நடந்து வந்த சுவடுகளை மீட்டி நினைக்க வைக்கிறது கவிஞர்.த.ஜெயசீலனின் ‘புயல் மழைக்குப் பின்னான பொழுது – சமரபாகு சீனா உதயகுமார்

த.ஜெயசீலன் என்றறொரு கவிஞனின் இன்னொரு கவிதைத்தொகுதி ‘புயல் மழைக்குப் பின்னான பொழுது’ எனும் தலைப்பிடப்பட்டுள்ளது. ஏலவே ‘கனவுகளின் எல்லை’, ‘கைகளுக்குள் சிக்காத காற்று’, ‘எழுதாத ஒரு கவிதை’ என்று அவரின் கவிப் பிரசவங்கள் இடம்பெற்றுள்ளன. அவை சிறந்த நூலுக்கான பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற்றிருக்கின்றன.

தனது சின்னவயதிலேயே ஈழத்துக்கவிஞர்கள் பட்டியலில் இடம்பெற்ற தகைசார் திறமையாளராகக் கணிக்கப்பட்டவர். க.பொ.த. (உ/தர) தமிழ் பாடவிதானத்திலும், பல்கலைக்கழக பட்டப் படிப்புத்தமிழ்ப்பாடவிதானத்திலும் இவர் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ‘ஈழத்துக் கவிதைகளும் கவிஞர்களும்’ என்ற மிக நீண்ட பாரம்பரியத்தை யாரும் கற்க முற்படுகின்றபோது கவிஞர் த.ஜெயசீலனின் கவிதைகளையும் அவர் பற்றிய குறிப்புக்களையும் கற்றுத்தான் ஆகவேண்டும். அப்பிடி ஈழத்துக் கவிதை சார்ந்த ஆய்விலே கவிஞர் த.ஜெயசீலன் தவிர்க்க முடியாத ஒரு பாத்திரமாகும்.

கவிஞர் த.ஜெயசீலன் கவிதையின் மரபுசார் நெறிகளை முறைப்படி கற்ற ஒரு நிபுணராவார். அவருக்குக் குருவாக இருந்தவர்களில் கவிஞர்.முருகையன் முக்கியமானவர். முருகையனின் கவிதைகளை எந்தளவுக்கு ரசிக்கின்றோமோ அதே ரசனை அல்லது அதைவிடக் கூடுதலான ரசனையினை இவரது கவிதைகளிலும் காணக் கூடியதாக இருக்கின்றது.

முருகையன் கவிதைகள் ஓசை நயமிக்கவை. பிரமிப்பான பொருள்நயம் கொண்டவை. சந்தம், சீர், தளை, கட்டு இவையெல்லாம் சமாந்தரமான வரிசையில் மிளிருபவை. இப்பிடியான சிறப்பம்சம் கொண்ட கவிதைகளைப் படிக்க வேண்டும் என்ற ஆவலே எவரையும் தூண்டும். அதனாலேயே முருகையனின் கவிதைகள் வெற்றி பெற்றிருக்கின்றன. அவரோடு சேர்ந்து அவருடைய மாணவன் த.ஜெயசீலனும்தான்.

டால்ரனின் கூர்ப்புக்கொள்கையின் படி எந்தவொரு உயிரினத்தினதும் ஆற்றல் சந்ததி கடந்து செல்கின்றபோது அதிலொரு பிரமிப்பான ஆற்றல் வெளித்தெரியும். தடந்தகால தற்கால அனுபவ அடையாளங்களை ஒப்பிட்டு பார்க்கின்ற போது அதன் தற்கால குழுமத்தின் ஆற்றல் கண்டு வியப்பவரும் உளர்.

உதாரணமாக, நாங்கள் சின்னஞ்சிறு வயதில் இருந்தபோது வீட்டிலே செய்த குறும்புகள் பார்த்து பெரியவர்கள் எங்களைச் சினந்து ஏசியிருக்கிறார்கள்.சிலநேரங்களில்,அந்த வயதில் தற்கரீதியாக பெரியவர்களோடு வாதிடுகின்றபோது, அல்லது எங்களிடம் இருந்த ஏதாவது பிரத்தியேக திறன் வெளிப்படும் சந்தர்ப்பத்தில் அதே பெரியவர்கள்எங்கள் சொக்கினைக் கிள்ளிக்கொஞ்சி விட்டுச் செல்வதையும் பாராட்டியதையும் கண்டிருக்கின்றோம். அதனால் சந்தோசித்திருக்கின்றோம்.

