாளர்களையும் தாம் கருத்தில் கொள்வதே இல்லை எனவும், குறிப்பாக மரபு சார்ந்த யாப்பை அடிப்படையாக கொண்டு இன்று எழுதப்படுபவை கவிதைகளே அல்ல எனவும், அது சார்ந்து எழுதுபவர்கள் கவிஞர்களே அல்ல எனவும், கூறிவருகிறார்கள்.
மேலும் இன்று மரபுக்கவிதை வழக்கொழிந்துவிட்டது, அது சேடம் இழுத்துக் கிடக்கின்றது, அதற்கு பாடை கட்டப்பட்டு விட்டது, மரபுக் கவிதைகளை எழுத இன்று ஆட்களே இல்லை, என்றெல்லாம் சொல்லித் திரிகிறார்கள்.ஆனால் ஈழத்திலும் வெளியிலும் மரபுக்கவிதை அல்லது யாப்பு இலக்கணத்தின் கீழ் எழுதப்படும் ஓசை நயம் கொண்ட கவிதைகள் தொடர்ந்தும் எழுதப்பட்டு, உயிர்ப்போடு வாழ்ந்து , இன்றும் சாமானியர் முதல் கற்றவராலும் ரசிக்கப்பட்டுக், கொண்டுதான் இருக்கின்றது என்பதே உண்மை யதார்த்தம் என்பதனை மீண்டும் மீண்டும் நான் வலியுறுத்தி வந்திருக்கின்றேன்.வருகிறேன்.வருவேன்.
ஈழத்தில் புதுக்கவிதை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய 70களில் கவிஞர்களான மகாகவி, முருகையன்,நீலாவணன், சொக்கன், காசி ஆனந்தன், சில்லையூர் செல்வராசன், காரை சுந்தரம்பிள்ளை, பாவலர் சத்தியசீலன், ,ராஜபாரதி, ச.வே. பஞ்சாட்சரம், கவிஞர் கந்தவனம், புதுவை ,ரத்தினதுரை, கல்வயல் குமாரசாமி, ,ளவாலை விஜயேந்திரன், ஈழவாணன், சோ. பத்மநாதன், சுபத்திரன், தில்லைச் சிவன், ஜின்னா ஷெரிபுதீன், புத்தூர் ,ளையகுட்டி என பலரும் ஈழத்தில் மரபுக்கவிதைகளை எழுதி மரபுக் கவிதை நூல்களை வெளியிட்டும் வைத்துள்ளனர். இவ்வேளை தமிழ் பேசும் முஸ்லிம் கவிஞர்களும் அதிகம் மரபுக்கவிதைகளை எழுதுபவர்களாகவே இருந்துள்ளனர்.
80 தொடக்கம் 90களில் கூட இந்த நிலை தொடர்ந்தது. மேலே குறிப்பிட்ட பலர் மரபுக்கவிதைகளை தொடர்ந்து இக்காலத்திலும் எழுதினர். கவிஞர் முருகையன் அவர்கள் ‘அது அவர்கள்’ என்ற கவிதைச் சிறுகாவியத்தை ‘வெண்பா’ என்ற மிக இறுக்கமான யாப்பு வடிவத்தை மாத்திரம் பயன்படுத்தி வெளியிட்டிருந்தார்.
புதுக்கவிதைகளில் அக்காலத்தில் புதிய சிந்தனைகளை வெளிக் கொணரந்த த. இராமலிங்கம், சி.சிவசேகரம், மு.பொன்னம்பலம், சு. வில்வரத்தினம் போன்றோரும் மரபு யாப்பு வடிவங்களில் ஆழமான பரீச்சயத்தோடு அவற்றை நேரடியாக பயன்படுத்தி அல்லது சில புதிய வடிவங்களை பரிசோதித்தும் கவிதைகளைப் புனைந்திருந்தனர்.
