கனவுக் கவி !

கவிதை என்பது கனவு போன்றது!
கனவு ஆயிரம் கவின் அருள்வது,
எவரின் ஏக்கமும் தணிய வைப்பது,
இடிகள் தம்மையும் பொடிகள் செய்வது,
தவிக்கும் வாய்களில் அமுதருள்வது,
தடைகள் யாவையும் தகர வைப்பது,
கவிதை பாடினால் கவலை ஓடுது.
கவி… கனாக்களைக் கலைத்திடாதது.

கனவு காண்பதே பலரின் வாழ்வினைக்
கவலையற்றிட உதவு மென்கிறேன்.
“கனவு காண்பதே புது வழிகளைக்
கருத வைத்திடும்” இதையும் கண்டுளேன்.
“கனவு ஆழ்மன விருப்பு யாவையும்
கரத்தில் சேர்த்திடும் கருணை மிக்கது”
எனவுரைக்கிறேன்; கவிதையும் அதை
எவர்க்கும் தாறதால்… பயிலச் சொல்கிறேன்.

கவிதை கேட்டு மெய் கிறங்கு கின்றவர்
கவலை போக்குவார். கனவில் நீந்துவார்.
கவிதையின் சுவை செவியினில் கணம்
அருந்தியோர்… மது எதை விரும்புவார்?
கவிதை நாடியை நரம்பை மீட்டிடும்.
கனிய வைத்திடும் மனதை. நம்முயிர்த்
தவிப்பை ஓட்டிடும். தவறு தீ வழி
தவிர்க்க வைத்து…மேல் நிலைக்குயர்த்துமாம்!

கடவுளை, அறம், விதியை, காலத்தை,
கரைந்திடாத மெய்யதனை, நீதியை,
அடைய ஆயிரம் வழியிருக்கலாம்.
அதில் கவிதையே எளிய மார்க்கமாம்!
படியும்… நெஞ்சிலே, மனச் செவியிலே…
பரிவு தந்திடும் பகலிரவிலே…
விடுகதை எனத் தொடரும் வாழ்விலே…
விடைகள் சொல்லும் பா…பயின்றுயர்கவே!

Posted in கவிதைகள் | Comments Off on கனவுக் கவி !

பார்த்துச் சிலிர்த்தருள்வான்.

கண்திறந்து தன்அடியார் காட்டுகிற பக்தியினைத்,
துன்பம் சுமந்து
தொடர்ந்து செய்யும் நேர்த்திகளைப்,
பார்த்துச் சிலிர்த்தருள்வான்…
பார்போற்றும் நல்லூரான்!

