புயல் மழைக்குப் பின்னான பொழுது

புயல் மழைக்குப் பின்னான பொழுது

த.ஜெயசீலன்

கவிதைத் தொகுப்பு : புயல் மழைக்குப் பின்னான பொழுது

கவிஞர் :த.ஜெயசீலன்

தொடர்பு

விலாசம் : 20/3,பாரதிவீதி,சுண்டிக்குளி

யாழ்ப்பாணம்,இலங்கை.

email : thanajeyaseelan@gmail.com

website : www.thanajeyaseelan.com

பதிப்புரிமை : த.ஜெயசீலன்

வெளியீடு :அருணன் பதிப்பகம்,நல்லூர்

யாழ்ப்பாணம்.

முதற்பதிப்பு :கார்த்திகை,2014

அட்டை :நன்றி-இணையம்.

அச்சுப் பதிப்பு :மதிகலர்ஸ்,நல்லூர்.0212229285

பக்கம் :80

ISBN இலக்கம் :978-955-41870-0-9

விலை :250.00

கவிஞரின் ஏனைய நூல்கள் : 1.கனவுளின் எல்லை

2.கைகளுக்குள் சிக்காத காற்று(2004)

3.எழுதாத ஒரு கவிதை

என்னுரை

அன்புடையீர்

வணக்கம்.

புயல் மழைக்குப் பின்னான பொழுதில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

இது எனது நான்காம் கவிதைத் தொகுப்பு.

இடையறாத,நெருக்கடி மிகுந்த

வாழ்கை,மற்றும் கடமைச் சுழல்களுக் கிடையேயும்

நெடுஞ்சாலைத் தார்வீதி வெடிப்பில் தலைகாட்டும்

பூவோடு புன்னகைக்கும் புல்லாய்க்

கவிதை மலர்ந்து அதன் வனப்பும் வாசமும்

என் சிறுவிரல் பற்றி

வருவது ஆச்சர்யமானதே!

கவிதைக்கு என்னைத் தாரவார்த்துக் கொடுத்து

இருபத்திரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகி விட்டன.

நகரும் இக்காலம்

என் வாழ்வினதும்,என் கவிதை ஈடுபாட்டினதும் வசந்தகாலம்.

எனவே,என்’மூன்றாண்டுகளுக் கொரு வெளியீடு’

என்ற கொள்கை தளர்த்தி

இத்தொகுதியை வெளிக் கொணர்கிறென்.

என் எல்லா நெஞ்ச அவசங்களையும்,

சுழலின் சுகம் துயரங்களையும்,

அனுபவிக்கும் இன்ப துன்பங்களையும்,

வெற்றி தோல்விகளையும்,

கவிதைகளில் கொட்டிப் பகிர வேண்டும்

என்ற வேணவா ஈடேறும் காலம்

தொடுவானமாக எட்டியே செல்கிறது.

வாழ்க்கை நிறுத்த முடியாத

ஒரு கடுகதி இரயிலாக ஓடிக் கொண்டிருக்கையில்

என் கவிதைகறளும் நேர் விகிதமாக உதிதத்தபடி இருப்பது

இக்கணம் வரை எனக்கு வியப்பே தருகிறது.

“இவற்றை எழுதியவன் நானா”என சில வேளை நானே எனைக்

கேட்டுக்கொள்வது…

என்னை “மேதாவி” என்று உங்களுக்கு காட்டுவதற்காக அல்ல.

உண்மை மனநிலையே அது.

அன்றும் இன்றும் என்றும் என் கவிவதகளுக்கு காரணமான

என்னுளுறையும் கவிஞனை

தொலைத்து, தவறவிடாமல் காத்துக்

கவிஞனாகவே வைத்திருக்க வேண்டும் என்ற

பிரார்த்தனையை மீண்டும் செய்து

என்னை வழிநடத்தும்

இயற்கையும்,இறையருளையும்

நம்பிக்கையோடு போற்றிப் பணிகிறென்.

நன்றி கலந்த நட்புடன்

த.ஜெயசீலன்

கார்த்திகை,2014.


சமர்ப்பணம்

ஷெல் விழுந்த போதும்..இச்

‘செல்ஃபி’யுகத்தினிலும்

செல்லரியா தெம்தமிழைச் சீராட்டும்

கவிஞருக்கு!

பிரார்த்தனைகள்

ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு பிரார்த்தனைகள்
செய்தபடி தான் நாம்
சீவித்திருக்கின்றோம்!
பிரார்த்தனைகள் எங்கள் பிணிமூப்பு சாபற்றி…
பிரார்த்தனைகள் எங்கள் பிரபலங்கள் புகழ்பற்றி…
பிரார்த்தனைகள் வேண்டும் பெருஞ்செல்வம் ஆசை பற்றி…
பிரார்த்தனைகள் எங்கள் பிற்காலம்
உருத்துபற்றிப்…
பிரார்த்தனைகள், எங்கள்
பிரார்த்தனை களைநம்பிப்
பிரார்த்திப்போம்… அவரவரின் இஷ்ர இறைவனடி!

பிரார்த்தனைகள் எல்லாமும் நிறைவேறா திருந்ததில்லை.
பிரார்த்தனைகள் எல்லாமும் நிறைவேறி யிருந்ததில்லை.

பிரார்த்தனைகள் வெல்வதும்… எம்
பிரார்த்தனைகள் தோற்பதும்… எம்
பிராப்பதம்; அதை எண்ணிக் கவலைப்பட் டேதுமில்லை.
என்றாலும் பிரார்த்திக்க மறந்தும்
நாமிருந்ததில்லை.
என்றென்றும் பிரார்த்தனையை நாங்கள் கைவிட்டதில்லை.
எங்கள் பிரார்த்தனை நிறைவேறுவதைப் பார்க்க
மங்களமாய் ஏதும் மகத்துவமாய்
ஆகவேண்டி
ஒன்றிருக்கக் கூடுமென
இறைவன் நினைத்திருந்தால்…
எங்கள் பிரார்த்தனைகள் நிராகரிக்கப் பட்டிருக்கும்!
எங்கள் பிரார்த்தனைதான்
ஏனையவற்றை விடவும்
முக்கியம் என இறைவன் முடிவுசெய் திருந்திருந்தால்
எக்குறையும் வாராதெம்
பிரார்த்தனைகள் ஈடேறும்!

 

வந்த பாதை

பின்னால் திரும்பிப்பார் நின்பின்னே நீ நடந்து
வந்த பெரும்பாதை
மலைப்பாம்பாய்த் தூங்கிடுது!
உன் ஜனனம் தொட்டு உனதிந்தக் கணம்வரை நீ
வைத்தநின் காற்தடங்கள்
அப்பாதை தனிற் தொடர்ந்து
தைத்த சுவடுகளாய்த் தரித்துளது!
நீ பார்த்தால்
ஒவ்வொன்றின் பின்னும் உள்ள ஓர் இரு கதைகள்
எவ்வளவு இலகுவாக
உன்நினைவில் இருந்தெழுந்துன்
மனத்திரையில் விழுந்திருக்கும்?
மறுபடிபார்…நீ மறந்த
கனபேரின் முகங்களக் காற்றிலூச லாடிவிடும்.
உனைப்படைத்தோர்,
உனை அன்றே கண்டு பிடித்தவர்கள்,
உனைச் செதுக்கி விட்டோர்,
உனக்குத் தடையாகி
நீ தாண்டத் தூண்டியவர்,
நினைச்சிதைக்க நினைத்துன்னில்
உரமேற்றி விட்டவர்கள், உனக்கே சவாலானோர்,
உன்போட்டி யாளர்கள்,
உனை ஊக்கி விட்டவர்கள்,
உன்வழி காட்டிகள், உனக்கு உதவியவர்,
உன்வில்லர், நாயகர்கள்,
உனைச்சிரிக்க வைத்தவர்கள்,
உன்னை வேட்டையாடியவர்,
உனை அடக்கிப் போனவர்கள்,
என்று… பல முகங்கள்
அங்கே தெரிந்திருக்கும்.
நீ மறந்து போன நீ மறக்க நினைத்த
ஆயிரம் நின் அக அசிங்கங்கள்
தவறு தோல்வி
ஆங்காங்கே முகில்களென
அப்பி அப்பிப் படர்ந்திருக்கும்.
முன்னாலே மட்டும் பார்த்தபடி போகாதே!
பின்னாலே பார்த்தால் தான்
பிழை சரியைப் படிப்பினையை
உன்மனது இன்றுணரும்.
உன்பலம் பலவீனம்
என்ன என நீயறிதல் இலகுவாகும்.
தொடர்ந்தினியும்
முன்னோக்கிப் போக உனக்குத் தகுதியுண்டா?
என்பதை உறுதிசெய்ய… எப்போதும்
வந்தபாதை
தன்னைத் திரும்பிப்பார் தயங்காமல்…
வெற்றி வரும்
முன்னாலே அல்ல…உனைப் பின்தொடர்ந்தே
தேடிவரும்.

 

பிறை பார்த்தல்

வெட்டி வைக்கப்பட்ட சர்க்கரைப் பூசனித்
துண்டொன்றாய்; மஞ்சள் நிலவு
கீழ்த்திசையின்
தொடுவானத் தருகே ஒளிர்கிறது இப்போது!
நேற்று “கிளித்த நகம்போல” என்றார்கள்
அதுவும்நான் காம்பிறை
என்றே பொருமினார்கள்!
நூல்போன்ற மூன்றாம் பிறைநிலவைப் பார்த்து
நாளெத்தனை யாச்சு?
முன்பென்றால் கோவிலடி
வீதியிலே வான்பார்த்து எல்லோரும் விழித்திருப்போம்!
நூலாய்ப் பிறையை முதற்கண்டோன்
கூச்சலிட
எல்லோரும் கண்ணை உற்று உற்றுப் பார்த்ததனைக்
கண்டு கரத்தை தலைமேல் கொண்டு
அட
நினைத்தது நடக்குமென நிமிர்வோம்!
முதற்பிறையை
கண்டோனை…. அதிசயமாய்க் காட்டுவர்
சுற்றிநிற்போர்!
மூன்றாம் பிறைபார்த்தல் முக்கிய நிகழ்வெமக்கு.
மாசமாசம் மூன்றாம் பிறைகண்டு
நினைத்ததெல்லாம்
பலிக்குமென்ற ஐதீகம்
நம்மை வளர்த்ததன்று!
மூன்றாம் பிறை நிலவு மிகவெட்கப் பட்டுத்தான்
பார்க்குமெமை;
இன்று… அது தேடினாலும் பார்ப்பதற்கு
ஆட்களில்லை;
வளர்ந்து முளித்தெங்கள் கண்களின் முன்
பட்டபின்பு… பார்த்து,
“நான்காம் பிறைபார்த்தால்
நாயலைச்சல்” என்று அதைத் திட்டித் திரும்புகிறோம்.
நினைத்த காரியங்கள்
நடக்காமல் போவதிப்போ
அனேகம் நிகழ்வதனால்…
“எப்பிறையைப் பார்த்துத்தான்
என்ன?” எனும் வாழ்க்கைமுறை
வளக்கமாச்சு நம்முன்னால்!

 

அலைவரிசை

ஒவ்வொரு வானொலியும் ஒவ்வோர் அலைவரிசை
தன்னில் இயங்குவதாய் தான்
மனிதர் நினைவுகளும்
ஒவ்வொரு அலைவரிசை கொண்டன; யார்
உணர்ந்து கொண்டோம்?

எனது நினைவும் என்எண்ணங் குணங்களும் ஓர்
அலைவரிசை கொண்டிருக்கும்!
அதிர்வெண்ணோ டதிர்ந்திருக்கும்!
உனது நினைவும் எண்ணங்களும் வேறு
அலைவரிசை யோடிருக்கும்!
அதிர்வெண்ணும் வேறாகும்!
‘உனக்கும் எனக்கும் ஒத்துவரும் அலைவரிசை’
எனிலெமக்குள் எல்லாம் இனிக்கும்
‘மனம் பரிந்து’
இடையறாது இசைபெருக்கும்!
‘இணங்கி வரா அலைவரிசை’
இடறவைக்கும் மனங்களினை!
ஏற்றகருத்; திணக்கநிலை
கூடா அபசுரமே கேட்டும்!

என் அலைவரிசைக்கு
ஈடு கொடுக்கவல்ல மனங்களைத்
தெரிகின்றேன்.
எமக்குள் புறப்பேதம் எத்தனை இருந்தாலும்
எமக்குள் அகம்பிணைந்து உறவு
பெருகிடுதே!
ஒத்துவரா அலைவரிசை மனங்களை
புரிந்துணர்ந்து
சற்றே ஒதுக்குகிறேன்…. மனஸ்தாபம் பகையுணர்வு
குறைகிறதே…!
மனதின் பதற்றம் தணிகிறதே…!

 

உன்னை உணர்

உன்பேரை நீயறிவாய்.
உனைப் பெற்று வளர்த்தெடுத்த
உன்னப்பன் பேரை… உன் முதலெழுத்தால் நீயறிவாய்.
உன்பாட்டன் பேரை
ஒரு வேளை நீயறிவாய்.
உன் பூட்டன் பேரை உண்மையாயா நீயறிவாய்?
உன் பூட்டன் பேரை உறுதிசெய்தா நீசொல்வாய்?
உன் பூட்டன்
அவனின் பூட்டன் அவன் பூட்டன்
என்றுனது மூதாதை யரில்எவரை நீயறிவாய்?
அன்னாரின்
நாலைந்து தலைமுறைக்குப் பின்னவரின்
உண்மை, பேர், உருவம்
அவர்சிறப்பு அவர்களது
எண்ணங்கள், சிந்தனைகள்,
எவை எவை எவ்வாறறிவாய்?
அன்னவர்கள் இல்லாமல்…
அவரின் தொடரோட்டம்
ஒன்று வராமல் நீ உதித்தாயா?
இருள் உறையும்
உன்கடந்த காலத்தை உணர்ந்தாயா?
தான்தோன்றி
ஒன்றாய்ச் சுயமாய் நீ பூத்தாயா?
இவைபற்றி
ஒன்றும் அறியாமல், உன் மூதாதையரின்
விந்தினது மூலத்தை விளங்காமல்,
பாயிரமாய்
உன்பின்னால் உள்ள ஓரிரு நூற்றாண்டின்
சின்ன வரலாற்றைத் தெரியாமல்,
இந்நிலத்தின்
தொன்மையை பரம்பரைத் தொடர்ச்சியைக்
காத்தருளும்
தன்மை பெருமையை தரிசியாமல்,
எல்லாமும்
நன்றாய் அறிந்தவன் நீ என்கிறாய்!
உனைப்பார்த்து
உன்கா லடியின்மண் நகைக்கும்;
உன் பூர்வீகம்
தன்னை நின்தலைமுறையின் உயிர்மூச்சை
எலும்புகளை
அன்னாரின் காற்சுவட்டை அஸ்திகளைப்
பற்றியெல்லாம்
நன்கறிந்த மண் உனது ‘பெருமை’ எண்ணி மிக நகைக்கும்!
உன்னை உணர…உந்தவன் மண்ணையுணர்…
அது உதவும்!

