எதிர்வினைகள்

1) நினைவுக் குறிப்புகள் -9 இன் ஒரு பகுதி — அ.யேசுராசா

சில கூட்டங்களுக்கு பேச்சாளராகச் சென்றதில் சங்கடங்களும் ஏற்பட்டன. சிலரின் கசப்புணர்வைத் தொடர்ந்தும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
2001 கார்த்திகையில் ஓர் இளைஞர் எனது வீட்டுக்கு வந்தார். அவரது கவிதைகள் பல்வேறு வெளியீடுகளிலும் அடிக்கடி வெளிவருவது தெரியும். ஆயினும் அவரது கவிதைகளில் எனக்கு ஈடுபாடில்லை. பெரும்பாலான கவிதைகள் உணர்வு வெளிப்பாட்டை விடவும் கருத்துக் கொட்டல்களே நிறைந்தவை. தொய்வானவை. அவரது வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாகவும், அதில் நான் கட்டாயம் மதிப்பீட்டுரை ஆற்றவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். நான் பங்குபற்றுவதைத் தவிர்க்க விரும்பி வேறு சில காரணங்களைச் சொன்னேன். அவரோ விடுவதாக இல்லை. ‘நீங்கள் தான் சரியைச் சரியெண்டும் பிழையைப் பிழையெண்டும் சொல்லுவீங்க…உங்களுடைய விமர்சனந்தான் வேண்டும்’ என்று தொடர்ந்து வற்புறுத்தினார். என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. ‘சரி… என்ர கருத்த அங்க வந்து சொல்லிறன்’ என்று ஒப்புக் கொண்டேன். ‘ஓம் உங்கட கருத்தைத் தாராளமாகச் சொல்லலாம்’ என்று கூறி புத்தகப் பிரதியையும் தந்து சென்றார்.

யாழ் இந்துக் கல்லூரியில் வெளியீட்டு விழா நடைபெற்றது. மண்டபத்தில் கூட்டம் நிறையச் சேர்ந்திருந்தது. கவிஞர் முருகையன் தலைமை தாங்க நானும், கவிஞர் கல்வயல்; குமாரசாமியும் இன்னொருவரும் மதிப்பீட்டுரைகளை நிகழ்த்த வேண்டும். முதலில் எனது முறை. நான் எனது கருத்துக்களை முன்வைத்தேன். ‘கவிதை எழுதுவது தெய்வீக வரம்: கவிஞன் பிறக்கிறான் – உருவாக்கப்படுவதில்லை.’ போன்ற அவரது கருத்துக்களுடன் நான் மாறுபடுவதாகத் தெரிவித்தேன். தொகுப்பில் சில நல்ல கவிதைகள் உள்ளதை எடுத்துக் காட்டினேன். ஆயினும் அதிகமான கவிதைகளில் மிகையுணர்வும், மனோரதியச் சாயலும், யாந்திரிகமான சந்தமும் இருப்பதை எடுத்துக் காட்டினேன். சமூக அரசியல் அக்கறைகள் முக்கியமானவைதான் என்ற போதிலும், போர் சார்ந்த கவிதைகளில் தெளிவு தேவை என்பதையும், சில கவிதைகள் செயற்கையாக இருப்பதையும் சுட்டினேன். சந்தத்தின் ஓசையுள் அர்த்தம் புதைந்து போவது பல கவிதைகளில் நிகழ்வதையும் வெளிப்படுத்தினேன். கொச்சைச் சொற்களை கையாள்வதில் அவதானம் தேவை என்பதையும் எடுத்துக் காட்டினேன். எனது விமர்சனம் தங்களைக் கவர்ந்ததாக, கூட்டம் முடிந்த பின்னர் இளைஞர் சிலர் என்னிடம் தெரிவித்தனர். ஆனால் பேச்சு முடிந்து மேடையில் நான் கதிரையில் வந்து அமர்ந்ததும், தள்ளி இருந்த கவிஞர் எனக்குப் பக்கத்தில் வந்தமர்ந்தார். உடனேயே ‘ அப்ப உங்கட மரணத்துள் வாழ்வோம் தொகுதிக் கவிதைகள் எல்லாம் திறமானவையோ’ என்று சம்பந்தமில்லாததைக் கேட்டார். ஏனெனில் நான் உட்பட நான்கு பேர் சேர்ந்து தொகுத்த தொகுதி அது. எனது பேச்சு அவரைப் பாதித்து விட்டது என்பதை உணர்ந்தேன். ‘எனது கருத்து என்பது என் ஒருவனது கருத்துத் தானே… வேறு ஒருவர் வேறுவிதமாகவும் பார்க்கலாம்.’ என்று மென்மையாகச் சொன்னேன். அவர் தனது ஏமாற்றத்தை வேறு பிரயோகங்களில் தொடர்ந்தும் வெளிப்படுத்தினார். நான் தனது கவிதைகளை வானளாவப் புகழ்வேன் எனவே அவர் நம்பியிருக்க வேண்டும். அவரால் ஏமாற்றத்தைத் தாங்க இயலவில்லை.

அவரது ஏமாற்றத்தின் தாக்கம் இன்னும் தொடர்வதைக் காண முடிகிறது. மாணவர் இளைஞருக்காக நான் இரண்டாயிரம் பிரதிகள் அச்சிட்டு வெளியிட்டு, நல்ல வரவேற்பைப் பெற்ற இதழ் ‘தெரிதல்’ ஆகும். இருதிங்கள் ஏடாக எல்லாமாக 15 இதழ்கள் வெளிவந்து, 2006 ஆவணியில் யாழ்ப்பாணத்தில் அமைதி குலையத் தொடங்கிய நாள்களில் நின்றுவிட்டது. ‘அது தெரிதல் அல்ல சொறிதல்’ என்பது கவிஞரின் கூற்று. இவ்வாறே இன்னும் சில…ஈழத்துச் சிறுகதை முன்னோடி எழுத்தாளரில் ஒருவரான இலங்கையர் கோன் டீ. ஆர். ஓ (தற்போதைய உதவி அரசாங்க அதிபர் பதவி போன்றது.) ஆக இருந்தவர். அவரது கதைகள் பத்திரிகைகளில் வெளியானதும், ‘உங்களின் கதை நல்லா இருக்கையா…’என்று விதானைமார் சொல்லுவதை அவரும் நம்பி விட்டார்’ என்று எஸ்.பொ கேலியாக குறிப்பிட்டுள்ளார். விதானைமார் பொய்யாக புளுகினாலும் புளுகாவிட்டாலும், இலங்கையர் கோன் நாம் பெருமைப் படத்தக்க எழுத்தாளர் தான் என்பதில் ஐயமில்லை! ஆனால் இலக்கியம் பேசும் தற்கால அரசாங்க அதிகாரிகள் சிலரின் நிலை அத்தகையதல்ல!
(‘ஜீவநதி’ வைகாசி 2015, இதழ் 80. – 8ம் ஆண்டு மலர். 36-37ம் பக்கம்.)

2) எதிர்வினை : நினைவுக் குறிப்பு—9 ன் ஒரு ‘பகுதி’க்கானது –த.ஜெயசீலன்

தனக்கு ‘படைப்புந்தல்’ தற்போது இல்லாதகன்றதால் படைப்புகளை தான் படைப்பதில்லை என்று பிரகடனப் படுத்தித் ‘தப்பிக் கொண்டு’, அவ்வப்போது மற்றவர்களை அவர்களின் படைப்புக்களை மட்டந்தட்டி, தான் ஒரு இலக்கிய விமர்சன மேதாவி எனத் தனக்குத்தான் முடிசூடிக்கொண்டு, அதை நிரூபிக்க முனையும் திரு.அ.யேசுராசா அவர்கள் காலகாலமாகச் செய்தது போல் தன் மனவக்கிரங்களையும், மன அவசங்களையும் கொட்டுகிற குப்பைக் கூடையாக இதுவரை ‘வசைபாடல்களுக்குக் களமமைத்திராத’ ‘ஜீவநதி’யை ‘நினைவுக் குறிப்புக்கள்’ மூலம் பயன்படுத்த தொடங்கியிருப்பது துரதிஷ;டவசமானது. இது ‘ஜீவநதி’ இதுவரை கட்டிக்காத்த பெருமைக்கும் மரியாதைக்கும் இழுக்கை ஏற்படுத்தவும் கூடும்.
அண்மையில் முகப்புத்தகத்தில் திரு.அ.யேசுராசா பற்றி கவிஞர் சித்தாந்தன், மிகச்சுலபமாக தனது நிலைப்பாடுகள், செயற்பாடுகள், சம்பவங்கள், பலவீனங்கள் என்பவற்றை மறந்துவிட்டு, மறைத்துவிட்டு தன்கருத்தை, தன் நிலைப்பாட்டை நியாயப் படுத்த ஏதேதோ காரணங்கள் சொல்லி சப்பைக்கட்டுக் கட்டுவது திரு.அ.யேசுராசாவின் வழக்கம் என்றும் அதுவே தன்னைப் போன்ற பலர் அவருடன் முரண்பட காரணமாக அமைகிறது என்ற சாரப்படவும் கூறியிருக்கிறார். அது வெறும் கூற்று இல்லை.

