சிரிப்பதே சீவியம் என்றாசென்றனை?

சிரித்திருஎன்றேவாழ்ந்த
செம்மலே! தமிழர் நெஞ்சில்
கருத்தெழிற் சிற்பம் செய்த
கலைஞனே! எங்கள் வாச
மரபுடன் மலர்ந்தமான
மருகனே! உன்னைஈன்ற
கரவெட்டியோடு…ஈழம்
கலங்குதே! எங்கேபோனாய்?

பார் ‘இச’வாதத்தாலே
பலியாக,நீதான் கையில்
பாரிசவாதம் வந்தும்
புத்தகம் பதித்தசித்ரன்!
நீறுமெம் மண்ணைத் தொட்டு
நீவரைந்திட்டமொட்டு
ஊர்முகம் காட்டும் எங்கள்
உணர்வைத் தாலாட்டும் தேற்றும்

தூரிகைஉன்றன் கையில்
துவக்கையும் மிஞ்சும் வாழ்வின்
கோரத்தை உன்‘மைக் கோடு’
குதறும்,நையாண்டிசெய்யும்
போர்சுடும் மண்ணைஉன்றன்
புன்னகைகுளிர்த்தும் நின்றன்
‘கூர்ப்-பதில்’உரிமைவெல்ல
கொடிதந்தெம் நினைவில் நீந்தும்.

‘மகுடியை’ஊதிஎம்மை
மயக்கினாய்;சவாரித் தம்பர்
முகத்தில் யாழ்ப்பாணத்தாரின்
முதுசத்தைவரைந்தாய் சொல்லுக்
‘ககராதி’யாத்தாய் ‘முன்பின்
சிரிப்பில்’அடிமுடியைத் தொட்டாய்
தகமையே! முப்பதாண்டு
தனித்து நூல்த்தவம் நீசெய்தாய்!

வலக்கரம் துவண்டும் நீ, பூ
வரைந்தசீர் பார்த்தோம் நோயால்
உழல்கையில் கூட நின்வாய்…
உதிர்த்த‘பேஷ்ப்பகிடி’கேட்டோம்
பலம்சொல்லும் துணைவிதாங்கப்
படைத்த‘சிரித்திரனாம்’பிள்ளை
விழிகசிந் துளதே! நீயும்
விடைபெற…தனிச்சுப் போச்சே!

Leave a Reply