‘விலான கம’, ரம்புக்கணை.

உறங்கிக் கிடந்தது ஊர்;
நேற்று மட்டுமல்ல
பரம்பரை பரம்பரையாய் வசித்து
மகிழ்ந்துயிர்த்த
ஊரது;
நிம்மதியாய் உண்டு களித்துறங்கும்
ஊரது; இரம்மியமும்,
உயர்மலைகள் தாழ்நிலங்கள்
நீர்வீழ்ச்சி பலதும்,
நிலமெங்கும் பசுமையாடை
போர்த்தச் சிலிர்ப்பும்,
புதுப்புது மலரினங்கள்
பூக்கும் பொலிவும்,
புகார்மேகம் முத்தமிடப்
பார்க்கும் பரவசமும்,
குளிரும், பனிப்பொழிவும்,
இளஞ்சூடும், இசைபாடும் இதக்காற்றும்,
தாலாட்ட…
அழகுக் குவமையாய் அவதரித்துச்
சிறந்ததவ்வூர்!
சோலி சுறட்டெதற்கும் செல்லாமல்
தாமுண்டு
வேலையுண்டு என்று,
விரிந்த பெரும் கனாக்களற்று,
இயற்கையுடன் இயைந்து இருந்ததவ்வூர்!
ஆண்டாண்டாய்
வெயில்மழையைக் கண்டு,
குளிர் சூட்டில் தோய்ந்து,
உயிர்கொண்டு வாழ்ந்ததது!
யாரின் கண் பட்டதுவோ…
சிலநாள் மழையடித்துச் சிதம்பி,
குளிர் ஊறி,
நிலமிழக…
வெளியே அதிகம் வெளிக்கிடாது,
இருந்ததை உண்டு,
மின் நின்று போய் வந்து
இருள்சூழ்ந்த காரணத்தால்
வேளைக்கே ‘கடன்’முடித்து
போர்த்துக் கொடுகிப் புரண்டு படுத்ததது!
ஊரே உறக்கத்துள் உறைந்து
கிடந்தநேரம்…,
பேயும் உறங்கும் ‘ஒன்றரை மணி’ச் சாமம்…,
சுற்றுமுற்றும் இருந்த பாறைகளும் மேடுகளும்
கற்களும் கரைந்தமண்ணோ டருவியாகிச்
சரிந்துசாய்ந்து
முற்றாய்க் கிராமத்தை மூடிற்று!
ஆழ்துயிலில்
கொடுங்கனவாய்… சாவு குவிந்து
ஓரிரு நொடியில்
படுத்திருந்த யாவரையும்
சமாதியாக மாற்றிற்று!
சிறியோர், பெரியோர்,
இளையோர், முதியோர், நோய்க்
குறையுள்ளோர்,
அவர் வளர்த்த கோழி குஞ்சு,
நாய் பூனை,
ஆடு மாடு,
கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்தசொத்து,
யாதெவை இருந்தனவோ…
அத்தனையும் புதைந்து போச்சு!
வீடுகளை முழுமையாய் விழுங்கிற்று
உதிர்ந்தமண்
மேடுகள்;
உள்ளிழுத்த மூச்சை வெளியில்விடக்
கூட முடியாமல்…
குடும்பம் குடும்பமாகப்
புதைந்தன உயிர்கள்!
புழங்கிய ஒழுங்கை, பாதை,
கடைகள், கோவில், சந்தை,யெல்லாம்
மண்மூடிப்
போயின…யாருமே
போய்வர இயலாமல்
காலை…புது மண்மலையாய்க்
காட்சிதந்ததக் கவினூர்!
அன்றுவரை அடைக்கலம் அளித்த
நிலம், மலையும்
கொன்று உண்டு செமித்து….
‘அப்படியோர் ஊர்’ இருந்த
தென்று உலகறியா விதத்தில்
ஏப்பமிட்டதன்று!
வீழ்ந்து மிதித்த மண்சரிவு
இராட்சதனை
தூர்க்க முயன்றார்கள்…
ஐந்து பத்து உடல்களைத்தான்
மீட்டார்கள்;
அரக்கனை அசைக்க முடியவில்லை!
ஆகக் குறைந்தது ஐம்பது குடும்பத்தில்
நூற்றெண்பது பேர் எனினும்,
“என்ன நடந்த”தென்று
தெரியாமல் விண்ணுலகம் சேர்ந்தார்கள்!
புயல்தந்த
பரிசிலொன்றிவ் இடுகாடு;
எப்பாவம் அவர் புரிந்தார்?
நினைக்க நடுங்குதிந்த நிலைமையை யார் எதிர்பார்த்தார்?
மனம் ஏற்க மறுக்கிறது;
மலைத்தாய் ஏன் வஞ்சித்தாள்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.