வைகாசி 2015 ஜீவநதியின் 8ம் ஆண்டு நிறைவு 80ம் இதழில் ‘நினைவுக் குறிப்பு – 9’ இல் பக்கம் 36ல் ‘சில கூட்டங்களுக்கு பேச்சாளராக சென்றதில்…என ஆரம்பிக்கும் பத்தி எனது கவிதைத் தொகுதி வெளியீடு பற்றியும் என்னைப் பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது என்பதை என்னைப் பற்றி அறிந்த எவரும் புரிந்து கொள்வர். எனது முதலாவது கவிதைத் தொகுப்பான ‘கனவுகளின் எல்லை’ 2001 கார்த்திகை மாதம் 11ம் திகதி யாழ் இந்துக் கல்லூரியில் கவிஞர் முருகையன் தலைமையில் வெளியிடப் பட்டது. எனது பெயரை நேரடியாக கூறாமல் வளமைபோல தனக்கேற்ப பல விடயங்களை மறைத்து சிலவற்றை திரிபுபடுத்தி தனது நையாண்டி நக்கல் பாணியில் இந்தச் சேறு பூசலை திரு.அ. யேசுராசா என்மீதும் மேற்கொண்டிருக்கிறார்.
‘2001 கார்த்திகையில் ஓர் இளைஞர் எனது வீட்டுக்கு வந்தார். அவரது கவிதைகள் பல்வேறு வெளியீடுகளில் அடிக்கடி வெளிவந்தது தெரியும். ஆயினும் அவரது கவிதைகளில் எனக்கு ஈடுபாடில்லை…’ என தன் பத்தியை ஆரம்பித்திருக்கிறார். இக்கூற்றானது அக்காலத்தில் தான் நான் அவருக்கு அறிமுகமானது போன்ற அபிப்பிராயத்தை வாசிப்போருக்கு ஏற்படுத்தியிருக்கும்.

உண்மையில் 1994 ல் சிரித்திரன் சுந்தர் ஐயா மூலம் இவர் எனக்கு அறிமுகமானார். அக்காலத்தில் இவரால் வெளியிடப் படவிருந்த ‘கவிதை’ இதழுக்கு கவிதை தருமாறு இவர் சிரித்திரன் ஐயா ஊடாகக் கேட்டுக்கொண்டதன் படி முதலாவது ‘கவிதை’ இதழிலேயே எனது ‘கணைக்காய்ச்சல்’ என்ற கவிதை பிரசுரமாகியிருந்தது. (சித்திரை- வைகாசி 1994 கவிதை இதழ்.). அதைத் தொடர்ந்து வந்த அவ் இதழில் ‘மஹாகவி நினைவுக் கவிதைப் போட்டி’ யொன்று அறிவிக்கப்பட்டது. அதற்கு நான் எழுதிய ‘இவன் கவிஞன்’ என்ற கவிதை முதற்பரிசையும் பெற்றது. இதனை 25.03.1995 திகதியிட்ட கடிதத்தின் மூலம் இவர் அறியத் தந்திருந்ததுடன் கவிதை இதழின் ஓராண்டு நிறைவு ஒன்றுகூடலுக்கு என்னையும் கலந்து சிறப்பிக்குமாறு அழைத்திருந்தார். எனக்கு முதற் பரிசாக 500ரூபா திரு.அ. யேசுராசாவின் வீட்டில் வைத்து 29.03.1995 அன்று ‘கவிதையின் ஓராண்டு ஒன்று கூடலில்’ வழங்கப்பட்டது. அன்று ‘ கவிதை யின் ஓராண்டு நிறைவையொட்டி நாங்கள் நடத்திய ‘மஹாகவி நினைவுக் கவிதைப் போட்டி’ யில் முதற்பரிசு பெற்றமைக்கு எமது பாராட்டுகளும் வாழ்த்துக்களும்’ என்று தன் கைப்பட எழுதி எனக்கு வாழ்துக்களையும் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கவிதைப் போட்டியில் முதலாம் பரிசு பெற்றவன் என்ற ரீதியில் எனது நேர்காணல் ஒன்றைப் பிரசுரிக்க வேண்டும் எனக் கடிதம் மூலம் கோரி அதற்கான கேள்விகளையும் எனக்கு அனுப்பியிருந்தார். எனது முதலாவது நேர்காணல் தொடர்ந்த ‘கவிதை’ இதழில் (சித்திரை – வைகாசி 1995 ல்) வெளி வந்தது. இவை எனது ஆரம்பகால கவிதை முயற்சியில் இடம்பெற்றவை.
பின் நாட்டுச் சூழலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இவர் வன்னி சென்று திரும்பிய பின் 2001 நடுப்பகுதியில் தனது கட்டுரை நூல் ஒன்று திருமறைக் கலாமன்றத்தில் (பழைய அரங்கு) வெளியிடப் படுவதாக அழைப்பிதழும் அனுப்பினார். அதில் நான் கலந்தும் கொண்டேன்.

பின் எனது முதலாவது கவிதைத் தொகுப்பை வெளியிட நான் முயன்ற போது எனது கவிதைப் பயணத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் துணையாக நின்ற அனைவரையும் அவ் வெளியீட்டில் கலந்துகொள்ளச் செய்ய வேண்டும் எனக் கருதினேன். ஏதோ வகையில் எனது கவிதை முயற்சிகளுக்கு உதவியவர்கள் என்ற ரீதியில் கவிஞர் முருகையன், என் தமிழாசான் சொக்கன், ஆசான் சிவராமலிங்கம்பிள்ளை, பேராசிரியர் சண்முகதாஸ், கவிஞர்களான சோ.ப, கல்வயல் குமாரசாமி, அ.யேசுராசா, ஆறு திருமுருகன், இரா செல்வவடிவேல், நண்பன் சிறீதரன் என்போரை அழைக்க நினைத்தேன். சிரித்திரன் சுந்தர் ஐயா அமரராகியிருந்தார். அப்பேதைய சூழலில் என் கவிப் பயணத்தில் உதவிய கவிஞர் ச.வே.பஞ்சாடசரம், கம்பவாரிதி ஜெயராஜ், ‘சாளரம்’விவேக் போன்றோர் கலந்து கொள்ளக் கூடிய சூழல் இருக்கவில்லை. அதனை எனது வெளியீட்டு விழாப் பதிலுரையிலும் குறிப்பிட்டிருந்தேன்.