ஆனால், இன்றிருக்கின்ற சின்னஞ்சிறியவர்களின் கதை காரியங்களும் அவர்களின் செயற்பாடுகளும் பிரமிப்பானவை. அதி நவீன தொழில் நுட்ப வளர்ச்சியோடு அவர்களின் சமாந்தரமான அறிவியல் ஆற்றல் சார்ந்த பயணிப்பினைக் காண்கிறபோது புருவங்கள் உயர்த்தி வியக்கின்றோம். அவை தொடர்பான பல விடயங்களை அவர்களிடமே கேட்டு அறிய வேண்டுமென்ற அவாவும் எங்களுக்குள்ளே ஏற்பட்டு வருகின்றது. இது புதுமையான ஒன்றில்லை. அதற்காக யாரும் வெட்கப்படத் தேவையுமில்லை. ஏனென்றால், ஒரு சந்ததிக்கு அடுத்து வருகின்ற சந்ததியினர் திறமைசாலிகளாகவும், வித்தியாசமான சிந்தனை போக்குடையவர்களாகவும் இருப்பார்கள் என்பதே மெய்யாகும். கட்டாயம் அப்பிடித்தான் அவர்கள் இருக்க வேண்டும்.

அப்பிடிப் பார்க்கின்றபோது கவிஞர்.த.ஜெயசீலன் எனும் கவிஞர் கவிதைத்துறை சார்ந்து மிகப்பெரிய தேர்ச்சியுடையவராகவே மிளிர்ந்து வருகின்றார். இவர் கவிதைகள் படித்து ஈழத்து மூத்தகவிஞர்களும், தமிழ்த்துறைப் பேராசிரியர்களும் பாராட்டியதை நான் கண்டிருக்கின்றேன். அந்தளவுக்கு அவர் கவிதைகள் புது வடிவமாகவும், புது நோக்காகவும் படைக்கப்பட்டிருக்கின்றன.

எனது சிந்தனைக்கு எட்டிய வரையில் இவரின் அனேக கவிதைகள் ஒருமுறை படித்து பொருள் விளங்கக் கூடியவை அல்ல. அந்தளவுக்கு இலகுவான வாசிப்பிற்குள் உள்ளடங்கக்கூடியதாக அவை அமைந்திருக்கவில்லை. அதற்காக ஒருமுறைக்கு பலமுறை படித்தும் பொருள் விளங்காத சொற்குவியலைத் தந்துவிட்டு இதுதான் கவிதை என்று சொல்லவும் அவர் முனையவில்லை.இருமுறையோ அல்லது அதற்கு மேற்பட்ட முறையோ படிக்கின்றபோது கட்டாயம் பொருள் விளங்கி வருவதோடு அப்பொருள் விளக்கம் அதிசயிக்க வைக்கும் ஆற்றல் வாய்ந்தவையாகவும் காணப்படுகி;ன்றன. அப்பிடி மொழிகளை செம்மையாகவும், இயல்பான மொழிக்கோர்ப்புச் சரமாகவும் இடையிடையே புதிராகவும் துருத்தி நின்று வியக்க வைக்கின்றன. படிப்பவர்களின் சிந்தனா வெளியினை தட்டிவிட்டுச் செல்பவையாகவும் மனதுக்கு ஒரு சுகம் தருபவையாகவும் அவை விளங்குகின்றன.

இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கவிதைகள் குறியீட்டுப் பாங்கில் அமைந்த கவிதைகளாகும். படிமங்கள் அளவோடு அழகாய் புகுந்து நெளிந்திருக்கின்றன. இடையிடையே வார்த்தைகள் சேர்ந்தும், பிரிந்தும் நின்று மொழி வாலாயமாய் அசைந்திருக்கின்றன. அந்த அசைவுகூட கவிதைக்கு ஓர் அழகியலையும் கவிதை கட்டுறுப்பையும் தந்திருக்கின்றன.