 

காற்றுவெளி!

காற்றுவெளி நம்மைக் கவிந்திருக்கும் வெற்றிடமா?
காற்றுவெளி ஏதும்
கலக்காத சூனியமா?
காற்று வெளியிற்தான் எங்கள் கனவுகளும்,
காற்று வெளியிற்தான் எங்கள் நினைவுகளும்,
காற்று வெளியிற்தான் கணக்கற்றோர் மூச்சுகளும்,
காற்று வெளியிறல் கடந்தகாலப் பேச்சுக்களும்,
காற்று வெளியிற்தான்
இசையும் இரைச்சல்களும்,
காற்று வெளியிற்தான் ஒப்பாரி தாலாட்டும்,
காற்று வெளியிற்தான் பிறந்தசிசு அழுகைகளும்,
காற்று வெளியிற்தான்
கலவிநேர முனகல்களும்,
காற்று வெளியிற்தான் மரணவேளை விக்கல்களும்,
காற்று வெளியிற்தான் மரணித்தோர் ஆவிகளும்,
சேர்ந்துளன!
காற்று வெளியோர்
தனிஉலகாய்த்
தான்அருவ மாக உயிர்ப்போடும் பூத்திருக்கு!
காற்று வெளியோர் வெற்றிடமோ சூனியமோ
போலல்ல… அதனெல்லை
முடிவிலி வரை போச்சு!
காற்று வெளியில்…நான் கையசைத்து நடக்கின்றேன்…,
எந்தனது கையசைவில்
எத்தனை எத்தனை
அருவமாம் அற்புதங்கள் தட்டுப்பட் டோடியது?
காற்று வெளியோடு
மௌனமாகப் பேசுகிறேன்…,
எத்தனை இரகசியங்கள்
எனக்குத் கசிகிறது?
காற்று வெளியோடு கலக்கின்றேன்…,
வற்றாத
ஊற்றாய்க் கவிதைகள் எனக்குவந்து சேர்ந்துளது!

 

பறப்பியல்பு
பறவையின் சிறகுகள் படகின் துடுப்புகளாய்
தொடர்ந்தியங்கக் காற்றை
துளைத்துக் கிழித்தபடி
பறக்கிறது அநாயசமாய்ப் பறவை!
படபடத்துச்
சிறகு அசைத்தாலும் …… அதன் வலியோ களைப்போ
தெரியா வெளியில்….செறிகிறது பெருமௌனம்!
பறவையின் பாரம்,
அதை வெளியில் உயர்த்துகிற
விசைகள், சிறகை இயக்கும் பொறிமுறைகள்,
தன்பாட்டில் சைக்கிள் தனை உழக்கும்
கால்களைப்போல்
தம்பாட்டில் சிந்தனைக்குத்
தொடர்பின்றி அசைந்துளன!
சிறகடிக்கும் நுட்பம்,
திசையை மாற்றும் பின்செட்டை
அசைவு, என்றுதான் அடுக்கடுக்காய்ப் பலநடந்தும்
பறக்கிறது அநாயசமாய்ப் பறவை;
துடிதுடித்துச்
சிறகு அசைந்தாலும் அதன்வலியோ அதன்களைப்போ
தெரியா வெளியில்…
செறிகிறது பெருமௌனம்!
பறவையின் நினைவில் பசியோ
அடுத்தவேளை
உணவோ…. நேற்று
உண்டதானிய ருசியோ
கிளைபற்றி எண்ணமோ
கூடுகட்டல் முட்டையிடல்
அடைகாத்தல் குஞ்சு பொரித்தல்… அதைப்பார்த்தல்
எதிரி களிடமிருந்து உயிர்மீட்டல்
எச்சரிக்கை-
-யொடு சூழல் மாறுதலை எதிர்வுகூறல்
எதிர்கொள்ளல்
இப்படி ஏதேனும்
ஓயாத எண்ணஅலை
அடித்தபடி இருந்தாலும்…. அதன்
அசைவுக் கப்பாலே
உடலைச் சமநிலையாய் உயர்த்திப்
பறக்கவைத்து
ஒரு இயக்கம் ‘தொழிற்படுதல்’
அதிசயமாய்ப் படுகிறது!
காற்றைக் கிழித்தாலும் கடுகுவிழும் ஓசைகூட
இன்றிச் சிறகடித்து வானவெளிக்
கடலில்
பறவைப் படகு
நீந்திக் கொண்டிருக்கிறது!

 

வம்புமழை

எனது முற்றத்து வேம்பும் சிறுமாவும்
குதூகலத்தின் உச்சத்தில் நிற்பதாய்ப்
படுகுதிப்போ!
வழமையாய் வாடி இலையுதிர்த்துக் காய்ந்திருக்கும்
இவையிப்போ பூரித்து இசைந்து நிற்றல் தெரியுதப்பா!
கோடை கழிந்து
குலவரும் வசந்தகாலம்
சூழலிலோர் முகிழ்ப்பை சூடிக் கொடுத்துளது!
வேம்பும் சிறுமாவும்
வேண்டும் அளவுக்கு
ஆயிரம் ஆயிரம் அதிசய
மலர்களினைப்
பூத்துச் சொரிந்துள்ளன! இவற்றின் கிளையொவொன்றும்
பூக்களெனும் பொன்சூடிப்
புளகாங்கிதம் கொள்ள
காற்றிலிப் பூக்களிலே இருந்து கசிகின்ற
வாசம் என் முற்றத்தில்
வழிந்தோடும் அகில்…ஆறாய்!
பூக்கள் நிறைந்ததனால் பூச்சிகளும் வண்டினமும்
தேடிவரும் சிட்டுக் குருவிகளும்
எறும்புகளும்
“ஆகாகா”….திருவிழாக் கொண்டாட்டம் முற்றத்தில்!
மரங்களது பூரிப்பு
மணிமணியாம் பூ…காய்த்துப்
பெருகும் மகிழ்வென்ற பரவசத்தைக் காட்டிற்று!
இந்தச் சிலிர்ப்பில்
இடிவிழுந்த மாதிரியாய்
சிந்திற்று சித்திரைச் சிறுமாரி!
தவம் கிடந்த
வயல்களை வருஷித்து மட்டும் திரும்பாதிம்
மரங்களிலும் கரிசனையை அதுகாட்ட…
மா..வேம்புப்
பூக்கள்…..ஒரே நாளில் இறந்து மிதந்தொதுங்கும்
மீன்களென்றேன் முற்றத்தில்
வீழ்ந்து சிதறினகாண்!
பூக்களிலே என்ன கோபம் புதுமழைக்கு?
சொரிந்துபூத்துக்
காய்க்க ஏங்கும் மா வேம்பில்
காய்ச்சலென்ன விசர்மழைக்கு?
எப்படி மகிழ்ந்த என்முற்றம்
எண்ணற்ற
பூக்களின் பிணாக்காடாய் இப்போ அழுதிருக்கு!
வாசம் மலிந்தகாற்றில்
பூம்பிணங்கள் புழுத்தழுகும்
நாற்றம் எழுந்தென்னை வீட்டைவிட்டே துரத்திற்று!
பொறாமையுடன் பொழிந்து
பொருளற்ற இழப்புகளை
தருவதுவே… இந்தச் சிறுமழைக்கு
வழமையாச்சு!

 

உனக்கான நாள்!

உனக்கான நாட்கள் ஒன்றுமில்லை எனச்சொன்னாய்!
உனக்கான நாட்களுக்காய்
ஒவ்வொரு கணங்கணமாய்
மினக்கெட்டுக் காத்து மிஞ்சிய வெறுமையினால்
கனவுகளும் நனவுகளும் காய்ந்து
மிகவரண்டு
பித்துப் பிடித்தவனாய்,
பிரமை படிந்தவனாய்,
செத்தவன்போல் தானலைந்தாய்!
என்றாலும் சீக்கிரமே
உனக்கான நாட்கள் உனை அணுகும் என்கின்ற
உனதிறுதி நம்பிக்கை நூலைப்
பிடித்தபடி
வாழ்வினது பள்ளத் தாக்கிருந்து மீண்டுவர
நாளும் முயன்றாய்!
நீ பிடித்த நூலறாது….
காலமுனைக் கைவிடாது… கருணைகாட்டும்
எனச்சொன்னாய்!
நானுனக்காய்ப் பிரார்த்தித்தேன்;
நலம்பெறவும் நேர்த்திவைத்தேன்;
உனக்கான நாட்கள் ஓடிவரும் உன்பின்னே
“உனக்கு உறுதுணையாய் நிற்பேன்நான்”
உறுதி சொன்னேன்!
உனக்கான நாளொன்று வந்தது
நேற்றை வடிவில்.
உனை உயர்த்திப் பார்க்காமல்…
உனது உயிர்பறித்த…..
தினமாகும் அது என்று நினைக்கலை….
நீ என்மடியில்!

 

நிச்சயங்கள் அற்ற நெடுவாழ்வு

அடுத்தடுத்து வள்ளத்தில் அணிவகுத்து மீனவர்கள்
கடலுக்குச் செல்கின்றார்.
கனவுகளால் தையலிட்ட
வலைகளொடும், வெற்றுப் படகோடும்,
பசிநெருப்புப்
புகையும் வயிற்றோடும், போகின்றார்!
கரையினிலே
எரிவதற்காய்க் காத்திருக்கும் சாம்பல்பூத்த
வெற்றடுப்பை
நினைத்தபடி… கனவை நனவினிலே காணநேர்ந்து
வெறுமையும் வறுமையும் வறுக்க
துவண்டுறங்கும்
சிறுசுகளின் முகத்தைச் செபித்தபடி…
தேய்ந்திறுந்து
துரும்பான இல்லத் தரசியில்
ஒரு செழிப்பை
மீட்டெடுக்கும் கற்பனையில் மிதந்தபடி…
அலைகளெல்லாம்
துடுப்பாகி…. ஓட்ட; தொலைவேகிப் போகின்றார்!
எந்தெந்த மீனவனின் வலையில்
எந்தெந்த மீன்கள்
சிக்கவுள்ள தென்னும் இரகசியம் தெரியாமல்,
யாருக்கு எவ்வளவு
மீன்களின்று சேருமென்ற
புதிரவிழ்க்கத் தெரியாமல், ‘பொதுவாக’
நம்பி…நொந்து
புகையும் வயிற்றோடு
புகையும் கனவுகளும்
நினைவுகளும் ஏவ… நிச்சயங்கள் ஏதுமற்று
அடுத்தடுத்து வள்ளத்தில் அணிவகுத்து
மீனவர்கள்
கடலுக்குச் செல்கின்றார்;
கரை கலங்கித் தெளிகிறது!

 

நெருப்பும் அணைப்பும்

நினைவுகளின் காற்தடத்தை நெருப்பு எரித்திடுமா?
நினைவுகளின் சுவடுகளை
நீரும் கரைத்திடுமா?
நினைவுகளின் அடுக்குகளில் நேற்றை நினைவுகளை
அழித்தங்கு வெற்றிடத்தை
ஆக்கிடுதல் சாத்தியமா?
நினைவுகளில் உருகி நெருப்பாய்த் துளிச்…செந்நீர்
உணர்வூறிச் சிந்த
உனது விரல் தடுத்திடலாம்!
மனங்கள் சொரியும்
மழைபோன்ற கண்ணீரை
தடுக்க உனதுவிரற் தடையும் உதவிடுமா?

நினைவுகள் தீப்பிடித்து எரிகிறது எம்மனதில்!
எரிமூட்டும் கொள்ளிகளை
ஒவ்வொன்றாய் எடுத்தகற்றி
நெருப்பணைக்க நிற்கின்றாய் நீ…..
உன் சிந்தனையில்,
நெருப்பென்ற எண்ணத்தை
நாம்மறக்க வேணுமென்றாய்!
எரிகின்ற கொள்ளிகள் இல்லாமற் போனாலும்
அருவமாய் மூழும் அகநெருப்பு
என்பதையும்
எரிகின்ற கொள்ளிகளை நீ எடுக்க
அது மனதை
எரிபொருளாய் மாற்றிக் கனன்று
நம் உடல்முழுதில்
படர்ந்தும் முளாசிவிடும் என்பதையும்
அறியாமல்
“நெருப்பணையக் கடவ” தெனச்
சாபம் இடுகின்றாய்!

 

தொடுகை

தொடுகின்றாய் நீ… நானோ….
சுண்டிச் சுருங்குகிறேன்!
தொடுகின்றாய் நீ… நானோ… தோற்றுத் துவள்கின்றேன்!
விரல்களினால் தொடுகின்றாய் விரோதியைப்போல்;
சில சமயம்
விழிகளினாற் தொடுகின்றாய்
விசம் கலந்த பார்வையினால்;
வார்த்தைகளால்….
உந்தன் வாயென்னும் அடுப்பிருந்து
எனைப் பொசுக்கும்
வார்த்தைகளால்… தொடுகின்றாய்;
எனைக் காணும் நேரமெல்லாம்!
தொடுகின்றாய்… பலவாறு!
தோற்றுத் தலைகுனிந்து
கிடக்குமெனை மேலும் கீழ்நிலைப் படுத்தும் உன்
ஆதிக்க வெறியினை
அவசரமாய் நிலைநாட்ட…
நானென்னைச் சுதாரித்து
என்னைத் தயார்செய்து
நேருக்குநேர் உன்முன் மீள…நிற்கக் கூடுமெனும்
ஓர் பயத்தில் எச்சரிக்கை யோடு
எனைப்பழித்தே
சாய்த்து.. ‘அடிநிலையில்’ வைத்திருக்க வேணுமென
தொடுகின்றாய் மீண்டும்மீண்டும்…
நான் என்னுள் சுருங்குகிறேன்!
வெவ்வேறு விதமாய் வெவ்வேறு வழியால்
எவ்வாறு எல்லாமும்
இழிவு செய்ய முடிந்திடுமோ…
அவ்வவ் வழியில் அடிக்கடி தொடுகின்றாய்!
‘தோற்றோன்’நான் சுருங்குகிறேன்;
துவண்டுந் துடிக்கின்றேன்!

