முன்னுரை: கனவுகளின் எல்லை – மூத்த கவிஞர் இ.முருகையன்

1.
ஒரு சமயம், துறைபோகக் கற்ற தமிழ்ப் பேராசிரியர் ஒருவர், மக்கள் மத்தியில் பேர் பெற்ற கவிஞர் ஒருவரைப் பார்த்துக் கேட்டார் – ‘ஐசே, நீர்தானா அந்த மரபுக் கவிதை பாடுகிற மாடசாமி?’ கவிஞருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வாயடைத்து நின்று விட்டார்.

நம்மிடையே நடமாடும் கற்றறிவாளர் பலர், இந்தப் பேராசிரியரின் நிலையிலே தான் உள்ளனர். கவிஞர்களை மரபுக் கவிஞர்கள் எனவும் புதுக்கவிஞர்கள் எனவும் பிரித்தறியலாம், கலையின் உள்ளடக்கத்தையும் உருவத்தையும் பிரித்தெடுக்கலாம், சொல்லையும் பொருளையும் பிரித்தெடுக்கலாம், ஓசையையும் உணர்ச்சியையும் புறம்பு புறம்பாகப் பிரித்தெடுக்கலாம் என்றெல்லாம் கருதும் நிலையில் இந்தப் புத்தியாளர்கள் இருக்கிறார்கள். இந்த நிலைமை எப்படித் தோன்றுகிறது? மிகை எளிமையாக்கத்தில் ஒருவர் ஈடுபடும்போது இவ்வித விபரீதங்கள் பிறப்பெடுக்கின்றன.

2.
கவிஞர் த.ஜெயசீலனின் கவிதைத் தொகுப்பு என் பார்வைக்கு வந்தபோது, அவரை எந்த முறையில் இனங்காட்டலாம் என்று யோசித்தேன். அப்போது மேற்சொன்ன பேராசிரியரின் நினைவு எனக்கு வந்தது. கவிதைகளை மரபுக் கவிதைகள் என்றும், புதுக்கவிதைகள் என்றும் இருமுனைப் படுத்தி வகுத்துப் பார்ப்பது அபத்தமானது. கவிதைகளை மட்டும் என்ன, உண்மையான தற்புதுமைவாய்ந்த கலைப் படைப்பு எதனையுமே மரபுக் கலை, புதுக்கலை என்று முரட்டுத் தனமாக வகுப்பாக்கம் செய்ய முடியாது.

மரபுகள் இல்லாமல் கலைகள் இல்லை. அதுபோலவே புதுமை இல்லாமல் படைப்பாக்கம் எதுவுமே நிகழ்வதில்லை. பொருள்களின் பண்புகளை இருமுனை எதிர்களாக உடைக்க முயல்வது உண்மைகளைச் செம்மையாக விளங்கிக் கொள்வதற்கு தடையாகவும் அமையலாம் என்று அண்மைக் காலத்துச் சிந்தனையாளர்கள் அழுத்திக் கூறி வருகிறார்கள்.

எல்லா அறிவுத் துறைகளுக்கும் போலவே கலைத் திறனாய்வுத் துறைக்கும் இது பொருந்தும். அதுவும், மொழியினை ஊடகமாகக் கொண்ட கலைகள் உணர்ச்சி எழுச்சிகளோடு,கருத்தடக்கத்தையும் தமது இன்றியமையாத கூறுகளாகக் கொண்டுள்ளன. அந்த வகையில் கவிதைகளின் தன்மைகளை விளங்கிக் கொள்வதற்கு அவற்றைப் பகுத்து ஆய்ந்து பார்த்தாலும் உண்மையில் கவிதைகள் எல்லாம் முழுமையான உயிரிகள் என்பதை மறந்து விடுதல் கூடாது.

எனவே, ஜெயசீலனை மரபுக் கவிஞர் எனவோ புதுக் கவிஞர் எனவோ முத்திரை குத்தும் வேலையில் நாம் இறங்க வேண்டாம்.
1.அவருடைய கவிதைகள் எப்படிப் பட்டவை?
2.கவிஞர் எனும் முறையில் அவருடைய ஆற்றல்கள் எத்தகையன?
இந்த இரு கேள்விகளையுந் தான் நாம் இவ்விடத்திலே பரிசீலிக்க வேண்டும்.

