கவிதையின் பெயரால் செவிநுகர் இன்பம் – கே.எஸ்.சிவகுமாரன்.

சுண்டிக்குழியைச் சேர்ந்த த.ஜெயசீலனின் கவிதை நூலான ‘எழுதாத ஒரு கவிதை’ நமக்குக் கிடைத்தது. அவர் எழுதியவற்றை முதலில் நான் படித்திருக்கவில்லை என்பது ஒரு புறமிருக்க,அவர் தொடர்பான எந்த விபரத்தையும் நான் அறிந்திருக்கவில்லை. ஆயினும் இவர் மூன்று கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறார் என்று அறிகிறோம்.

இந்தப் புத்தகம் 147 பக்கங்களைக் கொண்டது. வாயயெதநலயளநநடயnளூபஅயடை.உழஅ என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். நூலின் விலை 300 ருபா.

முதல் 13 பக்கங்களிலும் இவர் சம்பிரதாயமான மொழி நடையில் தாம் ஏன் கவிதை எழுதுகிறார் என்பதையும் தன்னில் கவியார்வம் இருப்பதையும் தெரிவிக்கிறார்.

கம்பநாடன் கவிதை என்ற கவிதை கவிதை கம்பனின் கவிதை உள்ளடக்கத்தை நிரற்படுத்தித் தருவது பயன்தருவது. அது போலவே மறைந்த கவிஞர் முருகையனை ‘யாழ் அரசவைக் கவி’ என்று விபரித்து எழுதுவதும் பொருத்தமுடையதே. மற்றுமொரு பிடித்த கவிதை ‘சொல்ஒன்று சொல்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. மந்திரம் போல் சொல்என்பார். இலக்கியமே சொல்லினால் தான் இலக்கியமாகிறது என்பதையும் நாம் அறிவோம்.

மரபுக் கவிதை போன்று ஆனால் நவீனத்துவ பரிபாஷையுடன் மறைந்து போன அல்லது மறக்கப்பட்ட நமது அடிப்படை சமயஞ் சார்ந்த அனுபவபூதிகளை வெளிப்படுத்தும் இக்கவிஞரின் பதிவுகளில் என்னைக் கவர்ந்த ஒன்று ‘நிறைவு’ என்ற கவிதையில் வருகிறது.

வேப்பம்பூ வேம்பில் வெகுத்துச் சொரிந்ததென
மகிழ்ச்சி மனதில்
மலிந்து நிறையுதிப்போ…

சில கவிதைகளை வாய்விட்டு உரக்கப் படிக்கும் பொழுது அதன் நுண்ணிய ஓசையின்பம் பொதுவாக நம்மைப் பரவசப்படுத்துவதுண்டு. ஜெயசீலனின் கவிதைகளில் சிலவும் அத்தகையதே!
கவிஞர் நல்லொழுக்கங்களையும் நீடித்து நிற்கக் கூடிய பயன்மதிப்புக்களையும் கூடுதலான வரை சுத்த மனதுடையவராக இருக்க விரும்புவதையும் இவரது பல கவிதைகள் காட்டி நிற்கின்றன.
இவருடைய ‘தந்தைக்கோர் தாலாட்டு;’ என்பதுவும் மனதை ஈர்க்கின்றது. எழுதப்பட்ட முறைமை கடைசிப் பகுதியில் நேர்த்தியாய் அமைந்திருக்கிறது.

‘சின்னஞ் சிறு மகள் செதுக்கிறாள்
தென்றலெனத் தவழ்ந்து’

என்று கூறுவது கவிஞர் வெகு நுட்பமாக தனது மகளின் மெய் தழுவுவதை அற்புதமாகப் படம் பிடிக்கிறார். இதே போன்று ‘தங்கமகள்’ என்ற கவிதையும் களிப்பூட்டுகிறது.

‘எந்தெந்தக் காலம் எப்படித்தான் மாறினாலும்
சிந்தி அழுகாச்
செவிநுகர் இசைக்கனிகள்

தருவோன்நீ… கற்பக தருவாய் இசைஞானி…’ என மொழிகிறார் நமது கவிஞர்.

ஜெயசீலன் தமது சொந்தங்களைப் பற்றி மாத்திரம் எழுதுபவர் அல்லர். சமூகத்தையும் அவர் பாடத்தான் செய்கிறார். இதற்கு உதாரணமாக ‘ஏய்க்கும் பேய்களை ஏய்க்க எழு’ போன்ற கவிதைகளையும் குறிப்பிடலாம்.
‘மனிதத்தை எண்ணிடாய் மானுடம் வெல்லுதென
நவீன வளர்ச்சிகொண்டாய்’

போன்ற வரிகள் ஏளனமாய் முரண்பாடுகளைச் சொல்லி நிற்கின்றன. அது போலவே ‘ஈரக்கால் மணலாய்’ என்ற கவிதை அண்மைக்காலக் கவிதைகள் போன்று சுவையாய் மிளிர்கிறது.

கடலைப் பறவைபோல் பார்ப்பதுவும் வித்தியாசமான பார்வை. ‘இராட்சதப் பறவையிட்ட முட்டையோ நிலவென்று’ அவர் மகள் அவரிடம் வினவிய போது ‘கற்பனையின் அடுத்தகட்டம் கேட்ட அவளிடத்தில் உயிர்த்ததைக் கண்டயர்ந்தேன், ஆச்சரியம் மனித ஆற்றல் இதை ஏற்கின்றேன்’ என்கிறார் கவிஞர், இரசிக்கத்தக்க பகுதியது.

இயற்கை பற்றிய பாடல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அவையும் சுவைக்கத் தக்கவையே. மரபின் காற்றில் புதுமை மிளிர அவர் இயற்றும் கவிதைகள் ஒன்றாகத்தான் இருக்கின்றன. பறவைகள் விலங்குகள் பற்றியெல்லாம் கவிஞரின் பார்வை விழுந்தது.

இவர் பிரயோகிக்கும் சில வினைச் சொற்கள் புதுமையாய் அழகூட்டுகிறது. உதாரணமாக ‘கதைபறைவோம்’ என்று ஓரிடத்தில் கூறுகிறார். இந்த நூலிலே மொத்தம் 147 கவிதைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இவற்றில் முதல் 48 கவிதைகள் பற்றியே நான் இங்கு எனது இரசனையை வெளிப்படுத்தியுள்ளேன். முழுக்கவிதைகளையும் பார்வைக்கு உட்படுத்துவதாயின் பத்திரிகைப் பக்கங்கள் அதிகரிக்கும். ஆகையால் எஞ்சிய கவிதைகளை நீங்களே படித்துப் பார்த்து உங்கள் மதிப்பீடுகளைச் செய்யுங்கள்.

என்னைப் பொறுத்தவரை இந்தக் கவிதை நூலை குறிப்பாக மாணவர்கள் மேலதிக பாடப் புத்தகமாகப் படித்து சுவைக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.

த.ஜெயசீலனுக்குப் பாராட்டுக்கள்.

(25.08.2013 வீரகேசரி வார மலரில் வெளிவந்த இரசனைக் குறிப்பு இது.)

Leave a Reply