உன்னைச் சரணடைந்தேன்

உன்னைச் சரணடைந்தேன். கம்பவாரிதி . இ. ஜெயராஜ்

த.ஜெயசீலன்

1993 இல் கவிதைப் போட்டி மூலம் கழகத்திற்கு வந்தவன் இவன்.
இவனும் யாழ் இந்துக் கல்லூரி மாணவனே.
கழகத்தில் இணைந்த போது,
பல்கலைக் கழகத்தில் மாணவனாய் இருந்தான்.
இவனது போட்டிக் கவிதை அப்போதே,
ஒரு கவியரங்கக் கவிதை போல் தரம் பெற்றிருந்தது.
இவனது ஆற்றலை இனங்கண்டு,
இவனுக்குப் பரிசு வழங்கவேண்டுமென நான் எவ்வளவோ போராடினேன்.
போட்டி நடுவர்களான கவிஞர் முருகையனும், கல்வயல் குமாரசாமியும்,
பரிசுக்குரியவனாக இவனை ஏற்க மறுத்து விட்டனர்.
அதனால், போட்டியில் இவனுக்குப் பரிசு வழங்கப்படவில்லை.
ஆனாலும் அந்த ஆண்டு கழகக் கவியரங்கில் நாம் அவனை ஏற்றினோம்.
தரமாய்ப் பாடி பலரது மனதிலும் பதிந்தான்.
பின்னர், 1995 இல் கழகத்தின் புதிய நிர்வாகம் நியமிக்கப்பட்டபோது,
அதில் பொருளாளராய்ப் பொறுப்பேற்றான்.
அவ்வாண்டு நடந்த இடம்பெயர்வில் நாங்கள் கொழும்பு சென்றுவிட
தனது உயிர் அச்சம் தவிர்த்து பிரசாந்தனுடன் சென்று,
கம்பன் கோட்டத்தை இராணுவத்திடமிரந்து மீட்டவன் இவன்.
நானும் இரத்தினகுமாரும் குமாரதாசனும் சிவசங்கரும் பிரசாந்தனும்
கொழும்புக்கு இடம்பெயர்ந்த பின்,
‘நிலாக்கால நிகழ்ச்சிகள்’ மூலம்
தனித்துச் சிலகாலம் கழகத்தை யாழில் இயக்க முயன்றான்.
பின் சற்றுச் சோர்ந்து தூரப்போனான்.
இவன் எம்மேல் கொண்ட அன்பு சத்தியமானது.
அவன்மேல் நாம் கொண்ட அன்பும் சத்தியமானது.
சிவசங்கர், பிரசாந்தன், மணிமாறன், அளவிற்கு
தன்மேல் எனக்கு அன்பில்லையோ எனும் ஐயப்பாடு,
அவன் அடிமனதில் என்றும் உண்டு. இன்றும் உண்டு.
அளவுக்கதிகமான ரோஷம் இவனது குறைபாடு.
அதைத் தாழ்வுச் சிக்கல் என்றும் சொல்லலாம்.
கொஞ்சம் கஞ்சத் தனமும்,
தொட்டாற் சுருங்கி மனநிலையும் கொண்டவன்.
தன்னையும் தனது கவிதைகளையும்,
பாராட்டியன்றி குறைசொல்லி எவரும் விமர்சிக்கக் கூடாது என,
நினைப்பவன்.
நாங்கள் கொழும்பு சென்ற பிறகு,
இவனின் போக்கு கொஞ்சம் மாறியது.
அறிவுலகத்தின் அங்கீகாரம் தேட முனைந்தான்.
ஆரம்பத்தில் இவனைக் கவிஞனாய் ஏற்க மறுத்த முருகையனை,
பின்னாளில் குருவாய்க் கொண்டு பக்திகாட்டினான்.
அவனது அந்தச் சுயவிருப்பச் செயற்பாட்டில்,
எமக்கு எந்த மாறுபாடும் இருக்கவில்லை.
ஆனால், அதுபற்றி நாம் ஏதேனும் நினைப்போமோ எனும்,
மனக்குறுகுறுப்பு இருந்திருக்கும் போல
அதனாற் தானோ என்னவோ பின்னாளில்
நாம் அவனை மேய்க்க நினைப்பதாயும்
அதற்குத்தான் அடிபணியப் போவதில்லை என்பதாயும்,
நன்றி மறந்து மிகக் கேவலமாய் ஒரு கவிதை எழுதினான்.
இதுதான் அவன் எழுதிய கவிதை.