ஜெயசீலன் இடையறாது பெருந்தொகையில் கவிதைகளை ஆக்கும் ஊக்கமும் வல்லமையும் வாய்ந்தவர். வாழ்க்கையின் பல பக்கங்களையும் அனுபவித்தும் பரிசீலித்தும், ஊடுருவும் உணர்வு நேர்த்தி வாய்க்கப் பெற்றவர். மாந்தரின் இன்ப துன்பங்களையும் அழகையும் ஆன்ம ஆழங்களையும் சென்றடையும் திறனும் ஆர்வமும் திளைப்பும் மிகுந்தவர். அதனால் அவருடைய ஆக்கங்களில் ஒருவிதப் பன்மைப் பண்பமைதி குடிகொண்டிருப்பதைக் காணலாம். அவர் அழகையும் பாடுவார். வரட்சியின் வெடிப்புகளையும் பாடுவார். மழை வெள்ளப் பெருக்கையும் பாடுவார்.

‘எழு நிறங்களிலே ஏற்ற நிறமெடுத்து
யார் வரைந்தார் இந்த அதிசயத்தை?
பார் முழுதும்
ஓர்மரபில் தோன்றி ஒளிருமிந்த ஓவியமும்
பேதம் கடந்த பிறப்பு.’
என்று ‘வானவில்லை’ அண்ணாந்து பார்த்துப் பாடும் கவிஞரின் அதே வாய்தான்
‘மண்வெடித்துப் போச்சு மடைதிறக்கும்
நம்ஊற்றுக்
கண் வரண்டதாச்சு’
என்று வரட்சியின் கடுமை பற்றியும் வருந்தி நொந்துகொள்ளும்.
கவிஞர் ஜெயசீலன்
‘வாழ்வின் அடித்தளத்து மர்மங்கள் யாவும்
ஆழ அளந்தறிவார்ளூ
ஆன்மச் சுடர்தெறிக்கும்
முத்துகளே போன்ற மொழிகள் தொடுத்திடுவார்ளூ
மின்னற் பொறிபோல் வினாடிக் கொருதடவை
தன்னிடத்தே தோன்றும் எழுச்சிகளைப் பாவாக்கி
நல்குவார் அய்யா!
நவஉலகின் போக்குகளை
நுட்பமாய் நோக்கி நொடிப்படங்கள் செய்திடுவார்.’
என்றுதான் சொல்லத் தோன்றுகிறது, அவருடைய பாக்களைப் படிக்கும் போது.

ஆம், கவிஞரின் பொருட்புலம் விரிந்தது. மட்டுப்பாடு இல்லாதது. அதனாற் தான், அவர்தம் படைப்புகளை 1.தீயணைப்பு 2.அழகியல் 3.உயிர் 4.புண்ணிய பூமி 5. கோடை மழை என்றெல்லாம் அணிவகுத்துக் காட்ட வேண்டிய நிலைமை உள்ளது.
‘தீயணைப்பு’ என்ற பகுதியில் கலையாக்கத்தின் போது எழும் சிலிர்ப்புக்கள் பதிவாகி இருக்கின்றன. ‘அழகியலில்’ உலக எழிலின் மோகன கீதம் கேட்கிறது. ‘உயிர் ஓசையில்’ ஆன்மிக விசாரங்கள் மெல்ல எட்டிப் பார்க்கிறன, சுயவிமர்சனமும் பிறப்பெடுக்கிறது. ‘கோடை மழை’யில், குளிர்ந்த அமைதித் தீர்வுகளை நாடித் தேடும் தவிப்புப் புலப்படுகிறது.
இனி, ஜெயசீலனின் மொழியாட்சித் திறம் பற்றிக் கூற வேண்டும். அவர்தம் மொழிவுகளிலே, பழஞ்சொற் செழுமையும், புதுமையாக்கங்களின் வெட்டு முகங்களும், ஊர்ப்பேச்சுச் சொல்லோசையின் இசையோட்டங்களும், ஒருங்கே தோன்றிப் பொலிகின்றன.