தொகுதியின் உள்ளே மொத்தம் 59 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.அவை வேண்டுதல் பற்றியும், நடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பார்க்கும் எண்ணங்களைத் தூண்டுவது பற்றியும், சுயநல மனிதர்களின் இருப்புநிலை பற்றியும், இனிய காதல் பற்றியும், போர் அவலம் பற்றியும், போரின் பின்னான மனிதரின் வாழ்வியல் அந்தரம் பற்றியும், பெண் பற்றியும், போராளிகளை அவமதிப்போடு நோக்கும் மக்களின் சந்தர்ப்பவாத போக்குப் பற்றியும், அரசியல்வாதிகளின் குருட்டு நிலை பற்றியும், தமிழ்நாட்டு உறவுகளின் எழுச்சி பற்றியும், கனவு பற்றியும், நனவு பற்றியும், மனம் பற்றியும், விடாமுயற்சி பற்றியும், விரும்பாதவர்கள் பற்றியும், சாதி பற்றியும் பாடுகிறார். இப்படியாக கவிதையின் பாடுபொருள்கள் நீண்டு செல்கின்றன.

கவிதையிலே ஒப்புவமைத் தன்மை:
கவிதைகள் படிக்கின்றபோது படிப்போர் மனத்தெறிப்பு அந்தக் கவிதை பற்றியே குவிக்க வேண்டும். அப்போதுதான், அக்கவிதை பற்றிய கிரகிப்பு சீராக இருப்பதோடு கவிப்பொருள் விளக்கமும் ஒரு வியப்பைத் தந்துபோகின்றது. இதுவே மனதுக்கு ஒரு ஆறுதல் தரக்கூடியது.கவிதையோ சிறுகதையோ சும்மா பொழுதுபோக்கிற்காகப் படித்தல் கூடாது. அவை படிக்கின்றபோது மனதில் புத்துணர்வை ஏற்படுத்த வேண்டும். இக்கவிதைத் தொகுதியிலே இடம்பெற்ற ஒப்பியல் தன்மையின் புதுயைக் கண்டு யாரும் ரசிக்கலாம்.
‘வெட்டி வைக்கப்பட்ட சர்க்கரைப் பூசனியின்
துண்டொன்றாய் மஞ்சள் நிலவு’ (பிறைபார்த்தல் – பக்கம் 04)
‘நேற்றுக் கிழித்த நகம்போல என்றார்கள்
அதுவும் நான்காம் பிற என்றே பொருமினார்கள்’(பிறைபார்த்தல் – பக்கம் 04)
இங்கே மஞ்சள் நிலவு என்பதும், நான்காம்பிறைச் சந்திரன் என்பதும் எப்பிடி இருக்கின்றன? என்பதை மனித யதார்த்த வாழ்வியலோடு ஒப்பிட்டுச் சொல்லியிருக்கின்ற விதம் மிகவும் பாராட்டுக்குரியனவாகும்.
‘ஒவ்வொரு வானொலியும் ஒவ்வோர் அலைவரிசை
தன்னில் இயங்குவதாய்த் தான்
மனிதர் நினைவுகளும்
ஓவ்வொரு அலைவரிசை கொண்டன’ (அலைவரிசை – பக்கம் 05)
அலைவரிசை என்பது கண்ணுக்குத் தெரியாத ஒன்று. மனித நினைவுகளும் அவ்வயமானவையே! வானொலி ஒவ்வொன்றும் வேறுவேறான அலைவரிசையினை உடையவை. அவற்றிலிருந்து வரும் பாடல்களின் துல்லியமும் வேறானவையே! அது போலவே மனித நினைவுகளும் மாறுபட்டுத் தெரிகின்றன.
‘தரைவரளும், பித்த வெடிப்பான பாதம்போல் பாளம்பாளமாய் பிளக்கும்’(சமாளிப்பு – பக்கம் 22)
பித்தவெடிப்பு எவ்வகையானது. அது பார்ப்பதற்கு அசிங்கமாகத் தெரிவதோடு அதிலிருந்து வரும் உபத்திரவம் என்பது கொடுமையானது.

