காலமும் நேரமும்

காலம் உனக்குச் சாதகமாய் இருக்கையிலே…
காலத்தின் காற்றுந்தன்
பக்கம் அடிக்கையிலே…
காலத்திற் குன்னால் இலாபம் கிடைக்கையிலே…
காலத்திற் குன்னுடைய தேவை இருக்கையிலே…
இந்தக் கணம், அடுத்த கணம்,
மறு கணம், எல்லாம்
உந்தன் பயணம் ஒழுங்காய்த்தான்
ஒப்பேறும்!
காலம் உனக்குப் பாதகமாய் இருக்கையிலே…
காலத்தின் காற்றுனக்கு
எதிராய் அடிக்கையிலே…
காலத்திற் குன்னால்
பயனில்லாப் போதினிலே…
காலம் “உனதுபணி
தேவையில்லை” என்கையிலே…
எந்த ஒரு கணத்திலும்,
எதிர்பாரா வேளையிலும்,
உந்தன் பயணம் ஒரேயடியாய்
முடிந்து போகும்!
‘உன்னால் உன் திறமையினால்
ஓடுகிறாய்’
என நீயும்
எண்ணாதே…
காலமும் நேரமும் மாறிவிட்டால்;
உன் மனது எண்ணினாலும்
உன் கால்கள் மறுதலிக்கும்.
உன்கால்கள் ஏற்றாலும்
உன்பாதை மாறிவிடும்.
உன் வேகம் குறையும்
உன்பயணம் பின்செல்லும்.
உன்வழியில் புயலடிக்கும்.
உன் திசையில் தடைகள் எழும்.
உன் பயண வாகனமும்
உனையிறக்கி விட்டகலும் !

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.