சுயம்

நாயாய் இருப்பதற்கு நான் தயார்தான்!
சோறுவைத்து
நாளும் அணைப்பவரை நக்கி; அவர் வருங்கால்…
வாலாட்டி;
அவர்களது மகிழ்ச்சிகளில் நான்துள்ளி;
சோகத்தில் அவர்களுடன் சுருண்டு விழிசிந்தி;

ராவு பகலெல்லாம் ‘காவற் துறையாக’
வீடுதனைச் சுற்றி
வேலிமீறும் ஆடுமாட்டை
ஓடித் துரத்தி; ஒருபொழுது அவர்களுடன்
பந்தடித்தும் விளையாடி;
அவர்கள் உதைத்தாலும்
வந்து முதுகுரஞ்சி; பின் எந்தன் பாட்டில் ‘வெளிக்
குந்தில்’ அனாதையைப்போற் குறண்டி;
கடன் தீர்க்கும்
நாய் போற் கிடப்பதற்கு நான் தயார்தான்!

அதற்காக
‘வளர்ப்போர்க்கு மட்டுந்தான் வணக்கஞ் செலுத்தோணும்,
வளர்ப்போரின் வீட்டுக்கு மட்டும் உழைக்கோணும்,
வளர்ப்போரைச் சாடுவோரை வடிவாய்க் கடிக்கோணும்,
வளர்ப்போர்கள் செய்வதெல்லாம்
‘சரி’ யென்றுரைக்கோணும்,
வளர்ப்போர்கள் சொல்லிவிட்டால்…
வாய்பொத்தி, வாலாட்டி,
குலைக்கோணும்,
வளர்ப்போர்கள் ‘வா’ என்றாற் போகோணும்,
வளர்போர்க்காய் என்னுணர்வை,
என் விருப்பை,
என் வாழ்வைப்
புதைக்கோணும்’ என்று
புவிமக்கள் எதிர்பார்த்தால்;;….
நாயாய் அவதரிக்க நான்விரும்ப மாட்டேனாம்!

ஒன்றுரைப்பேன்…
‘வளர்த்தோம் நாம்’ என்பவர்க்கு ஒன்றுரைப்பேன்,
மண்ணிலுள்ள மனிதன் நான்;
என் மானம் மலடில்லை;
நன்றியுள்ள மிருகம் நாய்; அது அடிமை ஜென்மமி;ல்லை!

அவனோடு நாம் பகைகொள்ள வேண்டிய தருணம் அது.
ஆனாலும், எமக்குள்ளும் அவனுக்குள்ளும் இருந்த உண்மை அன்பு,
அச்சிறு விடயத்தைப் புறந்தள்ளிற்று.
எனக்கென்னவோ முருகையனுடனான அவனது சேர்க்கையின் பின்
இவனது கவிதையில் இருந்த இயல்புணர்ச்சி
குன்றியதாகவே தோன்றுகிறது.
நான் அன்போடு அவனை நெறிசெய்ய நினைக்கும் போதெல்லாம்,
இவன் ஏதோ நான் அவனை வீழ்த்த நினைப்பதாய் எண்ணி மிரள்வான்.
என்னோடு முரண்பட்டு இவன் எழுதிய பல கடிதங்கள்,
கழகக் கோப்புகளில் இன்றும் இருக்கின்றன.
கழகத்தோடு நெருங்கினால்
தன்னைக் கழகம் விழுங்கி விடுமோ எனும் அச்சத்தினால்,
கோடு கீறி புறம் நின்று வாழ்பவன்.
எங்களுள் கரைந்து போக விருப்பமின்றியும்,
பிரிந்து போக விருப்பமின்றியும், தடுமாறி நிற்பவன்.
கழகம் எங்களது எனும் உரிமையை அவன் என்றும் விட்டதில்லை.
முழுமையாய்த் தொட்டதுமில்லை.
நல்லூர் முருகனின் பெரும் பக்தன்.
போர்க்காலத்தில் வீரியமாய்க் கவிதைகள் பல பாடினான்.
போர் முடிந்ததும் மற்றவர்கள்போல் கொள்கை மாறவில்லை என்றாலும்
தன் சுதந்திர வீரியத்தை சற்றுக் குறைத்துக் கொண்டான்.
தன் கவிதைகளை நான் ஆழ்ந்து இரசிப்பதில்லை எனும் குறை
இவனுக்கு எப்போதும் உண்டு.
மேற்சென்று இடிக்கும் விமர்சனங்களை ஏற்கா இவன் மனநிலையே
எனது அச்செயலின் அடிப்படை.
கவிதைப் போட்டியில் இவனைத் தகுதியில்லாதவன் என்று தள்ளிவைத்த
முருகையனையே தனது குருவாய் நினைப்பது இவனது தகுதி.
இன்று ஈழத்தில் தரமான கவிஞனாய் இவனுக்கோர் பதிவுண்டு.
நிர்வாக சேவையில் இணைந்து
இன்று உதவி அரசாங்க அதிபராக இருக்கிறான்.
அப்பதவிக்கேற்ற ஆளுமை இவனிடம் இன்னும் வரவில்லை என்பது,
இவன்மேலான எனது குறைபாடு.
கழகச் செயற்பாடுகளில் இன்றும் இவனது துணை உண்டு.
எம்முடன் தொடர்போடும், அன்போடும் தொடர்ந்து இயங்குகிறான்.
இவனது மாமனார் எங்கள் கழகத்தின் பரம இரசிகர்.

