இன்று வரை…

தோண்டக் கிழங்குவரும்
வளம்சூழ்ந்த நம் அயலில்
தோண்ட… எலும்புகளின் கூடுவரும் துயர்க்காலம்!
சுடலைதான்;
‘எரிக்கும் சுடலைதான்’;
அதற்குளின்று
கிடைப்பதுவோ… தாட்ட எலும்புகளின் நதிமூலம்!
இன்றுவரை ‘முப்பத்து மூன்று’;
எத்தனைதான்
இன்னும் வரவுளதோ?
இதுபோல எங்கெங்கு
மனிதப் ‘புதையல்கள்’ மறைந்து கிடக்கிறதோ?
இனம்,மதம், மொழி, சாதி
இவற்றில் தெரிகிறதோ?
யாரிவர்கள்? ஏன் சாய்க்கப் பட்டார்கள் இவர்கள்?
யார் எப்ப புதைத்தார்கள்?
ஏன் இங்கே புதைந்தார்கள்?
காணாமற் போனவரா? கடத்தப்பட் டிற்றவரா?
தேடியவர் எங்கே?
சிறுவர் – பெரியவராய்
வாடியதன் காரணம்தான் என்ன?
இவர் வெற்றிடத்தை
மூடியதா காலம்?
முன்னே…. தனித்தனியாய்,
ஒன்றோடு ஒன்றாய்,
உயரங்கள் வேறுவேறாய்,
சின்னவர் பெரியவர் சேர்ந்தபடி,
பாடசாலைப்
பையோடு சிறுஉருவம்,
பக்கத்தில் நொருங்கிக்
கைவளையல் சிலது,
இன்னுமென்ன வகைவகையாய்…
வரவுள்ளன தொடர்ந்து?
இவை சாட்சிகளாய் ஊர்க்கு
அறையவுள்ள உண்மையெது?
இவை சுமந்த வதை,அவலம்…
மரணபயம், வலி,நோ, ஓலமிந்த
மண்ணோடு
கரைந்து சிதைந்துக்க…
தம் கதையை உலகிற்கு
உரைக்க முயன்றுளதா ஒவ்வொன்றும்?
அவற்றினது
இறுதிமூச்சு இன்றும் இக் காற்றில்
அலைந்திருக்கா?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.