தீயாய் வெயில்கொழுத்தத்,
திசையும் தரை காற்றும்
சூடாய்த் தகிக்க,
எங்கோ… தொலைவிருந்து
ஊசி பலகுத்தி, முள் கொழுவி,
உடல் வருத்தி,
வேதனை வலியோடு விரதத்தில் ஊறி,
உயிர்
ஏக்கம் கவலைகளை இறக்கிவைக்கப்
பலர்… ‘பறவை
தூக்குக் காவடிகள்’ எடுத்து
‘நம் மனம் பதற’
வருகின்றார்!
ஆட்டக் காவடியில் ‘செடில் குத்தி’
உருகும் தெருவில்
உருவேறிப் பலர் குதித்தார்.
காலை மூன்று மணியிருந்து பலநூறு பேர் வெளி
-வீதி நிதம் சுற்றிப் பிரதட்டை அடிக்கின்றார்.
வேர்த்து விறுவிறுக்க, வெக்கையினில் உயிர்பொசுங்கத்,
தீச்சட்டி தூக்குகிறார் தேவதைகள்.
பாற்செம்பு
காவி அடியளித்துக் கசிந்தழுதார் இளம்மகளிர்.
நிதமும் விரதம் பிடித்து,
பசி நெருப்பில்
வதங்கும் வயிறுகளால் வரம்கேட்டு,
கொடியிறங்க
மழிக்கின்றார் தாடி மீசை பல ஆண்கள்.
பலபெண்கள்
முழுப்பொழுதும் உபவாசம் இருந்தும் பிரார்த்திப்பார்.
அடிபட்டுக் கொம்புகாவி ‘அவன் பாரஞ்’ சுமந்தேனும்
விடுபடுமா பழிபாவம்
எனத்துடிப்பார் காளையர்கள்.
வடம் தொட்டிழுத்து வல்வினைகள் போக்குதற்கு
இடம் தேடி ஏங்கிடுவர்
வழமையாய் வராப் பக்தர்.
சூடம் கொழுத்தி, அர்ச்சனைக்கு நட்சத்ரம்
பேர்சொல்லித், தேங்காய் அடித்துச் சுக்குநூறாக்கி,
சாம்பிராணி ஏற்றி
சாட்சாங்க மாக
வீழ்ந்து எழுகின்றார்… விண்ணப்பம் செய்யுமன்பர்.
தாமாக முன்வந்து…
தம் பட்டம் பதவிகளைப்
பாராது… தொண்டியற்றி,
பாடிப் பரவசித்து,
தேவாரம் பண்ணிசை பஜனை நிதம் இசைத்து,
காலடியில் கிடக்கின்றார் களங்கமற்றோர்.
‘மண்டகப்
படிவைத்து’ வரவேற்றுப், பிரசாதங்களும் படைத்து,
இடையறாது பூசித்தார் அயலடியர்.
அன்பருக்கு
தாகசாந்தி செய்தார் தம் பொருள் கரைத்துச் செல்வர்.
பசி
-ஆறி அடியவரின் வயிறுவாழ்த்த
தம்செல்வம்
போட்டுச் சமைத்துப் புரக்கிறார் நல்லோர்.
சென்ற-
நாட்டைவிட்டு வந்து
நல்லைச் சூழலிலிருப்போர்
கேட்கிறார் ‘கேள்வி – பதில்’ திரும்புமுன் கிடைக்குமென்று.
பாட்டுப் பரதத்தில் பணியும் கலைஞர் தம்
வேட்கைகளை சொல்கின்றார் வீதிகளில்.
இவ்வாறு
இரந்தும், கெஞ்சியும், இருந்தழுதும்,
உடலுயிரை
வருத்தியும்,
மனதுள்ளே வாக்குவாதம் நடத்தியும்,
உரிமையுடன் கேட்கும் ஒவ்வொருவர்
வரங்களையும்
அவரவர்க்கு ‘அலங்காரன்’
அள்ளி வழங்குவதால்…
அவரவரின் மனக்குளத்தின்
சலன அலை அமைதியாக்கி
தவிப்பைத் தணிப்பதனால்…
தன்னன்பைப் பொழிவதனால்…
எவருக்கும் பாரபட்சம் இல்லா தருளுவதால்…
‘இனிப்பினைச் சுற்றும் எறும்புகளாய்’
குகன் பின்னே
அனைவரும் திரள்கின்றார்.
மெய்அடியார் பெருகுகிறார்.
மனம் புழுங்கும் மாறுபட்டோர்…
விலாசமற்றும் போகின்றார்!

Posted in கவிதைகள் | Comments Off on பார்த்துச் சிலிர்த்தருள்வான்.

திரு நல்லை.

யாழின் தனித்துவம்.
யாழின் பெருமையம்சம்.
யாழின் திமிர், கர்வம்.
யாழ் மரபின் குறியீடு.
யாழ்ச் சைவக் கலாசார வாழ்வின்
அடையாளம். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on திரு நல்லை.

வென்று எழ வை!

ஏது பிழை ஏது சரி என்று உரைப்பாயா?
ஏங்கியழும் எம் இதயம் கண்டு களிப்பாயா?
ஆதரவு தந்து எமைத் தொட்டு அணைப்பாயா?
அச்சமொடு ஐயமதும் ஓட அருள்வாயா?
வேதனைகள் சூழ்ந்துவரும் வெட்டி அழிப்பாயா?
வேகும் வரை பார்த்திருந்து மீட்டு எடுப்பாயா? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வென்று எழ வை!

உன்னை விட மாட்டோம்.

நாதமழை வேதமழை நம்கண் மழை யாலே
நாற்திசையும் பக்திபுனல் பாய்ந்து வரும் போதே
வீதிகளில் வீழ்ந்தடியார் சொல்லும் குறை நூறே!
மேவியவை தீர்த்தருள தேரில் எழு வாயே!
சோதனைகள் ஆயிரமாய்ச் சூழ்ந்துவரும் காலம்
தோன்றும் திருநாளில் பதில் பெற்றுத் தர வேணும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உன்னை விட மாட்டோம்.

