கைகளுக்குள் சிக்காத காற்று – ஷாமினி

தூக்கியெறியப்பட முடியாத பெரும் சவால்களாய் நிரப்பப்பட்ட வாழ்க்கை, மிகத் தாமதமாகவும் மழையில் நிலவில் கடல் தெருக்களில் தொலையவும் மறுக்கின்ற மனம், இத்தனைக்கும் நடுவில் மரணத்துள் வாழ்ந்துகொண்டிருக்;கும் எங்களின் நிச்சயமற்ற வாழ்க்கை….ஒப்பாரிகளாயும், புலம்பல்களாயும் இறைக்கப்பட்டகவிதைச் செயற்பாடு…இங்கு எழுத்தும் பேச்சும் மெல்லப் பழங்கனவாய் மரித்துப்போக நாமெல்லோரும் மௌனத்தால் தறையப்பட்ட மனிதப் பிராணிகளாய் உலவிக் கொண்டிருக்கிறோம். இதற்கிடையில் சவக்குழியில் கிடந்து எழுதிக் கொட்டுவதற்கும், சூரியக் காலைகளை எதிர்பார்த்து இருட்டுக் கணங்களை கொளுத்துவதற்கும் தயாரானவர்கள் சிலர், அவர்களில் ஜெயசீலனும் ஒருவர் என நினைக்கிறேன்.

மௌன வாசித்தலுக்கென நெய்யப்படுகின்ற இன்றைய கவிதைகளில் சுயக்குரலின் சப்தமும், மென்மை எளிமை கலந்த அழகிய தொனியும், கூர்மை – சொற்சிக்கனத்தால் குழைக்கப்பட்ட தன்னுணர்வுக் கவிதைகள் ஒருபுறமாயும். மேம்போக்கான நுகர்வாளனுக்கு மீண்டும் மீண்டும் படித்தாலும் புரிபடாத கல்மொழியில் வாசகரை மாய உலகத்தின் பால் வசியம் செய்கின்ற, இருட்டின் பாழ் வெளிகளுக்குள் இழுத்துச் செல்கின்ற இருண்மைக் கவிதைகள் மறுபுறமாயும் தெறித்துக் கொண்டிருக்கும் இன்றைய கவிதை இயங்குதளத்தில் பெரும்பாலும் நின்றியங்காது, ஒருவித கதைசொல்லற் பாணியில் பெரும்பாலும் நிகழ்ச்சிக் குறிப்புக் கவிதைகளாக ‘கைகளுக்குள் சிக்காத காற்று’ வெளிவந்திருக்கிறது.

கவிதையின் பின்புலம் பற்றிய சிறந்த புரிதல்பாடும், அந்த படைப்பாக்கத்தின் தடிப்புத் தன்மை பற்றியும் ஆழமாக அறியாது அந்தரங்கமாகவே எழுதிக் கொண்டிருக்கும் எழுத்துக்காரர்களுக்கு மத்தியில் ஜெயசீலன் சொந்த வாழ்வின் புரிதல்களை தன்மக்கள் கூட்டத்தை நோக்கி தன் எழுத்துக்களாலேயே எறிவதால் ஓரளவு தன் சமூகம் சார்ந்து எழுதும் தன்முனைப்புப் பெற்றவராகிறார். அதோடு அக உணர்வுச் சித்தரிப்புகளை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் நவீனத்துவக்காரர்களுக்கு மத்தியில் துணிச்சலுடன் புற உணர்வுக் கவிதைகளையும் பிரசவித்திருக்கிறார். அவர் கவிதைகள் அகத்தில் இருந்து அதிகம் விலகாமலும் பறநிலைகளுக்குள்ளேயே மூழ்கிப் போகாமலும் காணப்படுவது வித்தியாசமானது.

நவீன கவிதையின் மிக முக்கிய மூலங்களாகக் கருதப்படும் கைத்திறன், செய்நேர்த்தி, சொற்சிக்கனம், போன்றவற்றைக் கவனத்திலெடுக்காவிட்டாலும் கவியரங்கப் பாணியிலான ஆரவாரமான அட்டகாசமான கைதட்டலுக்கான வரிகளையும், மிகைஉணர்வின் கூக்குரல்களையும் தவிர்த்திருப்பது கவனிக்கப்பட வேண்டியது.

1.வடிவம்
2.கரு
3.வெளிப்பாட்டு உத்தி(எடுத்துக்கூறும் முறை)
4.மொழிநடை

என்ற கவிதையின் கூறுகள் நான்கினுள் மிக முக்கியமானதும் நுகர்வாளர்களைச் சட்டென திரும்பிப் பார்க்க வைப்பதுமான ஒன்றாக மொழி நடையே காணப்படுகிறது. கவிதை மொழி பற்றி பிரக்ஞையும் அது தொடர்பான ஆளுமையும் ஒரு கவிஞனுக்கு மிகவும் முக்கியமானது என்பதோடு “எலியட்” கூறும் இன்பத்துக்கும் முக்கிய வடிகால் கவிதை மொழியே.