ஈழத்தில் யுத்தகாலத்தில் கவிதைத் துறைக்கு தனி இடமும் மதிப்பும் மரியாதையும் முக்கியத்துவமும் கிடைத்த போதும் போர்ச்சூழலை மரபுக்கவிதைகளிலும் பல மரபுக்கவிஞர்கள் உயிரோட்டமாக பாடி, எழுதி வந்தனர். இவர்களில் காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களைவிட முருகையன், பண்டிதர் பரந்தாமன், நிலா தமிழின் தாசன், சோ.பத்மநாதன், ச.வே. பஞ்சாட்சரம், கவிஞர் கல்வயல் குமாரசாமி என பலரும் மரபுக்கவிதைகளில் யுத்த சூழல்களைப் பாடியிருந்தனர். மேற்படி காலங்களில் ஈழத்தில் வெளியான அனேகமான சஞ்சிகைகள் நாளிதழ்கள் எல்லாம் மரபுக்கவிதைகளினையும் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்து வந்தன.
90களில் ஜெ.கி. ஜெயசீலன், நாக சிதம்பரம், த.ஜெயசீலன், வேலணையூர் சுரேஸ். த.முகுந்தன், இ.சு. முரளிதரன், வாயுபுத்திரன், தர்மேந்திரா போன்றோரும் மரபுக்கவிதைகளை எழுதி வந்தனர். இக்காலத்தில் பத்திரிகை வாயிலாக அங்குசன் என்ற புனைபெயரில் மூத்த கவிஞர் ஒருவர் வெண்பாக்களை எழுதி வந்துள்ளார்.
இரண்டாயிரம் ஆண்டுக்குப் பின்னிருந்து இன்று வரை முன்சொன்ன பலருடன் குடாநீரூரான், வயலூரான் சுதாகரன், த.ஐங்கரன், வடிவழகையன், குடத்தனையூர் சிவசேகரன், அன்புராசா அடிகளார்,போன்றோரும் மரபுக்கவிதைகளை எழுதி வருகின்றனர். இவர்களில் வேலணையூர் சுரேஸ், வடிவழகையன், குடத்தனையூர் சிவசேகரன் ஆகியோர் சமீபத்தில் சிந்து வகையை சேர்ந்த மகாகவியால் ஈழத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘குறும்பா’ வடிவத்தை தாமும் பயன்படுத்தி முழுமையான நூல்களையும் ஆக்கித் தந்திருக்கின்றனர்.
இந்தக் காலத்தில் அதாவது 70 களிலிருந்து இன்று வரை ஈழத்தில் நடந்த கவியரங்குகளில் யாப்பு மரபுக்கவிதைகளே அதிகம் செல்வாக்குச் செலுத்தின. இவ்வரங்குகள் அன்றாட சம்பவங்களைக் கூட மரபுக்கவிதைகளில் பதிவு செய்து இரசிகர்களைக் கட்டிப் போட்டன.
வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஈழத்தின் மரபுக் கவிதைகள் தொடர்பாக இரு பெரும் தொகுப்புகளை வெளியிட்டிருக்கின்றது. ஈழத்துப் பூதந்தேவனாரில் இருந்து இன்று வரை ஈழத்தில் நூல்களாக தம் மரபுக் கவிதைகளை வெளியிட்ட மரபுக் கவிஞர்களை இத்தொகுதிகள் அடையாளப் படுத்தியுள்ளன. இதன்படி ஈழத்துப் பூதந்தேவனாரில் இருந்து இருபதாம் நூற்றாண்டு வரை அதாவது 2000 ம் ஆண்டுவரை 297 மரபுக் கவிஞர்களையும் 2000 ம் ஆண்டிலிருந்து இன்று வரை 197 கவிஞர்களையும் இத்தொகுப்புகள் சுட்டி நிற்கின்றன. நூல்களை வெளியிடாமல் போன மரபுக் கவிஞர்கள் இத் தொகுப்புகளுள் உள்வாங்கப்படவில்லை,அவர்களும் சேர்க்கப்பட்டிருந்தால் இவ் எண்ணிக்கை இன்னும் அதிகமாகியிருந்திருக்கும்.
