சான்று

எப்படி வந்தது இக்குழிக்குள் அப்பொம்மை?
எப்படி வந்தது?
இதன் ‘உரிமையாளனுடன்’
விளையாடிக் கொண்டிருந்த வேளையிலே…
அவனோடு
அளவளாவி நின்றதுவோ?
அருகினில் ‘அது’ ஒன்றே
துணையாய்… அவனரண்ட துயர்நொடியில்
கொலைக்கரங்கள்
வணங்க…சிதைத்தனவோ?
அவன் புரிந்த பாவமென்ன?
பிணமாக்க… அவன்செய்த
பாதகங்கள் குற்றமென்ன?
பெற்ற இருவரொடோ ஒருவரொடோ
அவனிருந்த
அற்ப நொடியில்.., ‘அவர்களை’
ஏதோ ஓர்
காரணத்திற் காக கழுத்தறுத்த வேளையினில்..,
“பார்த்துவிட்டான்” என்று பதறி;
“பின்னொருநாள்
சாட்சியாவான்” என்றஞ்சி;
தயக்கமின்றிப்;
பொம்மையுடன்
தாக்கிச் சரித்தனரோ?
தாட்ட இடத்திற்கு
அண்மையில் நடந்ததுவோ?
அவனையும் பொம்மையையும்
கொன்ற உறவோடு கொணர்ந்து
புதைத்தனரோ?
பொம்மை ஒரேதுணையாய்
இறுக்கிப் பிடித்த ‘பொடி’
எம்மாதிரி வீழ்ந்தான்?
இப்பொம்மை உருக்குலைந்து
போகாமல்…
உருக்குலைந்த ‘புண்ணியனை’ இனங்காண
உதவிடுமோ?
இதுபற்றி அறிந்த உறவின்றுளதோ?
விதிச்சதியோ?
தன் உரிமை யாளன்
வினை – தவறு
எதுவுமே செய்யாமல் -தான் காப்பேன்-
எனநம்பி
மாண்டதனால்…
அவனின் குருதி படிந்ததனால்…
ஊமையாச்சோ பொம்மை?
ஓரடிக்கீழ் புதைத்துவிட்டுச்
“சாட்சியினி இல்லை” என
சற்றமைதியாய் இருந்த
‘சம்பந்தப் பட்டவர்க்குத்’ தலையிடி
கிளம்பிடுமோ?
உண்மை உறங்காதோ?
ஊர்வாய் அடங்காதோ?
வேணுமென்றோ, தவறாயோ,
விதைத்த பொம்மை…இன்று
தீராத மர்ம முடிச்சவிழ்க்கும்
திறம் சான்றாய்
மாறிடுமோ?
வெறுஞ் ‘சான்றுப் பொருளாயே’
மிஞ்சிடுமோ?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.