தமிழின் தலைவன் முருகன்

(தனன தனன தனன தனன
தனன தனன தன தான….சந்தம்)

எனது மனதில் ‘பதி- வை’… ‘கவி-தை’;
இரவும் பகலும் அதைநானும்…
எழுதி உலகும் வியக்கும் வகையில் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தமிழின் தலைவன் முருகன்

மாம்பழமும் வேட்டையும்

நாளும் ஒவ்வொரு விதமாய் நடக்கும் திருவிழா -திரு
நல்லையிலே நித்தம் புதிய சேதி சொல் உலா!

காலையிலே மாம்பழத்திற் காக மோதினான் – அண்ணன்
கணபதியும் கனியைக் கொள்ள பழநி ஏகினான்.
ஆண்டிக் கோலத்தோடு வேலன் வாடியேங்கினான் – அந்த
அரிய கனியினாலே என்ன ஞானம் சொல்கிறான்? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மாம்பழமும் வேட்டையும்

உள்ளப் பனிக்கட்டி உருகி…

உள்ளப் பனிக்கட்டி உருகிக் கரைந்துவரும்
வெள்ளம் இருகண்ணால் வழிந்து
விழுந்தோட
நிற்கின்றோம்;
நின்றன் நிஜஎழிலைக் கண்டு…வீதி
சுற்றி வருகையிலே Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உள்ளப் பனிக்கட்டி உருகி…

அவன் செயல்

‘பணிப்-பகை மயிலில்’ பவனிவந்து
எங்களது
‘பிணிப்- பணிகள்’ தம்மை
பிய்த்துக் குதறிடுது
ஆழ்ந்தகன்று நுணுகிய ‘அழகுவேல்’!
நம்…புரியா Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on அவன் செயல்

கார்த்திகை நாளினில் கதி நீயே!

“தந்தனத் தானன தன தான” மெட்டு

நல்லையின் கோபுரம் வரவேற்க
நாதமும் வேதமும் உயிரூட்ட
பல்வகை வாத்தியம் இசைமீட்ட
பாரடா கண்கள் எம் இடரோட்ட! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கார்த்திகை நாளினில் கதி நீயே!

முழுதும் உன் செயல்.

வாயினால் உனைப் பாடிப் பரவலே
வாழ்க்கை… என்றுதான் வாழும் பலரிடை
யானுமோர் மகன்; உன்றனின் வாசலில்
யாசகன்; வரும் இன்பங்கள் துன்பங்கள்,
யான் அடைகிற வெற்றிகள் தோல்விகள்,
நன்மை தீமைகள்,யாவும் நின் செய்கையாய் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on முழுதும் உன் செயல்.

‘ராஜ பவனி’

‘ராஜ பவனி’ ‘வசந்த மண்டபத்’திருந்து
ஆரம்ப மாக,
தவில் நாத சுரம் பொழியும்
“தந்ததன தானா தந்த தன தா” வாம்
கம்பீர மல்லாரி கலையாட்ட,
வகைவகையாயக் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ‘ராஜ பவனி’

ஆளவைப்பான்

‘அலங்காரக் கந்தன்’ எழில் நல்லூரான் – யாழின்
அடையாளம் என என்றும் பொலிகின்றான்.
‘நிலை’ என்ன வரும்போதும் நிழலாவான் -எங்கள்
நிஜக் காவல் அரணாக நிலைக்கின்றான். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ஆளவைப்பான்

நல்லூரான் புகழ்

எல்லையற்ற எழில்குவிந்து ஒளிர்ந்து இருக்கும்.- திக்கு
எட்டினிலும் புனித அருள் நிறைந்து கொழிக்கும்.
‘நல்லை’ கொடியேறி விட்டால் ஊரே சிலிர்க்கும் -திரு
நாள்கள் ஒவ்வொன் றினிலும் புது மேன்மை துளிர்க்கும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நல்லூரான் புகழ்

ஞானம் பெறுக!

கண்கள் திறந்திருப்பீர் – இரு
காதுகள், மூக்கை, விரித்து இரசித்துமே
எண்ணத்தினைக் குவிப்பீர் – உங்கள்
இதயத் தினையும் வெளியாக்கிக் கொள்ளுவீர்.
வண்ணம் மிகு எழிலும் – இசை
வார்ப்பும், கவியும், மலர்களும், தென்றலும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ஞானம் பெறுக!