நான் ஏற்கனவே சொன்னது போல புதுக்கவிதை கோலோச்சத் தொடங்கிய 70 களிலிருந்து இன்று வரை சுமார் 250 ற்கு மேற்பட்ட மரபுக் கவிஞர்கள் ஈழத்தில் தோன்றியிருந்திருக்கிறார்கள் என நம்பலாம், இதுவே யதார்த்தமுமாகும்.உண்மை இவ்வாறிருக்க புதிய, நவீன படைப்பாளிகள் மற்றும் விமர்சகர்களின் மரபுக்கவிதை தொடர்பான நிலைப்பாடு – உலத்தோர் உண்டு என்று அறிந்து சொல்பவற்றை இல்லையென்று கூறுவோர்கள் உலகத்தின்முன் பேய் எனக் கருதப்படுவர் என்ற திருவள்ளுவரின்
“உலகத்தார் உண்டென்பது இல்லையென்பான் வையத்து
அலகையாய் வைக்கப் படும்”
குறளை நினைக்க வைக்கிறது.
ஆக அன்றிலிருந்து இன்றுவரை அதாவது வசனக்கவிதை, புதுக்கவிதை, நவீன கவிதை , பின் நவீனக் கவிதை என கவிதையின் வடிவங்கள் காலத்துக்கு காலம் மாறுபட்டுவந்த கடந்த 50ஆண்டுகளில் ஈழத்தில் மரபுக்கவிதையும் செழித்து வளர்ந்த வண்ணமே இருக்கின்றது. சிலர் முணுமுணுப்பது போல மரபுக்கவிதை வழக்கொழிந்தோ, நீர்த்துப் போயோ, சேடம் இழுத்தோ, செத்து சமாதியாக்கப்பட்ட நிலையிலேயோ, மரபுக் கவிதை எழுதுவோர் இல்லை என்ற குறையோ, கவியரங்குகள் காலாவதியாகி விட்டன என்ற கூக்குரலோ, காணப்பட்டிருக்க வில்லை என்பதே யதார்த்தமாகும்
கவிஞர்களான த.ஜெயசீலன், ச.முகுந்தன், வேலனை சுரேஸ் வாயுபுத்திரன், வயலூரான் சுதாகரன், த. ஐங்கரன் ஆகியோர் முழுமையான மரபுக்கவிதை வடிவங்களை பயன்படுத்தி இன்று வரை கவிதைகளை எழுதிவருகின்றனர். எனினும் இ.சு. முரளிதரன் , திருக்குமரன், இயல்வாணன், கு. றஜீவன் ஆகியோர் மரபுக்கவிதைகளைப் படைக்கின்ற அதேநேரம் புது, நவீன கவிதைகளையும் எழுதி வருகிறார்கள்.
கடந்த 50 ஆண்டுகளுள் வெளிவந்த மகாகவியின் கவிதைத் தொகுப்புகளும் பாநாடகங்களும் மரபுக்கவிதைகளாலானவை.
கவிஞர் முருகையனின் ‘ஆதி பகவன்’ ‘மாடும் கயிறு அறுக்கும்’, ‘நாங்கள் மனிதர்’, ‘ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும்’ என்பன 90 களுக்குப் பின் வெளிவந்த மரபுக் கவிதைகளைக் கொண்ட தொகுப்புகள்.