“வான வெளியெங்கும் வசிக்கின்ற தெய்வங்காள்” எனத் தொடங்கி “மூசித் தினம்பெய்யும் மாசிப் பனிகரைந்து” என்றும்
“ஒருதுளி பட்டாலே உயிர்போகும் பனிக்காலை
சுருண்டு படுத்திருந்தால்
சுகங்கேட்கும் திறந்தூக்கம்”
என்றும் சந்தத்திலிருந்து விடுபடாத ஒரவித மரபு வரிகளின் சாயலாய் எழுதும் இவர். இன்னொரு கட்டத்தில் அதைத் தூக்கியெறிந்து விட்டு பேச்சு வழக்குக்குத் தாவிவிடுகிறார்.
“ஓலை மட்டை பாழை உலகம் என்றிருப்பவள் நீ
கோயில் குளம் குடும்பம்
வாழ்வென்று சொல்பவள் நீ
மனிதரின் சுத்து மாத்து அரசியல்கள்
உனக்குத் தெரியாது….”

ஆனால், அந்த இரண்டு மொழிநடையும் தவிர்ந்த தனித்தன்மையான ஒரு கவிதை மொழியும் அவரிடம் தலைகாட்டுகிறது.
“தேவதைகள் பற்றி நினைவு தெரிந்திருந்த

நாளிருந்த நூறு
கதைகளினை நானறிவேன்.”
“விரிந்து கிடக்கிறது அறையெங்கும் ஒருதனிமை”
‘தேவதைகள் பற்றிய பாடல்’,‘வாழ்க்கைப்போர்’ ‘அபிமான வீரன்’ கவிதைகளில் இத் தனித்தன்மையைக் காணலாம். மேற்கூறிய மூன்றாவது மொழிநடையைத் தெரிவுசெய்து அவர் கவிதையெழுதியிருந்தால் இத்தொகுதி இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என நினைக்கிறேன்.

கவிதை கிளர்கின்ற ரம்மியமான கணங்களில் எந்தக் கவிஞரும் அதன் பொருளை முன்கூட்டியே திட்டமிடுவதில்லை. இது கவிதை எழுதியவர்களுக்கு மட்டுமே புரியக் கூடிய விடயம். இந்த வகையில் பொருளின் தெளிவு, அதன் கனம், அதன் விளைவுக்கு மேலோட்டமாக கவிஞர் பொறுப்பாளியாகத் தெரிந்தாலும் உண்மையில் அவன் அல்லது அவள் பொறுப்பாளியல்ல. வார்த்தைகளால் வடிக்க முடியாத சந்தோஷங்களையும், வாழ்வின் கழிப்பறைகளில் இருந்து வாய்விட்டு அழுகின்ற ஆறாத் துயரங்களையும் கவிஞரின் ஆழ்மனதில் மண்டிய சமூகச் சித்திரங்களே அவருடைய கவிதையின் கருவாகி விடுகிறது.

“திக்குத் தெரியாத காட்டில் -உனைத்
தேடித்தேடி இளைத்தேனே”
ஏனக் காணும் பொருளிலெல்லாம் அழகைக்கண்ட யுகாந்தரக் கவிஞன் பாரதியிலிருந்து இன்றைய ஜெயசீலன் வரை எழுதிக் கொண்டிருக்கும் எல்லாக் கவிஞர்களுக்குமே என்றும் சலிக்காத விடயம் இயற்கை. காற்றில் கரைந்து, நதியோடு அலைந்து, மழையிலும் வெயிலிலும் முழுகி இயற்கையை தனது தோழனாக்கிய பெருமை ஜெயசீலனுக்கும் உண்டு.

“எத்தனை அழகு இங்குறைந்து கிடக்கிறது?
மெத்தை விரித்ததென
விழி விரியும் எல்லைவரை
பச்சை…பசேலென்று படுத்திருக்கும்”

அன்றிலிருந்து இன்றுவரை எல்லாக் கவிஞர்களுக்குமே இரண்டு இயங்கு தளங்கள் தான் இருந்திருக்கிறது. ஒன்று இயற்கையின் மடிப்புகளில் மடிந்து போவது. இரண்டாவது மானுட உலகக் கசிவுகளில் தம்மைக் கரைத்துக் கொள்வது. ஜெயசீலனும் இதற்கு விதிவிலக்கானவரல்ல. வேற்றுக் கிரகத்திலிருந்து இவர் வரவில்லை. பழகிய தெருக்களையும் மறக்கவில்லை. நீண்ட நதிகளிலும், நெல்விடும் வயல்களிலும், கவிதையாய்ப் பொறிக்கப் பட்ட கரிய முகில்களிலும் ஜீவிதம் செய்தவர். காலாறி நடக்கின்ற துயரங்களின் கனதி தாங்காமல் கண்ணீர் சிந்தியவர். வாழ்க்கையின் கரிபடிந்த வார்த்தைகளால் சிலுவைப் பிரதேசத்தை வரித்துக் கொண்டவர்.