எனக்கு சஞ்சிகையூடான கவிதைப் போட்டியில் முதற்பரிசு வெல்ல வாய்ப்பைத் தந்ததோடு எனது முதலாவது நேர்காணலை பிரசுரித்து வெளியிட்டதன் அடிப்படையில் திரு.அ.யேசுராசாவை அழைக்க முனைந்து அவரின் வீடுதேடிச் சென்று இவ்விடயத்தையும் கூறினேன். அவர் தனது பத்தியில் கூறியிருப்பது போல, சற்று தயங்கினார். யார்யார் பேச்சாளர்கள், எங்கு நிகழ்வு எனக் கேட்டு எனது வெளியீட்டு நிகழ்வுச் சூழலைக் கருத்திற்கொண்டோ என்னவோ நிகழ்வில் கலந்து கொள்ளப் பின்னடித்தார். நான் எனது நிலைப்பாட்டைக் கூறியதுடன் அவர் பத்தியில் கூறியிருப்பதுபோல கூறி ‘அவரின் கருத்தைத் தெரிவிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’ என்றதன் அடிப்படையில் எனது நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். நான் எனது கவிதைப் பயணத்துடன் தொடர்புடையவர்களை அழைக்க விரும்புகிறேன் என்று அன்று கூறியதை ஒருவேளை அவர் தற்போது மறந்திருக்கவும் கூடும்.
அவரின் விமர்சனம் அவர் கூறியது போல இருந்தது என்பது முற்றிலும் உண்மை. ஆனால் நான் அவரின் பேச்சைக் கேட்டவுடன் ஏதோ பதற்றப்பட்டு உடனேயே தன்னுடன் முரண்பட்டது போல எழுதியிருக்கிறார். உண்மையில் அப்படி ஏதும் நடக்கவில்லை. ‘எனது தொகுப்பிலும் வெளியிலும் நல்ல பல கவிதைகள் உள்ளது எனக் கூறிய அவர் தொகுப்பில் சில கவிதைகள் சுமாரானவை’ என அவரது பேச்சில் தெரிவித்திருந்தார்.( இப்போது என்கவிதைகளில் தனக்கு ஈடுபாடு இருந்ததில்லை என்கிறார்) நான், ‘ஒரு தொகுப்பில் எல்லாம் சிறந்த கவிதைகளாக வரும் என எதிர்பார்க்க முடியாது தாங்களும் சேர்ந்து தொகுத்த தொகுப்பான ‘மரணத்துள் வாழ்வோம்’ தொகுப்பிலும் மிகச் சாதாரணமான கவிதைகளும் உள்ளன தானே’ என்ற அர்த்தத்தில் அக்கூற்றையும் வஞ்சகமில்லாமல் மிகமிகச் சாதாரணமாகத் தான் கூறினேன். ஆனால் அவர் என் கூற்றின் தொனியை திரிபு படுத்தியிருக்கிறார். நான் அவர் பேச்சில் ஏமாற்றமடைந்து உடனேயே பகையுணர்வோடு அவ்வாறு கூறியதாக எழுதியுள்ளார்.
அவ்வெளியீட்டு விழாவின் எனது பதிலுரையில் கூட நான் இவரின் கருத்துப் பற்றியோ இவர் கூறியிருப்பது போல எனது ஏமாற்றத்தையோ வெளிப்படுத்தியிருக்கவில்லை. உண்மையில் அவர் கூறியது போல நான் பதற்றப்பட்டு ஏமாற்றமடைந்திருந்தால் அன்றைய எனது பதிலில் நிச்சயம் அதன் தாக்கம் தெரிந்திருக்கும்.(ஒலிநாடாப் பதிவைக் கேட்கலாம்)
ஆனால், உண்மையில் அவருக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தியது அவருக்கு பின் விமர்சன உரைகளை ஆற்றிய கவிஞர்களான கல்வயல் வே. குமாரசாமி, மற்றும் சோ.ப வின் பேச்சுகளாக இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். அவர்கள் இருவரினதும் பேச்சுக்கள் திரு.அ.யேசுராசாவின் பேச்சுக்குப் பதிலளிப்பவையாக அன்று அமைந்துவிட்டது. இதற்கு நான் என்ன செய்ய முடியும்? அது என்னால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தொன்றல்ல. தான் கூறுவதை எல்லோரும் ஏற்றாக வேண்டும் என்று கருதுவதுடன் மாற்றுக் கருத்தைச் சகிக்க முடியாதவர் இவர் என்பதை இவ்விடயத்தையே தனக்கேற்ப இவர் திரிபு படுத்தியிருப்பதும் காட்டுகிறது. மேலும், ‘நானும் கவிஞர் வே.குமாரசாமியும் இன்னொருவரும் மதிப்பீட்டுரைகள் நிகழ்த்த வேண்டும்’ என்று எழுதியுள்ளார். அந்த இன்னொருவர் கவிஞர் சோ.ப என நன்றாகத் தெரிந்தும் இன்றும் தான் மதிப்பதாக கூறிக்கொள்ளும் கவிஞர் சோ.ப வும் தன் கருத்துக்கு மாற்றுக் கருத்தைக் கூறினார் என்பதை சீரணிக்க முடியாது அதை மறைக்கவே சோ.ப வின் பெயரை தவிர்த்திருக்கிறார். தன் பேச்சை நியாயப் படுத்த ‘எனது விமர்சனம் தங்களைக் கவர்ந்ததாக கூட்டம் முடிந்தபின் இளைஞர் சிலர் என்னிடம் தெரிவித்தனர்’ என்கிறார். இது ஆதாரமற்றது. இது உண்மையாயின் அன்றைய அவ்இளைஞர்கள் யார் என்று இதில் பகிரங்கப் படுத்தட்டும். சரி அவ்வாறு சில இளைஞரை இவரின் பேச்சு கவர்ந்தே இருந்தாலும் இக்கூற்றினூடாக எதை வலியுறுத்த இவர் முனைகிறார்?
இந்த இடத்திலே ‘தெய்வாதீனமாக’ இவ் வெளியீட்டு விழாவின் முழுமையான ஒலிநாடாவும் என்னிடம் இன்றும் இருப்பதுடன் அது முழுமையாக எனது கவிதை இணையத்தளமான www.thanajeyaseelan.com  இல் பதிவேற்றப் பட்டுமுள்ளது. வாசகர்கள், தேவையானோர், இவரின் கபடத்தனத்தை, உண்மையை அறிய விரும்புவோர், அவ்ஒலிப்பதிவைக் கேட்பதன் மூலம் திரு.அ. யேசுராசாவின் சுயரூபத்தை புரிந்துகொள்ள முடியும்.
தொடர்ந்து ‘அவர் தனது ஏமாற்றத்தை வேறு பிரயோகங்களில் தொடர்ந்தும் வெளிப்படுத்தினார். நான் தனது கவிதைகளை வானளாவப் புகழ்வேன் எனவே அவர் நம்பியிருக்க வேண்டும். அவரால் ஏமாற்றத்தைத் தாங்க இயலவில்லை’ என்று கூறியிருப்பது சிறுபிள்ளைத் தனமானது.