கவிஞர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் தற்போதுவரை சுமார் முப்பது வரையான, மரபுக்கவிதை நூல்களை எழுதி வெளியிட்டு இருகின்றார். கவிஞர் சோ.பத்மநாதன் அவர்களின் முதல் நூலான ‘வடக்கிருத்தல்’ அநேக மரபுக் கவிதைகளையே உள்ளடக்கியிருந்தது. கவிஞர் புதுவை இரத்தினதுரையின் ‘இரத்த புஷ்பங்கள்’, ‘ஒரு தோழனின் காதல் கடிதம்’, ‘வானம் சிவக்கிறது’, ‘நினைவழியா நாட்கள்’ என்பன மரபுக்கவிதைகளைக் கொண்டதாகவும் ‘ பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும் கணிசமான மரபுக்கவிதைகளைக் கொண்டும் வெளிவந்தது. கல்வயல் குமாரசாமி அவர்களுடைய முழுமையான கவிதைகளை கொண்ட நூல் வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தால் அண்மையில் வெளியிடப்பட்டது. அது முழுமையான மரபுக்கவிதைகளை கொண்டது. காரை சுந்தரம்பிள்ளை அவர்களின் ‘தேனாறு’, ‘ சங்கிலியம்’,’தவம்’,’உறவும் துறவும்’, ‘பாதை மாறிய போது’ ஆகிய எல்லாத் தொகுப்புகளும் மரபுக் கவிதைகளாலானவை. புலவர் ஜின்னா ஷெரிபுதீன் ‘பாலையில் வசந்தம்’ என்ற கவிதை நூலும் பத்திற்கு மேற்பட்ட காவியங்களும் மரபுக் கவிதைகளால் ஆனவை. ஜின்னா அவர்கள் மரபுக் கவிதைகளைப் போற்றி புதுக்கவிதைகளுக்கு எதிரான கருத்துடையவராக அதனை துணிந்து உரைப்பவராக உள்ளார். கவிஞர் த.ஜெயசீலனின் ‘கனவுகளின் எல்லை’, ‘கைகளுக்க்குள் சிக்காத காற்று’, ‘எழுதாத ஒரு கவிதை’ ‘புயல் மழைக்குப் பின்னான பொழுது’, ‘நல்லூரான் புகழ்’ மற்றும் ச. முகுந்தனின் சுட்ட மண் என்ற கவிதை நூலும், வேலனை சுரேசின் குறும்பாநூறு மானிடப் பேரிடர், பாப்பா பாடல்கள் பாகம் ஒன்று, பாகம் இரண்டு ஆகிய நூல்களும் ஆகியன முழுமையான மரபுக்கவிதைகளாலான நூல்களாகும்.
இ. சு.முரளிதரன் அவர்களின் ‘இரட்டைக்குக் கரு முட்டை’, ‘புழுவுக்கும் சிறகு முளைக்கும்’ ‘கலையுருகாட்டி’ போன்ற நூல்களும், ச.முகுந்தனின் ‘ ‘சுட்டமண்’ என்ற கவிதை நூலும், வயலூரான் சுதாகரனினுடைய ‘குருதிபடாக் காயங்கள்’ மற்றும் ஆயிரம் வெண்பாக்களைக் கொண்ட ‘வெண்பா மாலையும்’ , கவிஞர் நாக சிதம்பரம் அவர்களின் ‘வேரினை நோக்கிய விழுதுகள்’ என்ற சமீபத்தில் வெளியான நூலும், ஓரிரு வாரங்கள் முன் வெளியிடப்பட்ட அருட்பணி அன்புராசா அடிகளாரின் ஆயிரம் விருத்தங்களை கொண்ட ‘விருத்தப்பா மழை ஆயிரம்’ எனும் நூலும் கடந்த 40வருடங்களுக்குள் ஈழத்தில் வெளிவந்த முக்கியமான மரபுக்கவிதை நூல்களாகும். இன்னும் இன்னோரன்ன மரபுக் கவிஞர்களின் நூல்களும் சான்றாதாரங்களாகக் கொட்டிக் கிடக்கின்றன.
