வாழ்வின் யதார்த்தம்.

அடுத்த கணமென்ன ஆகுமெனக்
கண்டறிய
முடியாத வாழ்வினிலே…
மோதி அடிபட்டு,
ஏதேதோ ஏக்கங்கள் தீர்க்கும்
அவா… குறையாப்
போதையுடன் போராடிப் புதிராய்த் திரிகின்றோம்!
தூர திருஷ்டியினால்
தொலைவில் இருப்பதையே
தேற முடியாதோர்…
தேடுகிறோம் கற்பனையில்
பொன்னும் பொருளும் புதையலும்
அதிசயமாய்
மின்னும் நம் கையிலென்றும்
வேட்கையுடன் அலைகின்றோம்.
அடுத்த கணம் மூச்சுத் திணறியே
மயங்கிவீழ்தல்
நடந்திடலாம் என்னும் யதார்த்தத்தை
யாம் ஏற்கோம்.
முடியும் முடியுமென
முக்கி முயலுகிறோம்.
முடியும் எனுஞ் சொல்லுள்
முடிவும் இருந்திடலாம்…
அறியோம்;
கொஞ்சம் அறிவு, பலம், செல்வம்,
வரமாகப் பெற்றுவிட்டால்…
‘அது’ எமது ஆற்றலினால்
வந்ததென எண்ணியே
வானுக்கும் மண்ணுக்கும்
பந்தாய்க் குதித்துப் படுத்திடுவோம்.
“ஊரே எம்
காலடிக்குக் கீழ்” என்போம்.
“கடவுளென்ன கடவு”ளென்போம்.
காலம், விதி, தர்மம், கறுமமெல்லாம் பொய்யென்போம்.
ஆகும் எலாமும் எம் மாலே
எனப்பொங்கி
ஆட முயன்று, அடிபட்டு,
எழும்பேலாது
ஓய்வோம்;
சிலசமயம் ஒரேயடியாய் உயிர்விடுவோம்!
‘அற்பம்தான் வாழ்வு’
அதையுணர்ந்தும் – உணராதும்
‘அற்புதம்
யாம் செய்வம்’ என்று
ஆணவம் மமதையுடன்
நிற்பதுதான் எங்கள் நிலை;
‘அயல் – யதார்த்தம்’
கற்றுத் தெளியாது…கனாக்கண்டு…
நனவினையும்
முற்றாய் இரசிக்காது…
வைப்போம் நாம்
நமக்கு உலை!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.