என்பா நாளும் உன் புகழைப் பாடும்!

வானொலித் துறையில் வல்லோன்,
மணித் தமிழ் தெளிந்த தீரன்,
தேன்கவி இரசித்த ளித்துத்
தேடியும் படைத்தும் வென்றோன்,
ஏன் எதற்கென்று ஆய்ந்து
எதிலுமே நேர்த்தி யோடு
தான் கொண்ட கொள்கை காத்துத்
தழைத்தவன் ‘சிவகுமாரன்’!

வாசித்துத் தேடிக் கற்ற
வளம் நெஞ்சுள் நிறைத்து வைத்து,
ஆழ்ந்த நற்பொருள் தெரிந்து,
அளிக்கையில் புதுமை சேர்த்து,
யாருமே நோக்காக் கோணம்
தனில் கற்பனைகள் கோர்த்து,
மேடையில் எடுத்துரைப்பில்
மேதமை படைத்தான் ஆர்த்து!

ஈழத்துக் கவிதைப் போக்கில்
இவன் பேரை உரைப்பா ரில்லை!
ஆனாலும் இவனின் பாவை
அறியாதாரில்லை! சொல்லும்
சேதியில் விமர்சனங்கள்
இருப்பினும் படைப்பைப் பாட்டை
யாரடா வெறுப்பார்? அன்னான்
ஆற்றலுக்கு எல்லை யில்லை!

வாழ்கின்ற வயது, மேலும்
வளர்ந்தோங்க இருந்த வாய்ப்பு,
சூழ்ந்துமே குடும்பம் நட்பு
சுகம் நல்கும் பொழுது,நோயில்
வீழ்ந்து ஏன் போனாய் தோழா?
மேலும் நின் ஆற்றல் காணக்
காத்த நாம் ஏங்க….. விண்ணில்
கலந்தாயா சிவகு மாரா!

வானொலி வரலாற்றில் உன்
பெயர் வாழும்; நிலைத்து ஆளும்!
வானலை எங்கும் உன் பா
வரிகள் என்றென்றும் சூழும்!
மேனிதான் உதிர்ந்து போச்சு…
மேன்மைகள் வாகை சூடும்!
நான் நன்றி மறவேன்; என் பா
நாழும் உன் புகழைப் பாடும்!