தற்போது இணைய, முகநூல் பாவனை அதிகரித்துள்ளமையால் அவற்றில் பலரால் புதுக்கவிதைகள், நவீன கவிதைகள் அதிகளவில் தினந்தினம் பதிவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் மரபுக்கவிதைகளை எழுதிப் பகிர்வதும், மரபு இலக்கிய இலக்கணங்களைப் பயில்வதும், மரபுக்கவிதை தொடர்பான கலந்துரையாடல் கருத்தாக்கங்களை மேற்கொள்வதும், மரபுக்கவிதைகளுக்கிடையில் போட்டிகளை நடாத்தி பரிசு விருது பட்டங்கள் வழங்குவதும், என பலர் இதே இணைய, முகநூல் தளங்களில் தொடர்ச்சியாகவும் வினைத்திறனாக வும் மரபுக் கவிதை சார்ந்து இயங்கிவரும் நிலைமையும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகக் காணப்படுகிறது.
யாழ்ப்பாண தமிழ் சங்கம் ஏற்பாடு செய்த மரபுக்கவிதை பயிலரங்கு சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றபோது கவிஞர் சோ.ப வும் நானும் வளவாளர்களாக கலந்துகொண்டிருந்தோம். அதில் கலந்துகொண்ட 15,20 பேர் இன்றும் தொடர்ந்து மரபுக்கவிதை செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்தத் தொடர்ச்சியிலேயே வயலூரானின் ஆயிரம் வெண்பாக்கள், அன்புராசா அடிகளாரின் ஆயிரம் விருத்தங்கள் வரிசையில் மேலுமொன்றாக ஆயிரம் விருத்தப் பாக்களாலான உடுவிலூர் கலா அவர்களின் ‘மல்லிகைப் பந்தல்’ கவிதை நூலும் வெளிவருகின்றது.
உடுவிலூர் கலா அவர்கள் அண்மைக்காலமாக முகநூல் இணையத்தளங்களில் ‘கவிதை வாசகர் வட்டங்கள்’ ஊடாக பரவலாக அறியப்பட்டவர். ஏற்கனவே ஒரு மரபுக்கவிதைச் செயற்பாட்டாளராக இயங்கிச் சில நூல்களை வெளியிட்டிருக்கின்றார். அதைவிட மரபுக்கவிதை தொடர்பான பல்வேறு ஆய்வு நிகழ்வுகளை பல்வேறு வாசகர் வட்டங்கள் ஊடாக ஒழுங்குபடுத்தித் தானும் பங்குபற்றுபவராக திகழ்ந்திருக்கிறார். இவர் சமூக ஊடகங்களின் ஊடாக தொடர்ந்து பல இளைய படைப்பாளர்களை ஊக்குவித்து வளர்த்தெடுத்தும் வருகின்றார்.
உடுவிலூர் கலா அவர்கள் தனது புதிய நூலினை முழுமையான மரபு யாப்பு வடிவத்தில் வெளிக்கொண்டு வருவது பாராட்டுக்குரியது.
இவரின் இந்த ‘மல்லிகைப் பந்தல்’ எனும் ஆயிரம் பாக்கள் கொண்ட நூலில் உள்ள அநேகமான பாடல்கள்
“தான தான தான
தான தான தனதனனா”
அல்லது
‘தனன தனன தான
தனன தனன தனதனனா’
என்ற தத்தகாரம் அல்லது சந்த ஓசையில் எழுதப்பட்டவை. இந்த ஓசை ஓட்டம் உடைய 4 அடிகளை கொண்ட ஒரு வகை விருத்தப்பா வகையில் பல தலைப்புகளில், பல விடயங்களை இவர் பாடுபொருளாக்கியுள்ளார்.
“மரபுக்கவிதைகளில் சில விடயங்களே பாடப்பட முடியும் பாடப்பட வேண்டும்” என்ற விதியை, நடைமுறையை பின்பற்றாமல் அக் கருத்தியலை உடைத்து புது, நவீன கவிஞர்கள் பாட எழுத முனையும் தலைப்புக்களில் கூட தான் என்ன விடயத்தை பாட அல்லது சொல்ல நினைக்கிறாரோ அதனை இயல்பாக எழுதியிருக்கின்றார்.
