கவிஞர் த.ஜெயசீலனின் கவிதைகளில் துளித்தெழும் தமிழ்ச் சொல்லாடல்கள் -சி.உதயகுமார்

தொண்ணூறுகளின் இறுதிக்காலங்களில் இருந்துதான் கவிஞர் த.ஜெ. இன் கவிதைகளை நான் படிக்கத் தொடங்கியிருந்தேன். ஆனால், தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் அதற்கு முன்னரும் கவிதைகள் படைக்கத் தொடங்கியிருந்தார் என்பததே மெயயாகும். ஈழத்திலிருந்து வெளிவருகின்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் அவை பிரசுரமாகிக் கொண்டிருந்தன.

எனது பட்டப்படிப்பின் இறுதியாண்டு கற்கைநெறியினை மேற்கொண்டிருந்த போது ஈழத்து இலக்கியம் பற்றி தமிழ் பாடப்பரப்பிலே சுவைபடக் கற்றுக்கொண்டிருந்தேன்.

நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள் என்று வரிசைபடுத்தி விரிவாகக் கற்றுக் கொண்டிருந்த நேரம். ‘ஈழத்துக்கவிஞர்களும் சிந்தனை வெளிப்பாடுகளும’; என்ற ஆழமான பரப்பிலே கவிஞர் த.ஜெ. இனையும் கற்றுக்கொண்டிருந்தேன்.

அப்பொழுது கவிஞர் த.ஜெ. இன் சில கவிதைகளை அறிமுகப்படுத்திய என் தமிழ் ஆசான் அவற்றைப் படித்துக்காட்டி விட்டு அந்தக் கவிதைகளில் கையாளப்பட்டுள்ள மொழிகளின் பரவல் பற்றியும் மொழி அழகியல் பற்றியும் மொழிகள் சந்தத்தோடு இசைவன பற்றியும் சுவையாக்கிச் சொன்னபோது அவரது கவிதைகளைத் தேடிப்படிக்கும் ஆர்வம் இன்னும் எனக்குள் கூடிக்கொண்டிருந்தது.

நீலாவணன், காசிஆனந்தன், வை.ஐ.ச.ஜெயபாலன், மு.செல்லையா, மதுரைப் பண்டிதர் சச்சிதானந்தன், புதுவை இரத்தினதுரை, முருகையன், சோ.பத்மநாதன், மகாகவி உருத்திரமூர்த்தி, சேரன், திருமாவளவன், சக்கரவர்த்தி, தாட்சாயினி போன்றோர் வரிசையிலே த.ஜெயசீலனினையும் சொல்லி முடித்திருந்தார்.

‘இன்று முதியவர்கள் எல்லோரும் இளையவர்கள் போல் கவிதை புனைந்துகொண்டிருக்கும் போது இளையவர் ஒருவர் முதியவர் போல் கவிதைகள் புனைந்து வருகிறார்’ என்பதை உயர்வு நவர்ச்சியாக்கிச் சொல்லி முடித்தார்.

கவிஞர் த.ஜெயசீலனுக்காக என் தமிழ் ஆசான் சொன்ன முகவுரை இது. அதை மனம் குதூகலத்துடன் ஏற்றிருந்தது.
மூத்தகவிஞர் முருகையனின் வீடு தேடிச் சென்று அவர் அடியில் இருந்து மரபுக்கவிதைகளுக்கான யாப்பு இலக்கண முறைகளைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார். அதனால்தான் முருகையனின் கவிதைளில் என்ன சுவைகளை நாம் காண்கிறோமோ? என்ன சந்தங்களை ரசிக்கிறோமோ? அதே போன்ற சுவை உணர்வுகளை இவரின் சிறுவயதுக் கவிதைகளிலேயே கண்டு வியந்திருக்கிறேன்.

ஈழத்திலே சிறந்த கவிஞர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு கவிஞர் கண்ணதாசன் எடுத்துக் காட்டும் உதாரணம் எது தெரியுமா..?