இப்படியே நீ தொடர்ந்தால்.. என்னுடலம் மரத்துவிட்டால்…
அப்படியே நின்தொடுகை
திரும்பிவந்து உனைத்தாக்கும்!
அப்போது என்விரல்கள்
உனைத்தொடவும் தொடங்கிவிடும்!

 

சமநிலை

மரணத்தால் இந்த மண்ணிலெழும் வெற்றிடங்கள்
நிரப்பப் படுகிறதா
நித்தப் பிறப்புகளால்?
ஒருவனின் மரணத்தில் தோன்றும் ஒரு வெளியும்
ஒருவனின் மரணத்தில் உருவாகும் வெற்றிடமும்
ஒருவனின் மரணத்தால்
அறுந்துபோன தொடர்ச்சியதும்
ஒருவனின் மரணத்தால் உறையும் அவன்
கனவுகளும்
நினைவுகளும்
எந்த ஒரு பிறப்பால் நிரவுண்டு
நிறைகிறது என்பதனை
நிரூபித்தல் சாத்தியமா?
மரணம் அதிகரித்தால் வெற்றிடம் பெருத்துவிடும்.
பிறப்பு அதிகரிக்க வெற்றிடம் குறுகிவிடும்.
இறப்பும் பிறப்பும்
இயற்கைச் சமநிலையால்
ஒன்றையொன்று ஈடுசெய்ய
காலவெளியிலுள்ள
வெற்றிடம் பெரிதளவு மாறாது நிலைத்திருக்கும்!
இந்தச் சமநிலை இயக்கத்தை
நிர்ணயிக்கும்
அந்தப்பொருளை… நம்
நுண்அறிவுக கெட்டாத
விந்தைப் பொருளை வணங்குங்கள்;
அதுதான் நும்
மரணப் புதிரவிழ்க்கச்
சிலநேரம் உமக்குதவும்!

 

புயல் மழைக்குப் பின்னான பொழுது

நகர்கின்ற நட்சத் திரங்கள் மறைந்தழிய
வருமென்று எதிர்பார்த்த
வால் வெள்ளி சிதைந்துதிர
காற்றளையா நம்திசையை சிறைப்பிடிக்கும் ஊமை மௌனம்!
நம்பிக்கைக் கலங்கரை விளக்கு…
தகர்ந்த பின்பு
நம்பியேற்றி நடுக்கடலில்
கைவிட்டு மூழ்கிற்று..,
அலையேறிக் கடாரம் கடந்து மீண்டு
வந்த கப்பல்!
மூழ்கியவை மூழ்க… செத்தவைகள் போக… அங்கு
ஏதோ விதத்தில் எப்படியோ
மீண்டவைகள்
வாழும்… மலடுகளாய்
மாறியதை அறியாமல்!
கப்பலிலே தப்பிக் கரைமீண்ட சிப்பந்திச்
சின்னஞ் சிறுசுகட்டுச்
சிறைவாழ்வு பரிசாச்சு!
சிறைமீண்ட செல்வங்கள் செல்லாத காசுகளாய்
தெருக்களில் இறைய
எவரெவரோ பொறுக்குகிறார்!
தவறித் தொலைந்து காணாமற் போய்விட்ட
உறவுகளின் வெற்றிடத்தை
நிரப்பின காண் அந்நியங்கள்!
குருவியில்லா கூடுகளில்
குரங்குகள் குடியேற
குரங்குகளை ஏய்த்து சில குயில்கள் முட்டை இட்டு
தமைப்பெருக்க… எடுப்பார்கைப் பிள்ளையாச்சு
என்முற்றம்!
அரிதாரம் அழகு அலங்காரம்
ரம்பைகளின்
திருநடனம் பரிசுமழை திக்விஜயம்
எனக்காட்சி
மாறியொரு போதையிலே மயங்கிக் கிடக்குதெங்கள்
வாழ்வு… மீட்டெடுக்க ஏலா
வறுமைக்குள்
பறிகொடுத்த குஞ்சுகளின் முகங்களினை
துயருக்குள்
தொலைத்தின்று மீளாத
துணைதந்த சொற்களினை
இடைக்கிடை
வருகின்ற அநாதரட்சகரின் கைகளுக்குள்
அன்னவரின் காலடிக்குள்
தேடிக் களைத்தபடி
திருகி முலையெறிந்து
திசை தீர்க்கத் திராணியற்று
சிதைந்த முலைகளொடு திரிகிறார்கள் கண்ணகிகள்!

 

துயிலும் வேர்கள்

மண்ணுள் மறைந்து உறங்கினகாண் வேர்கள்.
மண்ணைக் குடைந்து
வந்தபாறை பலகடந்து
எங்குநீர் என்றலைந்து
இயன்றவரைக் குடித்து
மண்ணுக்கு மேலுள்ள மரம்பட்டுப் போகாமற்
பண்ணும் பெரும்பணியை
பலகாலமாய்ச் செய்து
இன்று புறக் காலநிலை…மாறி நிலம்வரள
வெய்யில் கொழுத்தி வறுக்க
இலை, தளிர், பூ
எல்லாம் கருக;
நுனிஎரிந்து காய்ந்திருக்கும்
தண்டுதனைக் காக்கத் தவம்புரிந்து
நீர்த்தொடர்பு
இன்னும் அறவிடாது
இடையறாதுழைத் திளைத்து
சுhதகமாய்தருணம் தோன்றி நெருங்குமட்டும்
காலப் பழம்கனியும் காலமட்டும்
பேச்சுமூச்சு
ஏதுமற்று ‘உறங்கு நிலையில்’
அமைதிகொண்டு
மண்ணுள் மரிக்காமல் மறைந்துளன காண்…வேர்கள்.
கால முகில்திரண்டு,
கருணை மழைபொழிந்து,
நாளை… வசந்தம் நன்மை தரும்போது
‘உறங்கு நிலை’ துறந்து
உயிர்ப்பைமீண்டும் தண்டுக்குப்
பரிசளித்துப் பச்சைத் தளிர் துளிர்க்க
செழித்துமரம்
புதுக்கோலம் பூண்டு புத்துயிர்க்க வைக்க…இன்றும்
மண்ணுள் மறைந்து துயின்றுளன…
காண்.. வேர்கள்

 

சாட்சி

புதைகுழிமேல் மட்டுமல்ல
போர் சிதைத்துத் தின்று… மீந்த
வெளிகளிலும்…
எஞ்சிச் சிதறுண்டு போய் எங்கும்
சூனியமாய்க் கிடக்கும்
சுவடிழந்த நிலம்மீதும்…
எத்தனையோ பேரின் கனவுகள்
ஈடேறாக்
கற்பனைகள் மீதும்
இன்று வெறு வெற்றிடமும்
அங்கங்கே புற்களும் தான்
காட்சிகளாய் மிஞ்சிடுது!

 

ஆதாரம்

குரல்வைத்தால்… எதிரொலியும்
கூடவராப் பெரியவெளி!
ஆங்காங்கே சிதறி அழிந்த எச்சங்களன்றி
ஏதும் நடவாத மாதிரியாய்
குருதிநதி
ஓடிய சுவடழிந்த பால்வெள்ளைக் கரையின்…மணல்!
எண்ணற்ற வாகனங்கள் இரும்பாகித்
தொலைந்துபோக
அவற்றின் தடமும் அழிந்தபற்றைக் காணிகள்!
“எள்ளுவிழ இடமற்று இருந்தது சனம்”; என்ற
அந்த நாட்ச் சாட்சிகள்
அனைத்துமே கற்பனையோ
என்றெனைநான் கிள்ளிப் பார்க்கக் கிடக்கிறது…
ஆனரவம் அற்று
அன்று அழிந்த நிலம்!
சூழலிலும்… சூழ்ந்து சுற்றுகிற காற்றினிலும்
நீலக் கடலினதும்
நின்ற மரங்களிலும்
ஏதேனும் சாட்சிகள் இருக்கிறதா
எனத்தேடி
சோர்ந்தனஎன் புலன்கள்!
தொலையா ஒருவாழ்வின்
ஆதாரம் ஏதுமற்று
அனல் வெயில் குளித்து
சூடாற தின்னும் துடித்திருக்கா
இந்த நிலம்?

 

இரணவரி

அமைதி இரவை…அதிரவைக்கும் ஊழைகள் போல்,
குவிந்திருக்கும் குப்பை
கிழறுகிற கோழிகள் போல்,
எண்ணங்கள் எந்தன்
இதயம் ஓய்ந்து சீர்;த்துடிப்பில்
தெளிந்திருக்கச் சீண்டி துடிப்பைப் பதறவைத்து
சஞ்சலத்தை என் மனதில் தூண்டி
வதைத்துளன!
ஓய்வாய்த் தனிமை நிழல்மடி
உறங்கவந்தேன்.
“கா….கா” எனக் கத்திக் கரைந்து
உறவுகளைக்
கூவி அழைத்து
உணவின் மேல் வட்டமிடும்
காக்கைகளாய்… எண்ணங்கள்
கட்டறுத்துச் சிறகடித்து
என்னை இரையாக்க என்னை வட்டமிட்டுளன!
ஒன்று இரண்டாகி ஒரு நூறாய்;
இரு நூறாய்
எண்ணிக்கை கூடி
என்நிம்மதி தன்னை
கொத்திக் குதறி…குதூகலமாய்ச் சுற்றினவாம்!
எப்படி இவற்றை என்
கட்டுக்குள் கொண்டருவேன்?
எப்படி என் எண்ணங்கள் கூடடைய முயற்சிசெய்வேன்?
அமைதிக்காய் தவமிருந்து
அழிவுவரம் பெறுவதுபோல்
மன அமைதி தேடிவந்து
எண்ணங்களின் இரைச்சல்;
புறச்செவியை அகச்செவியைச் செவிடாக்கத்
துடிக்கின்றேன்!
எண்ணங்களைக் கட்டி அவிழ்;க்கின்ற
சித்தொன்றை
எங்கறிவேன்?
அது வரைநான் இரணவலியா அனுபவிப்பேன்?


புனிதமாக்கும் நெருப்பு

புகைந்தபடி இருந்தது நெருப்பு…
திடீரென்று
சிறிய ஒரு பொறியாகி
சீராட்டும் காற்றூதி
வளர்க்கச் சடசடென்று கொழுந்து விட்டு
வானளந்து
பொசுக்கிற்று ஊரை… புனிதத்தின் பேராலே!
ஏனெதற் கென்று
புல்பூண் டறியவில்லை.
ஏதோ சிறுபொறியாச் சுடர்ந்த தணல்… எண்ணை
ஊற்றி எவரோ உசுப்பக்
கிளைத்தெழுந்து
பொசுக்கிற்று ஊரைப்
புனிதத்தின் பேராலே!
எது புனிதம்…?
நெருப்பை எரித்ததா மிகு புனிதம்?
நெருப்பில் எரிந்ததுவா நிலையான ஓர் புனிதம்?
எது புனிதம்? யாரும்
அறிந்;ததாய் தெரியவில்லை!
புனிதத்தின் பேரை புரட்சியாக்கி
இலாபமீட்டும்
ஒரு பிழைப்பாய் மாற்றிய உலுத்தர்கள்… தோற்கவில்லை!
‘புனிதம்’ எரியாமல்
புன்னகைத்துக் கிடக்கிறது.
மனிதம்தான் சாம்பலிடை எலும்புகளால் ‘எஞ்சிற்று’

 

வந்துபோகும் பறவைகள்

எங்கோ உலகின் எட்டா ஓர் இடமிருந்து
இங்கே வழக்கம்போல் இம்முறையும்
வந்துள்ளன
நீண்ட சொண்டுடைய செங்கால் நாரைகள்!
“பனங்கிழங்கு பிளந்தாற்போன்ற”
நெடுங்கூர்ச் சொண்டு
எனுமுவமை அறிந்தனவோ..?
எங்கள் வெளிகளெல்லாம்
மிகவும் அறிமுகங்கள் என்பதுபோல் திரிந்துளன!
நீண்ட தூரப் பயணக் களைப்பு
எதுவுமின்றி
“நாம் இங்கு எதுவுமில்லை” என்ற எங்கள் வெளிகளிலே
ஆச்சரியத் தோடு
எதையெதையோ தேடி உண்டு
ஆச்சரியங்க ளாக அணிவகுத்தும் நடந்துளன!
ஒவ்வொரு முறையும்
ஒரு பிசகும் இல்லாமல்
எவ்வாறு எங்களிடம் வந்து இவை திரும்பும்?
இவைபோன்ற… பாதை
தவறாது பயணிக்கும்
விமானிகள் உலகிலுண்டா?
இவற்றின் திசைகாட்டி
எது? இவற்றின் நிறமூர்த்தத் தில்உள்ள ஓர் ‘ஜீனா’?
சென்றமுறை வந்தனதான்
இம்முறையும் வந்தனவா?
இந்தமுறை முதல்முதலாய் வந்தவை… களைத்தனவா?
எங்களது ஊரைப்போல்
இவ்வுலகின் எந்தெந்த
மூலைகட்கு ஒவ்வொராண்டும்
இவை சென்று திரும்பினவோ?
எங்களது காய்ந்த ஊரை நாடிப்
படையெடுக்கும்
இவற்றினது சொந்தநிலச் சிறப்பெதடா?
காலநிலைக்கு
ஏற்ப இடம்பெயரும்
இவற்றினைப் பார்த்தெனிதும்
நாங்கள் திருந்தினோமா?
இப்படியே சங்கிலியாய்க்
கேள்வி வளையங்கள் என் தலைமேல் சுற்றினவே!
அவற்றிடம் கேள்விகள்
அதிகம் இருப்பதாக
எனக்குத் தெரியவில்லை;
மிகமிகவே ஆறுதலாய்
தமதுஇந்த நொடிவாழ்வைச் சுவைக்கும் அவை
வாழியவே!