‘அதிக வெப்பம்’ எனும் கவிதையில்
” வெம்மை கொடும் யாக
வெளியே செல்ல முடியவில்லை
தும்மல் பிணியும் அதிகம்
துயரில் மாயும் மனிதமிங்கே
இம்மி யளவும் காற்றோ
இங்கே இல்லை என்செய்ய
அம்மா போன்ற பூமி
அனலாய்ப் பொசுங்கும் நிலைபாரீர்”
என்றும்
‘எங்கள் மொழி’ எனும் கவிதையில்
“இதமும் அழகும் மிகுந்த
இனிய எங்கள் செம்மொழியை
முதலும் முடிவு மாக
முடியைச் சூடும் அந்தமிழை
சிதம்போலப் பரந்து விரிந்த
செம்மையான பொற்றமிழை
உதய வேளை தன்னில்
உணர்வில் ,றையாய் வணங்கிடுவோம்! என்றும்
‘பிரியாணி’ என்ற பாவில்
“உடலின் எடையைக் கூட்ட
உகந்த உணவாய் நம்மவர்க்கே
படங்கள் போடும் கடைகள்
பணத்தைத் தேடச் சிறந்தவழி
குடலில் ஒட்டும் கொழுப்பை
குறைக்க முடியா நிலையினிலே
அடங்கிப் போவர் நன்றாய்
அதிக அழுத்த நோயினாலே! ”
என்றும்
‘கஞ்சி’
என்ற கவிதையில்
“கஞ்சி சொல்லு முண்மை
காவு கொண்ட வரலாறு
எஞ்சியுள்ளோர் வாழ்வி
லென்றுந் துயரின் சுமைகளன்றோ!
நஞ்சு கொண்டோ ரெம்மை
நன்றே அழித்த கதையிதுவே
தஞ்சம் கேட்டு நின்றோம்
தரணி மீதில் புலம்பெயர்ந்து” என்றும்
‘பொய்மை’ எனும் கவிதையில்
மரணம் ஒருநாள் வந்துவிடும்
மனிதா! உண்மை வழிசெல்க!
வரமாய் வந்த வாழ்வில்
வாய்மை உயர்த்தும் உணர்ந்திடுவாய்!
கரங்கள் தட்டும் ஓசை
கனிவாய்க் கேட்கும் காதினிலே
துரத்தி மகிழ்வாய் பொய்யை
துலங்கும் வாழ்வு பண்புடனே!
என்றும்
பாடுகிறார். ஆயிரம் பாக்களில் ,வை சில உதாரணங்களே. இவை போல இன்னும் பல கவிதைகள் இவரின் கவிதை பண்பியல்பிற்குச் சான்றாக உள்ளன. விரிவஞ்சித் தவிர்க்கிறேன்.
உடுவிலூர் கலா அவர்களிடம் சொற்பஞ்சம் இல்லை, பொருட்பஞ்சம் இல்லை, பாடுபொருட்களில் வரையறைகள் மட்டுப்பாடுகள் இல்லை, பொருத்தமான சொற்களை யாப்பு ஒழுங்கில் இணைத்து ஏற்ற எதுகை மோனைகளைத் தேடிக் கோர்க்க இவர் சிரமங்களை எதிர்கொள்ளவதாக அவதானிக்க முடியவில்லை. ஓரளவு இலாவகமாக நெருடலின்றியே இவரின் யாப்பு நடை செல்கிறது. மிக வழமையான சாதாரண விடயங்களில் இருந்து சிக்கலான விடயங்களைக் கூடப் பேசுபவையாக இவரின் கவிதைகள் விளங்குகின்றன. தான் நினைத்த எந்த ஒரு விடயத்தையும் தான் கையாளும் யாப்பு வடிவத்தினுள் கொண்டுவரக்கூடியவராகவே இவர் தெரிகிறார். அப் பாடு பொருள்கள் பற்றிய விளக்க விபரிப்புகளை அதிக அணிச் சோடனைகளின்றி அனேகமாக நேரடியாகவே சொல்கிறார். இதனால் சாதாரண அல்லது அரம்ப நிலை வாசகர்களுக்கும் ஆயாசம் தராமல் புரியக் கூடியவையாகவே இவரது பாக்கள் அமைகின்றன.