நான் திரு. அ.யேசுராசாவின் கவிதை தொடர்பான கருத்துகளை அவரின் கவிதை தொடர்பான நம்பிக்கைகளை ஆரம்பத்திலேயே அறிந்திருந்தேன். அவர் தமிழின் மிக நீண்ட தொடர்ச்சியான கவிதை மரபை மரபிலக்கியங்களைப் பற்றிய ஆழமான பரீச்சயம் அற்றவர் என்பதையும், குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழ்ச் சைவ கலாசார மரபை ஏற்றுக்கொள்ளாதவர் என்பதையும், தனது சமய, சமூக, கல்வி, பொருளாதாரச்சூழல், கொள்கை, பின்னணியின் படி தான் தமிழ்க் கவிதையை நோக்குபவர் என்பதையும், தமிழகத்தின அக்கால நவீன கவிதையாளர்களை ஆதர்சமாகக் கொண்டு கவிதையை பார்ப்பவர் என்பதையும், வைரமுத்து மேத்தா அப்துல் ரகுமான் போன்ற புதுக்கவிதையாளர்களை அடியோடு மறுதலிப்பவர் என்பதையும், அவரின் விமர்சனம் எவ்வாறு இருக்கும் என்பதையும் நான் ஓரளவு ஊகித்திருந்தேன். அவரின் கருத்து என்னவாக இருப்பினும் அவரும் எனது கவிதைப் பயணத்தில் சிறு பங்கெடுத்தார் என்பதாலேயே அவரை எனது விழாவில் அழைத்திருந்தேன் என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன்.
எனது கவிதைகளை புகழாததால் நான் ஏமாற்றமடைந்தேன் என்று இவர் எழுதியிருப்பது மிகமிக நகைப்புக்குரியது. நான் கவிதைத் துறையில் ஈடுபட்டு சுமார் 22 வருடங்கள் கடந்து விட்டது. நான் கவிதை எழுதத் தொடங்கிய ஆரம்ப காலத்திலோ, எனது முதல் நூல் வெளிவந்த போதோ, அதற்குப் பின்னோ, சமகாலத்திலோ, அல்லது இன்றோ கூட எச்சந்தர்ப்பங்களிலும் இவரின் அங்கீகரிப்பை அல்லது பாராட்டை நான் எதிர்பார்த்திருந்ததில்லை, வேண்டி ஏங்கி நின்றதில்லை. தேவைப்பட்டுக் கேட்டிருந்ததில்லை , என்பதை இச்சந்தர்ப்பத்தில் பகிரங்கமாக உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனாலும், எனது முதல்நூல் வெளியீட்டு விழாவைத் தொடர்ந்தும் நான் இவருடன் நல்லுறவைத் தொடர்ந்து பேணியேயிருந்தேன். நேரடியாக முரண்பட்டுக் கொள்ளவில்லை. ஆனால் திரு.அ.யேசுராசா என் நூல்வெளியீட்டைத் தொடர்ந்து என்னை ஒரு பகையாகக் கருதியிருந்தார் என்பதை பின் புரிந்து கொண்டேன். நான் அவருடன் நேரடியாக முரண்பட்டது அனேகமாக 2002ல். அதைப்பற்றியும் கூறத்தான் வேண்டும்.
2002 புரட்டாதி மாதம் சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் தியாகி திலீபன் நினைவு தின நிகழ்வு நல்லூர் ஆலய வீதியில் நீண்ட இடைவெளிக்குப்பின் பிரமாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அயலவன் என்பதால் மாலை வேளையில் நல்லூர் வீதியில் நண்பர்களுடன் நான் கூடி அளவளாவுவது வழக்கம். அவ்வாறான ஒருநாள் இருள்சூழ்ந்த வேளை திரு. அ.யேசுராசா அங்கு நிகழ்வைக் காண வந்தார். அவரைக் கண்டவுடன் நானாக சென்று ‘எப்படி அண்ணை சுகம்’ என நட்பு ரீதியில் விசாரிக்க முயன்றேன். அவர் என்னைக் கண்டதும் என்மீது சீறி விழுந்தார். ‘நீர் எப்படி இப்படி கவிதை எழுத முடியும்? இவ்வளவு கீழ்த்தரமான சொற்பிரயோகத்தை நான் என்றுமே கேட்டதில்லை’ என்று துள்ளினார். எனக்கு என்ன நடந்தது என்று புரியவில்லை. நான் ‘எதைக் கூறுகிறீர்கள்’ என்று கேட்டேன். அக்காலத்தில் ‘தாயகம்’ சஞ்சிகையில் வெளிவந்த (பின் ‘யாத்ரா’ விலும் வெளிவந்த) எனது கவிதையொன்றில் ‘மயிர்’ போன்ற சொற்களை நான் பாவித்திருந்தேன் என்றும் அது பாரதூரமான பிழை என்றும் அக்கவிதை தன்னைப் பற்றியதே என்றும் மீண்டும் மீண்டும் அவர் என்னைப் பேசவிடாமல் கூறினார். நான் மிக அமைதியாக அது தங்களை நினைத்து எழுதியதல்ல என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் மிகவும் வநளெழைn ஆகி ஏதேதோ சம்பந்தமில்லாத விடயங்களைக் கூறியவாறு மிகவும் முரண்பட்டு நல்லூர் நாவலர் மண்டபத்திற் கருகிலுள்ள கிணற்றில் நீரை அள்ளி மடமடவென்று குடித்து விட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.
நான் எனது விளக்கமொன்றை மறுதபாலில் எழுதினேன். நான் அவர்கூறிய சொற்களைப் பாவித்ததன் நியாயத்தையும், அவருடைய முந்தைய கட்டுரைகளில் எவ்வளவு அநாகரீகமான, பண்பாடற்ற, நையாண்டிகள், அருவருக்கத்தக்க சொற்பிரயோகங்கள், வசைபாடல்கள், அவரால் பயன்பட்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டி இருந்தேன்.
அக்கடிதத்தில் அவரின் கலை, கவிதை பற்றிய நம்பிக்கையை, அவருடைய தனித்துவத்தை நான் மதிக்கிறேன் என்பதையும் எடுத்துரைத்த அதே வேளை எனது கலை, கவிதை பற்றிய நம்பிக்கைகளையும் எனது தனித்துவத்தையும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்பதையும் தெரிவித்திருந்தேன். அதன்பின் நான் அவருடன் தொடர்பைப் பேணவில்லை. பின் வெளிவந்த எனது நூல் வெளியீடுகளுக்கு அழைப்பிதழ்களை மட்டும் தபாலில் அனுப்பியிருக்கிறேன். அவர் எதற்கும் வந்ததும் இல்லை.
அவரைப் பற்றி நான் இதுவரை எந்த இடத்திலும் தவறாக பேசியதோ அல்லது விமர்சித்ததோ இல்லை. அவர் பற்றிய சர்ச்சைகள் பல சஞ்சிகைகளில் வெளிவந்த போதும், பல இளைய இலக்கிய நண்பர்கள் அவரை அவதூறாக விமர்சித்த போதும், ,அவருடனான எனது முரண்பாட்டை அறிந்த சில நண்பர்கள் என் வாயைக் கிளற முயன்ற போதும், நான் அவை பற்றிய கருத்தெதையும் பொதுவெளியில் கூறாமல் தவிர்த்திருந்தேன். ஆனால் யேசுராசா என்மீதான தனது பகையுணர்வை தொடர்ந்து பேணியதுடன் அண்மைக்காலம் வரை இடைக்கிடையே முகப்புத்தகத்தினூடாகவும் தானாக வலிந்து எனது பதவியை வைத்து நையாண்டி பண்ணும் கைங்கரியத்திலும் ஈடுபட்டு வருகிறார். இதன் அடுத்தபடியாக ‘ஜீவநதி 8ம் ஆண்டிதழில்’ எனக்கென தனது பத்தியில் ஒரு பகுதியை ஒதுக்கி அருளியிருக்கிறார்.
அவருடைய கவிதை தொடர்பான பார்வையை நம்பிக்கையை நான் என்றும் விமர்சித்ததில்லை. எனது கவிதை தொடர்பாக அவருக்கு மாறுபட்ட கருத்து இருக்கலாம். அவரே அப்பத்தியில் கூறியிருப்பது போல எனது கவிதைகளில் அவருக்கு ஈடுபாடில்லாமலும் இருக்கலாம். அது அவருடைய தனித்துவம், விருப்பம். அது பற்றி எனக்கு எள்ளளவும் கவலையில்லை. அதே நேரம் எனது கவிதை தொடர்பான எனது நம்பிக்கைகளை கருத்துகளை பரிகசிக்க இவருக்கும் அருகதை இல்லை என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். ‘கவிதை எழுதுவது தெய்வீக வரம் கவிஞன் பிறக்கிறான். உருவாக்கப் படுவதில்லை’ என்பதை இக்கணம் வரை நான் உறுதியாக நம்புகிறேன்.
ஆனால், தன்னை ஒரு இலக்கியக் கொடுமுடியாக, இலக்கியக் குருபீடமாக, ஒரு ஈடு இணையற்ற இலக்கிய விமர்சன மேதையாக, தான் சொல்வதே… ஏற்பதே… இலக்கியம் என்ற ரீதியில் இயங்கும் இவரின் – என்னுடன் தொடர்பான கீழ்த்தரமான செயற்பாடுகள் சிலவற்றை நாகரிகம் கருதி இதுவரை வெளியிடாமல் தவிர்த்து வந்திருந்தேன். ஆனால் அது தவறு என இன்று உணர்கிறேன்.
நான் எனது இரண்டாவது கவிதை தொகுதியான ‘கைகளுக்குள் சிக்காத காற்றை’ 2004ல் வெளியிட்ட போது விமர்சனம் ஆற்ற இருந்த விமர்சகர்களுள் ஒருவரை வெளியீட்டு விழாவின் ஓரிரு நாளின் முன் சந்தித்த திரு.அ. யேசுராசா ‘இவருடைய கவிதைகளை சிலாகித்து, சிறந்தவை என்று நீர் பேசக்கூடாது. அப்படிச் சொன்னால் இவருக்கு நினைப்பு கூடிவிடும்.’ என்று கேட்டுக் கொண்டிருந்தார் என அவ் விமர்சகர் ஊடாகவே அறிந்தேன். இது எவ்வளவு அடாவடித் தனமானது? அடுத்து, எனக்கு மகாகவி நினைவுக் கவிதைப் போட்டியில் முதற்பரிசை இவரே தந்துவிட்டு என்னுடன் முரண்பட்ட பின்நாளில் தான், முதற்பரிசு பெற்ற அக்கவிதையை ஏற்றுக் கொள்ளவில்லையென்றும் வேறு ஒரு கவிதைதான் முதலாமிடம் பெற இருந்ததென்றும் judges இவருக்கு பரிசைக் கொடுத்துவிட்டனர் என்று ஆதங்கப்பட்டதாகவும் அறிந்தேன். இவை இவரின் ‘இலக்கிய’ மனப்பாங்கு நேர்மைக்கு நல்ல உதாரணங்கள்.