 

நீ இல்லாத பொழுது

இரயிலோடிப் போனாலும்
தண்டவாளம் அதிர்வதுபோல்
திரும்பி நீ சென்றாய் தெரியாதவள் போல…
எனது இதயம்
அதிர்ந்து துடிக்கிறதே!
அலையடித்தது மீண்டாலும்
கரையில் ஈரம் இருப்பது போல்
பிரிந்து நீ சென்றாய் பிறத்தி ஒருத்தியைப் போல்…
நினைவீரம் மனதை விட்டு
வடிய மறுக்கிறதே!

நிலவுமுழு தாயிருக்கும் பௌர்ணமியை விட முழுதாய்
நிலவு மறைந்திருக்கும் அமாவாசை….
நிலவு பற்றி
நிலவினது தேவைபற்றி அதிகம் நினைக்க வைத்தல்
போல்நீ… தொலைந்து
வெற்றிடமாய் இருள் சூழ்ந்த
நகரின் பகல்… நினது
நினைவை மட்டும் கிளறிடுதே!
கனவு கலைந்தாலும்
அதில் வந்த சம்பவங்கள்
மனதில் பலநேரம் மறையா திருப்பது போல்
நினது மறைவு
நிரந்தரமென் றுணர்ந்த பின்னும்
நினது நினைவுகளென்
மனஇரணத்தைச் சீண்டிதே!

 

துயில்

ஆழ்ந்து துயின்றிருந்தாய்;
அருகணைந்து நின்நெஞ்சில்
சாய்ந்தேன்…கரம்வைத்தேன்…
பிஞ்சிதயக் கடிகாரம்
சீரான சந்தக் கவிதைபோல்…இயங்குமொலி
காதூடு கையூடு காந்த அதிர்வலையாய்
ஊடுருவி எந்தன்
ஊயிரை வருடியது.
கடைவாய் வழிய உறக்கக் கலக்கத்தில்
ஏதோ அரற்றினாய்…
உன்னை மிருதுவாக
கட்டி அணைத்தபடி கைச்சூட்டில்
நீ…துயில
நித்திரை தொலைத்துனக்கு
இதநிழற் பாயானேன்.
உனது இளம்பிஞ்சு இதயத் துடிப்பலையென்
கனிந்து களைத்தோயத் துடிக்கும்
இதயத்தின்
‘இதய இயக்கியாக’
என்னிதயம் புத்துயிர்த்து
மீண்டும் மிடுக்காய்த் துடிக்கத் தொடங்கிடுது!
பூமகளே…உன்துயிலோ
எனையெழுப்பும் விடியலாச்சு!

 

கனவுகளின் மிச்சம்

எலும்புகளும்…
பெண்கள் உள்ளாடை களும்நேற்று
கைவிடப் பட்ட
காவ லரணிருந்து
மீட்டெடுக்கப் பட்டன!
“யாரம்மா நீ” உனது
பேர்ஊர்தான் என்ன?
உனது கதை யாது?
ஒற்றைப் பனையாய் உறுதிகொண்டு
தனித்து நின்றே
சந்தித்தாய் சாவை;
சாவந்த வடிவமென்ன?
துப்பாக்கிக் குண்டா? ஷெல்லா? வேறெதுவும்
காரணமா
உனக்கு கடைசியாகிப் போயிற்று?
இத்தனை வருடத்தின் பின் உனது கனவுகளின்
மிச்சத்தை மீட்டெடுத்தார்.
“நீ எங்கோ இருக்கின்றாய்”
என்றவாறா உன்னைப் பெற்றவைகள் காத்திருக்கும்?
ஏனோ எதனாலோ
உன்னை மீட்டு எரிப்பதற்குக்
கூட முயலாதுன்
இலட்சியங்கள் சமாதியாச்சு?
ஆனை அடக்கிய அரியாத்தை வம்சத்தின்
பூவே… உனைப்போல
உலகம் அறியாமல்
எங்கெங்கே எத்தனைபேர்
இன்றும் புதைந்துளார்கள்?
கண்டெடுக்கப்பட்ட
கனவுகளின் மிச்சத்தில்
கண்ணீர்; ஒருதுளியைச் சிந்துவதைத் தவிர…வேறு
என் செய்ய முடியுமெம்மால்?
இனியேலும் நின்… அலையும்
அத்மா அமைதியுடன் நிரந்தரமாய்த் தூங்கட்டும்!

 

சிதைந்த மனச்சாட்சி

சொல்ல வேண்டும் என்று தவித்த
விஷயமொன்று,
சொல்ல வேண்டுமெனத் நெருடிய கொடுமையொன்று,
மனசுள் திரண்டு
மனசை அரித்தரித்து
மனசுள் செமிக்காமல் ‘இட்டுமுட்டாய்க்’ கிடந்து
தொண்டை வரை வந்து
நாவிலேறிச் சொல்லாக
வெளிவர முடியாமல் மிகவும் தவித்ததின்று!
சொல்லிவிட்டால் என்ன ஆகுமோ?
இச்சூழல்
எவ்வாறதை எடுத்துக் கொள்ளுமோ?
எவரெவர்தான்
ஏற்பாரோ? யார்யார்தான்
பின் எதிரியாவாரோ?
சொல்லியதை… எவரெவர்கள்
எப்படித்தான் பார்ப்பாரோ?
சொல்லிவிட்டால் பின் எனக்கு என்ன நடந்திடுமோ?
என்ற அவஸ்தைகள்
மனதுள் கிடந்துருண்டு
திரண்டு உலகுக்குந் தெரியாது
திடீரென்று
வெடித்துச் சிதறிற்று.
எனது மனச்சாட்சி
தகர்ந்து சில்லுச் சில்லாய்ச் சிதறி இரத்தம்
சதையுமாய் என்னுள் கிடந்து நாறி
மிக அழுகிப்
புழுத்திடுது;
அதைப்புதைக்க எரிக்க வழிகளற்று
இருக்கின்றேன் கவிஞன்;
உயிர் ஊசலாடிது!

 

மனச் சிகிச்சை

யுத்த நெருப்பு அணைந்துநூர்ந்து போனதன்பின்
யுத்தம் எரித்து மீந்த
எலும்புகளும்
யுத்தம் பொசுக்கிய
சாம்பல் கரிக் கட்டிகளும்
காலடிக்குள் இடறுகையில்
நீரூற்றிக் காடாற்றி
மிச்சசொச்சம் எல்லாம் வெட்டிப் புதைத்தகற்றி
தகித்துக் கிடக்கின்ற தரையினிலே
நீரூற்றி
நம்பிக்கை நாற்றுக்களை
நட்டுக்கொண் டிருக்கின்றோம்!
கண்ணீர் நதியோடிக் காய்ந்த
தடமழிந்து
சந்தனமும் குங்குமமும் சாத்தினோம்
முகங்களிலே!
சீழ்பிடித்த புண்ணைத் துப்பரவாக்கி எதும்
கிருமிகள் தொற்றாமல்
தொற்று நீக்கி பூசுகிறோம்!
குருதிச் சோகையாக வெளிறிக் கிடந்தவைக்கு
தேவைக்கு ஏற்ப
குருதி கொடுக்கின்றோம்!
நிறையுணவு நல்கும் நிவாரணம் தொடர்கிறது!
மருந்துகட்டி விட்டகாயம்
மாறி வருகிறது!
கழற்ற வேணும்; என்று முடிவான
அவயவங்கள்
கழற்றிப் பொய்கால் கை பொருத்தப் படுகிறது!
மிகப்பெரிய அறுவைச்
சிகிச்சைகள் செய்து
தலைக்குண்டுச் சிதறல்கள் கூட எடுபடுது!
புற உலகில் மாற்றங்கள் புலர்ந்தாலும்
அக மனத்தின்
இரணமும் காயமும் சிதறல் சிதைவுகளும்
பயமும் ஐயமும் வடுக்களும்
அப்படியே
புதையலைப்போல் கிடக்கிறதே….?
நாமவைக்குச் சிகிச்சையெதுஞ்
செய்யாமல் பொத்திப்
பொத்திவைத்துக் கொண்டுள்ளோம்!
யுத்தத்தின் எல்லைக்குள்
வாழ்ந்து வந்த யாவரிலும்
யுத்தத்தின் தாக்கம்
ஏதோ ஓர் மூலையிலே
அப்படியே கிடந்திருக்கும்!
அவை தீர்த்து மருந்துகட்டி
எப்படியோ மாற்றாமல்…
உடம்பிலும் சூழலிலும்
நோதீர்ந்து நோய்தீர்த்து என்னபலன்
நாம் காண்போம்?

 

கனவுகள் விற்பவனும் வாங்குவோனும்

கனவுகள் விற்பவனைக் கண்டேன் கடைசியிலே!
வகைவகையாய் மின்னும் கனவுகளை
வளையல்கள்
என அடுக்கி வைத்து
அடிக்கடி அதைத்துடைத்து
மினுக்கி ஒருவிநோதக் குரலில்
அவற்றினது
சிறப்புக்களைக் கூவி
புன் சிரிப்பு நீங்காமல்
வசீகரிக்கக்… குரலிலே ஒரு ஈர்ப்பு மலிந்திருக்க…
கனவுகளை விற்பவன்
மும்முரமாய் விற்றிருந்தான்!

எக்கச்சக்கக் கூட்டம் என்றாலும்
களைக்காமல்
அவரவர் கேட்கும் கனவுகளை
தொடர்ந்தெடுத்துக்
கொடுத்து நல்ல விலைக்குக் கொடுத்துத் தன்
கல்லா நிரப்புவதே
கண்ணாகி நின்ருந்தான்!
முழுதாய்ப் பொருந்தாக் கனவுகளை
ஒருவாறு
திணித்தும்… சிலரோ கேட்காக் கனவுகளை
இல்லாத பொல்லாத துரைத்து
ஆர்வமூட்டிவிற்றும்
தன்னுடைய சாமர்த் தியத்தை நிரூபித்தான்!
நான் அவன்முன் அடுக்கப் பட்டிருந்த
கனவுகளில்
எதனைத் தெரிவதென்ற குழப்பத்தோடக் கனவுகளை
திரும்பத் திரும்ப எடுத்தெடுத்துப் பார்க்கின்;றேன்!
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில்
சிறந்ததென
என்மனது சொல்ல
எதையெடுப்ப தெனத்தெரியா
தடுமாற்றத் தோடு எல்லா கனவுகளை
வாங்கவும் பணமற்று…
ஒன்றை விலைகொடுத்து
வாங்கித் திரும்புகிறேன்;
வாங்காத நூறுநூறு
கனவுகளும் என்மனதைச் சலனப் படுத்திடுது!
வாங்கி வந்த என்கனவு
என்நனவைக் குழப்பிடுது!

 

நினைவிலைகள்

மனமாம் விருட்சம் மதாளித்துச் சடைபெருகி
உயர்ந்து கிளைகள்
ஒவ்வொரு திசைகளுக்கும்
பரப்பி நிமிருங்காண் இந்தக் கணம்வரைக்கும்!
இந்த விருட்சம்
இதன் ‘இறுதி’ வரும்வரையும்
இன்றைப்போல் கிளைபெருக்கும்.
தண்டை அகலிக்கும்.
வேரையின்னும் ஊன்றும்.
விழுதைத் தொடர்ந்திறக்கும்!
விருட்சம் முளைக்கத்
தொடங்கிய நொடியிருந்து
தளிர்க்கத் தொடங்கின தானாய் நினைவிலைகள்!
நினைவிலைகள்…இளம் பச்சை நிறமாகி
அவை தொடர்ந்து
கரும்பச்சை யாகி காலம் நகர்ந்தோடப்
பழுப்பாகிக் கருகிச் சருகாய்க்
கிளைவிட்டு
உதிர்ந்தந்த வேர்நிழலில் விழும்
இந்தக் கணம் மட்டும்!
உதிர்ந்து சருகாகி ஒன்றன் மேல் ஒன்றாய்
விழுந்து ஒரு குப்பைப் படையாகக்
காய்ந்துபோன
நினைவுகள் மனவிருட் சத்தின்கீழ்
கிடந்திருக்கும்
இலையுக்கி மனமரத்தின் வேர்களுக்கே உரமாகும்.
காய்ந்துதிர்ந்த நினைவிலைகள்
காய்ந்துக்கிப் போவதுதான்
நல்லது;
இதைச் சூறைக் காற்று கலைத்துவிட்டால்
மனமரத்தைச் சுற்றியிலை பறந்திருக்கும்
ஓயாது!
காற்றுதிர்த்த நினைவிலைகள்
காய்ந்துக்கி
மனமென்னும்
விருட்சத்துக்கு உரமாதல் உலகியல்பு!
இது மாறக்
கூடாது;
தளிர்க்கும் நினைவிலைகள் நிலைக்காது!
நிலவிலைகள் பாரமற்ற சருகானால் பலன்நூறு!
நினைவிலைகள் கற்களானால்
வேர்களுக்கு உணவேது?

 

கணமாற்றம்

வெளிர்நீல வானில் விரிந்து
முடிவற்ற
திசைகளது தூரத் தொலைவுவரைப் பரந்திருக்கும்
வெளியில்
வெள்ளைமுயற் குட்டிகளாய் முகில்திரண்டு
தொட்டந் தொட்டமாய்
தொங்கிடுது அங்காங்கே!
பார்வைப் புலத்தில் படர்ந்த முகில்களது
கோலங்கள் நூறுநூறாய்க்
குலைந்து கிடந்ததங்கே!
ஒரு முகிலின் வடிவில் ஒன்றி
அதைவியந்து
என் எண்ணம் எங்கோ
சொன்று திரும்பி வந்த
சில கணத்தின் பின் பார்த்தேன்;
நான் இரசித்த முகில்வடிவம்
மாறிப் புதுவடிவாய் எனைவியப்பில்
ஆழ்த்திற்று!
எந்தச் சலனமும் இல்லாமல்
இம்மாற்றம்
வந்ததும் எவ்வாறு?
மறைந்தமுகில் என்னாச்சு
எப்போ முகில்வடிவம் மாறிற்று?
சில நொடிக்குள்
எவ்வாறு முகில்தன்னை மாற்றிற்று?
எனைமறந்த
சில நொடிக்குள் என்ன நடந்தது?
முகிலைப்போல்
எனைக்கடக்கும் சில நொடிக்குள்
எனில் ஏதும் மாற்றங்கள்
நிகழ்ந்திடுந் தானோ.. எனக்கே தெரியாமல்?
எவரியக்க இயங்குதிந்த இயற்கை
எவர் சொல்லுவது?