எனினும் இன்னும் புதிய சிந்தனைகள் புதிய கற்பனைகள் புதிய உத்திமுறைகள் வெவ்வேறு அணிவகைகளை பாவித்தல், உணர்வுக்கு முன்னுரிமை தரல், புதிய கவிதா நுட்பங்களை உள்வாங்கல், என்பவற்றுடன் இவர் எதிர்காலத்தில் தனது கவிதைகளை படைப்பது இவரை வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்லும்.
யாப்பு வடிவங்களில் பரீச்சயம் உள்ள இவர் யாப்பின் பல்வேறு வகைகளையும் பயின்று அவற்றையும் கையாள்வது இவரின் கவிதா விலாசத்தை மேலும் மேம்படுத்தும் என்பேன். ஒரே வகை யாப்பு வடிவை திரும்பத் திரும்பப் பயன்டுத்துவது அவசியமற்றது. கம்பன் அறுபது வகையான விருத்தங்களை பாடினான் என்பர். ஒவ்வொரு யாப்புகளும் ஒவ்வொரு விதமான பண்பியல்பை எளிதில் வெளிக்காட்ட வல்லவை. எனவே அந்த அந்த விடயங்களை அது அதற்குரிய யாப்புகளில் பயன்படுத்துவது, பாடுவது அதிகம் ஆரோக்கியமாக அமையும்.
வெறுமனே எதுகை மோனைகளை மாத்திரம் சொற்களில் தேர்ந்து ஒருகாலத்தில் பலவீனமாக மாற்றப்பட்ட, அல்லது நீர்த்துப்போக வைக்கப்பட்ட, மரபுக் கவிதைகளாக இவரது கவிதைகள் மாறிவிடக்கூடாது. வெற்றுச் சொற்கூட்டங்கள் மட்டும் கவிதையென்றாகி விடாது. பொருந்தி வருகின்ற தேர்ந்த சொற்களுக்கிடையில் ஏற்படும் இரசாயன மாற்றமே கவிதையின் உயிரை உருவாக்கும், எதுகையும் மோனையும் அணிகளும் கற்பனையும் உத்திகளும் சரியான விகிதத்தில் கலக்கும் போது அது கவிதையின் சோடிக்கப்பட்ட அழகிய உடலை தரும். இவ்வாறு உயிர்கொண்டு செல்லவும் கவிதையே காலம்தாண்டி சிரஞ்சீவியாக எம்மோடு வாழ்ந்திருக்கும் இதனையும் கவிதாயினி மனங்கொள்ளலாம்.
மேலும் ஈழத்தின் மரபுக்கவிதைப் பாரம்பரியம் தனித்துவமானது,பல கவிதைப் பேராளுமைகளால் நிறைந்தது. அதனுடைய பெருமையை அது இன்றுவரை சமூகத்தில் செலுத்திவரும் தாக்கத்தை உடுவிலூர் கலா அவர்கள் வாசித்துக் கற்றுணர வேண்டும். வெறும் சொல் அடுக்குகளாக அன்றி எமது வாழ்வியலோடி ஒட்டி உறவாடுபவையாக சாமானியர்களை சென்று சேராத புது, நவீன கவிதைகள் போலன்றி மக்கள் மயப்பட்டவையாகவே எமது ஈழத்து மரபுக்கவிதைகள் இருந்தன இருக்கின்றன, இருக்கும், என்பதை
அவர் புரிந்து அதன் ஆழ நீள அகலம் தெரிந்து அவர் பயணிக்க வேண்டும்.
