ஆயிரம் தடைகள் சூழ்ந்து
அடக்கிடும் போதும்…நூறு
ஆயிரம் இடர்கள் சீண்டி
அழித்திட முயலும் போதும்…
பாய்ந்ததை எதிர்க்கும் நெஞ்சும்,
பயப்படாக் கை, கால், கண்ணும்,
நோய் வலி துடைத்து நின்னை
நொடியாமற் காக்கும்; கொள்வாய்.
துன்பங்கள் துயர்கள் தொட்டுத்
துவைக்காதோர் உலகில் உண்டா?
வன்மமும் காழ்ப்பும் சூழ்ந்து
வதைக்காதோர் உண்டா? அன்றும்
இன்றைக்கும் இன்பம் கண்டோர்
இடர்களை ஊதித் தள்ளி
நின்றவர் தானே? நீ நின்
நிலையினில் நிமிர்வாய்…வெல்வாய்!
ஒவ்வொரு வருக்கும் ஒவ்வோர்
உயிர் வலி, குறைகள், உண்டு.
ஒவ்வொரு வருக்கும் ஒவ்வோர்
உபத்திர வங்கள் உண்டு.
அவ் அவை அடங்கு மாறு
அகப்புறச் செயல்க ளாலே
எவ்வாறு நிமிர்கின் றாரோ
எட்டுவார் ஜெயத்தை… நன்று.
முட்டியே மோதி டாமல்,
முயன்றுமே பார்த்தி டாமல்,
திட்டுவோர் தூற்று வோரை
திரும்பியே நோக்கி டாமல்,
நட்டங்கள் தோல்வி கண்டு
நடுங்கியே ஓய்ந்தி டாமல்,
திட்டங்கள் தீட்டிச் சென்றோர்
திசைகளை வென்றார்; செய்…வா!