 

மனம் போகும் தூரம்

ஆகாயம் சொந்தமாய் அலைந்த பறவைநான்!
வானம் கடந்து
விரிந்தபெரு ஆகாயம்
தானெனது சொந்தமென தருக்கித் திரிந்தவன்காண்!
எண்திக்கும் பறக்கும் எண்ணமும்
சிறகுகளும்
கொண்டெங்கும் எப்போதும்
கூடி… என் பெண்இணையும்
குஞ்சுகளுஞ் சேர்ந்து குதித்துக் களித்தவன் தான்!
பஞ்சடைந்த கூடு
பட்ட மரக்கிளையில்
இருந்தாலும்… வானளந்து
எகிறியிந்த ஆகாயப்
பரப்பெங்கும் எண்ணம்போல் பாடி மகிழ்ந்தவன் தான்!
ஏன் என் சுதந்திரத்தில்
இடிவீழ்ந்து சிதறிற்று?
ஆம்…என் விடிவை அவாவி நான்
எழுந்தபோது
ஏன் உனக்கும் சுதந்திரமென் றிறகரிந்து விட்டார்கள்!
விட்டு விடுதலையாய் விண்ணேறிச் சென்றபோது
வெட்டியென் சிறகை விழுத்திச்
சிரித்தார்கள்!
வெட்டியோரின் கைகளையோ
சிறகையோ நான் வெட்டவில்லை!
வெட்டியோர்கள் பறக்கத்
தடையெதும் நான் போட்டதில்லை!
என் பறப்பை விரும்பாதோர்…
வெட்டினார்கள் ‘வெட்டியாராய்’
என்சிறகை!
இன்று என்மனந்தான் ஆகாயம்
தாண்டிப் பறக்கிறது;
தகர்ந்து போன என்சிறகால்
கூட்டுக்குள் என் கனவு
உயிர் குமுறி முடங்கிற்று.
என்னால் இனிப்பறக்க இயலாது வெட்டியாரே!
என் எண்ணம்… அன்றுநான்
பறந்த இடமெல்லாம்
இன்றும் பறக்கும்… என்ன
செய்வீர்கள் வெட்டியாரே?

 

பெருங்கடமை

முளையொன் றெழும்ப முயலும் அதன்முயல்வை
அளக்க இயலுமா
எமது அறிவாலே?
மண்ணின் வலிமையை மறுதலித்து,
கொதிகொதித்து
விண்ணிருந் திறங்கும் வெப்பத்தை நின்றெதிர்த்து,
ஈரலிப் பெடுத்து,
சுவாச வளிபெற்று,
காய்ந்து கருகாமல் தனைக்காத்து,
கால் நடைகள்
மேய்ந்து விடாது எப்படியோ தனைமீட்டு,
நெருப்புள் முகிழும்… நீரின் ஓர் துளிபோல
முளையொன் றெழும்ப முயலும்
அதன் முயல்வை
அளக்க இயலுமா… எமது அறிவாலே?

சுற்றிவரப் பச்சையாய்ச் சோடித்து இருந்த நிலம்
அற்புத அழகோடு
அருமை உயிர்ப்போடு
நிற்க… நிலவெக்கை தனைத்தாங்க முடியாமல்
சற்று நிழல்தேடிச் சாய்ந்தேன்!
இச்செடி கொடிகள்
எவ்வளவு போராடி தம்மைத்தாம் மீட்டுளன?
எவ்வளவு சவாலை முகங்கொடுத்து…
வாழ்ந்துளன?

சற்றுத் தொலைவில்
சாதாரணமாக
எந்தவிதப் பொறுப்புணர்வும் இல்லாது
வாழ்வோடு
போராட முயலாது… புதிதாய்ச் சிவந்துமின்னும்
கோடாலி தூக்கிச்
சுலபமாய் இலாபமீட்ட
மரங்களைக் கொல்லும் மனிதர்கள்…,
தங்களது
ஒரு வேளைச் சோற்றுக்காய் உயிருலகை அழிக்கத்
துணியும் பதர்கள்..,
வாழவைக்க எண்ணாதூர்
அழிவில் தமது ஆதாயம் தேடுவோர்கள்…,
பதறாமல் நின்றார்கள்.
பயமின்றிப் பார்த்தார்கள்.
கோடாலி பறித்து குட்டு அவர்க்கிட்டுத்
தண்டித்து திரும்புகிறேன்!
தணலுள் தளிர்க்;கின்ற
முளைகளது வாழ்வுக்காய்
மூன்றுமுறை தினம் நேர்வேன்!

 

எதுநடந்ததோ அது நன்றாக…

வியப்பின் துளிகள் விழுகிறது மண்ணின்மேல்.
உயிர்ப்பினது மூலம் உள்ளுறையும்
அவை..விழவும்
காய்ந்த தரைஇழகி கனிந்து குழைந்து…பயிர்
வேர்விட் டெழும்ப
விதைதிறந்து வழிவிடுது.!
பிளந்த நிலத்தினது ஈறெல்லாம்
ஓடைகளாய்
வழிந்து கசிகிறது ஈரம்!
வரங்கேட்டுத்
தவமிருந்த மண்ணுக்கு மூச்சுத் திரும்பிடுது!
புள்ளியொன்றாய்ப் பச்சைப் புல்முளைத்து
அதுபரவி
பிள்ளை தவழுவதாய்ப் பெருகி
பசும்போர்வை
கண்ணைக் குளிர்ச்சிக் கடலுள் அமிழ்த்திவிட,
மின்னும் கடலலைகள்
கட்டு அவிழ்ந்தாட,
சின்னஞ் சிறுசாரல் பன்னீர் தெளித்துநிற்க,
மீண்டும் மகிழ முயல்கிறது…
ஈரநிலம்!
நீண்டு தரிசான பாலைகளும்
மெதுமெதுவாய்
வேண்டும் பசும்போர்வை போர்க்குமினி;
“குறக்கறுத்து
ஓடுகிற ‘காப்பற்’ வீதிகளும்…புத்துயிர்த்து
மீளப் பொலிவுபெறும்
தண்டவாளப் பாதைகளும்…
வசந்தத்தை வரவேற்கக் கட்டியங்கள் கூறு” மென்று
கேட்கின்ற அசரீரி
கீதையெதுஞ் சொல்கிறதா?
நாமதனை விளங்குதற்கு
ஞானம் இருக்கிறதா?

கட்டுவோம் நாம் நம் கூட்டை

கூடுகளை நாம்மீண்டும் கட்டிக்கொண் டிருக்கிறோம்.
கூடுகட்டத் தெரியாத
குயில்களல்ல நாங்கள்.
எங்களது கூடுகட்டும் ஈடில்லாத் திறண்பற்றி
நன்கறியும் உலகம்; ஆனாலும்
நம்மனதில்
பற்றிப் படர்ந்ததீயால் அடிக்கடி பஸ்ப்பமாகி
முற்றாகக் காடெரிய… முயன்று
உதவிக்கு
ஆட்களற்று; நாமாய் அனுதினமும் சுள்ளிசேர்த்துக்
கூட்டை அமைத்தோம்!
எங்களுக்காய் எம்செலவில்
கூட்டைச் சமைத்தோம்;
கொடுநாகம் கலைத்தெமது
கூட்டில்நாம் மீண்டும் முட்டையிட்டுக்
குஞ்சுகளைப்
பொரித்து அடைகாத்து
பகற்போதில் அலைந்துதேடித்
தெரிந்து உணவூட்டித் திகட்டத் திகட்டத்தான்
கொஞ்சியெம் குஞ்சுகளை குலவுகிறோம்!
எங்களயல்
கூடொன்றில் வாழ்ந்து
கொடுநெருப்பைச் சகிக்காமல்
போய்ப்பனிக்குள் குகைதேடித்
தமைத்தாமே போஷித்து விளைந்தவர்கள்
மீண்டெம்
விருட்சங்களை நோண்டி
கிளைகளிலே ஏறிக் கிண்டிக் கிளறி…நாம்
கூடு அமைத்ததிலே,
குஞ்சு பொரித்ததிலே,
பேடுகளை அடைகாத்த பெருமையிலே,
“இன்னென்ன
இருக்கென்று” பிழைபிடித்து வகுப்பெடுத்துப்
பொழிகின்றார் அறிவுரை மழையை…
நாம் தும்மிவிட!
எத்தனை முறையெரிந்தும்
இன்று கட்டும் எம்கூட்டைப்
பற்றி நினையாமல்
ஓரிரண்ட சுள்ளிதந்து
தட்டிக் கொடுக்காமல்…தாமமைத்த குகைகளது
தரமிங்கு இல்லையெனச் சாற்றுவோரைக்
கணக்கெடாமல்
கட்டுவோம் நாம் நம் கூட்டை..
நிம்மதியாய் நம்குஞ்சு…
தூங்கி எழும்பி…ஊரின் நாமுறு படாதிருக்க!

 

உனது நெற்றிக் கண்ணும் எனது நீர்ப்பரப்பும்

அனலாய்த் தெறிக்கிறது வார்த்தைகள்;
அவைபட்டு
பொசுங்கியே தோலெல்லாம்
கொப்புளங்கள் மொட்டுவிட்டு
அவையும்வாய் வெடித்து சிதழ்த்தேனைச் சிந்திடுது!
நெருப்புத் தணற்துண்டைத் தொட்டாற்போல்
மிதித்தாற்போல்
சுள்ளென்று சுட்டுத் துடித்துப் பதைபதைத்து
வலியாற் சுருண்டேன்;
சிரித்தகன்ற துனதுவிரல்.
கண்ணிரண்டிற் சுவாலைக் காங்கைகளால்
தானசைய
நின்று நேரே பார்க்கச் சகிக்காத்
தகிப்பினிலே
முகத்தைத் திருப்பினேன்…நின் மூன்றாம் நெற்றிக்கண்
இமைகள் திறக்கப்
பொசுங்கிற்றென் சென்னிமுடி!
இன்னுமின்னும் என்றால்…
என்னை எரிபொருளாய்
என்னை நீ பற்றி எரித்து முழுச்சாம்பல்
ஆக்கிடுவாய்…
பீனிகஸ்நான் அல்ல… பொசுக்கிடுவாய்!
நான்யார் என்றேதான் நீயும் அறியவில்லை.
நீயார் என்பதனை
நானும் புரியவில்லை.
சமூகமே… உன்னோடு ‘சரிக்கட்ட’
யாரிடந்தான்
வரங்கேட்பேன்?
யார்தயவில் உனக்கு முகங்கொடுப்பேன்?
நானாய் உனைஎதிர்க்கும் நாள்வரைக்கும்…
எனைமறைத்து
நின்வெக்கை தனைஒடுக்கும்
மழையாக மாறுதற்கு
என் நீர்மை தனைக்காத்தேன்…
சந்தர்ப்பம் பார்த்துள்ளேன்.

மீட்பு

அவலங்கள் இரத்தம் உறுஞ்சுகிற அட்டைகளாய்
தவித்துக் கிடக்குமெம்மில் தொற்றித்
தொடர்ந்துறுஞ்ச
இரத்தசோ கையுற்று,
இயங்க வலுவற்று,
எதிர்க்கும் பலமற்று, உயிரும் துளித்துளியாய்
வடிந்து;
மிகவுலர்ந்து மனத்தோ டுடல்மெலிந்து;
கிடந்திருக்க… மீட்பர்கள்
கீதைசொல்லி வந்து எம்மேல்
ஊர்ந்திருக்கும் அட்டைகளை ஒவ்வொன்றாய்
பிடித்திழுத்துப்
பிடுங்கி…இரத்தம் வழிந்து, நாம் துடிதுடிக்க
“மீட்டெடுத்தோம்” என்கிறார்கள்;
மேனியெல்லாம் புண்ணாகி
“அட்டைகள் எம்மைவிட் டகல்கின்றன”
என்றெம்
வலிபொறுத்து… வந்தவரை வாழ்த்திவிட்டு
வெயில்கண்ட,
-‘இருட்டில் கிடந்த தளிராய்’
மெதுமெதுவாய்
எழுந்துகொண் டிருக்கின்றோம்.
அட்டைகடித்த இடத்தில்
உப்புத் தெளித்தால் அது உதிர்ந்து போகுமென்ற
சுலப வழிதவிர்த்து… நாம்துடிக்க,
அட்டைகளைப்
பிடுங்கி ஒவ்வொன்றாய்
அகற்றுவோர்க்காய்ப் பிரார்த்தித்தோம்!
அட்டைகள் அத்தனையும் ஒரேயடியாய்
அகற்றாமல்
ஒவ்வொன்றை அகற்றையிலும்
ஒவ்வொரு நிபந்தனையை
விதிப்போரை… வேறுவழி இன்றிப் பணிகின்றோம்!
பிடுங்கிய கொழுத்த அட்டைகளை
திசைகளுக்குக்
கண்காட்சி யாகவைத்தார்…கண்டு பரவசித்தோம்!
ஒவ்வொரு கொழுத்த அட்டைகளை
மீட்பர்கள்
பிடுங்கிச் சிரிக்கையிலே…
முன்பொருநாள் அட்டைகளை
எம்மீது விட்ட அதே மீட்பர்களின் சீடர்கள்
புது அட்டைக் குஞ்சுகளை
எம்முதுகில் மீண்டுமின்றும்
விட்டுக்கொண் டிருப்பதனை…
இன்றறிந்து முனகுகிறோம்!

