நடு நிலைமை

வாழ்க்கையெனும் பட்டத்தின் வாலினையும்
அதை ஏற்றும்
நூலினையும் அறுத்துவிட்டு
நோண்டுது ‘நிகழ்காலம்’.
என்செய்யும் வாழ்க்கைப் பட்டம்?
இடர்க்காற்றில்,
ஒன்றுமில்லை ஆதாரம் என்ற ஒருநிலையில்,
எங்கெங்கோ சென்றலைந்து
குத்துக் கரணமிட்டு
எங்கு செல்வதறியாது
கருக்குப் பனைகளிலும்,
காடு கடல் மேட்டினிலும் மோதி
உடல் கிழிந்து
வீழ்ந்து கொண் டிருக்கிறது!
ஏற்றிய இடம் வேறு
ஏறுகையில் இருந்த எழில், மிடுக்கு, உசார்,
துணைநின்ற நூலினது வாலினது சமப்படுத்தல்,
இணைய…உற்சாக மாக
அது ஏறியது!
கோல முகில்களிடை விண் கூவியே நின்று…
ஊரார் வியந்து அண்ணாந்து பார்க்கவைத்து…
பேர்சொல்லிப் பாடிற்று!
பொறுக்குமா இதைக்காலம்?
யாரும் அறியாத் தன் அரூபகரம்,பற்களது
கோரம் அவைகொண்டு,
குள்ள மதியோடு,
ஏதோஓர் வழியாலே அறுத்தது
வால் நூலை!
‘காலமும் வஞ்சிக்கும் அது நடுநிலமை-
யானதல்ல’ என்று
தோன்றிடுது இன்றெனக்கு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.