(அகில இலங்கைக் கம்பன் கழக வெளியீடான கம்பவாரிதி .இ.ஜெயராஜ் அவர்கள் எழுதிய ‘உன்னைச் சரணடைந்தேன்’ என்ற நூலின் பக்கம் 480 –484வரை)

இதற்கான எனது பதில்

த.ஜெயசீலன்
20ஃ3, பாரதி வீதி
சுண்டிக்குளி
யாழ்ப்பாணம்.
20.04.2016.

அன்பிற்கினிய ஜெயாண்ணா,

உன்னைச் சரணடைந்தேன்

பல விடயங்களை எழுத எண்ணினாலும் தங்களின் ‘உன்னைச் சரணடைந்தேனில்’ 480 – 484 பக்கம் வரையுள்ள த.ஜெயசீலன் என்று தலைப்பிடப்பட்ட என் தொடர்பாக எழுதப்பட்ட விடயங்களில் உள்ள சில திரிபு படுத்தல்களை தெளிவுபடுத்தி சில விடயங்களை மட்டும் சுட்டிக்காட்ட விளைகிறேன். இப்பதில் தங்களின் பாகம் – 2 ல் சேர்த்துக் கொள்ளப்பட்டால் மிக மகிழ்வேன். உண்மையைப் பேச அஞ்சவேண்டியதில்லை என்பதை உங்களிடமே கண்ட எனது இப்பதிலுக்கும் எமக்கிடையிலான உண்மை உறவுக்கும் அன்புக்கும் இடையே எந்த முரண்பாடுகளோ அல்லது வேறுபாடுகளோ பகைமையோ கிடையாது என்பதனை பணிவுடனும் அன்புடனும் தெரியப் படுத்துகிறேன்.
1 ‘ கழகத்தில் இணைந்தபோது
பல்கலைக் கழகத்தில் மாணவனாக இருந்தான்…’
இது தவறு. நான் கழகத்தில் இணைந்தது 1993ல். யாழ் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டது 1995ல். எனது பல்கலைக் கழக கற்கை நெறி ஆரம்பமானது 1996 மே மாதத்தில். அதாவது யாழ்ப்பாண மீள் குடியேற்றத்தின் பின்னர்.
2 ‘ தன்னையும் தன் கவிதைகளையும், பாராட்டியன்றி குறைசொல்லி எவரும் விமர்சிக்கக் கூடாது என நினைப்பவன்’
நான் எங்காவது யாரிடமாவது அவ்வாறு கூறியிருக்கிறேனா? எழுதியிருக்கிறேனா? பதிவு செய்திருக்கிறேனா? அன்றும் இன்றும் எனது ஆதங்கம் ஒன்றே ஒன்றுதான். அதாவது பிறர் போலல்லாமல் எனது கவிதைகளிலுள்ள நல்ல விடயங்களில் எதைப் பற்றியும் வாயே திறக்காமல், பாராட்டாமல், ஆகக் குறைந்த பட்சம் அவை பற்றி சில குறிப்புகளைக் கூட கூறாமல் ஒவ்வொரு தடவையும் ஏதாவது குறைகளை மட்டும் விமர்சனங்களாக முன்வைப்பது மட்டுமே எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. ஏற்படுத்துகிறது.
நீங்கள் முன்பு ஒரு தடவை கூறியிருந்தீர்கள் டொமினிக் ஜீவாவோ யாரோ, நீங்கள் அருகில் இருக்கும் போதே உங்களைப் பற்றி, உங்களின் சிறப்பாய் அமைந்த பேச்சைப் பற்றி, கதைக்காமல் அருகில் இருக்கும் மற்றவர்களின் மிகச் சாதாரண பேச்சுக்களையும் அபாரம் என்று பாராட்டும் மனநிலையில் இருந்ததாக. அந்த அனுபவம் பல தடவை எனக்கும் வாய்த்ததுண்மை. என் கவிதைகளில் பாராட்டும் படியாக எவையுமே இல்லையா? பாராட்டினால் தேங்கி விடுவேன் என்ற எடுகோளும் நான் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளவே மாட்டேன் என்பதும் பொருத்தமான காரணங்களல்ல.
என் கவிதை தொடர்பான பலவிடயங்களை தாங்கள் உட்பட பலர் கூற ஏற்று என்னைச் செம்மைப் படுத்தியிருக்கிறேன். திருத்தியிருக்கிறேன். இன்றும் கவிதையில் நான் உணர்ந்தது சொற்பமே என நம்பி நிதமும் கற்கிறேன். நியாயமான பாராட்டை நான் எதிர்பார்த்தது தவறா? அது எனக்கு தங்களிடமிருந்து 95ன் பின் அனேகமாகக் கிடைக்கவில்லை. கழகத்தை நெருங்கினால் எதற்கெடுத்தாலும் கைதட்டு விசுவாசத்தோடும் தூர நின்றால் எதற்கெடுத்தாலும் குட்டு என்பது எந்த விதத்தில் நியாயம்?
‘மேற் சென்று இடிக்கும் விமர்சனங்களை ஏற்கா இவன் மனநிலை’ என்று கருதித் தாங்கள் எனது கவிதைகளின் ஆகக்குறைந்த நல்ல அம்சங்களை எனினும் பேசத் தவிர்த்தது தயங்கியது எனக்கு அதிருப்தியே.