இவருடைய என்னைப் பற்றிய பத்தியின் இறுதியில் ‘விதானைமார் பொய்யாகப் புளுகினாலும் புளுகாவிட்டாலும் இலங்கையர் கோன் நாம் பெருமைப் படத்தக்க எழுத்தாளர் தான் என்பதில் ஐயமில்லை. ஆனால் இலக்கியம் பேசும் அரசாங்க அதிகாரிகள் சிலரின் நிலை அத்தகையதல்ல!’ என்று எழுதியுள்ளார். இது மிகமிக அபத்தமானது என்பதற்கு மேலாக தனிமனித உரியையில் நம்பிக்கையுள்ள அனைவராலும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது.
என்னைப் போன்ற அதிகாரிகள் சிலர் எழுத்தாளர்கள் அல்லது படைப்பாளிகளே அல்ல என என்னை மையப்படுத்திக் கூற இவருக்கு என்ன அருகதையிருக்கிறது? எந்த அளவுகோலைக் கொண்டு இதனை இவர் முடிவுசெய்தார்? யார் இந்த அதிகாரத்தை இவருக்கு வழங்கினார்கள்? இவர் என்ன ஈழ இலக்கியத்தை முடிவுசெய்யும், தீர்மானிக்கும், தீர்ப்பெழுதும் ‘இலக்கிய உச்ச நீதிமன்ற’ நீதியரசரா? இக்கூற்றானது எனது தனிமனித சுதந்திரத்தை, எனது எழுத்துரிமையை, எனது சுய கௌரவத்தை மறுதலிக்கும் கூற்றாக இருக்கிறது. ‘நாம் பெருமைப்படத்தக்க…’ என்று கூறியிருப்பது, இவர் எந்த மனநிலையில் கற்பனை உலகத்தில் தன்னை கட்டமைத்து எல்லாம் அறிந்த மேதாவியாக, தானே தீர்மானிக்கும் சக்தி என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இவரை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.
விதானைமாரின், அல்லது திரு.அ.யேசுராசாவின், அல்லது அவர் போன்றோரின், அல்லது யாரும் அரசியலாளரின் கோட்பாட்டாளர்களின் விமர்சகர்களின் விருப்பு வெறுப்புக்கு கவிதை எழுதுபவன் நானல்ல என்பதையும் எனது எழுத்துரிமைக்கு, இலக்கிய சுதந்திரத்திற்கு எவரும் சவால்விட, தடைபோட முடியாது என்பதையும் ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
(எனது இப்பதிலானது ஜீவநதி, ஆடி 2015 இதழ் 82ல் முழுமையாக ;எதிர்வினை’
எனும் மகுடத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்டது)

3) எதிர்வினைக்கு ஓர் எதிர்வினை — அ.யேசுராசா

நினைவுக் குறிப்புகள் – 9 இல் உள்ள தனது கவிதைத் தொகுப்பு வெளியீட்டுக் கூட்டம் பற்றிய எனது கருத்துரைகளுக்கு த.ஜெயசீலன் எழுதிய எதிர்வினையைப் படித்தேன். ‘பட்டிமன்ற அலட்டல்’ களே உடன் எனது நினைவுக்கு வந்தன. எனது முக்காற் பக்கக் குறிப்புக்கு மூன்றே முக்கால் பக்கங்களைச் செலவழித்துள்ளார்! எனது கருத்துக்களுக்கு சுட்டிப்பாக (‘பொயின்ரட்’ ஆக) பதிலளிக்காமல் ‘எங்கெங்கோ’ எல்லாம் சென்று வந்ததுதான் காரணம். எல்லாவற்றுக்கும் விளக்கமளித்து ஜீவநதியின் பக்கங்களை வீணடிக்க விரும்பவில்லை. எனவே பொருட்படுத்தத்தக்க சிலவற்றுக்கு மட்டும் பதிலளிக்க முயல்கிறேன்.
1. ‘ எனக்கு மகாகவி நினைவுக் கவிதைப் போட்டியில் முதற் பரிசை இவரே தந்துவிட்டு என்னுடன் முரண்பட்ட பின் நாளில் தான் முதற்பரிசு பெற்ற அக்கவிதையை ஏற்றுக் கொள்ளவில்லையென்றும் வேறு ஒரு கவிதைதான் முதலிடம் பெற இருந்ததென்றும் judges இவருக்குப் பரிசைக் கொடுத்து விட்டனர் என்று ஆதங்கப்பட்டதாகவும் அறிந்தேன். இவை இவரின் ‘இலக்கிய’ மனப்பாங்கு நேர்மைக்கு நல்ல உதாரணங்கள்’.
மஹாகவி (மகாகவி அல்ல!) நினைவுக் கவிதைப் போட்டிக்கு நடுவர்கள் – தரனபநள – இருக்கவில்லை. கவிஞர் சோ.பத்மநாதன் மட்டுமே ஒரே நடுவராக தரனபந ஆக இருந்தார். கவிஞர் முருகையனின் மகன் பவித்திரன் எழுதிய கவிதையையே, அவர் முதற்பரிசுக்கு உரியதாகத் தெரிவுசெய்தார். அக்கவிதையில் சண்முகம் சிவலிங்கத்தின் கவிதை வரிகள் பல செருகப் பட்டிருப்பதை நான் அவதானித்து, ‘நீர் வளையங்கள்’ தொகுப்பில் உள்ள கவிதை வரிகளைச் சோ.பவுக்குக் சுட்டிக் காட்டினேன். ‘ஐயோ பெரும் பழியிலிருந்து என்னைக் காப்பாற்றினீர் யேசுராசா’ என்று சொன்ன அவர், அதன்பிறகே அடுத்த நிலையிலிருந்த த.ஜெயசீலனின் கவிதையைத் தெரிவுசெய்தார். இரண்டாம் மூன்றாம் இடங்கள் பெற்ற கவிதைகளே என்னைக் கவர்ந்த போதும், மூத்த கவிஞர் ஒருவரிடம் தனிப் பொறுப்பைக் கொடுத்த பின்னர் அதில் தலையிடக் கூடாது என்ற எண்ணத்தில், அவரது முடிவை ஏற்று ஜெயசீலனுக்கே முதற் பரிசை அளித்தேன். எனது நண்பர் சிலரிடம், முன்பு இவ்விடயத்தைப் பலமுறை பகிர்ந்துமிருக்கிறேன்.

2. ‘…ஆனால் யேசுராசா என்மீதான பகையுணர்வை தொடர்ந்தும் பேணியதுடன் அண்மைக் காலம் வரை இடைக்கிடையே முகப்புத்தகத்தினூடாகவும் தானாக வலிந்து எனது பதவியை வைத்த நையாண்டி பண்ணும் கைங்கரியத்திலும் ஈடுபட்டு வருகிறார்’
தெல்லிப்பழைப் பிரதேச செயலகம் நடாத்திய கவிதைப் பட்டறை தொடர்பான ஒளிப்படங்களைத் தனது முகநூல் பக்கத்தில் த.ஜெயசீலன் பதிவேற்றியிருந்தார். அதில் சில குறிப்புகளை நான் பதிந்தேன். அவரும் பதிந்தார். அவை வருமாறு.

Athanas jesuraja:  பிரதேச செயலகங்கள் பலவும் கவிதைப் பட்டறைகளையே ஒழுங்கு செய்வது ஏன் என்று விளங்கவில்லை. சும்மா ‘கடன் கழிக்கும்’ நடைமுறையோ தெரியவில்லை. சிறுகதை மற்றும் ஈழத்து இலக்கியம் பற்றிய விழிப்புணர்வை பரவலாக்கும் முயற்சியிலும் ஈடுபடலாமே

Thanabalasingam jeyaseelan: thaanum seiyan thalliyum….

