நாவலர் தருமத்தின் அச்சாணி

நல்லை என்ற நகரின் புகழை இந்
நானிலத்தும் பரப்பிய பொன்மகர்,
“இல்லை இங்கு…தமிழ் சைவம்” என்ற…‘ வெண் –
இருளைக்’ கிழித்து எழுந்த கதிரவர்,
தொல்லை கொடுத்த மதமாற்றக் காரராம்
துரைகளை ‘வாதால்’ வென்ற தமிழவர்,
எல்லையற்ற அறிவும் ஒழுக்கமும்
இருவிழிகளாய் வாழ்ந்த நம் நாவலர்!

கந்தப் பிள்ளை, சிவகாமியர், செய்தவம்
கண் திறந்து ஆறுமுகனாய் உதித்தது!
விந்தைத் தமிழ் ஊற்று…அரிவரி கற்றுப்…பின்
ஆங்கிலம் தேடி ‘மத்திக்குப்’ பாய்ந்தது!
அன்று வேத ஆகமம் தமிழாக்க
‘பேர்சிவலுக்கு’ துணை தந்துயர்ந்தது!
“எம் நாவலர்” என திருவாவடு துறை
ஆதீனம் போற்ற…அகிலம் வியந்தது!

பதவிக்காய் மதம் மாறி…ஞானஸ்தானம்
பெற்று… மீளா அடிமைக ளாகிய
பதர்கள் முன்…தன் முதுகெலும் பாழுமைப்
பலத்தினால் மத உரிமையை மீட்டவர்!
விதியோ…தன் தமிழ் ஐயம் தெளிவிக்க
வேண்ட…. ‘ஐம்பத்து ஆறுள்’ நிபுணனாய்
புதிய அச்சுப்பணி நல்லிலவசக்
கல்வி அறிமுகம் என விதை நட்டவர்!

சுதேசியம் குற்றுயிராய்த் துடிக்கையில்,
சுதேசிகள் நடைப் பிணங்களாய்… நாறையில்,
சுதேசிகள் தங்கள் சொந்தத் தமிழ்ச் சைவத்
தொன்மை பேணத் தயங்கையில், அந்நியர்
சதிக்கே சவால் விட்டு… ‘சைவப் பிரகாச
வித்தி யாலயம்’ செய்தார்! இலவச
முதுசமாய்க் கல்வி முறை இந்த நாட்டினில்
முதன்முதல் தந்து தான் வழிகாட்டினார்!

அச்சில் வித்தைகள் நாட்டினான் வெள்ளையன்
அதன் புதுமையால்…நம் தொல் பெருமையை
துச்ச மென்றனன் அதற்குப் பதிலடி
துணிந்து தந்தார் நம் தூயவர் யாபேரும்
மெச்ச முதன்முதல் ‘இந்திய எந்திரம்’
மீட்டுப் பாய்க் கப்பலேற்றி கொணர்ந்தனன்!
“வித்யானு பாலன” எந்திர சாலையை
வனைந்து இயக்கிடத் தேர்ச்சியும் பெற்றனன்!

விளக்கொளியில் இரவு பகலாக
விழித்துத்…தான் தேடி…காலால் இயக்கிடும்
அழுத்து அச்சு இயந்திரத்தில் ஏற்றி…
அரிய ஏட்டுச் சுவட்டில் உறங்கிய
எழுபத்தோர் நூல்கள் தம்மை வசனத்தில்
எழுதி…அவற்றுக்கு மறுஜென்மம் தந்தவர்!
ஒளிரும் அறத்தை உறுதியாய் நம்பியே
உண்மைப் பிரசுரத்தால் மண்ணை மீட்டவர்!

இறைக்கே அஞ்சி வேறெவருக்கும் அஞ்சாது
எதிர்ப்பிரசங்கம் தொடங்கி…மிஷனரி
மறைத்த உண்மையை மீட்டார் அந்நியர்
மருள எதிர்வாதஞ் செய்து…தமிழ்ச்சைவ
மறுமலர்ச்சிக்கு வித்திட்டார்! ஊர்தொறும்
“வைப்பீர்” சைவப் பாடசாலை என்று
அறை கூவி…இன்று இலங்கை முழுவதும்
அவை மணம் வீச…அன்றே உரமிட்டார்!

யாழ்…கரையூரில் பேதி நோய் தாக்கிட
மக்கள் சார்பில் அரசில் முறையிட்டும்,
யாழைப் பட்டினிப் பஞ்சமும் வாட்டிட
அரச அதிபர் ‘துவைனினைக்’ கண்டித்தும்!
வாடிய யாழின் வயிற்றைக் கழுவவே
‘கஞ்சித் தொட்டித்’ தருமம் தொடங்கினார்!
தேசாதிபதி ‘லோங்டன்’…நிஜம் காண
அரச ஊழல் விபரம் சமர்ப்பித்தார்!

நூறெனப் பிளவுற்ற சமூகத்தை
நொந்து நோக்கினார்! ஒற்றுமைக் கேங்கினார்!
ஆயிரம் சவால் வந்தும்…அவை வென்றார்!
அறத்துக்காய் வழக்காடு மன்றேறினார்!
தூர நோக்கோடு ‘சட்ட நிரூபன’
சபையில் … தமிழரின் அங்கத்துவம் கேட்டார்!
கோவிலில் உயிர்ப் பலியிடும் கொடுமையைக்
கொல்ல…இடருற்றும்… ‘கொன்று அறஞ்செய்தார்’!

பாரதச் சிதம்பரத்தினில்…அந்தணப்
பாலகர் கற்கச் சைவவித்யா சாலை
தாபித்தார்! அங்கும் தனது பாண்டித்யம்
சாற்றி…யாழ்ப்பாணப் புகழை நிறுவினார்!
பாரதர் இவர் ஆற்றலைக் கண்டுமே
பணிந்து பல்லக்கில் தூக்கினர்! கௌரவம்
நூறு செய்தனர்! தம் ஊரில் தங்கிடக்
கோரினர் அவர் நமை நோக்கியே மீண்டார்!

எழுதி அருளிய நூல்கள் தான் எத்தனை?
மீளப் பதிப்பித்துரை சொன்ன தெத்தனை?
புழங்கும் ஆங்கில ‘நிறுத்தற் குறிகளை’
தமிழில் புகுத்திய ஆளுமை எத்துணை?
அழிந்திடாது நம் சைவத்தைக் காத்திட
அதற்கொரு ‘பிரமாணத்தைத்’ தேடிய
தெளிவு எத்துணை? திருமுறை மட்டுமே
“அருட்பா” என்றார்த்த துணிவுதான் எத்துணை?

சாதியத்தினை தூக்கிப் பிடித்தவர்,
சமய ஆகம முறையை மதியாத
வேதியர்களை தாழ்த்தினார்! மடாலயம்…,
வேலவன் உறை நல்லூரில் ஆகம
மீறலைப் பற்றிப் பிரசுரம் போட்டவர்!
வள்ளலாரையே தூற்றினார்! என்றுபேர்
நூறு பெற்றும் மதமாற்றப் புயலிடை
நூராமல் சைவம் காத்ததார்? ஏற்றதூர்!

Leave a Reply