3 ‘நாம் கொழும்புக்குச் சென்ற பிறகு. இவனின் போக்கு கொஞ்சம் மாறியது. அறிவுலகத்தின் அங்கீகாரம் தேட முனைந்தான்.’
இதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? நான் எந்த ‘அறிவுலகத்தின்’ அங்கீகாரத்தை தேட முயன்றேன்? ஏங்கினேன்? அந்த ‘அறிவுலகத்தோர்’ யார் யார்? 1995ல் தாங்கள் கொழும்பு சென்றீர்கள். 1996 – 2000 ம் ஆண்டு வரை யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கல்வி பயின்றேன். அப்போது நான் எனக்கான அங்கீகாரத்தை யாரிடமாவது எதிர்பார்த்தேன் என்பதற்கு தங்களிடம் சான்றுகள் உள்ளதா?
என் பல்கலைக்கழக காலத்திலோ பின்னரோ கம்பன் கழகத்தவன் நான் என்பதை எச்சந்தர்ப்பத்திலும் மறைத்ததில்லை. சொல்லத் தயங்கியதில்லை. அதே நேரம் வேறு எவரின் தயவையும் நான் தேடியதுமில்லை. நான் அக்காலத்திலும் இக்காலத்திலும் என் கல்வி, கவிதை, பொருளாதார, வேலைவாய்ப்பு, பதவி, உயர்ச்சிகளுக்காக யாருடைய அங்கீகாரத்தையும், சிபார்சையும், எதிர்பார்த்ததில்லை என்பதைக் கூறிக்கொள்கிறேன்.
4 ‘ ஆரம்பத்தில் இவனைக் கவிஞனாய் ஏற்க மறுத்த முருகையனை பின்னாளில் குருவாய்க் கொண்டு பக்தி காட்டினான்.’
கம்பன் கழக கவிதைப் போட்டியில் 1993ல் கலந்து கொள்ளும் வரை எனக்கு கவிஞர் முருகையனையோ, கல்வயலாரையோ தெரியாது. அவர்களுக்கும் என்னைத் தெரியாது. என்னை யார் என்று அறிந்த நிலையில், திட்டமிட்டு, வேண்டுமென்று, நான் கவிஞனே இல்லை என்று முடிவுசெய்து கொண்டு, அவர்கள் அன்று என்னை விலத்தியிருக்கவில்லை.
முதல் மூன்று இடங்களுக்குள் என்னை உள்வாங்கவில்லை என்பது உண்மையே. அன்றைய சூழலில் அவர்களின் தீர்மானம், முடிவு அது. அன்று முதலாமிடம் பெற்றவரின் பெயர் தற்போது ஞாபகத்தில் இல்லை. இரண்டாமிடம் சிவசங்கர் அண்ணை. மூன்றாமிடம் பிரேமினி (தாட்சாயணி). இத்தெரிவுகளில் அவர்களின் தேவை, விருப்புகள், செல்வாக்கு செலுத்தி இருக்கலாம். பொதுவாகப் போட்டிகளில் இவ்வாறான அபத்தங்கள் ஏற்படுவது வளமை தானே. ஆனால் அம்முடிவு நான் கவிஞனல்ல என்று அவர்கள் முடிவுசெய்ததால் மட்டும் மேற்கொள்ளப்பட்டது அல்ல.
அச்சந்தர்ப்பத்தின் மூன்றாம் இட முடிவை மாற்ற முயன்று முடியாமல் போனாலும், என்னை இனங்கண்டு கவியரங்கில் பாட வைத்தவர் நீங்கள் என்பதையும் மூன்றாம் இடம் பெற்றவருக்கு கவியரங்க வாய்ப்பை மறுத்தவர் தாங்கள் என்பதையும் நான் மறக்க, மறைக்க மாட்டேன். அதை இன்று வரை வெளிப்படையாகவே சொல்லியும் வருகிறேன்.
1993 கம்பன் விழா கவியரங்கின் பின் (அம்முறை தலைமை வீரமணிஐயர்) முருகையன் அவர்களை ஆரிய குளச் சந்தியில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டின் பின் சந்தித்தேன். அவர் என்னை ஞாபகம் வைத்து இருக்கவே இல்லை. என்னை அறிமுகப்படுத்தி அவரிடம் கவிதை பற்றி அறிய விரும்புகிறேன் என்றேன். அவரும் கற்பிக்கச் சம்மதித்தார். அனேகமாக வார இறுதி நாட்களில் சைக்கிளில் நீர்வேலியிலுள்ள அவருடைய வீடுதேடிச் சென்று – யாழ்ப்பாணத்தை விட்டு இடம்பெயரும் வரை கற்றேன். அவரே எனக்கு முதலில் கவிதை கற்பித்த ஆசான், குரு! ச.வே.ப என்னை இந்துக் கல்லூரியில் கவியரங்கம் பாட வைத்தவர். சொக்கன் ஆசிரியர், தம்பையா ஆசிரியர் ஆகியோரிடம் ஓ.எல் வரை தமிழ் படித்தேன். இவர்களும் எனது இலக்கிய ஆசான்களே.
தாங்கள் இலக்கண வித்தகரிடம் கற்க பல தரம் முயன்று கற்ற கதையைக் கூறுவீர்கள். அதுபோலத்தான் நான் முருகையனிடம் கற்றேன். இதிலென்ன தவறு இழிவு இருக்கிறது. ஆனால் தாங்கள் முருகையனுடன் முரண்பட்டதன் பின் கொண்ட நிலைப்பாட்டினால் மேற்படி வரிகளூடாக
‘கவிதைப் போட்டியில் இவனைத் தகுதியில்லாதவன் என்று தள்ளிவைத்த
முருகையனையே தனது குருவாய் நினைப்பது இவனது தகுதி’
என்றும், என்னைப் பரிகசித்திருக்கிறீர்கள்.
இவ்விடத்தில தங்களுடன் முரண்பட்ட பின் என்னைப் பாவித்து முருகையன் அவர்கள் தங்களுக்கு எதிராக எச்சந்தர்ப்பத்திலும் செயற்பட்டிருக்கவில்லை. அதேநேரம் 94ம் ஆண்டு கவியரங்கின் முன் முருகையனுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டது பற்றி தாங்கள் எழுதும் போது அது பற்றிய செய்தியை நானே வந்து உங்களிடம் கூறினேன் என்றும் எழுதியிருக்கிறீர்கள். இவை இவ்வாறிருக்க எனக்கும் முருகையனுக்குமிடையான தொடர்பை தாங்கள் வேண்டுமென்று திரிபு படுத்தியிருப்பதாகவே எனக்குப் படுகிறது.
