திக்(வா) விஜயம்

“அழிவு எங்கெங்கும் அழிவுகள்” என்றுதான்
அங்கும் இங்குமே செய்திகள் பேசின.
அழிவு, மரணங்கள் என்று அடிக்கடி
அன்று… போரிடை வந்திட்ட செய்திகள்
முழுதும் ஓய்ந்து அப்பப்போ அங்கங்கு
மோதல், விபத்து, வாள் வெட்டுகள்,போதையால்
இழப்பு, நோய்களாற் சாவு, எனச்செய்தி
இருந்தது; அந்த நிலை தலை கீழாச்சு!

எங்கோ இருந்து இருதிசையாற் பூந்து,
“இந்த நூற்றாண்டில் இதுபோற் புயல்வந்த
திங்கு இல்லை” எனும்படியாய்த் ‘திக்வா’
இரைந்து இரண்டு மூன்று தினம் நின்று
பங்கம் செய்ய முழு நாடும் முதல்முறை
பயந்தது ‘ சிவப் பெச்சரிக்கை’ பெற்று!
எங்கும் கொட்டிற்று மாரி; சிலநாளுள்
‘ஆண்டு மழைவீழ்ச்சி’ எண்திக்கும் சூழ்ந்தது!

வெள்ளம் நிறைந்தது வீதி வயல் நிலம்
வெட்டை கிராமம் நகரங்கள் யாவிலும்.
உள்ள திசையெலாம் வீசிச் சுழல்காற்று
உலுப்பி மரங்களை பேர்த்து எறிந்தது.
வெள்ளம் ஊறிய ஈரலிப்பால் சாய்ந்து
வீழ்ந்தன மண்மேடு, மலை, குன்று.
அள்ளிக் கொண்டோடிற்று அணைகளைப் பாலத்தை
அடித்த நீரோட்டம்… தெருக்களைத் தின்றது!

பாரிய நீர்த்தேக்கம் குளமெலாம்
பணிந்தன இந்தக் கோரப் புயலின்முன்.
‘வால்க்கட்டு’ வெட்டி அயல்களைக் காத்திட்ட
வரலாறு…பல குளங்களைக் காத்தது.
கோரத் தாண்டவம் ஆடிற்று சா; பல
குவியல் குவியலாய் மண்சரிவில், வெள்ளம்
மூழ்கடிக்கையில், மீட்க ஆளற்றவர்
முடிந்தனர்; மீட்க வந்தோரும் மாண்டனர்.

நீரில் மூழ்கின படகுகள் வள்ளங்கள்,
நீந்தின தெருக்களில் வாக னங்களும்.
மாய்ந்தது மின் சாரம். வலைத்தளம்
மரித்தது. கை பேசிகள் செத்தன.
பாதைகள் பல பாற.., புகைவண்டிப்
பாதையில் தண்டவாள எலும்புகள்
மீதமாயின. வெள்ளத்தில் கால்நடை
விறைத்து நூற்றுக் கணக்கிலே மாண்டன.

மண் சரிவுள் புதைந்தோரைக் காப்பதா?
வழியா வெள்ளத்தை வெட்டி விடுவதா?
மண் அணைகட்டிக் குளம் உடைப்பெடுக்காது
மறிப்பதா? சூழ்ந்த வெள்ளத்துள் மூழ்கியே
துண்டிக்கப் பட்டோரை வான்வழி மீட்பதா?
தொலைந்து போனோரைத் தேடித் திரிவதா?
உண்ணக் குடிக்க ஒன்றுமில் லாதோர்க்கு
உதவி செய்வதா? ஊர்கள் தவித்தன!

எனக்குப் பிரச்சனை இடர்கள் எதுமில்லை
என்றிடில் யான் பிறர்க்கு உதவலாம்.
எனக்கிருப்பதை இல்லாதோர் நொந்தோர்க்கும்
ஈயலாம்; முழு நாடும் இடருக்குள்
தனித்திருக்கையில் யாருக்கு யார் எதைத்
தருவது? ஆறு தலை எவர் சொல்வது?
தனதுயிர் பற்றி எண்ணாதிந் நிலையுள் தோள்
தந்தவர்களை யார்தான் மறப்பது?

வீழ்ந்த மரங்களை வெட்டி அகற்றவும்
வெள்ளம் வடிந்திட வாய்க்கால்கள் வெட்டவும்
சாய்ந்த மின்கம்பம் மின் வடம் மீட்கவும்
சகல பகுதிக்கும் ‘கவரேஜ்’ வழங்கவும்
பாலம் பாதைகள் மீள அமைக்கவும்
பசியைப் போக்கவும் தாகம் தணிக்கவும்
தேவைப் பொருட்களைத் தேடிக் கொடுக்கவும்
திரள்கிறார் பலர் தேசம் கைகோர்த்ததாம்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.