Athanas jesurasa:  நான் என்னவோ சொல்ல நீங்கள் என்னவோ சொல்கிறீர்கள். உங்கள் நல்ல பண்பு தெரிகிறது! முதலில் தமிழில் எழுதப் பழகுவது நல்லது! ‘தமிங்கிலிஷ;’ எழுதி வாசிப்பவரைக் கொல்ல வேண்டாம் தமிழ்க் கவிஞரே!

Athanas jesurasa: thanabalasingam jeyaseelan// thaanum seiyan thalliyum…//
ஒரு பிரதேச செயலரின் எதிர்வினைக் கூற்று…!

அவர்தான் ‘தானும் செய்யான் தள்ளியும்…என்று முதலில் தரக்குறைவாகப் பதிந்துள்ளார்! மேலும் பிரதேச செயலகங்கள் பற்றிய குறிப்பில் இவரது பதவியைச் சுட்டியதில் என்ன தவறு? பின்னர், சிலரின் பாராட்டுக் குறிப்புகளை மட்டும் வைத்துக் கொண்டு, எனது குறிப்புகளை தனது முகநூல் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார். மாற்றுக் கருத்தை இருட்டடிப்புச் செய்வது ஜனநாயகப் பண்பல்லவே!

3. ‘…அவர் தமிழின் நீண்ட தொடர்ச்சியான கவிதை மரபை, மரபிலக்கியங்களைப் பற்றிய ஆழமான பரீச்சயம் (?! என்னுடையது) அற்றவர் என்பதையும், குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழ்ச் சைவ கலாசார மரபை ஏற்றுக் கொள்ளாதவர் என்பதையும், தனது சமய, சமூக, கல்வி, பொருளாதாரச் சூழல், கொள்கை, பின்னணியின் படிதான் தமிழ்க் கவிதையை நோக்குபவர் என்பதையும்…)’,
‘தொடர்ச்சியான கவிதை மரபையும் மரபிலக்கியங்களையும்’ த.ஜெயசீலன் ‘கரைச்சுக் குடித்தவர்’ என்பதை, அவரது மகிழ்ச்சிக்காக முதலில் ஒப்புக்கொள்கிறேன்: அடுத்து, மத முரண்பாட்டைக் குயுக்தியாக கட்டமைக்க அவர் முயல்கிறார் என்பதையும் அதிர்ச்சியுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். யாழ்ப்பாணத் தமிழ்ச் சைவ கலாசார மரபைப் பற்றி நான் எங்காவது கருத்துரைத்திருக்கிறேனா?! மேலும், பிறப்பால் கத்தோலிக்கனான நான், எனது கடவுள் நம்பிக்கையையும், சமய நம்பிக்கையையும் 19 ஆவது வயதிலேயே துறந்துவிட்டவன்! இப்போது வயது 68: இன்னும் நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை! தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டைச் சிதைக்க, இந்து அடிப்படைவாதத்தைக் கிளறும் சக்திகள் தமிழ்ப் பிரதேசங்களில் தோற்றமுறுவதை, அரசியல் நோக்கர்கள் ஏற்கனவே முன்னுணர்கிறார்கள். இவரிலும் அச் சக்திகளின் தாக்கம் உள்ளதோவென்ற சந்தேகம் எழுகிறது.
4.எனது குறிப்பின் மூலம் ஜீவநதியைக் ‘குப்பைக் கூடை’ ஆக்கியதாகவும் என்மீது குற்றஞ்சாட்டுகிறார்!
ஆனால்,
‘தான் ஒரு இலக்கிய விமர்சன மேதாவி எனத்தனக்குத் தான் முடிசூடிக் கொண்டு’
‘தனது மனவக்கிரங்களையும் மன அவசங்களையும் கொட்டுகிற குப்பைக் கூடையாக’
‘தனது நையாண்டி நக்கல்பாணியில் இந்தச் சேறு பூசலை’
‘இவரின் கபடத்தனத்தை’
‘…என்று கூறியுள்ளது சிறுபிள்ளைத்தனமானது’
‘…தன்னை ஒரு இலக்கிய கொடுமுடியாக, இலக்கிய குருபீடமாக, ஒரு ஈடு இணையற்ற இலக்கிய விமர்சன மேதையாக’
‘இவரின் என்னுடன் தொடர்பான கீழ்த்தரமான செயற்பாடுகள்’
‘…என்று எழுதியுள்ளார். இது மிகமிக அபத்தமானது…’
‘இவர்…’இலக்கிய உச்ச நீதிமன்ற’ நீதியரசரா?’
‘எல்லாம் அறிந்த மேதாவியாக’
‘இவரை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது’
என்றெல்லாம் அடைமொழிகள் சூட்டி என்னை இழிவுபடுத்த அவர்தான் முயன்றுள்ளார்! எனது நினைவுக் குறிப்பிலுள்ளதையும் அவரது எதிர்வினையையும் ஒப்பிட்டுப் பார்க்குமாறு, புத்தியுள்ள வாசகரைக் கேட்டுக் கொள்கிறேன்.

5 ‘இலங்கையர்கோன் நாம் பெருமைப் படத்தக்க எழுத்தாளர்தான்’ என்று நான் எழுதியிருப்பதை த.ஜெயசீலன் ஏற்றுக் கொள்ளவில்லை!! ‘எனது விமர்சனம் தங்களைக் கவர்ந்ததாகக் கூட்டம் முடிந்தபின் இளைஞர் சிலர் என்னிடம் தெரிவித்தனர்.’ என்பதற்கும், ‘அது ஆதாரமற்றது. இது உண்மையாயின் அன்றைய அவ் இளைஞர்கள் யார் என்று பகிரங்கப் படுத்தட்டும்’ என்று சொல்கிறார். – பதின்னான்கு ஆண்டுகளின் பின்னர்!! புதியவர்களான அந்த இளைஞர்களின் பெயர்கள் எனக்குத் தெரியாது. ஆனால், எனது உரை முடிந்தபின் நிகழ்வின் தலைவரான கவிஞர் முருகையன், ‘இன்று யேசுராசா ஆற்றிய விமர்சன உரையிலிருந்து…கவிதையின் பல பக்கங்களையும் எவ்வாறு பார்க்கலாம் பார்க்க வேண்டும் என்ற ஒரு முன்மாதிரியான உதாரணத்தை அவர் தந்திருக்கிறார்’ என்று குறிப்பிட்டிருப்பதை, நிகழ்வின் ஒலிப்பதிவில் இன்று யாரும் கேட்கலாம்.
18.07.2015

(ஜீவநதியின் 80 ஆவது இதழில் ஆரம்பமான இந்த இலக்கிய சர்ச்சையை இந்த இதழுடன் நிறைவு செய்து கொள்கிறோம் —ஆசிரியர் )

(ஜீவநதி, ஆவணி 2015, 83ம் இதழ்)

4) ‘எதிர்வினைக்கான எதிர்வினைக்கான -எதிர்வினை’. –த.ஜெயசீலன்

ஜீவநதி 83ம் இதழில் அ.யேசுராசா எழுதிய ‘எதிர்வினைக்கான எதிர்வினை’ தொடர்பானது. எனது இப்பதில் ‘சுட்டிப்பான’ வடிவமல்ல. போதுமான விளக்கமுடைய பதிலைத் தருவது மட்டுமே.

முதலில் நான் பட்டிமன்றப் பேச்சாளனல்ல. நான் பட்டிமன்றம் எதிலும் கலந்து கொண்டதில்லை. என் பதிவு பட்டிமன்ற அலட்டலும் அல்ல. ஆனால் பட்டிமன்றத்தைப் பற்றி அறிவேன். இவருக்குப் பட்டிமன்றம் எப்படி நிகழும் என்றுகூட புரியவில்லை போல.
‘நினைவுக் குறிப்புகளில்’ தன் அனுபவ அலட்டல்களால் மாத மாதம் ஜீவநதியின் 6 பக்கங்களை விழுங்குவது இவரே. ‘சுட்டிப்பாக’ எழுதத் தெரிந்த இவர் ஏன் மாதமாதம் ஜீவநதியில் 6 பக்கங்கள் அலட்டல் நடையில் எழுதுகிறார்?