5 முருகையனிடம் கற்றதால் ‘அதுபற்றி நாம் ஏதேனும் நினைப்போமோ எனும் மனக்குறுகுறுப்பு இருந்திருக்கும் போல. அதனால்தான் என்னவோ பின்நாளில்…’
என எழுதியிருக்கிறீர்கள். இது எந்தளவு தூரம் தர்க்க ரீதியில் பொருத்தமானது? நீங்கள் ஏதும் நினைப்பீர்களோ என்று நினைத்தும், அதிலிருந்து நான் என்னை மீட்க எண்ணியும், தங்களுடன் முரண்பட்டிராத அவ்வேளை, உங்களுக்கெதிராகவே கவிதை எழுதினேன் என்பது நகைப்புக்கிடமானதாக இல்லை?
இவ்விடத்தில் முருகையன் அவர்களது தூண்டுதலின் பேரில்தான், அவரைத் திருப்திப் படுத்தத்தான், நான் அக்கவிதையை எழுதினேன் என்று தாங்கள் கருதியிருந்தால் அது மிக மிகத் தவறான தீர்மானம் என்பதை தெளிவாகக் கூறிக்கொள்கிறேன்.
6 ‘சுயம்’ என்ற எனது கவிதை 1997 கடைசிப் பகுதியில் என்னால் எழுதப்பட்டது. 1998 அளவில் ‘ஞானத்திலும்’ ‘சஞ்சீவி’யிலும் வெளியானது. பின் எனது ‘கனவுகளின் எல்லை’ யிலும் இடம்பெற்றது. இக்காலப் பகுதியில் நான் ஏதாவது விடயத்தில் தங்களுடன் முரண்பட்டிருந்தேனா? பகைமை பாராட்டியிருந்தேனா? அல்லது பகைமை எமக்கிடையே புகைந்து கொண்டிருந்ததா? அக்கவிதையில் கம்பன் கழகத்தினதோ தங்களதோ பெயர்கள் எங்காவது அல்லது குறியீடாகவாவது பாவிக்கப்பட்டிருந்ததா? அதில் இருந்த ‘வளர்த்தோம் நாம்’ என்ற பதம் தங்களை மட்டும் தான் குறித்ததா? அக்காலத்தில் இலங்கை வானொலியும், சஞ்சீவி போன்ற பத்திரிகைகளும், பல்கலைக்கழக அரங்குகளும், பல ஈழத்தின் சஞ்சிகைகளும், கூட எனக்கு தொடர்ச்சியாகக் களந்தந்ததே. அக்கவிதை தங்களை மட்டும் குறிவைத்து எழுதப்பட்டது என்ற மனநிலையில் இக்கணம் வரை நான் இல்லை. இதுவே உண்மை.
அக்கவிதை தங்களை மட்டும் குறிக்கிறது என அளவான தொப்பியாக அதனை தாங்கள் அணிந்து கொண்டிருந்திருக்கிறீர்கள். அக்கவிதையின் தொடர்ச்சியாகவே 2004ல் வெளியான என் இரண்டாம் கவிதைத் தொகுதிக்கு ‘கைகளுக்குள் சிக்காத காற்று’ எனத் தலைப்பிட்டேன். கவனிக்கவும் கைக்குள் அல்ல கைகளுக்குள்.
மேலும் ‘நன்றி மறந்து மிகக் கேவலமாக ஒரு கவிதை எழுதினான்’ என்கிறீர்கள். அக்கவிதை, அக்காலத்தில் நன்றி மறந்த மனநிலையில் என்னிடமிருந்து வெளிப்பட்டது என்றோ அதை கேவலமான கவிதை என்றோ நான் இன்றும் கருதவில்லை. அக்கவிதைக் கருத்து தொடர்பான எனது மனநிலையில் இன்றும் என்னிடம் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. அக்கவிதையின் கருத்தே இன்றும் எனது நிலைப்பாடு. அக்கவிதை பற்றி சுமார் 19 வருடங்களின் பிறகு தாங்கள் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.
‘அவனோடு நாம் பகைகொள்ள வேண்டிய தருணம் அது’ என்றுள்ளீர்கள். பல தடவை என்னை நெறிப்படுத்த முனைந்ததாக கூறியுள்ள தாங்கள், முன்பு பல்வேறு விடயங்களைச் சுட்டிக் காட்டிய தாங்கள், 98 களில் இருந்து இக்கட்டுரை வெளிவரும் வரை இக்கவிதை பற்றி ஒரு வார்த்தை தானும் என்னுடன் கோபத்திலேனும் கதைக்காதது ஏன்? இப்போ வெளியிட்டிருப்பது ஏன்?
ஆனால், அந்த நெருக்கடி நிறைந்த கால கட்டத்தில் ( சுமார் 5 வருடங்களுக்கு மேலாக) நான் ‘நன்றி மறவாமல்’ யாழில் கம்பன் கழகத்தை நாள்தோறும் பார்த்து வாரா வாரம் கூட்டித் துடைப்பதில் இருந்து சகல வேலைகளையும் விசுவாசமாக செய்து கொண்டிருந்தேன். பல நண்பர்களும் (ஸ்ரீ தரன், பிரசாந்தன், சுண்டல் முகுந்தன், கவிதை முகுந்தன், ஜெயநிதி, குமரன், கேதீஸ்) இடைக்கிடை வந்து போனார்கள். அமரர் சிவராமலிங்கம் சேரின் வழிகாட்டலில் அவரை வண்டிலில் நகர்த்தி முன்னிறுத்தி, இராணுவ நெருக்கடிக்குள்ளும் சுமார் 5 ‘நிலாக்கால நிகழ்வுகளை’ நடத்தினோம். தங்களுடன் தொலைபேசியில் உரையாடியபடி நல்லை ஆலய உற்சவ காலங்களில் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தினோம். சில சிறிய நிகழ்வுகளையும் செய்தோம். மண்டபத்தை சில நிகழ்வுகளுக்கு வழங்கினோம். அக்காலச் சூழல் மிகக் கடினமானது. அக்காலத்தில் பொது நிகழ்வுகள் நடந்ததே அரிது. அவற்றையெல்லாம் ‘தனித்து சில காலம் கழகத்தை யாழில் இயக்க முனைந்தான். பின் சற்று சோர்ந்து தூரப் போனான்’ என ஒரு வரியில் கடந்து சென்றிருக்கிறீர்கள்.