அல்வாயூர் கவிஞர் மு.செல்லையாவின் ‘வண்டு விடு தூது’ எனும் காவியத்தில் இடம்பெற்ற பாடலின் அடியான ”நெய்திடு நூலிலும் தைத்திடு நூலின் நீளம் அதிகமாம்” என்பதைத்தான் அடிக்கடி மேடைகளில் சொல்லுவாராம். அந்தளவுக்கு ஈழத்துக் கவிஞர்களின் படைப்புக்களை விரும்பிப் படிக்கிற கவிஞர்கள் பலர் தென்னிந்தியாவில் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இவை சில உதாரணங்கள் ஆகும்.

இவ்வகைப் பெருங்கவிஞர்களின் வரிசையில்; இற்றைக்கு பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே உயர் பட்டப்படிப்புப் பாட விதானங்களில் கவிஞர் த.ஜெ. இன் கவிதைகளும் அவரின் சிந்தனைகளும் சேர்த்துக் கொள்ளப்பட்தென்றால் அவரின் கவிப்புலமைக்கு இதைவிட வேறெதனைச் சொல்ல முடியும்?

கவிஞர் த.ஜெ. அவர்கள் 2001 ஆண்டு ‘கனவுகளின் எல்லை’ என்கிற கவிதை நூலினையும், 2004 ஆண்டு ‘கைகளுக்குள் சிக்காத காற்று’ என்கிற கவிதை நூலினையும் வெளியீடு செய்திருக்கிறார். மிக அண்மையில் ‘எழுதாத ஒரு கவிதை’ என்கிற தனது மூன்றாவது கவிதைத் தொகுதியினை தந்துள்ளமை என்பது சந்தக் கவிதைகளை விரும்பிப் படிக்கிற நெஞ்சங்களுக்கு மாபெரும் வரப்பிரசாதமாகும்.

112 கவிதைகளைத் தாங்கி 147 பக்கங்களுக்குள் உள்ளடங்கலாக அனைத்துக் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. மரபுக்கவிதைகள் கைதேர்ந்த அவரின் எண்ண விரிசல்கள் ஓசை நயமாக புதுக்கவிதை வடிவிலே நீளுகின்றன. மொழிகள் சேர்ந்திருக்கிற அல்லது பிரிந்திருக்கிற முறைகள் எல்லாம் ஓசை நயத்திற்கானவை என்பதையே அவை படிக்கிறபோது புரிந்து வருகின்றன.

மகள் பற்றிய கவிதைகள்

2004 ஆண்டிற்குப் பிறகு ஒன்பது ஆண்டுகள் கழித்து இத்தொகுதி வெளிவந்திருக்கிறது. இக்கால இடைவெயில்தான்; முத்துப் போன்ற இரண்டு அழிகிய மகள்களை கவிதையாகப் பிரசவம் செய்திருக்கிறார் கவிஞர்.

மகள்களின் மழலை மொழிகளின் ரீங்காரத்தில் எள்ளிக் குதிக்கிறார்! முதுமனுசர்போல் அவர்கள் கேட்கும் கேள்விகளை ஆச்சரியத்தோடு உற்றுக் கேட்டு உறவாடுகிறார்! ஓவ்வொரு மகளின் மேல் தான் கொண்ட காதலை வார்த்தைகளால் சொல்ல முடியாது தவித்தவருக்கு மொழிகளைச் சரம் போல் தொடுத்து கவி புனைந்து இன்புறுகிறார்! அவற்றினைப் படிப்போர் இதயங்களும் பேரானந்தம் பெற்று உவகை கொள்கின்றன.

‘…..கனியிதழ்கள் திறந்தெதையோ கதைப்பாய்; எந்தன்
காதருகே குசுகுசென்று ஏதோ சொல்வாய்
எனை உறுக்குமாப்போலப் பார்ப்பாய் நெஞ்சில்
ஏறிநின்று உதைவிடுவாய் கதைகள் கேட்பாய்…….’
(தங்கமகள்)
என்று அந்தக் கவிதை நீண்டு தொடரும்

‘இத்தனை பெரிய இராட்சத பறவையிட்ட
முட்டையோ நிலவென்று….!
முன்னிருந்த என்பிஞ்சு
கேட்டாள் ஒரு கேள்வி…..
கற்பனையின் அடுத்த கட்டம்
கேட்ட அவளிடத்தில் உயிர்த்ததனைக்
கண்டயர்ந்தேன்
ஆச்சரியம் மனித ஆற்றல்…. இதை ஏற்கின்றேன்…!
(ஆச்சரியக்கடல்)