இன்று நவீனர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் எமது மரபுரிமைகளை காத்துப் போற்ற வேண்டும் என்றும் கங்கணங் கட்டிக் கொண்டு பழைய குத்துவிளக்கு, வெற்றிலைச் சல்லம், மூக்குப்பேணி, பாக்குவெட்டி, உரல், உலக்கை, அம்மி, திரிகை, ஆட்டுக்கல், கதவு, யன்னல், தீராந்திகள் என்பவற்றை ஓரிடத்தில் காட்சிப்படுத்தி எமது மரபுரிமைகளை பாதுகாத்துவிட்டோம் என குத்தி முறிகிறார்கள்.
ஆனால் இவர்கள் எமது தமிழ்க் கவிதையின் பாரம்பரிய மரபுரிமையான யாப்பு வடிவங்களை, உயிர்ப்பும் ஓசை நயமும் குன்றா மரபுக்கவிதைகளை தீண்டத்தகாதவைகள், தீட்டு உடையவைகள், எனத் தள்ளிப் புலம்பி ஒதுக்கிவிட்டு தாம் மரபுரிமையின் பாதுகாவலர்கள் என சொல்லிக்கொள்கிறார்கள்.இது மிகமிக அபத்தமானது.
இன்றும் தேவார திருவாசகங்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்களில் உள்ள பாடல்கள் நெஞ்சை தொடுபவையாகவும், ஓரிரு தடைவ கேட்டாலே மனதை வருடி மனனமாகி விடுபவையாகவும், இருக்கின்றன. இதற்கு அவைகளின் ஓசை ஒத்திசைவுப் பண்பே பிரதான காரணமாக இருக்கின்றது.
இன்று நாங்கள் செவிப்புலச் சுவையை மறந்து செகிடர்களாக வாழவில்லை, தமிழ் மரபுக் கவிதையின் உணர்வு பூர்வமான ஓசைச் சுவையை மறுதலிக்க வேண்டிய புறக்கணித்து ஒதுக்கவேண்டிய அவசியம் நிர்ப்பந்தம் யாருக்கும் ஏற்பட்டிருக்கவும் இல்லை. பின் ஏன் தமிழின் ஓசைச்சுவை கொண்ட மரபு யாப்புக் கவிதைகளைத் தீண்டத் தகாதவைகளாய்த் தவிர்க்க வேண்டும்?
இன்றைய புது மற்றும் நவீன கவிதைகள் கட்டறுத்து புதிய உத்திகளில் புதுப் புது விடயங்களை புதிய கற்பனைகளுடன் வெளிப்படுத்துபவையாக இருக்கின்ற போதும் அக்கருத்துக்கள் மாத்திரமே மனதில் பதிகின்றன. அவ்வரிகளை அப்படியே திரும்ப ஒப்பிக்க முடியாதிருக்கிறது. தலைப்பையும் எழுதியவர் யார் என்பதையும் மறைத்துவிட்டு பார்த்தால் எல்லாமும் ஒன்றே போல் தெரிகின்றன எனச் சொல்லப்படுவதற்கு புது,நவீன கவிதைகள் தனித்துவ அடையாளம் இல்லாதிருப்பதும் ஞாபகத்தில் நில்லாது அகல்வதுமே காரணம் எனலாம்.
எனவே தமிழ்க் கவிதையின் தனித்துவ அடையாளமான யாப்பு வழிவந்த கவிதைகளில் ஈடுபாடும் பரீச்சயமும் உடைய உடுவிலூர் கலா அவர்கள் தொடர்ந்தும் எமது கவி மரபுக்கு தன்னாலான பங்கை ஆற்றவேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.
அன்புரிமையுடன் த.ஜெயசீலன்
10.06.2025