7 ‘எனக்கென்னவோ முருகையனுடனான அவனது சேர்க்கையின் பின் இவனது கவிதையில் இருந்த இயல்புணர்ச்சி குன்றியதாகவே தோன்றுகின்றது.’

இது தங்களுக்கு எப்போ தோன்றிய எண்ணம்? நான் ஏற்கனவே கூறியது போல 1993 மே மாதமளவில் இருந்து முருகையனிடம் கவிதை கற்கத் தொடங்கினேன். அன்றிலிருந்தே என் கவிதை இயல்புணர்ச்சி குன்றியிருந்ததா? 1995ல் நானுட்பட இளையோரின் கம்பன் விழா கவியரங்கக் கவிதைகள் சிலாகிக்கப் பட்டதே அவ்வேளையும் பின்னரும் கூட இயல்புணர்ச்சியற்ற எனது கவிதையா இரசிக்கப்பட்டது? பாராட்டப்பட்டது?
95 ஐப்பசியில் இடம்பெயர்ந்து 96ன் யாழ்ப்பாண மீள்குடியமர்வின் பின்னிருந்த சூழலில் சில தடவைகளே முருகையனை நீர்வேலி சென்று சந்திக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. காலப்போக்கில் அவரும் கொழும்பு சென்றுவிட்டார். எனது அவருடனான சேர்க்கை ஒப்பீட்டளவில் கொஞ்சக் காலம்தான்.