 

வான் புகழ்

வானம் அறிந்த அனைத்தும் அறிகின்ற
ஞானத்தைக் கேட்டவனை நான்வியந்தேன்;
வானமொரு
ஞானி; முழுதும் அறிந்து தெளிந்திருக்கும்
ஞானி; வையத்தின்
மூலை முடுக்கையும.;..தன்
பார்வைப் புலத்துள் பதித்து
அனைத்தையுமே
கண்காணித் திருக்கும் கமரா!
நிலைமைக்கு
ஏற்ப மழையாயும் வெயிலாயும் பனியாயும்
தீர்ப்பு அவரவர்க்குத் தீர்க்கின்ற
நீதிபதி!
வையத்தைக் காக்கும் வண்ணம்,
புறத்திருந்து
தீமைகள் ஊடுருவா வண்ணம்,
கவசமொன்றை
வைத்திந்த பூமி வழிதவறிப் போகுதென்றால்
தண்டனை வழங்க நடுநிலையாய்
தண்டமொடு
நிற்கின்ற ஆசான்,
விண்கற்கள் வால்வெள்ளி
இன்னுமின்னும் நாமறியா வான்பொருளை
தன்கட்டுள்
வைத்து…அறந்தவறி அகிலம் நகருமென்றால்
என்னவும் செய்ய வல்ல…
பெரு வல்லரசு!
வானம்போல் யாவும் அறிந்தவர்கள் யாருமிலர்!
வானம்போல் யாவையையும்
தெரிந்தவர்கள் யாருமிலர்!
வானம்போல் யாவையையும்
பார்த்திருப்போர் யாருமிலர்!
வானம்போல் உலகமுற்றும் கவிந்திருப்போர்
யாருமிலர்!
வானம் சூரிய சந்திர ஒளியிலெல்லாம்
பார்த்துக் கொண்டிருக்கிறது;
இதுதான் கடவுளா?
மேலே இருக்கும் ஒருவன் இவன்தானா?
வானத்தை ஆகாயம் தன்னை
வணங்கிடுவோம்.
மனச்சாட்சி விற்று
எதைநாங்கள் செய்தாலும்…
தினஞ்சாட்சி யாயிருக்கும் வானம்…
இதையறிவோம்!
வானம் அறிந்த அனைத்திலும் கொஞ்சமேனும்
நாமறியும் ஞானத்தை…
அதனிடமே…நாம்கேட்போம்.

 

அதீதங்கள்

அதீதங்களின் பின்னே அலைகிறது நம்வாழ்வு!
அதீத நினைவு,
அதீதக் கனவு,
அதீத எதிர்பார்ப்பு, அதீதக் கற்பனைகள்,
அதீதப் புனைவு, அதீதக் கதையாடல்,
அதீத அன்பு,
அதீத அரவணைப்பு,
அதீத நம்பிக்கை, அதீத கால வாழ்க்கை…

அதீதங்களின் பின்னே…அலைகிறது நம்வாழ்வு!

யதார்த்தம் மிகவும் இயல்பாய்
மிகச்சுமாராய்,
தெளிவு நீரோடைபோல்…நம்பலம் பலவீனம்
அளவு அடைவு
இயலுமை இயலாமை
தமையுணர்த்திச் செல்ல,
தாண்டஏலா எல்லைகளில்
மனதைத் தொலைத்து சாத்தியத்தைப் புறக்கணித்து
கனவுகள் கற்பனைகள்
இலவசமாய்க் கிடைப்பதனால்
அதீதங்களின் பின்னே அலைகிறது நம்வாழ்வு!

இயல்பால்…நடைமுறைச் சாத்தியத்தால்…
கைகூடும்
சிறு சிறு வாய்ப்புகளை,
சந்தர்ப்பம் பலவற்றைப்,
புறக்கணித்துப் பூமி பிளந்து ஒரேயடியாய்
ஒருபெரிய மாற்றம் உருவாகும்
என..இலவு
காத்துத்..துயர்கரைக்கக்
கரையுது நம் பொற்காலம்!
பார்த்திருக்க உருகிடுது பனிபோல நம்வயது!
“யதார்த்தத்தின் வேரில்
திடீரென்றோர் அற்புதமாய்
வரப் பூ மலரு” மென்று தவங்கூடச் செய்யாது
அதீதங்களின் பின்னே…
அலைகிறது நம்வாழ்வு!

 

குழலோலம்

புல்லாங் குழலின் துளைகள்அதன் கண்களா?
புல்லாங் குழலின்
துளைகள் அதன் வாய்களா?
புல்லாங் குழலின் கண்ணீராய்
துயர இசை
வழிவதனைக் கண்டுள்ளேன்.
ஒப்பாரி ஓலமெனப்
பெருகும் அதன்குரலைக் கேட்டுள்ளேன்.
பெருந்துயரைக்
கண்ணீராய் ஓலமாய்
அது நிதமும் கொட்டிடுதா?
தனது உருத்தாக எங்கோ சடைத்திருக்கும்
வனமூங்கிற் சொந்தத்தைத்
தேடி இது அழுதிடுதா?
மூங்கில்கள் தங்கள் பிள்ளையான
இக்குழலின்
ஓசையை ஏக்கத்தை உணர்ந்திடுமா?
தம் பதிலை
யாதேனும் வழியில் குழலுக்கச் சொல்லிடுமா?
புல்லாங் குழல்கள்
பொழியும் இசையினிலே
மெல்லியதாய்ச்; சோகம்… பிரிவுத் துயர்… என்றும்
மீட்டப் படுவதனை
எப்போதும் உணர்கின்றேன்!
மூங்கிலொரு புல்லாங் குழலான தெம்வரமா?
புல்லாங் குழலாதல்
மூங்கிலுக்குச் சாபமதா?

 

கருவூறும் நிலம்

மலையாம் குறியில் வழியும் அருவி…விந்து!
காற்றின் கரங்கள்
உசுப்பி உணர்ச்சியேற்ற
மலையெனும் குறியில் வழியும் அருவி.. விந்து!
பாயுமிவ் விந்தருவி
பயணிக்கும் இடமெல்லாம்
யோனிகளா?
ஆங்கெல்லாம் உயிர்கள் ஜனிக்கிறது.
கருக்கட்டல் தானே கனவு…
ஒவ்வோர் விந்தணுக்கும்?
பெருகி நகர்கின்ற பிரதேசம் எல்லாம்
வயதுவேறு பாடுடைய மழலைகள்
கூடிநின்று
உயிர்தந்த நன்றியை உரைக்க;
ஆவலுடன்
இன்னுமின்னும் ‘விந்துதானம்’ ஏற்கத் தயாரென்று
காய்ந்து தரிசான
யோனிநிலம் காத்திருக்க;
கடைசியிலே கடலெனும் மாபெரிய
கருப்பைக்குள்
கலந்து எதுவாயோ மாறவுள்ள
விந்தணுக்கள்
நகரக்… கரைகளிலே
தெறித்ததும் சிந்தியதுங்
கூட…உயிர்ததும்பும் குழந்தைகளைப் பெற்றெடுக்கும்
விந்தைதனைக் கண்டேன்!
அருவிவிந்தின் தனி வாசம்
காற்றில் கமழ..நானும் கவிதையொன்றைக் கருவுற்றேன்!
நேற்றந்த அருவியோரம்
நானுமொரு பெண்ணானேன்!

 

மழைகளுக் கிடையில்

மழைவிட்டும் காற்றில் ஈரலிப்பு வடியாத
பொழுது குளுமை
புரையோடிப் போய்…இரவின்
ஈரப் பதன்நிரம்பி மழைக்குத் தயாராச்சு!
நீண்ட பெருங்கோடை நிலைகுலைய
நிலவெக்கை
பூண்டோ டகல புழுதி கரைய… மண்
வாசமே எங்கும் கமழ்ந்து;
நிலமிழகிக்
குழைந்த படிஈரஞ் சிதம்பிப்
பெருவெள்ளம்
விளைந்தின்னும் வற்றாமல் வாரடித்துப் பாய்கிறது!
ஓரிரு துளிகள் என்னில்…வீழ்ந்தும்
உடைகிறது!
வீழும் துளி மண்ணில் விழ… ஓசை துளிர்க்கிறது!
சாரல் வரும் காற்றில் தவழ்கிறது,
மழலைபோல்!
பக்கத்துச் செடி இலைகள்
மழை வடிந்து போனபின்பும்
மிஞ்சிய துளிகளினைப் பூத்து
வேர்த்திருப்பதுபோல்
பூரித்து…. மழைகுடித்து மதாளித்து அசைந்துளன!

மழையென்றால்… மண்போல் என்
மனதும் குழைந்திளகும்.
மழையென்றால்… முகில்கள்போ லென்கனவும் கருத்தரிக்கும்.
மழையென்றால்… காற்றைப்போ லென்நினைவு சுத்தமாகிவிடும்.
மழையென்றால்…. இலைகளைப்போ லென்
உடலுஞ் சிலிர்த்திருக்கும்.

மழைகொட்ட மனது பறவையாகி
நனைந்தபடி
அனுபவித்த இதங்கள் அத்தனையும் தரும்…கிறக்கம்!
அடுத்த மழைக்கிடையில்
அனுபவித்த அத்தனையும்
கவிதையிலே செதுக்கவேணும்…
கற்பனையே விடு மயக்கம்!

 

அருமை புரியாரும் அமுதும்

அள்ள அள்ளக் குறையா
அமுதக் கவி மழையைக்
கொள்வார்கள் இன்றிக் கொட்டிக் குவித்தபடி…
செல்கின்ற
சூல் கொண்ட கருநிற முகில்களாய்ச்
செல்கின்றேன்… என்பாட்டில்
திசையெட்டும் பொழிந்தபடி!

சாரலாய்த் தொட்டு துளிகளாய் கனத்து வீழ்ந்து
ஓர்பாட்டம் பெய்து
ஓயாமல் தொடர்ந்தடிக்கும்
மாரியாய்
வெள்ளம் மடைதிறந்து பாய்ந்தோடி
ஐந்திணை அளாவி
அவற்றுக்கு உயிரூட்டி
நஞ்சைபுஞ்சை வெற்றுத்
தரிசெல்லாம் பச்சை சாத்தி
நிறைய;
மீதி நெடுங்கடல் வரையோடிக்
கலந்தபடி இருக்கக்… கவிப்புனல் பொழிகின்றேன்!
தொடர்ந்து பொழிவதனால்
‘அருமை’ தெரியவில்லை!
தினமும் கிடைப்பதனால் ‘பெருமை’ புரியவில்;லை!
பயன்கொள்ள வல்ல
வெவ்வேறு அறிவுள்ள
உயிர்கள் சுவைக்க… அனேகர்
இதன் மகிமை
புரியாது வெள்ளமெனப் புறக்கணிக்க
அவைபற்றிக்
கவலையற்று;
பொழிதலென் கடனென்று;
பயன்படுத்தார்
பற்றி நினையாது; பயணப் படுகின்றேன்!
என்னை பயன்படுத்தா விட்டால்
இழப்பெனக்கு
இல்லை; நான் பொழியும்
வரையும் இனிப் பொழிந்திடுவேன்!
அள்ள அள்ள குறையா
அமுதக் கவிதைகளைக்
கொள்வார்கள் இன்றிக் கொட்டிக் குவித்தபடி
செல்கின்ற சூல் கொண்ட
கருநிற முகில்களாய்ச்
செல்கின்றேன்… என்பாட்டில்
திக்கெட்டில் பொழிகின்றேன்!

 

விமர்சனம்

கல்லொன்றைக் கல்லென்றே கூறுங்கள் தோழர்காள்!
மலையொன்றை மலையென்றே
கூறுங்கள் தோழர்காள்!
கல்லொன்றை யார்தான் கண்டாலும்…. கல்லென்றே
சொல்வார்கள்… நீவிரும்
சொல்லுங்கள் தோழர்காள்!
மலையொன்றை யாரெவரும் பார்த்தாலும்
மலையென்றே
சொல்வார்கள்… நீவிரும் சொல்லுங்கள் தோழர்காள்!

கல்தான் எனத்தெரிந்தும்
அது உமக்குகந்த தெனில்
“இல்லையது மலை”யென்று இயம்புகிறீர்;!
நீர்; சொன்னால்
“எல்லோரும் ஏற்கோணும்”
பிடிவாதம் பிடிக்கின்றீர்;!
மலைதான் என மலைத்தும்
அதைப்பிடிக்க வில்லையென்றால்
“இல்லையது கல்”லென்றே இயம்புகிறீர்!
நீர் சொன்னால்
“எல்லோரும் ஏற்கோணும்” பிடிவாதம் பிடிக்கின்றீர்!

மலையையோ கல்லையோ
மனிதர் அறிந்திருக்கார்,
மலைக்கும் கல்லுக்கும் மற்றோர்க்கு
வேறுபாடே
தெரியாது, என்பதுபோல்
செப்புகிறீர் அறிவுரைகள்!

கல்லொன்றைக் கல்லென்றே சொல்லுங்கள் தோழர்காள்!
மலையொன்றை மலையென்றே
கூறுங்கள் தோழர்காள்!

கல்லை மலையென்றும் மலையையே கல்லென்றும்
சொல்லித் திரிந்தீரேல்…
‘சுகமில்லை உமக்கென்று”
சொல்லநேர மெடுக்காது….. உணருங்கள் தோழர்காள்!

 

அரைத்தமாவையே அரைத்தரைத்து

அரைத்த மாவையோ அரைத்துக்கொண் டிருக்கின்றோம்.
அரைப்பதற்கு முன் அரிசி
இருந்ததனை நாமறிவோம்.
அரைத்ததன் பின் மாவால்
ஆகும் பண்ட ருசியறிவோம்!
அரைத்துக் குறுநெல் அகற்றி
அதை மீண்டும்
அரைத்து அரிதட்டில் அரித்து
பசுந்தான
அரைத்த மாவை மீண்டும்
அரைத்தபடி இருக்கின்றோம்!
அரைத்து முடித்தால் அடுத்தபடி.. அதனை
வறுத்து அவித்து
வசதிக்கு ஏற்றபடி
ஒரு பண்டஞ் செய்து ருசிக்கத்
தெரியாமல்
அரிசியும் இல்லாமல்
அதில் இறுதிக் பண்டமென
ஒரு உணவுஞ் செய்யமனம் உன்னாமல்
பசுந்தாக
அரைத்த மாவை மீண்டும் அரைத்தபடி
சோம்பலுடன்
அரைத்ததையே அரைக்காததென் றரைத்தபடி
பசியோடு
இருக்கின்றோம்;
யாரை எதிர்பார்த்து அரைத்ததையே
அரைக்கின்றோம்?
பொழுது தீர்ந்துகொண்டே போகிறது!
புரிந்தா? புரியாதா?
பொழுதையும் இழக்கின்றோம்?