‘இரையிலோடிப் போன பின்னும்
தண்டவாளம் அதிர்வதுபோல்
திரும்பி நீ சென்றாய் தெரியாதவள் போல்’(நீ இல்லா பொழுது – பக்கம் 23)
நீ என்னைக் கண்டுகொண்டாய் என்பதை நான் கண்டுகொண்டேன். ஆனால் நீயோ திரும்பி நிற்கிறாய் எப்பிடியென்றால், இதற்கு முதல் எப்பவுமே நீ என்னைக் கண்டிருக்கவில்லை! எப்பவும் எதுவும் என்னோடு நீ கதைக்கவில்லை! என்பதுபோல நிற்கிறாயே! அப்பிடி நீ நிற்கும் போது நான் எத்தனை ஏமாற்றங்களை உள்வாங்கித் தவிக்கின்றேன் தெரியுமா? என்று ஒரு காதலன் தன் காதலிக்காக ஏங்குவதைச் சொல்கிறது இந்த ஒப்புவமை.

இப்படியாக நிறைய இடங்களில் ஒப்புவையின் வெளிப்பாடு இயல்பாய் வந்து குதித்திருக்கின்றன. அவை கவிதை வாசிப்பின் விருப்பை இன்னும் ஊன்றி முகர முனைக்கின்றன.

கவிதையிலே குறியீட்டு வடிவம்:

கவிதையிலே குறியீடு என்பது ஒரு முக்கியம்சமாகும். குறியீட்டு வடிவிலே கவிதைகள் படைக்கின்றபோது வாசகர் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பரீட்சயமான ஒரு விடயத்திற்குப் பொருத்தி அதன் உண்மைநிலை பற்றி ஆராய்வார்கள். அது சரியாகவும் இருக்கும். ஆனால், கவிதை புனைந்தவர் இன்னொரு நோக்கத்திற்காகச் சொல்ல வந்திருப்பார். அது சில வேளைகளில் வாசகனுக்கு உடனடியாகவே தெரிய வந்துவிடுவதுண்டு.
‘கப்பலிலே தப்பிக் கரைமீண்ட சிப்பந்திச்
சின்னஞ்சிறுசுகள்
திரிசங்கு சொர்க்கத்தில்

சிறைமீண்ட செல்வங்கள் செல்லாத காசுகளாய்’(புயல் மழைக்குப் பின்னான பொழுது – பக்கம் 12)
இறுதிப் போர் இங்கு கப்பல் என்றும், சின்னஞ்சிறுசுகள் அப்பாவித் தமிழ் இளைஞர்கள் என்றும் சிறை மீண்ட செல்வங்கள் முன்னாள் போராளிகள் என்றும் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்றைச்; சமமாக்கிப் பொருள் விளங்கிப் பாருங்கள்.
குருவியில்லாக் கூடுகளில்குரங்குகள் குடியேற
குரங்குகளை ஏய்த்துச் சில குயில்கள் முட்டை இட்டுத்
தமைப் பெருக்க… எடுப்பார்கைப் பிள்ளையாச்சு
என் முற்றம்! (புயல் மழைக்குப் பின்னான பொழுது – பக்கம் 12)
குருவி என்பவர் யார்? குரங்குகள் என்பர் யாவர்? அந்தக் குரங்குகளை ஏய்த்து பிழைக்கிறவர்கள் யார்? என்பதை யாருமே தெரிந்து விடுவார்கள்! ‘என் முற்றம்’ என்பது எம் இன்றைய தமிழ்தேசம்தான் என்று யாரும் சொல்லும்போது!

கவிதையிலே படிம வடிவம்:
‘கனவுகளால் தையலிட்ட
வலைகளோடும், வெற்றுப் படகோடும்
பசிநெருப்புப்
புகையும் வயிற்றோடும் போகின்றார்!’

‘வெறுமையும் வறுமையும் வறுக்கத்
துவண்டுறங்கும்சிறுசுகளின்
முகத்தைச் செபித்தபடி…’(நிச்சங்கள் அற்ற நெடு வாழ்வு – 08)

‘மனசுகள் செமிக்காமல் இட்டுமுட்டாய்க் கிடந்து
தோண்டை வரை வந்து
நாவிலேறிச் சொல்லாக
வெளிவர முடியாமல் மிகவும் தவித்ததன்று!’(சிதைந்த மனச்சாட்சி – பக்கம் 25)

‘இலையுக்கி மனமரத்தின் வேர்களுக்கே உரமாகும்
காய்ந்துதிர்ந்த நினைவிலைகள்
காய்ந்துக்கிப் போவதுதான்
நல்லது’(நினைவிலைகள் – பக்கம் 31)
ஒரு நாள் பொழுதும் வாழ்வும்:

காலை, பகல், பிற்பகல் என்று வாழ்வு நிலையினை மூன்றாக வகைப்படுத்துகின்றார். அந்த முப்பொழுதின் கடைசிக் கூறாகிய பிற்பகல் பொழுதில் வாழ்ந்துகொண்டிருப்பதாகச் சொல்கின்றார்.அப்போது அவர் மனதிலே பல ஏக்கங்கள் தோன்றி மறைகின்றன. அந்த ஏக்கத் தவிப்புக்களில் தான் இழந்தவற்றைச் சொல்ல முயல்கிறார்.
அவ்வாறான காலைப்பொழுதில் தான் இளமையாக இருந்ததாகவும்,அந்த வயதில் இன்பங்களால் புத்துயிர்ப்புப் பெற்று எதையும் கிரகிக்கும் சிந்தை இருந்ததாகவும் வஞ்சகமில்லா அன்போடு யாரோடும் கலந்து குதூகலித்ததாகவும் சொல்லுகின்றார். தாய் தந்தையரின் தயவில் தங்கி வாழ்ந்த அந்த வாழ்வியலில் தனக்கிருந்த பொறுப்புநிலையினை உணராமல் போனதையும் அதை அறியாத தான் அக்காலைப்பொழுதில் மிகச் சந்தோசமாக இருந்ததாகவும் இயம்புகின்றார்.

பகற்பொழுதான தன் இளமைப் பருவத்தில் தன் திறன் வளர்ந்த கதையினையும், இளமைத்துடிப்போடு போட்டி போட்டு ஜெயித்துச் சாதித்த கதையினையும் சொல்லிவிட்டு கைகளுக்குச் சிக்கிவிடாத ஆசைகளுக்கு ஏங்கித் தவித்ததையும் அந்த ஆசையில் நனைந்து இன்புற ஆவாப்பட்டு அலைகழிந்த வேதைனைகளையும் அதில் தான் பெற்ற வெற்றிகளையும் சொல்லுகின்றார்.

பகல் எனும் வாழ்வின் நடுப்பொழுதைக் கடந்து பிற்கலில் வந்து நின்று, ஆடிய ஆட்டம் என்ன? பாடிய பாட்டு என்ன? இந்த பிற்பகல் எனும் முதுமையில் இவையெல்லாம் இழந்து என் வேகம், என் ஆற்றல், என் பலம் எல்லாம் மெதுமெதுவாய் குறைந்து வந்ததனை உணர்ந்து கொள்கின்றார். மனவேதனை கொள்கின்றார். தன் ஆட்டம் முடிந்து விட்டபொழுதாக அங்கலாய்க்கின்றார்.

மனிதர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் வாழும் காலத்தில் தாம் ஒவ்வொருத்தரும் சாதித்து வாழுவதாகவே நினைத்துக்கொள்கின்றனர். ஆனால், அவரின் வாழும் காலம் ஓய்ந்து உடல் இயலாமை வருகின்றபோதுதான் அவனுக்கு வாழ்வுபற்றிய புனிதத்தின் ஞானம் பிறக்கின்றது. உண்மை உணர்ந்து வெட்கப்பட்டுக்கொள்கின்றான்.
‘இவையென்ன அந்தி பின்னந்தி மெல்லிரவு
இரவு நடுஇரவு துயிலிரவு
என்றாகி
ஒரு பொழுதில் என் வாழ்வு
அஸ்த்தமன மாகிவிடும்
என்பதையும்
அதற்குள் என் வாழ்வினது அர்த்தமாக
என் செய்யப் போகின்றேன்? என்பதையும்
புரியாமல்
ஓட்டமும் நடையுமாக
பதற்றம் மிகவுற்று
ஓன்றிலும் பிடிப்பற்று
உறக்கம் மிகத் தொலைத்து
என்கட்டுப் பாட்டைமீறி இழுபட்டும் போகின்றேன்!

காலமோ கணமும் தரிக்காமல் ஓடுகிற
புரவிகளாய் வாழ்வை
இழுத்து நகர்த்திடுது! (வாழ்வினது அர்த்தம் – பக்கம் 77)

என்ற கவிதையினைப் படித்து முடித்தபோது ‘தலாய் லாமா’ சொன்ன அந்த பொன் வார்த்தைகள்தான் நெஞ்சிலே ஊடுருவிப் பாய்ந்தன.