8 ‘என்னோடு முரண்பட்டு இவன் எழுதிய பல கடிதங்கள் கழகக் கோப்புகளில் இன்றும் இருக்கின்றன.’
அக்கடிதங்கள் தங்களின் கோப்புகளில் மட்டுமல்ல அவற்றின் பிரதிகள் என் கோப்புகளிலும் இன்றும் பத்திரமாக இருக்கின்றன. அவை அவ் அவ் வேளைகளில் என் உண்மையான மனநிலை, தார்மீகக் கோபத்தின் அடிப்படையில் எழுதப்பட்டவையே அன்றி தங்கள் மீதான காழ்ப்புணர்வால் வரையப் பட்டவையல்ல. என்மீது தாங்கள் சில தடவை சுமத்திய பார தூரமான குற்றச் சாட்டுகள் உண்மையற்றவை என்பதை நிரூபிக்கும் நோக்கில் வரையப்பட்டவையே அவை அன்றி உங்களோடு வலிந்து முரண்பட வேண்டும் என்று என்னால் எழுதப்பட்டவை அல்ல. அவை தவறானவை என்று இன்றும் நான் கருதவில்லை.
எமக்கிடையான அன்பு என்பது வெறும் துதிபாடலாக, ஜால்ரா போடுவதாக, குழையடிப்பதாக, நம்மை ஒருவருக்கொருவர் பொய்யாய்த் திருப்திப் படுத்துவதாக இருக்கவில்லை என்பதற்கு அக்கடிதங்களே இன்றும் சாட்சிகள்.
9 ‘தன் சுதந்திர வீரியத்தை சற்றுக் குறைத்துக் கொண்டான்’
என்னுடைய கவிதைகள் இன்றும் அந்த அடிப்படையிலேயே இயங்குகின்றன. என்றாலும் எழுதப்பட்டவையை விட வெளிவருபவை, பார்க்கப்படுபவை மிகக் குறைவானவைவே.
தாங்கள் கொழும்புச் சூழலில் வாழும் போது சில விடயங்களை அவதானமாக பேசுவது, கையாள்வது போன்றதே இதுவும். எனது பதவியின் நிமித்தமும், கடந்த நெருக்கடியான காலம் காரணமாகவும் சில விடயங்களை அவதானமாகவே கையாள வேண்டியது தவிர்க்க முடியாததாகியது. ‘அஞ்சுதல் அஞ்சாமை பேதமை’ அல்லவா. ஆனால் அவை ஒருநாள் தம்மை வெளிப்படுத்தியே தீரும் என நம்புகிறேன்.