 

அற்பத் துளிக்காற்று

உள்ளே நுழைவதுமாய் வெளியேறிப் போவதுமாய்
என்செய்வ தென்று
முடிவெடுக்காத் தடுமாற்ற
மனதோடு… உயர்மூச்சு ஊசலாடிக் கொண்டிருக்கு!
ஓரிடத்தில் மூச்சு உறைந்தால்
உயிர்போகும்.
வெளியேறும் மூச்சு திரும்பி வராமலேயே
வெளியேறும் போதும்
உடலம் சடலமாகும்!
எனக்குத் தெரியாமல்
எனுள் நுழைந்து வெளியேறும்
ஒரு துளி மூச்சிற்தான்
எனது பிரபஞ்சம்,
எனது கனவுகள், என் ஏக்கம், கற்பனைகள்,
எனது சந்தோசம், எல்லாமும்
இருக்கென்ற
உண்மையின் முன்… வாழ்வே
எவ்வளவு அற்பமான
ஒன்றென்று புரிகிறது!
எனினும் இதை ஏற்காமல்
இன்னுமின்னும் தேடி
உள்ளமேங்கி அலைகிறது!

உள்ளே நுழைவதுமாய் வெளியேறிப் போவதுமாய்
என் செய்வ தென்று
முடிவெடுக்க முடியாமல்
அலையும் துளிக்காற்று…
எம் ஏக்கக் கனவுகளை
நிறைவேறா ஆசைகளை இன்னும் நிறைவேற்றாப்
பொறுப்புகளைப் பற்றி
புரிந்திடவா போகிறது?

 

தனிப்பயணி

எல்லோரும் எப்போதும் ஓடும் ஒரு பாதையிலே
எண்ணற்றோர் வைத்த
அடிச்சுவட்டின் இடையே
என் அடிச் சுவடுகளை வைத்து
நடந்துபோக
என்மனது ஒப்பவில்லை!
என் சுவடு எண்ணற்றோர்
அடிச்சுவடு கட்குள் அழிபட்டு என்பயணத்
தனித்துவமும்,
பயணக் கதைகளும், வழித்துணையார்
என்பதுவும்,
எனது பயணத்துக் காதாரம்
என்பதுவும், அழிந்துவிடும்… நானிலக்கை அடைந்தாலும்!

ஆகையினால் எல்லோரும் போகாத
என்பயணப்
பாதையை அதன் கதையை
என் துணையாய் வருவோரை
சான்றுகளைச் சொல்லும்
தடமற்ற புதியமணற்
பாதையொன்றைத் தேர்ந்து
எனது இலக்கடையும்
திசைவழியை திட்டமிட்டுச் செல்கின்றேன்!
என்சுவடு
எல்லாம் தெளிவாய் எனக்குத் தெரிகிறது!
அதைத் தொடர்;ந்து பல சுவடு
வருவதும் புரிகிறது!

 

கனவுகளின் குழந்தைகள்

கனவு புது உலகைக்
காட்டிஎமை வியக்க வைக்கும்
சுற்றுலா வழிகாட்டி!
தொலைவில் முன் அறியாத
பலவற்றைக் காட்டி
அவற்றை விபரித்து
ஆச்சரியப் படவைக்கும் கனவோர் கதைசொல்லி!
கனவு தினந்தினம்
புதுப்புது ஊர்களையும்,
கனவு நாம்; காணாப் பாதை பலதினையும்,
காட்டிக்… களிப்பும் பயமுமூட்டும்
திசைகாட்டி!
எத்தனை எத்தனை கனவுகள்
ஒவ்வோரிரவில்?
எத்தனைதான் மொத்தக் கனவுகள் நம்
சா வரையில்?
அர்த்தம் புரிந்தவையும்… புரியாத மர்மம் என
நித்தம் விரிந்தவையும்
நினைவில் நின்றும் நில்லாதும்
போனவையும் எத்தனைதான்… புரியாத வாழ்க்கைதனில்?
கனவுகளே துணையாக
வாழும் சிலருண்டு.
கனவுகளே பகையாய் நிதஞ்சாவோர் பலருண்டு.
வாழ்வே கனவு
உலகே பெருங்கனவாய்
ஞானநிலை காணாதோர் அலைவுறுவார்
கனவுகண்டு!
ஒவ்வொருவர் கனவும் ஒவ்வொருவிதம்; அந்த
ஒவ்வொருவர் கனவுகளும் போம்பாதை வேறுவேறு;
ஒவ்வொருவர் கனவுகளும்
காட்டுமூர்கள் பலநூறு;
ஒவ்வொருவர் கனவுகளும் ஒன்றல்ல வெவ்வேறு;
பூவுலகில் வாழும்
ஜீவன் ஒவ்வொன்றுக்கும்
கனவுகளும் உண்டு
விரும்பியோ விரும்பாதோ
கனவுகளாம் மேய்ப்பர்கள் கட்டி அவிழ்த்தெடுக்க
அலைகின்ற மந்தைகளாம் உயிர்களுக்கு
யார் காப்பு?

 

நிர்வாணம்

இவ்வுலகம் அம்மணமாய்த் தானே இயங்கிடுது!
வெயிலோ மழையோ
காற்றோ பனி, புயலோ
எவையும் உடைபுனையா அம்மண ஆண்டிகளாய்த்
தானே எக்கூச்சமும் இன்றி
அலைந்துளன?
நிலவும் சூரியனும் கடலும் மலை முகிலும்
சிகரக் குறிகளும் திக்குத் திசைவெளியும்
ஆழ்ந்தபள்ளத் தாக்குகளாம் யோனிகளும்
அம்மணமாய்
தானே உறைந்துளன!
தவிர மரஞ் செடிகொடிகள்
புல்பூண்டு புழுபூச்சி பல்விருகம் பறவை பாம்பு
எண்ணற்ற கேடானு கோடி விலங்கினங்கள்
மண்ணின்மேல் வாழுவன
மண்ணினுள்ளே வாழுவன
நீரின் மேல் வாழுவன
நீரின்னுள்ளும் வாழுவன
காற்றின்மேல் வாழுவன
காற்றினுள்ளும் வாழுவன
அத்தனையும் அம்மணமாய்த் தானே
வாழ்ந் தழிந்துளன!

அவை பிறப்பால் உய்த்து உணர்ந்த நிர்வாண
யோகத்தை மானுடர்கள்
அறியும் அறிவிலையா?
இவற்றோடு ஒப்பிடையில் நாம்தோன்றிக் கொஞ்சநாளே!
இவற்றோடு ஒப்பிட்டால்
எம் வயதும் மிகக்குறைவே!
அம்மணத்தை நிர்வாணம் தன்னைப்
புரியாமல்
பின்னே… மிகவும் பின்னே…
நாம் நிற்கிறோமா?

 

முகில்கள்

முகில்கள் அனைத்தினதும் முகங்கள்
ஒரே வகையா?
முகில்களது முகங்கள் ஒன்றுதானா?
வேறுவேறா?
ஒவ்வொரு முகிலும் ஒவ்வொரு முகங்கொண்டு,
ஒவ்வொரு முகிலும் ஒவ்வொரு வடிவோடு,
ஒவ்வொரு முகிலும் ஒவ்வொரு அழகோடு,
ஒவ்வொரு முகிலும் ஒவ்வொரு கிளையோடு,
வானில் வசிக்கும் மரமா?
விலங்குகளா?
பார்த்துக்கொண் டிருக்கப் படையெடுத்து
ஓர் திசையில்
போய்க்கொண் டிருக்கிப்போ முகில்கள்
ஓர் முடிவோடு!
நேற்று நான் பார்த்;;தேன்;
தவம் செய்யும் ரிஷிகளென
உறைந்து கிடந்தன ஒவ்வொன்றும் விண்ணோடு!
ஒவ்வொரு முகிலும் ஒவ்வொரு தினுசோடு,
ஒவ்வொரு முகிலும் ஒவ்வொரு குணத்தோடு,
சுற்றி அலைந்துளன…
தொலைதூர வான் வரைக்கும்!

ஏன் இவைகள் தோன்றியன?
எவ்வாறு தோன்றியன?
என்ன தான் அர்த்தம் இவைக்கு?
இவையெல்லாம்
எப்போ பிறந்தன? எப்போ இறந்தழியும்?
இறப்பின்பின் இவையெல்லாம் என்னாகும்?
இவற்றினது
குடும்பம், உறவென்ன? விலாசக் குறிப்பேது?
சுதந்திரமாய் சுயம்புகளாய்
கேட்க ஏதும் நாதியற்று
விதி விலக்காய் வாழ்பவையா?
அநாதைகளாய் அலைபவையா?
இவைக்கேதும் அரசியல்கள், கோட்பாடு, கொள்கை,
ஏதும்
உண்டா? மதச்சண்டை இனச்சண்டை பிடிக்கின்ற
பழக்க முடையனவா?
பல்வேறு வகைவகையாய்
இருக்கும் இயற்றிடையே பிரிவினை இருக்காதா?
உயர்ந்தும் சிலது தாழ்ந்தும் கிடக்கிறதே……
உயர்வு தாழ்வு இவற்றில் உண்டா?
இப்படியாய்
ஆயிரம் கேள்விகளை என்னுள் அலையவைத்து
ஏதும் பதில்சொல்லி எனைத்தேற்றா
தலைந்துலையும்
முகில்களை முறைத்துப் பார்த்தபடி இருக்கின்றேன்!
இவை எனக்கு ஞானமூட்டக் கூடும்
ஆம் காத்துள்ளேன்!

 

காலம் எழுதும் கதை

காலம் உயிர்கள்மேல் கணமும்…தன் செல்வாக்கை
ஏவிக்கொண் டிருக்கிறது
இணையில்லா அரசனைப்போல்!
காலத்தின் கைகள் கணமும்
உயிர்களினைத்
தேய்த்தும் சிதைத்தும் வளர்த்தும் வனைந்திடுது
ஆலையொன்றில் அயராமல்
தொடர்ந்தியங்கும் இயந்திரம்போல்!
நாம் நம்பா விட்டாலும்…
காலம் நம் உடலின் மேல்
நாளும் முதுமையெனும் கோலமிடும்… பெண்களைப்போல்!
அன்றைக்கும் இன்றைக்கும்
அனைவரிலும் வித்தியாசம்
கொண்டுவந்து… ஓர்நாள் குதறிக் கடித்துயிரைக்
கொன்றுவிடும் பசிவெறியில்
துரத்துமொரு சிங்கம் போல்!
சருமமுடி நரைக்கவைத்து கண்ணைக் குழியவைத்து
திரை உடலில் சேர்த்து
செவ்வாய்க்குள் பொக்கைவைத்து
கட்டுடலை உருக்குலைத்து
கைகால் மெலியவைத்து
தன்னிருப்பை கண்முன் நிரூபிக்கும்
ஞானியைப்போல்!
காலம் கணங்கணமும் நம்மைக் கரைத்து ஒரு
நாள் முழுதாய் விட்டுக்
கைகழுவிப் போம்… இதற்கு
யாரும் விதிவிலக்கே அல்ல!
இளமையிலே
காலமெம்மேல் சோடிக்கும் கோலத்தை… முதுமையிலே
காலமே மறுதலித்து
அலங்கோலம் செய்யும்… நம்
முதிர்வை தளர்வை முலாம் பூசி
நாம் அதனை
ஏமாற்றி ஏய்த்தால்… அதும் எம்மை ஏமாற்றி
சாவுள் நமை வீழ்த்தித்
தன் திறனை நிரூபிக்கும்!

 

நிரந்தரமாய் வாழும் கனவு

காலம் கடந்து காலத்தை வென்றுயர்;ந்து
வாழுகிற நித்ய
வரங்கேட்டுத் தவமிருந்தேன்!
காலம் கடந்தோரின்,
காலத்தை வென்றோரின்,
காலத்தை கட்டி அவிழ்த்தோரின்,
கதைகளினால்
ஈர்ப்புற்று
அவர்களைப்போல் மானுடத்தைப் பாலிக்கும்
ஆசை அவாவுற்று
ஆi
நோக்கித் தவமிருந்தேன்!
மரணத்தால் மூடி மறைக்கப் படா வாழ்வே…
மரணத்தால் தீய்ந்து
சாம்பலாகாப் பெருவாழ்வே…
கனவாய்…,
நனவில் கடுந்தவம் புரிந்திருந்தேன்!
எனை…
எலும்பு சதை நரம்பு கொண்ட பிறவி எனை…
பிணியாய் முதுமையாய்
ஏதேதோ இடர்வடிவாய்
மரணம் மரிக்கவைக்க
முயலுது கணந்தோறும்!
அடிக்கடி தனது ஆதிக்க வளையத்துள்
இருக்கின்றேன் நான்… என்று
எள்ளலுடன் எனக்குரைக்கும்!
இன்றும் தனை நிரூபிக்க முயன்று,
முடியாது…
“பார்க்கின்றேன் நாளை” என்று
பதறி ஒளிந்தோடிற்று!
இன்றென் புயவலியால் எதிர்நின்று
வென்று மீண்டேன்!
என்றென்றும்…. இப்படியே வெல்ல எண்ணும்
என் தவத்தை
என்செய்யும் காலம்?
வரத்துக்காய்க் காத்துள்ளேன்!

 

புலனாய்வு

எங்கோ இருந்து எவரோ
எமைக் கூர்ந்து
பார்த்துக்கொண் டிருக்கிறார்கள்!
வேறுவேலை இல்லாமல்
ஏனெதற்குப் பார்க்கிறார்கள்?
இடைக்கிடை எள்ளலுடன்
சிரிப்பொலி கிளம்பிடுது; முகம்மாறிக் கடுமையாக
ஒளியிலே மாற்றமும் சிடுசிடுப்பும்
அரூபமாக
வானில் தெறிக்கிறது;
எங்களது செய்கைகளும்
எம் வெற்றி தோல்விகளும்
எம் நன்மை தீமைகளும்
பார்க்கும் அவர்களது உணர்வுகளை
மாற்றுவதை
எம் சூழல் எங்களயல்
குறிப்பால் உணர்த்திடுது!
சந்தேகம் இல்லை…. எங்கிருந்தோ எவரெவரோ
எம்மைப் புலனாய்வோர்..,
எமை உற்று நோக்குகிறார்!
இதால் அவர்க்கு என்னலாபம்?
எங்களுக்கு என்ன நஷ்டம்?
இது எமக்குப் புரியவில்லை இப்போது
அரூபர்கள்
எமைத் தொடர்ந்து பார்ப்பதாக
உள்ளுணர் வுரைக்கிறது.
“எவர் பார்த்தால் என்ன”? என
வெளியே கதைத்தாலும்
“எவர் பார்த்தார்?” “ஏன்?” எனும் ஐயம்
குருதியோடு
சுற்றியோடி இதயத்துள் சுழலுகையில்
பயவலியொன்று
உள்ளே பரவி உயிரும் நடுங்கிடுது!
பார்க்கும் விழிகள்
விதியின் அறத்தின் நெற்றித்
தீவிழிகளோ…? சரியாய் நடக்க மனம்
சொல்கிறது!