என்று தொடரும் கவிதைகள் மட்டுமில்லாமல் மகள் பற்றிய கவிதைகள் மொத்தமாக ஆறு கவிதைகள் இதில் அடக்கம் பெற்றிருக்கின்றன. அத்தனையும் சின்னமொட்டுகளின் உல்லாச உண்மைகள். அவற்றைப் படிக்கின்றபோது மகளைப் பெற்றவர்களும் மகனைப் பெற்றவர்களும் ‘தாம்பெற்ற இன்பம் மற்றவர்களும் பெறுக..’ என்பது போலவே சொல்லத் தூண்டுகிறது.

காதலைப் பாடுதல்

காதலைப்பாடாத கவிஞனும் இல்லை! காதலைப் பாடாதவன் கவிஞனும் இல்லை! இப்படிப் பொதுவாகச் சொல்லுவார்கள். என்னமோ தெரியாது, காதல் பற்றி கவிதைகள் படைப்பவர்களும் சரி காதல் கவிதைகளை படிப்பவர்களும் சரி அதற்கு வயது வேறுபாடெல்லாம் தேவையில்லை. எந்த வயதினரும் காதல் என்றால் அதனை ரசிப்பவர்களாகவே இருந்து விடுகிறார்கள். ‘ரசனை இல்லாதவனும் ரசிக்காதவனும் மனிதனே அல்லன்’ என்று சும்மாவா சொன்னார்கள்?

‘….நெருக்கம் அதிகரிக்க
நெருக்கம் நெருங்கிவர
அருகமர்ந்து சுடுகிற மூச்சாலும்
இடைவெளியே
அற்றணைத்தபோது இதழாலும்…. உடலாலும்…
முற்றாய் எனை மயங்க வைத்தாய்
வருடிவிட்டாய்…!’
(வருடல்) என்று அந்தக் விதை நீளுகிறது.
மேலும் உவமைக்குள் சிக்காத காற்று என்ற கவிதையிலே

‘…மிருகவெறியோடும்
ஏம்மைக் கடக்கும் இளங்காற்று
கைகளுக்குள்
சிக்காத சூரியபொற் சிதறல்
மூச்சடக்கி
முயங்கியாழம் காணமுடியாச் சமுத்திரம்
துகதகறென்ரியும் தணற்சுவாலை
சுpலகணங்களுக்குள்
சகலரையும் தாக்கிச் சரிக்கும் புவிநடுக்கம்
அக உணர்வில் தோன்றும் ஆழிப்பேரலை…..’

என்று இனிய காதலின் இனிய காமத்தை அழகியலோடு சொல்லியிரக்கிறார். எத்தனை முறையும்; படிக்கலாம். அதனைப் படிக்ககப் படிக்க காதலின்பம் மட்டுமல்ல கவிதை இன்பமும் நெஞ்சை நெருட்டிச் சிதைத்துவிடுகிறது.
மௌனவார்த்தை முட்கள், களவு, காதல்மழை நனைவீர், மழைச்சாட்சி, இதயத்துடிப்பு என்று அத்தனையும் ரசிக்கக் கூடியவை. இன்றைய இளையவர்களின் காதல் குறுந்தகவல்களில் அதிகமாகவும் அடிக்கடியும் அலைகாளாகப் பறந்து திரிந்து காதலர்களை இன்பமயப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. அந்தளவு காதல் சுவைகளை யாரும் இக்கவிதைகளில் ரசிக்கலாம்.