10 என் இயல்பு, குணம் என்பன பற்றி தாங்கள் கூறியிருப்பவை தங்கள் தனிப்பட்ட அபிப்பிராயங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவருடைய இயல்பு, குணம் பற்றிய பல்வேறு அபிப்பிராயங்கள் இருக்கலாம். தங்கள் இயல்பு, குணம் பற்றி என்னிடம் அபிப்பிராயங்கள் உள்ளன. அவை எப்படி முடிந்த முடிவுகள் அல்லவோ அது போன்றதே தங்கள் அபிப்பிராயங்களும்.
11 ‘இன்று உதவி அரசாங்க அதிபராக இருக்கிறான். அப்பதவிக்கேற்ற ஆளுமை இவனிடம் வரவில்லை என்பது இவன் மேலான எனது குறைபாடு’
இது எந்த அடிப்படையான எடைபோடல் எனப் புரியவில்லை. இது எனது கவிதையை விமர்சிப்பது போன்றதல்ல. எந்த ஆதாரங்களை, எந்த அவதானிப்புகளை, எந்த நடைமுறைகளைக், கருத்தில் கொண்டு இக்குறைபாடு தங்களால் இனங்காணப்பட்டது? நான் கடந்த 12 வருடங்களாக கடமையாற்றிய பிரதேசங்களில், பொதுமக்களின், மேலதிகாரிகளின், பொது அமைப்புகளின், தகவல்கள் கருத்துக்களின், அடிப்படையில் எடுக்கப்பட்டதா? இவை பற்றிய அவதானங்கள், பரீச்சயங்கள் எதுவுமே இன்றி, கள யதார்த்தம் அறியாது மேம்போக்காக இவ்வாறு தாங்கள் அபிப்பிராயம் கொள்வது பற்றி எனக்கு எள்ளளவும் கவலையில்லை.

12 ‘கழகச் செயற்பாடுகளில் இன்றும் இவனது துணை உண்டு. எம்முடன் தொடர்போடும் அன்போடும் தொடர்ந்து இயங்குகிறான்.’ இக்கூற்று சத்தியமானது.
இதற்கு விசுவாசமாக என்றென்றும் இருப்பேன், தாங்கள் கூறியிருப்பதுபோல் கோடு கீறிப் புறம் நின்று.
நன்றி
அன்புரிமையுடன்
த.ஜெயசீலன்.
(எனது கடிதத்திற்கான கம்பவாரிதி அவர்களின் பதில்)

அன்பின் ஜெயசீலனுக்கு,                                                                                                    25.04.2016

நலம், நலம் வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.
உமது நீண்ட கடிதம் கிடைத்தது.
நன்றி.
எண்ணிட்டு வரிசைப்படுத்தப்பட்ட உமது ஆதங்கங்களுக்கான பதில்களை,
அவ் எண்களின் வரிசையிலேயே கீழே தருகிறேன்.

1. செய்தியின் தவற்றை தங்களின் உமது சுட்டுதலால் அறிந்தேன். பொறுத்தருள்க.
2. வெளிப்படப் பாராட்டாமையின் காரணம் – ‘மைந்தர் தமை நெஞ்சில்’ என்பதாலாம்.
3. அறிவுலகத்தின் அங்கீகாரம் தேட முனைந்தான் என நான் உரைத்தது சபையோரைவிட கற்றோருக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கவிபாடியமையை.
4. நிகழ்ந்ததைச் சொன்னேன். சொன்னவை நிஜம். அவ்வளவே. பாராட்டில் கிண்டல் இல்லை.
5.6. ‘தன்நெஞ்சறிவது பொய்யற்க’
7. காரணம் தவறோ அறியேன். கருத்து உண்மை.
8. கடிதச் சமாதானம் மகிழ்ச்சி தருகிறது.
9. நம்பிக்கை நிஜமானால் மகிழ்வேன்.
10. உரைத்தமை உண்மை – இவ் உண்மையை முன்னுரையில் நானே சொல்லியிருக்கிறேன்.
11. ஆளுமையின்மையை அளக்க நீர் சொல்லியிருப்பவை கருவிகளல்லவாம்.
12. அகத்தின் தொடர்பே புறம் ஆதலால்,
புறம் நின்று காட்டப்போகும் விஸ்வாசமும் மகிழ்வையே தரும். ஆனந்திக்கிறேன்.

நிச்சயம் உன்னைச் சரணடைந்தேன் இரண்டாம் பாகத்தில் உமது கடிதத்துடன் எனது பதிலும் பதிவாகும்.
நன்றி.
வணக்கம்.
‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை’

அன்பன்
இ.ஜெயராஜ்.