பாரதி

பாரதிதமிழ்க் கவியின் குறியீடு!
பாரதிதமிழ் மொழியின் வரலாறு!
பாரதிதமிழ் வாழ்வுக் குவமானம்!
பாரதிதமிழ் நகர்வின் வழிகாட்டி!
பாரதிகிழத் தமிழைநவீனஞ்சேர்
பாதையில் திருப்பிவிட்டயுகசந்தி!
பாரதிபல நூற்றாண்டாய்ப் பேசிய
தமிழ்க் ‘கைபேசியை’உயிர்ப்பித்தமின்னேற்றி!

பாரதிபழங் கவிதை இறுக்கத்தைத்
தளர்த்திப் பாமரர் படிக்கும் படிசெய்தோன்!
பாரதிதமிழ்க் கவிதைவடிவத்தை
பரிசீலித்து இன்றைக் கேற்றதைத் தேர்ந்தவன்!
பாரதிநெடுங் காவியமரபினைப்
பகுத்துஆய்ந்துபலஉத்திசேர்த்தவன்!
பாரதி இன்றைவசனக் கவிதையைப்
படைத்துப் புதுவழிசொன்னபிதாமகன்!

சுதந்திரக் கனல் சுடரநெய் விட்டவன்.
துணிந்துமானுடவிடுதலைக் கார்த்தவன்.
புதுமைப் பெண்ணின் தளைகள் அறுத்தவன்.
புரட்சிக்காய்த் தன்னைத் தேய்த்திட்டசந்தனன்.
விதியைமாற்றகுடும்பம் உறவெனும்
விலங்குடைத்துஉயர்ந்துழைத்தசுதந்திரன்.
எதிலும் தெய்வத்தைக் கண்டுஓர் சித்தனாய்
இயற்கையைப் போற்றி இயங்கியஆன்மிகன்.

“நமக்குத் தொழில் கவி நாட்டுக் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோராதிருத்தல்”…என
நிமிர்ந்துமுப்பத்துஒன்பதுஆண்டுகள்
நெருப்பாய் சமூகத்தின் குப்பைகொழுத்தியோன்!
திமிர்ந்தஞானச் செருக்கோடலைந்தவன்!
தீய்த்தவறுமைக்குள் சுடர்ந்தும் ஒளிர்ந்தவன்!
தமிழில் நல்லகவிஞன் இல்லாக்குறை
தன்னால் தீர்ந்ததென் றுரைத்தசுயம்பிவன்!

ஞான சூனியர் ஆகியஎம்மையே
ஞான சூரியர் ஆக்கமுயன்றவன்!
காலம் வென்றகவிஞன்…மனிதர்கள்
கட்டிக் காத்தமடைமைதகர்த்தவன்!
யான் மனத்தடையால் கவி வார்த்தைகள்
வற்றிநிற்கையில்…வார்த்தைகள் தாறவன்!
நாளை…கனவுமெய்ப்படவேணும்மென்று
ஆர்த்தவன் கனாமெய்ப்படலாச்சுதா?

காலனைஎட்டிக் காலால் உதைக்கவும்
கருதியோன் அன்புக்குஅடிமையாம் காதலன்!
கோயில் யானையே கூற்றெனத் தாக்கிட
குற்றுயிருடன் துடித்துஉறவழக்
காலமானவன் நாலைந்துபேருடன்
கடைசியாத்திரைசென்றகற்பூரன்.. ஆம்
பாரதி…எங்கள் காற்றில் கரைந்துளான்!
தமிழ்ப் பரம்பரைக்கு மூச்சாய் உசுப்புவான்!

த.ஜெயசீலன்

Leave a Reply