 

போதும் உயரம்

விரிந்து கிளைபரப்பி வேர்விழுதும் முறுகிநிற்கும்
விருட்ச அடியிருந்து
விறுவிறென்று ஏறிவந்தேன்.
பெருத்துத் திரண்ட அடித்தண்டில்
கால்வைத்து
விரைவாக ஏற முடியாது…ஓரிரண்டு
முறைசறுக்கி…முக்கி… முயன்றேறி
முதற்கிளையில்
கால்பதித்தேன்!
பின்பு… ஏற்றம் இலகுவாச்சு.
மேலே கிளைகள் மிகுந்து…திடீர் திடீரென்று
ஏறிச் சடைத்துக் கிடந்தது;
இலகுவாகக்
காலூன்றிக் கடகடென்று கிளைகடந்து
விருட்சத்தின்
உச்சக்கொம் படைந்து
ஒருமுறை…கீழ்…பார்த்தேன்நான்.
பருந்தொன்றின் பார்வையாக ‘எண்திசையும்’
என்பார்வைப்
புலத்துள் சிறைப்பட்டென்
காலடியில் வீழ்ந்திற்று!
என்னோடு நின்றவர்கள் இப்போ…குறுணிகளாய்
என்கீழ்க் கிடந்தார்கள்!
அவர் என்னை வியந்துபார்க்க
என்கிறுக்கும் எகிறிற்று!
நேற்றுவரை எனக்கெட்டா…
எண்ணற்ற பூ, பழங்கள் என்கைக்குள் ஆடிற்று!
என்கன்னம் வருடிக்
காற்றுவந்து கொஞ்சிற்று!
எண்ணற்ற பறவைகள் எனக்கு மிகஅருகே
வந்து வந்து போயின…
வாண்டு சிறுவரெல்லாம்
என்னைக் கழுத்துநோகப் பார்த்தயர்ந்தார்!
அவ்விருட்சம்
சிம்மா சனமொன்றாய் எனைஉயர்த்த
உச்சத்தில்
ஊசலாடும் நுனிக்கிளையில்
உயர்ந்துநின்ற வேளையிற்தான்
“இந்த உயரமே போது”மென்ற உள்ளுணர்வு
என்னுள் கிளம்பிற்று.
என்முயற்சி பலிதமாகி
இந்த வரம், இடமே கிடைத்ததென்றும்
இதற்குமேலும்
போக முயன்றால் என்னாகும் என்பதுவும்
ஊறிற்று விசம்போலே!
ஊஞ்சலாடும் கிளைதன்னைக்
கவனமாகப் பற்றி
கவனமாகக் கால்வைத்து
இறங்குகிறேன்;
எனைக்காத்த தெது?
அதற்கு நன்றிசொல்வேன்!

 

காலநதி தீராக்கனவு

காலநதியின் தீரங்களில் எல்லாம்
நினைவுப் புரவிகள்
நின்றுநீர் அருந்தி
பிடர்மயிர் சிலிர்க்கமீண்டும் எழுந்து
நடைபயிலும்!
அவற்றிலே நாங்கள் அமர்ந்து
உசுப்பிவிட
ஆர்முடுகி…. அவற்றின் குழம்பொலியில் காடதிர
பாயும் அவற்றினது காலடிப் புழுதியினால்
சூரியன் மறையத்
தொலைவேகிப் போகின்றோம்!
காலநதி… இன்றும் காணும் இடமெல்லாம்
சோலைபல செய்து
சோற்று வயல் படைத்து
வாழ்வினது மூலமாய்
வனப்போ டலைகிறது!
இந்த நதியது
சிந்து நதிக்கரையில்
நின்று ஜெயித்து
நெருப்பெடுத்துப் பேய்களெழத்
தப்பிச்சிதறி திசையெட்டும் குடிபெருகி
அடையாளம் இழக்காமல்
அன்றிருந்து இன்றுவரை
நிம்மதியாய்த் தூங்க முடியாது
நிராசையொடு
திரிகின்றோம் கிழடுதட்டி நொண்டுங் குதிரைகளில்!
கடைசி நதியும் கடலும்…
எவருமேதான்
தப்பிவிடக் கூடாது எனச்சாய்த்து
தனித்துவங்கள்
அத்தனையும் பறித்து அகதியெனப் பெயரிட்டு
அடிமையெனச் சிறையிட்டு
ஆம்… இனிமேல்…. காலடியில்
வாழ்வதன்றி வேறு வழியில்லை எனஉரைந்து
நிராகரித்தெம் ஆசைகளை
நீர்மூலம் ஆக்கிவிட்டு
எம் சுடலை மேடுகளை எமக்குத் தரமறுத்துச்
சிரிப்பவரின் முன்னே….
சிறிது ஓய்வு எடுத்து
நொண்டிக் குதிரையின்
நோ அகற்றி நோய்விரட்டிச்
சண்டிக் குதிரையாக்கி சரித்திரப் புழுதியிலே
கண்டெடுத்த எங்கள் கர்வத்தால்
பசிபோக்கி
வீழ்த்தப் படமுடியா விதைகளென…. யாராலும்
சாய்க்கப் படமுடியா சரிதமென….
யாவையுமே
இழந்தவர்நாம் முரசறைந்தோம்;
இன்றும் புயல்போலக்
கிளம்பும் குதிரைகளின் குளம்பொலியில்
எமைநேற்று
ஜெயித்த இதயங்கள் கூடப்… பயந்ததிர
வேகங்கொண் டாடுகிறோம்;
வீழோமென் றாடுகிறோம்!

 

நடந்தாய் வாழி

காட்டாற்றின் ஓரம் கரையில் நடக்கின்றேன்.
வேட்டையனின் வில்…அம்பாய்
விரைகிறது பேராறு!
நெளிவு சுழிவோடும் நெடுக்குக் குறுக்காயும்
கிளைபிரிந்தும்
பார்வைப் புலத்தின் தொலைவுமட்டும்
ஆற்றின் வியாபகம்
அதிர்வுமீட்டி நகர்கிறது!
ஆற்றாமை யோடு…இந்த ஆற்றைக் கடப்பதற்கோ,
ஆற்றில் பயணித்து அதுகலக்கும் மாகடலின்
பிரமாண்டம் கண்டு பிரமிக்கவோ
முடியான்…
கரையினிலே கால்நனைக்க இறங்குகிறேன்;
“கவனம்
கவன”மென என்கையைப் பற்றிவந்தோர்
பதறுகிறார்!
கரணம் தவறின் மரணம்;
இழுத்தோடும்
ஆற்றில் அடிபட்டால் ஆம்…எல்லாம் முடிந்தேபோம்…
என்ப தறிந்தும்,
ஆற்றோட்ட மூர்க்கத்தைக்
கண்டும்…, தயங்காமல் அதிலள்ளி முகங்கழுவித்,
திரும்புகிறேன்;
பாவம் களைகின்ற ‘ஆகாய
கங்கைக்கும்’ இந்தக் காட்டாற்றுக்கும் ஏதும்
சம்பந்தம் உண்டோ?
தீர்த்தமாய்த் துளிகுடித்தேன்.
ஆறு வெறும்ஆறு அல்ல
உயிர்வளர்க்கும்
அரிய திரவியங்கள் தனையும்
உயிர்பறிக்கும்
கொடிய உயிர்களையும் கொண்டதென்றும்
அவை…கரைக்கே
வந்து பசிதணிக்க வல்லவை யெனவுமுள்ளே
‘பட்சி’ சொல்ல மீண்டேன்;
பரிசலில்லேன்… பரிசலோடும் குகனுறவும் இல்லேன்!
குறுக்கறுத்து நீந்திடவோ…
அட்டமா சித்திலொன்றாய்
ஆற்றின்மேல் நடந்திடவோ…
ஆற்றலும் அற்றேன்;
“வா வா” எனஅழைத்து
‘இழுத்தோட ஆவலிலே இரையும’; அதை வெல்ல
என்னவழி?
‘வாழ்க்கை’ ஆற்றோரம் நடக்கின்றேன்.

 

போதாது ஓர் ஜென்மம்

உலகம் மிகப்பெரிது. உலகம் பிரமாண்டம்.
உலகின் அதிசயங்கள் ஏழல்ல
ஒருகோடி.
ஒவ்வொரு கணமும் வியப்பைப் பெருக்கி
ஒவ்வொரு நொடியும்
ஒருநூறு ஆச்சரியம்
உருவாக்கி நாம்நினையா மாற்றம்
உடன்நடத்தி
கிரமமாய் இந்தக் கிரகம் இயக்கி…நம்
அறிவே வியந்தும் திகைக்கவைக்கும் இவ்வுலகம்.

வாழ்வைப்போல் பரந்து கிடந்ததுஅப் பெரியகடல்.
நாளொன்றின் வழமைபோல்
நல்கிற்று நல்லஅருள்.
வலைநிறைத்து, வள்ளம் நிறைத்து,
மனம்நிறைத்து,
கலகலத்துத் திரும்புகையில்
குவிந்தது திரண்டுமுகில்!
எங்கிருந்தோ சுழல் காற்று வந்துதலை மேல்சுழல
சரேலென்று மின்னல்
இடியினது கைகோர்த்தே
வள்ளத்தில் வீழ்ந்து இடிய
நொடியிலொரு
உடல்கருகி…மற்றொன்று உணர்வற்றுச் சாய்ந்துபோச்சு!
வாழ்வைப்போல் பரந்து கிடந்த
பெருங்கடலில்
ஓர்புள்ளி அந்தப் படகு; அதைக்
குறிவைத்து
வீழ்ந்தோர் உயிரைமட்டும் விழுங்கிற்று
இடி…இக்
காலக் கணக்குக்கு விளக்கம்
யார்கூறுவது?
வாழ்வைக் கண…மாற்றம் சாவாக மாற்றிற்று!

உலகம் மிகப் பெரிது. உலகம் பிரமாண்டம்.
உலகத்தை விளங்கப் போதாது
ஒருஜென்மம்.

 

வாழ்வினது அர்த்தம்

என்வாழ்வில் பிற்பகற் பொழுதில் இருக்கின்றேன்.
இன்றுவரை வாழ்வை நகர்த்திய
இத்தனையாண்டில்
என் காலைப் பொழுதில்
இளமை ததும்பிற்று.
இன்பமும் புத்துயிர்ப்பும் எதையும் கிரகிக்கும்
சிந்தையும் அன்பு சிதறாக் குதூகலமும்
தங்கிவாழ்ந் தெதையும் பொறுப்பெடுக்காச் சுதந்திரமும்
எனை ஊதிப் பெருக்கிற்று!
நூறுவீதம் என்றில்லை
கணிசமாய் என்இளங்காலைப்
பொழுதை அனுபவித்தேன்!
காலமோ கணமும் தரிக்காமல் ஓடுகிற
புரவிகளாய் வாழ்வை இழுத்து நகர்த்திடுது!

என்பகற் பொழுது எனை முதிரச்செய்ததையா!
என் திறன் வளர்த்து
போட்டி வலுத்திருந்த
அந்தப்பொழுதிலும் ஆக்ரோஷ மாய்எதையும்
வென்று நிமிரும் விருப்பில்
பலவற்றை
சாதித்தேன்;
எனினும் மேலும் கைகளுக்கு எட்டாத
ஆசைகளுக்கேங்கி
அவற்றின்பின் அலைக்கழிந்து
வேதனையும் வெற்றிகளும் நான்பெற்றேன்.
அடிபட்டு
நூறுவீதம் இல்லை ஐம்பதுக்குமேல் எனது
பகற்பொழுதை அனுபவித்தேன்;
தவறவிட்டவை பலவாம்!

காலமோ கணமும் தரிக்காமல் ஓடுகிற
புரவிகளாய் வாழ்வை இழுத்து நகர்த்திடுது!

என்வாழ்வின் என்வயதின்
நடுப்புள்ளிதனைக்கடந்து
இன்றெனது வாழ்வின் பிற்பகல் பொழுதிலுள்ளேன்!
பகற்பொழுதின் வேகம்
ஆற்றல் பலம்… மெதுவாய்க்
குறைந்து வருவதனை உணர்த்தலும்
இப்பொழுதைக்
கடந்து பின் அந்தி மைம்மற் பொழுதிலேதும்
தேட முடியாது என்பதால் என்
தேட்டத்தை
ஈட்டி எனை நம்பிப் பின்தொடர்வோர்
களுக்காக
ஏதேனும் சேர்க்க எண்ணி
வரவைவிடச் செலவதிகம்
ஆவதனால் எனைவருத்தி
எனது சராசரி
விருப்பு வெறுப்புகளை இரகசிய உருசிப்புகளைப்
புறந்தள்ளி எனது புலனேக்கத்தையும் விலக்கி
வாழ்வைச் சிறிதேனும்
அனுபவிக்க ஏங்குகிறேன்!
மீளக் கிடைக்காமல் தவறவிடப் படுபவை…தான்
ஆம்; இப் பொழுதில அனேகம்
புரிகின்றேன்!

காலமோ கணமும் தரித்திடாமல் ஓடுகிற
புரவிகளாய் வாழ்வை
இழுத்து நகர்த்திடுது!

இனியென்ன அந்தி பின்னந்தி மெல்லிரவு
இரவு நடுஇரவு துயிலிரவு
என்றாகி
மிகவிரைவில் என்வாழ்வு
அஸ்தமனமாகிவிடும்
என்பதனையும்
அதற்குள் என் வாழ்வினது ‘அர்த்தமாக’
என் செய்யப் போகின்றேன்? என்பதையும்,
புரியாமல்
ஓட்டமும் நடையுமாக
பதற்றம் மிகவுற்று
ஒன்றிலும் பிடிப்பற்று
உறக்கம் மிகத்தொலைத்து
என்கட்டுப் பாட்டைமீறி இழுபட்டும் போகின்றேன்!

காலமோ கணமும் தரிக்காமல் ஓடுகிற
புரவிகளாய் வாழ்வை
இழுத்து நகர்திடுது!