‘என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியவன் மனிதன்தான்! ஏனென்றால் அவன் பணம் சம்பாதிப் பதற்காக தனது ஆரோக்கியத்தைத் தியாகம் செய்கின்றான்! பிறகு, இழந்த ஆரோக்கியத்தை திரும்பப் பெறுவதற்கு தான் சம்பாதித்த பணத்தைத் தியாகம் செய்கின்றான்! பிறகு, நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து எதிர்காலத்தை எண்ணி கனவுகளில் மிதக்கின்றான்! அதன் விளைவாக அவன், நிகழ்காலம் மற்றும் எதிர் காலத்தில் என்று எல்லாக் காலங்களிலும் வாழமுடியாமல்த் தவிக்கின்றான்! தனக்கு இறப்பே இல்லை என்ற இறுமாப்போடு வாழ்கின்றான்! கடைசியில் வாழாமலே சாகின்றான்!’ என்பதே அவரின் அந்தப் பொன்மொழி ஆகும்.
கவிதை அனைத்தையும் படித்து முடித்தபோது சில விரிசல்களையும் இனம் காணக்கூடியதாக இருந்திருக்கின்றது.

‘ஒரு புனிதம்’ என்று வரவேண்டியவை “ஓர் புனிதம்’ என்றும் (பக்கம் 19), ‘ஒரு மூலையிலே’ என்று வரவேண்டியவை ‘ஓர் மூலையிலே’ என்றும் (பக்கம் 27), ‘ஒரு திசையில்’ என்று வரவேண்டியவை ‘ஓர் மூலையில்’ என்றும் (பக்கம் 62), ‘ஒரு முடிவோடு’ என்று வரவேண்டியவை ‘ஓர் முடிவோடு’ என்றும் (பக்கம் 63), ‘ஒரு நாள்’ என்று வரவேண்டியவை ‘ஓர் நாள்’ என்றும் (பக்கம் 65) என்றும் ‘ஒரு துளியின் சிற்றனுங்கல்’ என்று வரவேண்டியவை ‘ஓர் துளியின் சிற்றனுங்கல்’ என்று வந்துள்ளன.

அதாவது, உயிர் எழுத்தோடு தொடங்கும் ஒரு சொல்லின் முன்னால் மாத்திரமே ஓர்என்பது வர முடியும். இது தவிர்த்து ஏனைய இடங்களில் மட்டுமே ஒரு என்பதை உபயோகிக்கலாம்.

(இந்தப் பயன்பாடு ஆங்கிலத்திலும் உண்டு. அதாவது யnஇ ய இன் பயன்பாடுகளைச் சொல்லலாம்)
பொதுவாக,கவிஞர் த.ஜெயசீலனின் கவிதைகளின் நயம்பற்றிச் சொல்வததென்றால் அவை நிரம்பச் சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, இங்கே சில கவிதைகளை மட்டுமே நான் எடுத்து அதன் சுவை பற்றி பகிர்ந்திருக்கின்றேன். அவை பற்றிச் சின்னதாகச் சிலாகித்திருக்கின்றேன். ஒவ்வொரு கவிதையும் ஒரு சிறுகதை போல பொருள் விளக்கத்தோடு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

நாம் நடந்து வந்த சுவடுகளையும் எங்கள் அருகாய்ப் பதிந்த சுவடுகளையும் கவலையோடும், கண்ணீரோடு பதிவேற்றமாகியிருக்கின்றன. அவை கவி உருப்பெற்றிருக்கின்றன. அக்கவிதைகள் புது வடிவமாய் நின்று வாசிப்போர் நெஞ்சங்களை யோசிக்க வைத்து விடுகின்றன.

கவிஞர்த.ஜெயசீலனின்கவிதைகள் இனிமைக் கனவுகள் போல் எல்லையற்றவை! கைகளுக்குள் சிக்காத காற்றுப் போல் மனதை விட்டு நீங்காத படிமங்கள், அவை!தன் கவிதைகளில் அவர் எதை எழுதவில்லை? எவையோ அவை பற்றியெல்லாம் எழுதியிருக்கின்றார். அவற்றிலே புதுமை செய்திருக்கின்றார். அவர் மீண்டும் வென்றிருக்கின்றார்.

–சமரபாகு சீனா உதயகுமார்

Leave a Reply