நான் எனது பதிற்கட்டுரையில் ‘எங்கெங்கோ சென்று வந்ததாக’ கூறுகிறார். நான் எங்கெங்கும் செல்லவில்லை. நான் கூறிய பதில்களில் உள்ள அனைத்தும் அ.யேசுராசாவைச் சுற்றியவையே. அவருக்கான, அவருக்கும் உலகுக்கும் உண்மையைச் சொல்கின்ற பதில்கள் மட்டுமே. ‘நினைவுக் குறிப்புகளின்’ மூலம் இவர்தான் மாதா மாதம் சம்பந்தமில்லாமல் தொடர்பில்லாமல் எங்கெங்கோ போய் வருகிறார்.

முக்காற் பக்கத்தில் உள்ளதற்கான விளக்கத்தை விளங்காதவர்களுக்கு, விளங்காதது போல நடிப்பவர்களுக்கு, விளங்கப்படுத்த மூன்றேமுக்கால் பக்கம் செலவழிப்பது என்ன தவறு?
அவரின் ‘நினைவுக்குறிப்பு -9’ இல் கூறப்பட்ட விடயங்களுக்கான எனது நியாயமான பதில்களில் பெரும்பாலும் அனேகமானவற்றை, அவற்றின் உண்மைகளை, மறுதலிக்கும் திராணியற்று மறுதலிக்க முடியாது அவை பொருட்படுத்தத் தக்கவை அல்ல என்ற ரீதியில் அவற்றைக் கடந்து மௌனம் காத்துள்ளமை உண்மைகள் வலிமையானவை என்பதை எடுத்துக்காட்டுகிறன. அவரே கூறியகுற்றச் சாட்டுக்களும் ‘பொருட்படுத்த வேண்டியவை அல்ல’ என அவரே ஏற்றுக்கொண்டிருப்பதைப் பாராட்டலாம்.
குறிப்பாக ‘நினைவுக்குறிப்பு -9’ இல் நான் எனது நூல் வெளியீட்டு அரங்கிலேயே அவருடன் முரண்பட்டது என அவர் கூறியது, அவர் பாராட்டுவார் என எதிர் பார்த்து ஏமாற்றமடைந்து நான் அந்த ஏமாற்றத்தை வௌ;வேறு வழிகளில் வெளிக்காட்டினேன் எனத் தெரிவித்தது, நான் உட்பட பல அரச அதிகாரிகள் ‘நாம்; பெருமைப் படத்தக்கவர்கள் அல்ல’ என அவர் கூறியது, போன்றவை தொடர்பான எனது பதில்களுக்கான இவரின் மௌனம் புத்தியுள்ள வாசகர் எவருக்கும் சிலபல புரிதல்களை நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும்.
மீண்டும் என்னைப் பற்றிய அவரின் பத்தியையும் எனது பதிலையும் தெளிவாகப் பார்க்கும் ‘புத்தியுள்ள வாசகர்’ யாரும் யார் யாரை இழிவு செய்துள்ளார்கள். யார் யாரை மட்டந்தட்ட முனைந்து மூக்குடைபட்டார்கள் என்பதையும் காண முடியும்..

கிறிஸ்தவத்தையே ஏற்காதவர் யாழ்ப்பாண சைவ கலாசார மரபை ஏற்காதவராகத் தானே இருப்பார். நான் மத முரண்பாட்டைத் தூபம் போட முயலவில்லை. நான் சொல்ல வந்தது வேறு. தமிழ் கவிதை இலக்கியத்தில் நம் விருப்பு வெறுப்பைத் தாண்டி கணிசமான பல பக்கங்கள், விடயங்கள் இந்து மதம் சார்ந்தவை. இதுவே எமது வரலாற்றின் நியதியும் கூட. உ-ம் கம்பராமாயணம், தேவார திருவாசகங்கள் இப்படிப் பல. இவை பற்றிய அறிமுகம் பரிச்சயம் சற்றும் இல்லாத ஒருவர் எப்படி ஒட்டுமொத்தத் தமிழ்க் கவிதையை பற்றி தீர்ப்புரைக்க முடியும்? ‘இதுதான் கவிதை’ என எப்படிப் பிறரை வழிப்படுத்த முடியும்?
இக்கருத்தையும் தனக்கேற்ற திரிபுபடுத்தி நான் மத முரண்பாட்டைக் கட்டமைக்க முயல்வதாகவும் தமிழ்தேசிய ஒருமைப்பாட்டை சிதைக்கத் துணைபோகும் சக்திகளின் தாக்கம் என்னிடம் உள்ளதோ என ஐயுறுவதாகவும் வளமை போல முடிச்சுப் போட முயல்கிறார். ஜீவநதி 83 ம் இதழின் ‘பேசும் இதயங்கள்’ பகுதியில் சாகாம வீதி கோளாவில் அக்கரைப்பற்றைச் சேரந்த க.கேதீஸ்வரன் (?!) என்பவர் ஏதோ ‘யேசு’வை நன்கு அறிந்து தெளிந்தவர் போல ‘யேசு’வின் கருத்தை அப்படியே பிரதிபலித்து வழிமொழிந்திருப்பதற்குள் ஏதோ உள்குத்து இருப்பதாக எனக்குப் படுகிறது.
இவ்விடத்தில் அருட்பணி மரிய சேவியர் அடிகள் போன்ற பல கிறிஸ்தவத் துறவிகள் சைவ சித்தாந்தங்களைக் கூட கற்று தேர்ந்தமையை சுட்டிக்காட்டலாம்.
தெல்லிப்பளை பிரதேச செயலக கவிதைப் பட்டறையில் நான் கலந்துகொண்டது கவிதை வளவாளராக. பிரதேச செயலராக அல்ல. அப்படங்களை எனது முகப்புத்தகத்தில் நான் பதிவிட்ட போது வலிய என் வiஅந டiநெ இல் நுழைந்து ‘பிரதேச செயலகங்கள் பலவும் கவிதைப் பட்டறைகளையே ஒழுங்கு செய்வது ஏன் என்று விளங்கவில்லை. சும்மா ‘கடன் கழிக்கும்’ நடைமுறையோ தெரியவில்லை.’ என்று குறிப்பு இட்டிருந்தார். பிரதேச செயலகங்கள் ‘கடன் கழிக்கும்’ வேலையா செய்கின்றன? இது வைக்கோல் பட்டடை நாய்க்குணம் தானே? தானும் செய்யாமல் செய்பவர்களையும் நையாண்டி செய்தால் என்ன செய்யலாம்? மேலும் சிறுகதை, ஈழத்து இலக்கியம் பற்றி நடந்த பட்டறைகள் பற்றி அவர் அறியாததற்கு நாம் என்ன செய்ய முடியும்? இவை செய்யப்படவில்லை என்று இவர் எப்படி குற்றங்காண முடியும்? தெல்லிப்பளை பிரதேச செயலகம் பற்றிய குறிப்பில் அப்பிரதேச செயலராக இல்லாத என்னை பிரதேச செயலரின் பதவியை சுட்டியது எப்படிப் பொருத்தமாகும்?