கவிதைகளைப் பாடுதல்

பொதுவாக ஒரு சம்பவத்தையோ அல்லது ஒரு நிகழ்வையோ கவிதை செய்யும்போது அங்கு விழுந்தெழந்த மொழிகளால் அழகாக ஜொலித்து விடுகிறது. அழகியல் மணம் வீசுகிறது. கவிஞன் சொல்ல வந்த விடயத்தையும் ஓரளவேனும் பருக நினைக்கிறோம். ஆனால், அந்தக் கவிதை மொழிகளால் கவிதைகளையே பாடுவதென்றால் அதற்குப் பல சிறப்புகள் இருக்க வேண்டும். அத்தனை சிறப்பகளும் கவிஞர் த.ஜெ இன் கவிதைகளிலும் காண்கிறோம்.
கவிதைக் கடவுள், எனக்கு ஒளி கவிதை, கவிதைத் கருவி தூக்கி, எழுதாதா ஒரு கவிதை, கண் முன் கிடக்கும் கவிதை, என் வாழ்வை எழுதுதல், சொற்பூ மாலைகள் சூட்டுக, கம்பநாடன் கவிதை, யாழ் அரசவைக் கவிதை என்று ஒன்பது தலைப்புகளில் அவற்றினைப் பாடியுள்ளார். அத்தனையும் ஒவ்வொரு ரகம். ஓவ்வொரு ரகமும் ஒவ்வொரு ரசனையை அள்ளித் தந்து செல்கின்றன.

‘…வஞ்சிக்கப்பட்டும், தேகம்
மனம் மற்றும் களைத்துச் சொர்ந்து
அஞ்சியும் மரியாதைக்காய்
அழுதும், என் ஆசை கேட்டும்
நஞ்சிடர் ஊறி நெஞ்சை
நனைக்கவும் பொறுத்தென் பாமுன்
தஞ்சமாய் முறையிட்டோய்வேன்…’
( கவிதைக் கடவுள்)

எனும் சில வரிகளை எடுத்துக் காட்டாகச் சொல்லலாம்.

இப்படியாக நல்லூர் முருகன் பற்றிய பாடல்கள், சுனாமி பற்றிய பாடல்கள், காலம் பற்றிய பாடல்கள், தாய், தந்தை, அந்தநாள் ஞாபகங்கள் பற்றியெல்லாம் கவிதைகள் மட்டுமல்ல வெண்பா வடிவிலான பாடல்களைத் தந்து மனம் நிறைத்துச் செல்கின்றன.

இவை நிற்க.

எழுத்துப்ப பிழைகள் ஆங்காங்கே தெறித்துக் கிடக்கின்றன. ‘தூ’ எனும் எழுத்து ‘துர்’ பல இடங்களில் பதிவாகியிருக்கின்றன. ஆச்சரியக்குறிகள், வினாக்குறிகள் முக்கிய இடங்களில் விடுபட்டிருக்கின்றன.
இவை விட்டு அவற்றைத் திருத்தம் செய்து படிக்கும் போது கவிதைகளின் துள்ளல் நெஞ்சை அள்ளுகிறது. ஆனந்தம் பிறக்கிறது. கவிஞர் த.ஜெயசீலன் மொழிகளால் சிலைகள் செய்து மனதைக் குடையும் கவிதைகள் படைப்பதில் வல்லுநராகவே வலம் வருகிறார்.

பிரதேச செயற்பாடுகளை செந்நெறிப்படுத்தும் தொழிலைக் கற்றிருக்கிற இவரின் கவிதைகள் பிரதேசம் தாண்டி ஒரு தேசத்தையே சீர்தூக்கிவிடும் பக்குவத்தைக் கொண்டிருக்கின்றன என்பதே உண்மையாகும்.
வாலாயமான மொழிகளையும் வசப்படும் வார்த்தைகளையும் கோர்வை செய்து கவி புனைவதில் வல்லவரான கவிஞர் த.ஜெயசீலனின் கவிதைகள் தொடராக கிடைக்க வேண்டும். அவை தொகுதிகளாக வந்து வாசகனின் கரங்களில் தவழ்ந்த ரீங்காரம் பாட வேண்டும்! படிக்கும் நெஞ்சங்களைத் தாலாட்ட வேண்டும்! சிதறும் மன நினைவுகளை ஒன்று சேர்க்க வேண்டும்! மனது இன்பமயமாக வேண்டும்!

இவ்வகைச் சிறப்புகள் இவர் கவிதைகளில் துளிர்த்து எழுகிறது என்பதே உண்மையாகும். படிப்போம்..! பருகுவோம்..!! பகிர்வோம்…!!!

Leave a Reply