வறுமை, கொலை, துன்பம், துயரம் என இவரது மண்டையைக் குடையும் காயங்களால் வாழ்வின் பக்கங்களை சபித்துக் கொட்டியவர். ‘நெருடல்’,‘மனக்காயம்’ ‘முகங்களும் நீங்களும்’‘போதிமரம்’‘கைகளுக்குள் சிக்காத காற்று’ போன்ற கவிதைகளில் இதை நாம் வெளிப்படையாகக் காணலாம்.

“உங்களது பாட்டுகளில் உங்கள் முகங்களில்லை”
சபித்துக் கொட்டியும் அவருக்கு மனம் ஆறவில்லை. பஞ்ச பூதங்களையும், சிறு தெய்வங்களையும் அதர்மர்களை அழிக்க அழைக்கிறார். அப்படியும் ஆற்றாமல் தன் சமூகத்தின் மீது கொண்ட பிரியத்தினால் சமூகத்தையே திருந்தி நடக்கும் படி கட்டளையிடுகிறார்.

“உங்கள் கால்கள் நேராய் நடக்கட்டும்
உங்களது கட்டுண்ட கைகள் உயரட்டும்
……………………….
உங்களது நாக்கின் தடுமாற்றம் ஓடட்டும்”
இலையுதிர் காலக் கரைகளை மேய்ந்துவிட்டு எல்லா இதயக் கதவுகளின் வழியும் மழையாய் நுழையும் வசந்தம் காதல். தலைமீது இடிவிழத் தவமிருப்பதும், வெளவாலாய்த் தூங்குகிற வாழ்விதங்களும், கவிஞர்கள் நிலாப் படகின் மீதேறி கவிதை பிடிக்கத் தொடங்குவதும் அதனால் தான். ஆண் பெண் உறவு நிலைகளுக்குள் ஊடாடுகின்ற காதல் புரிந்;துணர்வுகளும், அன்பினால் சிதறும் நித்திரைச் சிதிலங்களும் இவரையும் விட்டு வைக்கவில்லை.
“உன்னைப் பிரிதல் மரணத்திலும் கொடிது”
“கண்களெனும் தூண்டிலிலே
………………..
………….என்னிதயம் சிக்கிற்று”
எனப்பாடும் அவருக்கு ‘இதய இயக்கி’ அவளே. அவள் பற்றிய காதல் நினைவுகள் எப்பொழுதும் அவர்மேல் ஒரு வெண்கொற்றக் குடையாய் கவிந்த கொண்டிருக்கும்.

உணர்வுத் தரிசனங்களை வெளிப்படுத்துகிற உத்தியில் உன்னதமானதும், காலாதிகாலமாகப் பேசப்பட்டு வருபவையும் கவிதை இலக்கணங்களுக்கு முக்கியமானதுமாக படிமம், குறியீடு, உருவகம் என்பன காணப்படுகின்றது. கவிதைப் படிமத்துக்கென்றே கவிஞர்களும் (பிரமிள்) கோட்பாடுகளும் தோன்றிய காலம் நவீன காலம். ஆணி இலக்கணங்களில் கடைக்குட்டியான படிமத்தை பறந்தள்ளிவிட்டுப் போவதென்பதும் எந்தக் கவிஞருக்கும் சாத்தியமாகாத ஒன்று.

“தடிமன் பிடித்தொழுகும் மூக்காய்
தரைநோக்கி
அடிக்கடி மழைசிந்தும்”
எனப்பாடும் ஜெயசீலனிடம் அழகியல் உணர்ச்சி அலைகளை எழுப்பும் படிமப் பிரயோகம் மெதுவாகத் தலைகாட்டுகிறது. ஆறு, குளம் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி, இயற்கைப் படிமங்களையும் அங்காங்கு ஒருசில இடங்களில் அடிக்கருத்தியல் படிமங்களை கூறியிருந்தாலும் கவிதை இலக்கணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தன்மையினை ஜெயசீலனின் கவிதைகளில் காணமுடியாதுள்ளது. இன்றைய கவிதையின் வீச்செல்லைப் பரப்பகளை விரித்துச் சென்ற, கொள்ளளவுப் பெறுமானத்தை உயர்த்தி விடுகின்ற படிமப் பிரயோகங்கள் முக்கியம் பெறாதது ஒருபக்கமென்றாலும் அழகிய நதிப்பிரவாகங்களில் போதிமரத்தடியில் மலர்பாளங்களில் கண்களைத் தொலைத்து, பசளை கொழிக்கின்ற ஒருபாடலை தன் சமூகம் மீது படரவிட அவர்படும் பாடு போற்றத்தக்கது. என்றைக்குமே அந்தந்தக் காலங்களைப் பார்த்து கண்ணீர் உருக்கின்ற அந்தந்தக் காலங்களின் பிரதிநிதியாய் வெளிப்படுகின்ற எழுத்துக்களுக்கான பெறுமதி குறைவதில்லை என்பதும் ‘கைகளுக்குள் சிக்காத காற்றில்’ இருந்து தெரிந்துவிடுகிறது.

(இவ்விமர்சனக் குறிப்பு ஜூலை-டிசெம்பர் 2006 ‘கலைமுகம்’ இதழில் வெளியானது)

Leave a Reply