ஜெயசீலனின் மற்றுமொரு பண்பினையும் இங்கு சுட்டிக் காட்டுவது பொருத்தமாகும். அவர் பெரும்பாலும் தம் கவிதையின் ஓசைக்கென, சாதாரண சொல்லோசைக்குப் புறம்பான வேறெந்தத் தாளக் கோலத்தையும் கொண்டு வந்து திணிப்பதில்லை. வலிந்து சுமத்துவதில்லை. அப்படிச் செய்தாலும் மிக அருமையாகவே அதைச் செய்கிறார். பேசுந்தமிழின் இயல்பான கதிகளையும், சுதிகளையுமே,மூலக்கூறுகளாக்கித் தம் கவிதையின் ஓசைக் கோலங்களை இழைத்துக் காட்டியிருக்கிறார். இந்த இயல்பான நாத நயம், கலையின் ‘உடலுக்கு’ வெளியே அணியப்பட்ட பூணாரங்களாக-தேவையற்ற மேலதிகச் சேர்க்கைகளாக விரயஞ்செய்யப் படவில்லை.

இதை நாம் வேறொரு விதமாகவும் விவரிக்கலாம். அதாவது, தம் பாடுபொருளுக்குப் புறம்பான, அல்லது அன்னியமான அலங்காரம் எதையும் கவிஞர் நிராகரித்து விடுகிறார். இலக்கணங்கள் கூறும் விதிகளைக் கறாரான பயபக்தியோடு கடைப்பிடிக்க எத்தனிக்கும் அக்கறையினாலே தள்ளுண்டு கவிஞர் பாதை மாறிப் போகவில்லை. அதேவேளை, இலக்கணம் இப்படிச் சொல்லியிருக்கிறது என்பதற்காக அதனை மீறுவது பாவமென அஞ்சி, தம் எண்ண உறுதிகளையோ உணர்ச்சி எழுச்சிகளையோ விட்டுக் கொடுக்கவும் இல்லை. உண்மையைச் சொல்லப் போனால், கவிஞர் சிற்சில இடங்களில் பழைய இலக்கண சம்பிரதாயங்களைத் துறந்தும் விடுகிறார். எனவே தான் ஜெயசீலனை மரபுக் கவிஞர் என்றோ, புதுக் கவிஞர் என்றோ ‘பாசல்’ கட்டி கையடக்கமான பெட்டியுள் அடைத்துவிட முடியாது.
3.
இன்றைய நிலையில், நம் கவிஞரின் உணர்ச்சி மூச்சானது மிகுந்த வலிமை வாய்ந்து விளங்குகிறது. பொங்கிக் கிளம்பி கும்மாளமிட்டு மடையுடைத்துப் பெருகிடவும் துணிந்து நிற்கிறது. ஆயினும் காலப்போக்கில் இது மேலும் இறுகி வலிமைபெற்று, புதியதொரு கோலத்தைக் கொள்ளக் கூடும். அதனை நிச்சயிப்பதற்கு கவிஞரின் அடுத்தடுத்த தொகுதிகள் வெளியாகும் வரை நாம் காத்திருக்க வேண்டி வரும். அதற்கிடையில் நாம் படித்துத் துய்ப்பதற்கு ‘வேண்டிய அளவு’ நல்ல படைப்பாக்கங்களை ஜெயசீலன் தந்துள்ளார்.

அவரை தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்த்தி வரவேற்று ஏற்றுக்கொள்வோமாக.

(இம் முன்னுரை எனது முதலாவது கவிதைத் தொகுதியான ‘கனவுகளின் எல்லை’க்காக ஈழத்தின மூத்த கவிஞரும் எனது கவிதை ஆசானுமான இ.முருகையன் அவர்களால் 17.03.2000 இல் எழுதப்பட்டது. எனினும் எனது தொகுப்பில் இம் முன்னுரை இடம்பெறவில்லை. எனினும் எனது மேற்படி கவிதை நூல் வெளியீடு 11.11.2001 அன்று கவிஞர் இ. முருகையன் தலைமையிலேயே யாழ்.இந்துக் கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்றது)

Leave a Reply