புயல் மழைக்குப் பின்னான பொழுது கவிதை நூல் – கே.எஸ்.சிவகுமாரன்

த.ஜெயசீலனின் ஓர் அரசாங்க அதிகாரி. இத்துடன் நான்கு நூல்களை வெளியிட்டுள்ளார். அவையாவன கனவுகளின் எல்லை, கைகளுக்குள் சிக்காத காற்று, எழுதாத ஒரு கவிதை.

சென்ற ஆண்டு வெளியான இந்த நூலில் கவிஞர் ஜெயசீலன் தமது நூலின் உள்ளடக்கத்தை தெளிவுபடுத்துகிறார்.
‘என் எல்லா நெஞ்ச அவசங்களையும் சூழலின் சுகம் துயரங்களையும், வெற்றி தோல்விகளையும் கவிதைகளில் கொட்டிப் பகிர வேண்டும் என்ற வேணவா ஈடேறும் காலம், தொடுவானமாக எட்டியே செல்கிறது’ என்ற அவரது கூற்று இன்னமும் அவரின் கவிதை நோக்கு நிறைவேறவில்லை என்ற கருத்தைத் தருகிறது. அவர் தமது நூலை யாருக்காகச் சமர்ப்பித்திருக்கிறார்? ‘ஷெல் விழுந்த போதும் இச் ‘செல்பி’ யுகத்தினுள்ளும் செல்லரியா தெம் தமிழைச் சீராட்டும் கவிஞருக்கு!’ என்பதும் அவர் கூற்று.

சிறியதும் நெடியது மாக 57 கவிதைகளைத் தந்திருக்கும் த.ஜெயசீலன் ஈழத்துக் கவிதையுலகில் குறிப்பிடத்தக்க ஒருவர் என்பதை நாம் அறிவோம்.

இவருடைய கவிதைகள் படிப்பதற்கு சுகமளிக்கின்றன. அவருடைய கவிதைகளில் அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் அவருக்கே உரித்தானவை. அவற்றை நாம் வரவேற்கலாம். விடாமலும் இருக்கலாம். அது அது அவரவர் கோட்பாடு, இரசனை ஆகியவற்றைப் பொறுத்தது.

என்னைப் பொறுத்தமட்டில் கவிதைக்கு இன்பத்தை, களிப்பூட்ட வைத்திருக்கிறதா என்பதே முக்கியம். கவிதையின் உறுதிப்பொருள் இயல்பாகவே செவ்வனே அமைந்திருக்கிறதா என்பதைத்தான் முதலில் கவனிப்பது. கவிதையின் உள்ளடக்கம் பற்றி நான் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. அதனைப் பகுத்தாய்வு செய்வதற்காக நம்மிடையே பலர் இருக்கிறார்கள். அவர்களிடம் அதனை விட்டு விட்டு எனது இரசனையை மாத்திரம் இங்கு வெளிப்படுத்த முயல்கிறேன்.

இத் தொகுப்பில் இடம்பெறும், எனக்குப் புதுப்புனைவாகத் தென்படும் சில வரிகளை எடுத்துக் காட்டுகின்றேன். நீங்களும் அந்த வரிகளை அவரது முழுக்கவிதைகளின் ஒட்டுமொத்தப் பார்வையில் எப்படி அமைகின்றன என்பதை உய்த்து உணர்ந்து கொள்வீர்களாக.

நான் இரசித்த கவிதை வரிகளில் சில

  • வெட்டி வைக்கப்பட்ட சர்க்கரைப் பூசணியின் துண்டொன்றாய் மஞ்சள் நிலவு கீழ்திதிசையின் தொடுவானத் தருகே ஒளிர்கிறது இப்போது!
  • நேற்றுக் கிழித்த நகம்போல என்றார்கள். அதுவும் நான்காம் பிறை என்றே பொருமினார்கள்!
  •  இருள் உறையும் உன் கடந்த காலத்தை உணர்ந்தாயா?
  • கடல் பொங்கிக் கோபமாய்க் கழுவித் துடித்திருக்கு. படகெல்லாம் கரையில் படுத்துள்ளன. கரையெங்கும் அடை மழைக்குள் கருவாட்டாய் மீனவர்கள், உடலைத் தகர்த்தெறியும் குளிரம்பு.
  • இரயிலோடிப் போன பின்னும் தண்டவாளம் அதிர்வதுபோல் திரும்பி நீ சென்றாய் தெரியாதவள் போல.
  • பிஞ்சிதயக் கடிகாரம் சீரான அந்தக் கவிதை போல்…. ….
  • வெள்ளைமுயற் குட்டிகளாய் முகில் திரண்டு தொட்டத் தொட்டமாய் தொங்கிடுது அங்காங்கே!
  • எதுவும் ஒரு ஒழுங்கில், எதுவும் ஒரு வரையறையில், எதுவும் ஒரு சட்டகத்துள் எதுவும் ஒரு சீரில் இயங்கின் அதில் இலயமும் சுதியும் இயல்பாகத் தோன்றும்.
  • புயல் மழைக்குப் பின்னான பொழுதில் சிதைந்துயிர்ந்த உயிர் உடல் புதைத்து, சடங்களுக்கும் சாந்தி செய்து, இருளைக் கடந்து புலரும் தொடுவானின் பெருகும் ஒளி நோக்கி நடக்கின்றேன். தேங்கியுள்ள வெள்ளமும் திட்டுத் திரளாய்க் கருமுகிலும், பள்ளமும், மேடும் பயஞ் சிறிதும் பயணத்தைத் தாமதப்படுத்தினாலும்…. தர்மம் வழித்துணையாய்க் கூடவர…

நரகத்தைச் சொர்க்கமாக்கும் நம்கரங்கள் தேடிவர காலத் திசை வெளி எனை ஊக்கிப் பாடிவர யான் நிமிர்ந்தேன்… பயணித்தேன் இனிப்புதிதாய்ச் சூடும் பசுமையை என் சூழல் நான் நம்புகிறேன்.

நான் த.ஜெயசீலனின் கவிதைப் பொருள் பற்றிய விபரங்களை தராததற்குக் காரணம் அவை வெளிப்படையானவை.
அவருடைய படைப்பாற்றலை அவர் கையாளும் மொழிநடையிலேயே காணலாம் என்பதற்காகவே.

(இக் குறிப்பு கடந்த 10.05.2015 தினகரன் வார மஞ்சரியில் வெளியானது)

Leave a Reply