எனது முகநூல் பக்கத்தில் புகுந்து தான் நினைப்பதைப் பதிந்து விட்டு ஜனநாயகம் இருட்டடிப்பு என்று புலம்புவதை எப்படி ஏற்க முடியும்? அவரின் முகப்புத்தகத்தில் எனது எல்லாக் கருத்துக்களையும் பதிவிட இவர் அனுமதித்து ஜனநாயகத்தை பாதுகாப்பாரா?
தனது கவிதைப் போட்டிக்கு தரனபந தான் என்கிறார். அது அவரின் உள்வீட்டு விவகாரம். எனக்கு கிடைத்த தகவலின் படி அப்படி எழுதியிருந்தேன்.
மூத்த கவிஞரின் தெரிவை பெருந்தன்மையோடு நாகரீகம் கருதி ஏற்ற இவர் அதன் பின்னணியை நண்பர் சிலரிடம் பல தடவை பகிர்ந்தது மட்டும் நாகரீகமா?
இலங்கையர் கோன் பெருமைப்படத்தக்க எழுத்தாளர் என்று நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்கிறார். நான் எங்கே அப்படி எழுதினேன்? இவரை என்செய்வது?
இவர் ஒப்புக்கொண்டு நான் மகிழ வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் தொடர்ச்சியான கவிதை மரபையும் மரபிலக்கியங்களையும் ‘கரைச்சுக் குடிக்கும்’ போது பார்த்து ஒப்புக்கொண்ட இவருக்கு நன்றிகள்.
அ.யேசுராசாவின் எனது நால் வெளியீட்டு நிகழ்வு உரையைத் தொடர்ந்த முருகையனின் பேச்சின் அர்த்தம் இவரின் பேச்சு முற்று முழுதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது இவரின் பேச்சுத்தான் முடிந்த முடிவு என்பதல்ல என்பதைப் புத்தியுள்ள எவரும் புரிந்து கொள்வர். மேலும் அந் நிகழ்வில் கவிஞர் முருகையன் தனது தலைமை உரையில் கவிதை என்றால் என்ன? அதனை இன்று எவ்வாறு பலர் நோக்குகிறார்கள்? போன்ற விடயங்களை கூறியிருப்பதையும் நிகழ்வின் ஒலிப்பதிவில் இன்றும் யாரும் கேட்கலாம்.
06.08.2015

(மேற்படி சர்ச்சையை ஆரம்பித்தது அ.யேசுராசா என்றதால் அவரின் பதிலுடன் சர்ச்சையை நிறைவுசெய்வது அநீதியானது என்றும் அவரின் பதிலுக்கான எனது இவ் பதில் ஜீவநதியில் பிரசுரிக்கப் பட வேண்டும் என்றும் அதனோடு இ;ச் சர்ச்சையை நிறைவுசெய்வதே பொருத்தமானது என்றும் ‘ஜீவநதி ஆசிரியருடன்’ தொலைபேசி ஊடாக (sms இல்) அறிவித்தேன். அவர் அதற்கு இசையவில்லை. அதை மறுத்துவிட்டார். ஆனபடியால் இப் பதிலின் பிரதி அ.யேசுராசாவுக்கு தபாலில் அனுப்பி வைக்கப் பட்டது.
இப் பதிலை இணைத்து ‘ஜீவநதி’ ஆசிரியருக்கு என்னால் என் நிலைப்பாட்டை விளக்கி கடிதம் எழுதப்பட்டது)

5)திரு.க.பரணிதரன்
ஆசிரியர் ‘ஜீவநதி’
06.08.2015

இது தங்கள் ‘ஜீவநதி 83’ இல் வந்த ‘எதிர்வினைக்கான எதிர்வினைக்கு’உரிய பதிலாகும். ‘எதிர்வினைக்கான எதிர்வினைக்கு-எதிர்வினை’ தனியாக இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.
இச் சர்ச்சையை நான் ஆரம்பிக்கவில்லை. ஆரம்பித்தவர் யேசுராசா. நான் வேறு சிலர்போல் சர்ச்சைகளைக் கிளப்பி அதில் இலாபம் தேடுபவன் அல்ல. முரண்பாடுகளை வளர்த்து அதன்மூலம் என் மேலாண்மையை, எனது பேரை வளர்க்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. யாரையும் நம்பி அல்லது யாருக்காகவும் நான் கவிதை எழுதவும் வரவில்லை. எனினும் நேரடியாக என்னைக் குறிவைத்து வலிந்து வரும் வம்புகளை நான் ஏற்றுக் கொள்ளவும், அனுமதிக்கவும் மாட்டேன்.
அ. யேசுராசா எழுதியது பத்தி. அது தொடர்பான எதிர்வினையைத் தொடங்கியவன் நானே. எனவே ‘எதிர்வினையைத் தொடங்கியவரே முடித்து வைக்கவேண்டும்’ என்று தாங்கள் சொன்ன ‘மரபைப்’ பின்பற்றுவதே சாலப் பொருத்தம் என எண்ணுகிறேன். யேசுவின் பதிலுடன் தாங்கள் தன்னிச்சையாக இதனை நிறுத்திக் கொள்வது மரபை மீறுவதாகவும் யேசுவுக்கு தாங்கள் சார்பாக செயற்படுவதாகவுமே அமையும் என்பது என் அபிப்பிராயம்.
எனினும், எனது எதிர்வினையை 82ம் இதழில் ஒருவரியும் மாறாமல் அப்படியே பிரசுரித்தமையை நான் மறக்க மாட்டேன். தங்கள் சஞ்சிகை, தங்கள் தகப்பனார், தங்கள் மேல் உள்ள என் மதிப்பு என்றும் மாறாது.
நிற்க, தங்கள் sms இல் ‘எனது சஞ்சிகையில் இச் சண்டை தொடர்வதை விரும்பவில்லை’ என்று எழுதியிருந்தீர்கள். அப்படியாயின் இதுபோன்ற, பிறரின் மீதான தனிப்பட்ட தாக்குதலாக, வசை பாடலாக, எழுதப் படுபவற்றை தாங்கள் ஆரம்பத்திலே பிரசுரித்திருப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும். ‘நினைவுக் குறிப்பு-9’ இல் மட்டும் நான் உட்பட கருணாகரன், தேவி பரமலிங்கம் ஆகியோர் யேசுவால் தாக்கப்பட்டுள்ளோம். மேலும் நினைவுக் குறிப்புகள் தொடரவுள்ளன. வேறு வேறு வடிவங்களில் குயுக்தியாக தாக்குதல் தொடராது என்பதற்கு தங்களிடம் என்ன உத்தரவாதம் உள்ளது?
ஜீவநதி 83 இன் கடைசிப் பக்க ‘பேசும் இதயங்களில்’ எனது பதில் தொடர்பான விடயங்களே க.கேதீஸ்வரன்(?!) என்பவரால் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அதில் எனக்கு சந்தேகம் உள்ளது. எதிர்காலத்தில் வௌ;வேறு அனாமதேயப் பெயர்களில் எழுதபப்படும் கடிதங்கள் மூலம் இச்சர்ச்சை தொடரின் நான் எனது நிலைப்பாட்டைப் பற்றிய பதிலை கூற முடியாத நிலைமையும் ஏற்படும். எனவே எதிர்காலத்தில் இச்சர்ச்சை தொடர்பான கடிதங்கள் பற்றி தாங்கள் கவனமெடுக்கவும் வேண்டும்;. அல்லது எனக்கு தொடர்ந்து பதிலளிக்க சந்தர்ப்பம் தரப்பட வேண்டும்.
நான் தங்கள் சஞ்சிகையை குப்பை கூடை எனச் சொல்லவில்லை. யேசு அதனை குப்பைக் கூடையாக மாற்ற முயல்கிறார் என்றே குறிப்பிட்டிருந்தேன்.

தங்கள் SMS பதிலில் சம்பந்தம் இல்லாமல் ஏன் ராகவனுக்கு பதில் வழங்கவில்லை என பலர் கேட்டனர் என கூறியுள்ளீர்கள். இது தேவையற்றது. அனாமதேய, கீழ்த்தரமான, பாலியல் வக்கிரம் மிகுந்த, பிறழ்மனப்பாங்குடைய, நிர்வாக ரீதியில் என்னுடன் நேருக்கு நேர் மோதி முகங்கொடுக்கத் துணிவில்லாத, கோழைத்தனமான, என்னை யாரென்றறியாத, ராகவனின் லூலூ குறிப்புகளில் எண்ணற்ற பலர் தாக்கப்பட்டிருந்தார்கள். எவராவது ராகவனைக் கணக்கெடுத்து பதில் கூறியிருந்தார்களா? தங்கள் சஞ்சிகையை கூட ‘அம்புலிமாமா’ ரகம் என்று ராகவன் கூறியதாக ஞாபகம். அதற்கு பதிலெதுவும் தாங்கள் கூறியதாக எனக்கு ஞாபகம் இல்லையே.
வேறு விசேசங்கள் இல்லை.
இம் முறை பிரசுரிக்கப்பட்ட என் கவிதைகளில் எழுத்துப் பிழைகள் திருத்தப்படவில்லை.

நன்றிகள் பல
அன்புரிமையுடன்
த.ஜெயசீலன்.